Home Blog Page 6148

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

சென்னை: செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு நிரந்தர இயக்குநர், பதிவாளர், நிதி அலுவலர் ஆகியோரை நியமிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய , மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை தரமணியில் இயங்கிவரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் 9 ஆண்டுகளாகியும், நிரந்தர இயக்குநர், நிரந்தர பதிவாளர், நிரந்தர நிதி அலுவலர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படாததை எதிர்த்தும் அப்பணி இடங்களுக்கு தகுதியானவரை குறிப்பிட்ட காலத்திற்குள் நியமிக்க கோரியும், இதன் காரணமாக ஏற்படும் நிறுவன பணிகள் தேக்கம் மற்றும் நிதி முடக்கம் ஆகியவற்றை சரிசெய்ய வேண்டியும் , செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஊழியர்கள் சங்கத் தலைவர் முனைவர் அ.ஆரோக்கியதாசு என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.சுந்தரவதனம், வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, வழக்கறிஞர் ரமேஷ், வழக்கறிஞர் அமர்நாத் ஆகியோர் ஆஜராகினனர் . இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சசீதரன், இதுகுறித்த விரிவான பதில் மனுவை 21-04-2015 க்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

சென்னை: சூரிய ஒளி மின்கட்டண சலுகையால் அரசுக்கு ரூ.23,000 கோடி இழப்பு குறித்து விசாரணை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தனியார் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக இப்படி ஒரு சலுகையை தமிழக அரசு வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தியை ஊக்குவிக்கப்பதாகக் கூறி சூரிய ஒளி மின்சக்திக் கொள்கையை கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் தலா 1000 மெகாவாட் வீதம் இதுவரை 2000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்னுற்பத்திக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் மேலும் 1000 மெகாவாட் உற்பத்தித்திறன் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், இந்த கொள்கையின்படி இதுவரை 115 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்னுற்பத்திக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த கொள்கையின்படி தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.6.48 வீதம் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளிகளை பெற்றது. ஆனால், இதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்ததையடுத்து இந்த திட்டத்தையே தமிழக அரசு கைவிட்டது. அதைத் தொடர்ந்து முன்னுரிமை அடிப்படையில் ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில் தனியாரிடம் இருந்து சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, மொத்தம் 5366 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை தயாரித்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதுதொடர்பான ஆணை கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ஓராண்டுக்குள், அதாவது வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் சூரிய ஒளி மின்நிலையங்களை அமைத்து மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் இந்த விலை வழங்கப்பட வேண்டும். செப்டம்பருக்கு பிறகு மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் நிறுவனங்களுக்கு புதிய விலை நிர்ணயிக்கப்படுவது தான் வழக்கமாகும். இந்த நிலையில், சூரிய ஒளி மின்னுற்பத்தியை தொடங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி தனியார் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை மின்வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மின்னுற்பத்தியை தொடங்கும் சூரிய ஒளி மின் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படும். இதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. ஆணையத்தின் மூத்த உறுப்பினர் நாகல்சாமி, காலக்கெடுவை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் பெரும்பான்மை அடிப்படையில் மின்னுற்பத்தி தொடங்குவதற்கான கெடுவை நீட்டிக்க ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் தந்துள்ளது. சூரியஒளி மின்நிலையம் அமைப்பதற்கான செலவு 14% குறைந்திருப்பதால், இனி புதிதாக ஒப்பந்தம் செய்து மின்னுற்பத்தி தொடங்கும் நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.84 மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதைமீறி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.7.01 கொள்முதல் விலை வழங்க ஒப்புக்கொண்டிருப்பதால் மின்சார வாரியத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். 5633 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே விலையில் வாங்குவதாக வைத்துக் கொண்டால் மின்வாரியத்துக்கு ரூ.23,000 கோடி இழப்பு ஏற்படும். சூரிய ஒளி மின்சாரத்தின் உற்பத்திச் செலவு இனிவரும் காலங்களில் குறையும் என்பதால் இந்த இழப்பு மேலும் அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக மின்சாரத்துறை வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். தனியார் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த சலுகை வழங்குவதற்காக அவற்றிடம் இருந்து ஒரு மெகாவாட்டுக்கு ரூ.15 லட்சம் வீதம் கையூட்டு பெறப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வகையில் மட்டும் சுமார் ரூ.850 கோடி அளவுக்கு ஊழல் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மின்சார வாரியம் தான் ஆட்சியாளர்களுக்கு பணம் கொழிக்கும் அட்சயப் பாத்திரமாக திகழ்கிறது. ஆட்சியாளர்கள் போட்டிபோட்டுக் கொண்டு சுரண்டியதால் மின்சார வாரியம் இன்று ஒன்றரை லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக கடன் சுமையுடன் தள்ளாடுகிறது. இந்த நிலையில், மேலும் ரூ.23,000 கோடி இழப்பை மின்வாரியத்தால் தாங்க முடியாது. எனவே, தனியார் சூரியஒளி மின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை அரசு ரத்து செய்ய வேண்டும். மின்சார வாரியத்தை புதைகுழியில் தள்ளும் இம்முடிவு குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் மிகவும் கவலையளிக்கின்றன. மின்வாரியத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டிய ஆணையம், அனைத்துத் தவறுகளுக்கும் துணை போவது கண்டிக்கத்தக்கது. தகுதியில்லாத, நேர்மையில்லாத, ஆட்சியாளர்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட அதிகாரிகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும், உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருப்பது தான் இதற்கெல்லாம் காரணம் ஆகும். எனவே, தற்போதுள்ள மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தைக் கலைத்துவிட்டு, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் கைவரிசை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தின் கன்ஜிர் கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ் அடங்கிய பாதுகாப்புப் படை கிராமத்திற்கு விரைந்தது. கிராமத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்த பின்னர், பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டனர். இதில் காவலர் ஒருவரும் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர். ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனிடையே அந்தப் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். இதை அடுத்து, அப்பகுதியில் ராணுவம் கூடுதலாகக் குவிக்கப்பட்டு, பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்

சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள்

ஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்தனர் அல்-காய்தா பயங்கரவாதிகள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹைதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. ஏமனுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் பல்வேறு நாடுகள் ஒன்றிணைந்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகிறது. தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் ஏடன், சனா உள்ளிட்ட நகரங்களில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து வருகின்றனர். ஏமனில் தங்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், ஏமனில் ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள சிறை ஒன்றை அல்-கொய்தா பயங்கரவாதிகள் இன்று தாக்கியுள்ளனர். பின்னர், அச்சிறையில் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த தங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் காலித் படார்பி உட்பட 300 கைதிகளை சிறையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் இரண்டு சிறை அதிகாரிகள் மற்றும் 5 கைதிகள் கொல்லப் பட்டதாக ஏமன் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது அங்குள்ள மாவட்டம் நீதிமன்றம் ஒன்று. 2007 ஆம் ஆண்டு லால் மஸ்ஜித் (சிவப்பு மசூதி) நடவடிக்கையின் போது மத தலைவர் அப்துல் ரஷீத் மற்றும் அவரது தாயைக் கொன்றதாக முஷாரப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இஸ்லமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி, முஷாரப் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை நிராகரித்து முஷாரப்புக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்தது. இந்த வழக்கு விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் அவரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

எதிர்க்கட்சியின்றி பேரவை நடத்துவது ஜனநாயக விரோதம்: தேமுதிக செய்த குற்றம் என்ன?: கருணாநிதி

