Home Blog Page 6176

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்க்க இணையதள முகவரி!

சென்னை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பதிவுகளை https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அந்த செய்திக் குறிப்பில்… கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள் https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர் கள், மேற்கூறிய இணைய முக வரியை பயன்படுத்தி, தங்களது பதிவு அடையாள அட்டையை பதி விறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் மற்றும் விடுபாடுகள் இருப்பின், உடனடியாக கல்வி, சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அடையாள அட்டை, ஆதார் எண், கைப்பேசி எண்/ இணையதள மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன், இந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்துக்குள், வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். திருத்திய பதிவு அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைவு

சென்னை: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 336 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ. 2,525–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.460 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 640 ஆகவும், ஒரு கிராம் ரூ.41.30 ஆகவும் உள்ளது.

மது அருந்தி கார் ஓட்டி விபத்து: சல்மான் கான் வாக்குமூலம் பதிவு

salman-khan மும்பை: மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான்கானின் வாக்குமூலம் இன்று பதிவு செய்யப்படுகிறது. ஊடகங்கள் தன் வாக்குமூலப் பதிவின்போது இருக்கக் கூடாது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. அரசுத் தரப்பில் ஏற்கெனவே சல்மான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு எதிரான வாக்குமூலத்தை பதிவுசெய்ய அவருக்கு மும்பை நீதிமன்றம் வாய்ப்பளித்தது. அதன் அடிப்படையில் வாக்குமூலத்தை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் சென்றார் சல்மான் கான். அவர் கோரினால், அரசுத் தரப்பு சாட்சிகளிடமும் அவர் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இந்நிலையில், அவரது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டபோது, ஊடகங்களுக்கு தடை விதிக்க சல்மான் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் நடைபாதையில் உறங்கிய ஒருவர் உயிரிழந்தார், 4 பேர் படுகாயமடைந்தனர். காரை ஓட்டிச் சென்ற சல்மான் கான் மீது மரணத்தை விளைவித்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. விபத்து நேர்ந்த போது அவர் மது அருந்தி இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டா. சல்மான் கானுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்: நடிகை ராய் லட்சுமி

lakshmi-rai-srikanth வெளிநாடுகளைப்போல், பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று நடிகை ராய் லட்சுமி கூறினார். நடிகை ராய் லட்சுமி தற்போது புதிய படங்களில் நடித்து வருகிறார். அவர் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடிக்க, வி.சி.வடிவுடையான் இயக்கத்தில், ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் ஆகிய இருவரும் ‘சவுகார்பேட்டை’ என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னை பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ராய் லட்சுமி ஆகிய இருவரும் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, …‘‘இது, சாதாரண பேய்ப் படம் அல்ல. உணர்வுப்பூர்வமான திகில் கலந்த படம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இந்தப் படத்தில் நான் நகரத்து இளைஞனாகவும், மந்திரவாதியாகவும் 2 வேடங்களில் நடிக்கிறேன். படத்தின் பெயர், ‘சவுகார் பேட்டை’ என்றாலும், இது மார்வாடிகளின் கதை அல்ல. சம்பவங்கள் முழுவதும் சவுகார்பேட்டையில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.’’என்றார் நடிகர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து இந்தப் படம் குறித்துப் பேசிய நடிகை ராய் லட்சுமி.. ” எந்த பேய்க்கும் நான் பயப்பட மாட்டேன். எனக்கும், பேய்க்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். காஞ்சனா, அரண்மனை ஆகிய 2 படங்களிலும் நான் நடித்த பிறகு என்னைத்தேடி 11 புதிய பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே பேய் படங்கள். அதில், ‘சவுகார்பேட்டை’யை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்…. என்றார். பின்னர், “நடிகைகளின் தலைகளை ஒட்ட வைத்து ஆபாச படம் தயாரித்து வெளியிடுவதற்காகவே ஒரு கும்பல் இருக்கிறது. எப்படியாவது பணம் சம்பாதிக்க ஆசைப்படும் கும்பல் அது. பிரபலங்களை குறிவைத்து இந்த வேலை நடக்கிறது. இதற்கு பொறாமையும் ஒரு காரணம். அவர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்த்து யாரும் நம்பப்போவதில்லை. அவை உண்மையான வீடியோ அல்ல என்று எல்லோருக்கும் தெரிகிறது. என்றாலும் அந்த கும்பலை சும்மா விடக்கூடாது. இதுபோன்ற ஆபாச படங்களை வெளியிடுவது கற்பழிப்பு குற்றத்துக்கு சமமானது. வெளிநாடுகளில், கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்கிறார்கள். அதுபோல் நம் நாட்டிலும் இந்த குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். உயிர் பயம் இருந்தால், இதுபோன்ற குற்றங்களை செய்யமாட்டார்கள். வெறும் ஜெயில் தண்டனை இவர்களை பயமுறுத்தாது. ஜெயிலில் அடைத்து அவர்களுக்கு சாப்பாடும் போடுவது, அரசாங்கத்துக்கு வீண் செலவு என்றார் படு காட்டமாக!