சென்னை முக்கிய எதிர்க்கட்சியினர் இன்றி பேரவையை நடத்துவது ஜனநாயக விரோதம், தேமுதிக உறுப்பினர்கள் செய்த குற்றம்தான் என்ன என்று கேள்வி எழுபியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகச் சட்டப் பேரவையில் 31-3-2015 அன்று பேரவைத் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், உரிமை மீறல் குற்றத்திற்கு ஆளான தே.மு.தி.க. சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆறு பேரை அடுத்து நடைபெறவுள்ள மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும் நீண்ட தொடர் முழுவதும், அதற்குப் பிறகு அடுத்த கூட்டத் தொடர் தொடங்கி பத்து நாட்களுக்கும் பேரவையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார். இந்த முடிவுக்கு அனைத்து எதிர்க் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையைக் குறைக்கக் கேட்டுக் கொண்டும், பேரவைத் தலைவர் அதனைப் பிடிவாதமாக ஏற்கவில்லை. தேமுதிக உறுப்பினர்கள் மீது இந்தப் பெரிய கடுந் தண்டனைக்கு, அவர்கள் இழைத்த குற்றம் தான் என்ன? ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற போது, 19-2-2015 அன்று ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் பேசுகையில், “சட்ட மன்றப் பேரவையில் அனுமதி சீட்டு வாங்கி விட்டு ஒரு சிலர் அவைக்கு வருவதே இல்லை. அதில் ஒருவர் முதியவர். மற்றொருவர் சிட்டிசன் – “சிட்டிசன்” என்றால் குடி மகன்” என்று பேசினார். தே.மு.தி.க. உறுப்பினர்கள், “குடி மகன் என்ற வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென்றார்கள். அவை முன்னவரான நத்தம் விசுவநாதன் குடி மகன் என்று யாரையும் குறிப்பிட்டுப் பேச வில்லை என்றார். பின்னர் ஆளுநர் உரையில் பேசிய தேமுதிக உறுப்பினர், மோகன்ராஜ், ஜெயலலிதாவைப் பற்றி ஒரு வார்த்தையை உச்சரித்த நிலையில், முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அதிமுக வினர் அனைவரும் ஒரு சேர எழுந்து எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதாவைப் பற்றித் தேமுதிக உறுப்பினர் குறிப்பிட்ட வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கியதோடு, அவரையும் வெளியேற்ற பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவையிலே குழப்பமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. உடனே பேரவைத் தலைவர் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றினார். பின்னர் நத்தம் விசுவநாதன் தேமுதிக உறுப்பினர்கள் அனைவரையும், அந்தக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட தேமுதிக கொறடா சந்திரகுமார் உட்பட அனைவரையும் அடுத்த கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டும் என்றும், உரிமைக் குழுவுக்கு அதனை அனுப்ப வேண்டுமென்றும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். தி.மு. கழகச் சட்டமன்றக் குழுத் தலைவர், மு.க. ஸ்டாலின் “அடுத்த கூட்டத் தொடர் வரை நீக்கம் என்பதைக் குறைக்க வேண்டும்” என்றார். பின்னர் நத்தம் விசுவநாதன், தேமுதிக உறுப்பினர்களை இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டு வந்தார். இதற்குப் பிறகும் தேமுதிக உறுப்பினர்கள் மீது அவை உரிமை மீறல் கொண்டு வரப்பட்டது. உரிமைக் குழுவில் தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேர் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்ட போது, கழகத்தின் சார்பில் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த தம்பி கம்பம் ராமகிருஷ்ணன் இதுவரை வழங்கப்பட்ட தண்டனையே போதும், இனிமேலும் தண்டிக்க வேண்டாம் என்று கூறிய கருத்துகளை ஏற்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி 31-3-2015 அன்று பேரவையில் தேமுதிக உறுப்பினர்கள் ஆறு பேரும், அடுத்த கூட்டம் தொடங்கி பத்து நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், அதுவரை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தையும், சலுகைகளையும் பெற இயலாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, முக்கிய எதிர்க் கட்சி இல்லாமல் பேரவையை நடத்துவது ஜனநாயக முரண் என்பதை உணர்ந்து இனியாவது அ.தி.மு.க. மனம் திருந்தி, பெருந்தன்மையோடு தே.மு.தி.க. உறுப்பினர்கள் மீதான தண்டனையைக் குறைத்து, தங்களுக்கும் பேரவை நாகரிகத்தைப் போற்றிடத் தெரியும் என்பதை நிரூபித்துக் கொள்ள முன்வருவார்களா என்பதற்காகத் தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளேன்