முழு அடைப்புப் போராட்டம்: அனைத்துத் தரப்பும் ஒத்துழைக்க திருமாவளவன் கோரிக்கை

சென்னை: மார்ச் 28 முழு அடைப்புப் போராட்டத்தில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு நல்கவும் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரியின் குறுக்கே மேகதாது மற்றும் இராசிமணல் ஆகிய இடங்களில் மூன்று அணைகளை கட்டுவதற்கு கருநாடக அரசு முயற்சித்து வருகிறது. அதற்கென நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. இந்த அணைகளைக் கட்டினால் காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கும். விவசாயம் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். இந்நிலையில், அந்த அணைகளை கட்டவிடாமல் தடுக்கவேண்மென தமிழக மக்கள் உரத்து குரல் எழுப்பி வருகின்றனர். விவசாய சங்கங்களும் அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்திய அரசு உடனடியாகத் தலையிடவேண்டுமெனவும் கருநாடக அரசின் அணைக்கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டுமெனவும் கோரிவருகின்றனர். எனினும், இந்திய அரசு தமிழக மக்களின் கோரிக்கையை ஒரு பொருட்டாக எடுத்துகொள்ளவே இல்லை. மேலும், நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் பங்கீடு ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்காமலும் காலம் தாழ்த்திவருகிறது. இந்நிலையில், கடந்த 21.3.2015 அன்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்முயற்சியில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் காங்கிரசு, பாரதிய சனதா, திமுக, தேமுதிக, விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துக்கொண்டனர். அக்கூட்டத்தில், கருநாடக அரசின் அணைக்கட்டும் முயற்சியைத் தடுக்க வலியுறுத்தியும் காவிரி மேலாண்மைவாரியம் நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும் 28.3.2015 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துவதென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாய அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் வணிகர் அமைப்புகள் எனப் பல்வேறு கட்சி சாராத இயக்கங்களும் இணைந்து அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. இப்பேராட்டம் இந்திய அரசுக்கு தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும். எனவே, இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் வெகுவாக பங்கேற்கவேண்டுமெனவும் அமைதி வழியிலும் அறவழியிலும் வெற்றிகரமாக நடத்திவேண்டுமெனவும் குறிப்பாக, வணிகர்கள், பள்ளி- கல்லூரி மாணவர்கள், பயணிகள் உட்பட யாவரும் இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்கால வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை மனதில் நிறுத்தி ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பல ஆண்டுகள் உழைத்தவர்க்கும் கட்சி அங்கீகாரம் தர வேண்டும்: குஷ்பு நியமனத்தில் விஜயதாரணி

vijayadharani சென்னை : கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கட்சி அங்கீகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., விஜயதாரணி. குஷ்பு, கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட விஷயத்தில் அவரின் கருத்து இதுவாக இருந்தது. தமிழக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. விஜயதாரணி செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் மேலிடம் குஷ்புவுக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்ததில் ஆச்சரியமில்லை. கட்சிக்கு வருபவர்களை கௌரவிக்கவும், தக்க வைக்கவும் கட்சிப் பதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் குஷ்புவுக்கு பதவி வழங்கியதில் தவறு இல்லை. அதே நேரம் சினிமா பிரபலங்களால்தான் காங்கிரசின் செல்வாக்கு வளரும் என்று கருதுவதும் தவறு. காங்கிரசுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. இருக்கும் செல்வாக்கை தட்டி எழுப்பும் திறமை இருக்க வேண்டும். காங்கிரசுக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களும், தியாகம் செய்தவர்களும் பலர் இருக்கிறார்கள் அவர்களையும் கட்சி அங்கீகரிக்க வேண்டும். பதவிகள் வழங்க வேண்டும். உதாரணமாக நான் உள்பட பலருக்கு கட்சிப் பதவி கிடைக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்தான். எம்.எல்.ஏ. பதவி என்பது மக்களால் தேர்வு செய்யப்படும் பதவி. ஆனால் கட்சிப் பணி செய்வதற்காக எந்தப் பதவியும் வழங்கியதில்லை. தமிழகத்தில் காங்கிரசை முன்னணிக் கட்சியாக மீண்டும் கொண்டு வர முடியும். திறமை, உழைப்பு மீது நம்பிக்கையோடு செயல்பட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்…. என்றார் அவர்.

கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி: பிரசாந்த் பூஷண் மீண்டும் குற்றச்சாட்டு

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் ஒரு குழப்ப நிலை எழுந்துள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி என்று குற்றம் சாட்டியுள்ளார் அக்கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷண். மேலும், அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் குமாரும் தற்போது கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும், யாதவ்வோ, பூஷணோ, கேஜ்ரிவால் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை என்று கூறியுள்ளார். அவர்கள் சஞ்சய் சிங், குமார் விஸ்வாஸ் இருவரின் ராஜினாமா குறித்து எதிர்ப்பு தெரிவித்து தங்கள் கருத்தை முன்வைத்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் யோகேந்திர யாதவ் இன்று மதியம் 1 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில், இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

தோற்றது மகிழ்ச்சி: அனுஷ்கா நடிப்பு அபாரம்: ராம்கோபால் வர்மா டிவிட்!

ram-gopal-varma மும்பை: உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்றது மகிழ்ச்சி, அனுஷ்காவின் நடிப்பு அபாரம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…. நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன். நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால் அது நாட்டிலுள்ள ஆண்களை வேலை செய்வதை நிறுத்திவிட்டு டிவி பார்க்க வைத்து விடுகிறது. இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி. நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். அதைவிட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவர்களை வெறுக்கிறேன். – என்று கூறியுள்ளார். மேலும், நான் தனிப்பட்ட வகையில் அனுஷ்கா சர்மாவின் நடிப்பை மிகவும் விரும்புகிறேன். அது அவர் விரும்பும் நண்பரின் செயல்திறனைக் காட்டிலும் அதிக ரசனையுடன் இருந்தது என்று கூறியுள்ளார். நான் மற்ற நாடுகளையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்… இந்திய அணியைத் தோற்கடியுங்கள். இந்தியர்கள் கிரிக்கெட் விளையாடுவது நிறுத்தப் படும்வரை, அவர்கள் அதைப் பார்ப்பது நிறுத்தப்படும் வரை … என்று கூறியுள்ளார். இந்த டிவிட்டில், கிரிக்கெட், ஆல்கஹால், சிகரெட்டை விட அதிக போதையாக்கும் தேசிய நோய் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது ட்வீட்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டரில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

வசதி படைத்தவர்கள் எரிவாயு மானியத்தை விட்டுத்தர வேண்டும்: மோடி

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில், வசதி படைத்தவர்கள் தாமாக முன் வந்து மானியத்தை விட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் இன்று சர்வதேச எரிசக்தி மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது … நேரடி மானியத் திட்டத்தை அமல்படுத்திய போது, வசதி படைத்தவர்கள் மானியம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன். அதை ஏற்று நாடெங்கும் 2.80 லட்சம் பேர் சமையல் எரிவாயு மானியம் பெறுவதை தவிர்த்தனர். இதனால் மத்திய அரசுக்கு 100 கோடி ரூபாய் மிச்சம். இந்தப் பணம் ஏழைகள் நலனுக்காக செலவிடப்படும். எனவே வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியம் பெறுவதில் இருந்து விலக்கு பெற வேண்டும்… என்றார். மேலும்… நமது நாடு முழுமையான வளர்ச்சி பெற வேண்டுமானால், எரிசக்தி துறையில் தன்னிறைவு பெற வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எரிசக்தி பற்றாக்குறை ஒரு தடையாக இருக்கக்கூடாது. தற்போது நாம் எரிசக்தியை 77 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதை நாம் 10 சதவீதம் குறைத்தாக வேண்டும். இந்தியாவின் 75–வது சுதந்திர தினம் 2022–ம் ஆண்டு கொண்டாடப்படும் போது 10 சதவீதம் எரிசக்தி இறக்குமதியை குறைக்க வேண்டும். இது நமது கனவாக இருக்க வேண்டும்.இதில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் 2030–ம் ஆண்டுக்குள் நம்மால் 50 சதவீத எரிசக்தி இறக்குமதியை குறைக்க முடியும் என்று உறுதிபட தெரிவிக்கிறேன். எரிசக்தி உற்பத்தியை உள்நாட்டில் நாம் அதிகரிக்கும் போது, ஏழைகளுக்கு மேலும் உதவ முடியும். தற்போது நாடெங்கும் 27 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கப்பட்டு வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் 1 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகம் செய்ய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக வழங்கும் திட்டத்துக்காக நாடெங்கும் 12 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களது வங்கி கணக்குகளுக்கு நேரடியாக மானியத்தொகை வழங்கப்படுகிறது. மானியத்தொகை சிந்தாமல், சிதறாமல் சென்றடைவதால் ஊழல் திறமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊழலை எதிர்த்து போராடி ஒழிக்க வேண்டுமானால் அமைப்பு நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் கொள்கை முறை வேண்டும். எரிவாயுக்கான நேரடி மானியம் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. – என்றார்.