ஓடத் தடை போடாமல் கவனமுடன் குழந்தைகளை ஓடச் சொல்லுங்கள்: தன்னம்பிக்கை பயிலரங்கில் அறிவுரை

01-04-15 Karur Melai news photo 01 கரூர்: கரூரில் கோவை ரோட்டில் அமைந்து உள்ள அவுரா இண்டர்நேஷ்னல் என்னும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டிற்கு இரு முறை அங்கு பணியாற்றும் பாணியாளர்களுக்கான சுயமுன்னேற்ற பயிலரங்கு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் பயிலரங்கில் சுய முன்னேற்ற பயிற்சியாளர் கோ-பாஸ்ட் கோபிநாத் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது எந்த ஒரு செயலையும் ஆற்றல், ஆக்கம், பிடிப்போடு செய்யவேண்டும், செயல்பாட்டில் ஆசை இருக்கவேண்டும். சோம்பலை தவிர்த்து உழைப்பை கூட்ட வேண்டும். பொறாமையை நீக்கி கருணையோடு, செயல்படவேண்டும். அகந்தையை அகற்றி அடக்கத்தோடு திறமையை வெளிப்படுத்த வேண்டும். சுவாமி விவேகானந்தர் சரியான திட்டமிடுதலின்றி அமெரிக்கா பயணத்தின் போது அங்கே சில நாட்கள் தங்க வேண்டிய நிலை வந்தது. அந்தநாட்களில் தான் அறிந்த இராமாயண போன்ற ஆன்மீக கதைகளை நாள்தோறும் சொல்ல அங்கு கூடிய மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர். தனியாளாக அமெரிக்கா சென்ற விவேகானந்தர் இந்தியா திரும்பிய போது 5 ஆயிரம் சீடர்களை கொண்டவராக உயர்ந்தார். இதற்கு அடிப்படை அவருடைய திறமையாகும். சவுதி அரேபியாவில் 185 மாடிகள் கொண்ட கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள் என்றால் அந்த தொழிலில் அவர்கள் காட்டிய ஈடுபாடும் பிடிப்பும் தான் காரணம். நாம் நம்முடைய குழந்தைகளை அது ஒடுகிற போது ஒடாதே விழுந்து விடுவாய் என தடுக்கிறோம். அப்புறம் எப்படி ஒலிம்பிக்கில் நம்முடைய குழந்தைகளை வெற்றி பெற செய்யமுடியும். குழந்தையை ஓடு, அதே நேரத்தில் கவனமாக ஓடு என்று எச்சரித்து ஓடச் செய்யவேண்டும். சுவரில் அடிக்கிற ஒரு ஆணியே தன்னுடைய அடையாளத்தை விட்டு விட்டு போகிறது. மனிதர்களாகிய நாம் வாழ்வதில் அடையாளம் அமையும் படி வாழ வேண்டும், வழக்கறிஞர்களின் ஒருவரிடம் சென்றால் 5 லட்சம் ரூபாய் வங்கியில் பணம் கட்டி சலான் கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றார். அதே சட்டம் படித்த இன்னொரு வழக்கறிஞர் ரூ 50 கொடுத்து அபிடவிட்டில் கையெழுத்து போட காத்துக் கிடக்கிறார். இந்த இரு வழக்கறிஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் கற்ற கல்வியில் அவர்கள் கொண்ட ஈடுபாடும், திறமையும்தான். ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் 6 மாதம் கழித்து தான் என்னால் சிகிச்சை தர முடியும் என்கிறார். இன்னொரு மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு ஆள் வராதா என காத்துக் கிடக்கிறார். இருவருக்கும் இந்த வேறுபாட்டிற்கு காரணம் பயன்படுத்துகிற திறமையே. தொலை நோக்கோடு செயல்படுகிற நிறுவனமும், தான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற தொழிலாளிகள் தங்களுடைய திறமைகள் வளர்த்துக் கொண்டு ஈடுபாட்டோடு பணி செய்தால் தங்கள் நிறுவனத்தையும் வளர்த்து தாங்களும் வாழ்க்கையில் உயரலாம் என்பதை பல்வேறு வரலாற்று படக் காட்சிகளுடன் விளக்கி பயிலரங்கத்தை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் எல்.ஐ.சி நடராஜன், கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழநியப்பன், திருச்சி கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் அவுரா இண்டர்நேஷ்னல் நிறுவனர் அவுராபழ.ஈஸ்வரமூர்த்தி வரவேற்று நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலேயே வருடத்திற்கு இரு முறை தொழிலாளர்களுக்காக பயிலரங்கம் நடத்திவரும் அவுரா ஈஸ்வரமூர்த்தியின் பெற்றோர்களை கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் கொளரவித்தார். இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்த கோ-பாஸ்ட் கோபிநாத்தையும் அவுரா பழ.ஈஸ்வரமூர்த்தி கௌரவித்தார்.

கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப்பள்ளி எல்.கே.ஜி மாணவி சாதனை பள்ளி முதல்வர் பாராட்டு

DSC07343கரூர் லிட்டில் ஏஞ்சல் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வருபவள் மழலை கார்னிகா. இவள் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளின் பெயர்களை எப்படி மாறிமாறி கேட்டாலும் சரியாக கண்டு பிடித்து கூறி சாதனை படைக்கிறாள். பெரிய மாணவர்களே தயங்கினாலும் கார்னிகா குழந்தை பருவம் முதலே அடுத்தடுத்து விரைவாக கூறியது அவளுடைய மனனப் பயிற்சியையும், விடா முயற்சியையும் தெளிவாக காட்டுவதாக அவளது பள்ளி ஆசியைகள் கூறுகின்றனர். சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கொம்பன் பிரச்னைக்கு நான் காரணமல்ல: உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi-stalin கொம்பன் படப் பிரச்னைக்கு நான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். முத்தையா இயக்கத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் நேற்று வெளியாகி இருக்கும் படம் கொம்பன். படம் துவங்கியபோது,  அழகாக தயாராகி வந்த படம், வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்தது. இப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்துவது போன்ற காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் கொம்பன் படம் தடைகளைத் தாண்டி நேற்று வெளியானது. படத்தில் எந்த இடத்திலும் ஒரு சாதிப் பெயரோ, அல்லது இரு சாதிக்கு இடையிலான பிரச்னையோ என்று எதையுமே குறிப்பிடவில்லை.

மாமனாருக்கும், மருமகனுக்கும் இடையிலான விஷயத்தை மிகவும் அழகாக இயக்குனர் காட்டியிருக்கிறார்.

இந்நிலையில் கொம்பன் பிரச்னையில் உதயநிதியின் தூண்டுதல் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. தான் நடித்த நண்பேன்டா படத்துக்கு அதிக தியேட்டர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கொம்பனுக்கு மறைமுக தொந்தரவு தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதயநிதி இதனை மறுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

‘கொம்பன்’ படத்தின் ரிலீஸுக்கு நான் தடையாக இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் விளம்பரத்துக்காகத்தான் என் பெயரை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். நண்பேன்டா படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு மாத்திற்கு முன்பே அறிவித்துவிட்டேன். கொம்பன் பட ரிலீஸ் தேதி அறிவிக்கும் முன்பே எனது படம் 275 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் போடப்பட்டுவிட்டது. கொம்பன் படம் வந்தாலும், எத்தனை தியேட்டர்களில் திரையிட்டாலும் அதனால் என் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அப்படியிருக்கையில் இதில் என் பெயரை இழுப்பது கண்டிக்கத்தக்க விஷயம் என்றார்.

விடுமுறை நாளில்கூட மணல் கொள்ளை: கரூர் அதிகாரியின் பொறுப்பற்ற பதில்களால் விவசாயிகள் கொந்தளிப்பு

SAND-karur1 கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 8 இடங்களில் மணல் அள்ளி வருகின்றனர். இதில் செகண்ட் சேல்ஸ் எனப்படும் மணல்தான் தற்போது விற்கப்படுகிறது. பொதுப் பணித் துறையிடம் வங்கியின் டி.டி எடுத்துக் கொடுத்தால்கூட செகண்ட் சேல்ஸ்ஸில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தான் விற்கப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் மணல் கரூர் மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் உள்ளூர் ஏற்றுமதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்யப்படும் இந்த பல கோடி ரூபாய் மணல் விற்பனையில் அரசியல்வாதிகள், உள்ளாட்சிப் பிரமுகர்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கடத்தல் மணல் லாரிகளைத் தொடர்ந்து பிடித்த வண்ணமாக உள்ளனர். மதுவிற்கு எப்படி ஒரு தனிப்பட்ட போலீஸ் பிரிவு உள்ளதோ, அதே போன்று நாட்டின் வாழ்வாதாரமாக விளங்கும் கனிம வள மணல் கொள்ளை போவதைத் தடுக்கவும் ஒரு தனிப் பிரிவு போலீஸாரை நியமித்தால் தினமும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்தை தமிழக அரசு காப்பாற்றலாம். SAND-karur4 அந்த அளவுக்கு தினமும் பல கோடி ரூபாய் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது என்பது பரவலாகப் பேசப்படும் செய்தி. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே பல ஆயிரம் டி.எம்.சி குடிநீரை சேமித்து வைக்கும் கிடங்காக இயற்கையால் செய்யப்பட்ட ஆற்று மணலை காப்பாற்ற எந்த ஒரு யோசனையையும் முன்வைத்ததில்லை. இதை செயல்படுத்த எந்த ஒரு அரசும் தொடர்ந்து தயங்கியே வருகிறது. இந்த நிலை நீடித்தால் இன்னும் 5 ஆண்டுகளில் ஆற்றில் நீரோட்டத்துக்கு மணல் இருக்காது. நாமே பல ஆறுகளை இழக்கும் நிலை நிச்சயம் ஏற்படும். விவசாயிகள் கடந்த 28 ஆம் தேதி காவிரி ஆற்றை காப்பாற்ற தமிழகம் முழுவதும் பந்த் அறிவித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதே விவசாயிகள் இந்த காவிரி ஆற்றை காப்பாற்ற ஒரு சட்டி மணல்கூட அள்ளாமல் பார்த்துக்கொண்டால் நம் எதிர்கால சந்ததியையும், நம் பல ஆறுகளையும் காப்பாற்றிவிட முடியும். SAND-karur3 கேரள அரசு மாநிலத்தில் மணல் அள்ளினால் குண்டர் சட்டம் பாயும் என்ற விதியை கடந்த 1988 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. அங்கு இன்றும் அந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய ஆளும் அ.தி.மு.க.வோ, எதிர்க்கட்சியான தே.மு.தி.க, தி.மு.க வோ இதன் பேரில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியம்தான். இதில் தெரிவது மணல் கொள்ளைக்கு அனைவருமே ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுவதுதான்! இது ஒருபுறம் இருக்க அகிம்சையை போதித்த மஹாவீரர் ஜெயந்தியான இன்று மாநில அரசு மற்றும் மத்திய அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மதுபானக் கடை, இறைச்சிக் கடை என அனைத்துக்கும் விடுமுறை அளித்துள்ளது. ஆனால், அரசு மணலை எடுக்கும் மணல் கொள்ளைக்கு மட்டும் விடுமுறை அளிக்கவில்லை. SAND-karur2 எப்போதும் போலவே இன்றும் கரூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மணல் லாரிகளில் மணல் கொள்ளையடிக்கபட்டு வருகிறது. இது குறித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சட்டநாதனிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது, எதுவாக இருந்தாலும் மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொள்ளுங்கள் என செய்தியாளர்களிடம் பொறுப்பற்ற வகையில் பதிலளித்தார். விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவது எப்போது நிறுத்தப்படும்? கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவேயில்லை!