திருச்செங்கோடு அருகே மாணவி பலாத்காரக் கொலை: காதலித்த உறவினரான இளைஞர் கைது

murder-school-girl-thiruchenkod நாமக்கல்: திருச்செங்கோடு அருகே 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்து கொன்றதாக அவரது உறவினரும் காதலித்தவருமான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த இலக்கியம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி செல்வராஜின் இரண்டாவது மகள் ஸ்ரீஜா (17). இவர் பெரியமணலியை அடுத்த கோட்டைப்பாளையத்தில் பாட்டி வீட்டில் தங்கி 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். தினமும் சைக்கிளில் பள்ளிக்குச் சென்று வருபவர், நேற்று பள்ளிக்குச் சென்று சேரவில்லை. தேர்வு நேரத்தில் மாணவி வராததால் சந்தேகம் அடைந்த ஆசிரியர் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து தகவல் கேட்டுள்ளனர். இதை அடுத்து, ஸ்ரீஜாவின் தந்தை செல்வராஜ், கோட்டைப்பாளையத்திற்குச் சென்று விசாரித்து மகளைத் தேடி பள்ளி செல்லும் வழியில் பார்த்தவாறு சென்றார். அப்போது, ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அமைத்த குடிசைக் கொட்டகை முன் ஸ்ரீஜாவின் சைக்கிள் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த செல்வராஜ், உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கொட்டகையில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதைப் பிரித்துப் பார்த்த போது மாணவி ஸ்ரீஜா பிணமாகக் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் இது குறித்து போலீஸில் புகார் கொடுத்தார். அதை அடுத்து அங்கு வந்த நாமக்கல் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செந்தில்குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுமன், தாசில்தார் குப்புசாமி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் தீவிர விசாரணையில் மாணவி ஸ்ரீஜா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் மாணவி ஸ்ரீஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மாணவி ஸ்ரீஜாவை திலீபன் (20) என்ற இளைஞர் கொலை செய்திருக்கலாம் என்று கருதிய செல்வராஜ், அவரை ஊர் மக்கள் உதவியுடன் பிடித்து எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், துஞ்சம்பாளையத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சந்தோஷ்(20), மற்றும் மாணவியுடன் படித்து வந்த சக மாணவர் பூளாச்சிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன்(17) இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது 3 பேரும் மாணவியை பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்துக் கொன்று உடலை சாக்குமூட்டையில் கட்டியது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து, திலீபன் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்…. நானும், ஸ்ரீஜாவும் உறவினர்கள். நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். ஆனால் திடீரென ஸ்ரீஜா என்னுடன் பேசுவதைக் குறைத்து கொண்டார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது எந்த பதிலும் சொல்லவில்லை. என்னுடன் பழகுவதைப் புறக்கணித்தார். ஸ்ரீஜாவின் பிரிவு எனக்கு அதிர்ச்சி அளித்தது. நன்றாகப் பேசி வந்த காதலி திடீரென என்னை விலகிச் செல்ல என்ன காரணம் என்று விசாரித்த போது, அவர் தன்னுடன் படிக்கும் மாணவர் மணிகண்டனை காதலிப்பது தெரியவந்தது. அதனால் கோபமுற்ற நான் ஸ்ரீஜா மற்றும் மணிகண்டனை சந்தித்து காதலைக் கைவிடுமாறு கூறினேன். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்தனர். என்னை ஏமாற்றியதால் ஸ்ரீஜா மீதும், என் காதலியை அபகரித்ததால் மணிகண்டன் மீதும் எனக்கு கோபம் ஏற்பட்டது. இதுபற்றி நான் எனது நண்பர் சந்தோஷிடம் கூறினேன். அவன் எனக்கு ஆறுதல் கூறினான். இந்நிலையில், நேற்று ஸ்ரீஜாவும், மணிகண்டனும் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் அமைத்துள்ள கொட்டகையில் தனிமையில் இருப்பது தெரியவந்தது. அதனால் நானும் சந்தோஷும் அங்கே சென்றோம். அப்போது அவர்கள் இருவரையும் தனிமையில் பார்த்தேன். இது எனக்கு கொலை வெறியை ஏற்படுத்தியது. நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன். எங்களுக்குள் அடிதடி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஸ்ரீஜாவை நானும், எனது நண்பர் சந்தோஷும் பலாத்காரம் செய்தோம். பின்னர் அவள் மயக்கம் அடைந்தாள். இனியும் விட்டு வைத்தால் மீண்டும் மணிகண்டனுடன்தான் இருப்பாள் என்று கருதி நான் அவளை கொலை செய்ய முடிவு செய்தேன். மயக்கத்தில் இருந்த ஸ்ரீஜாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின்னர் சாக்கு மூட்டையில் அவளது உடலை வைத்துக் கட்டிவிட்டு அங்கிருந்து வந்து விட்டோம். என்று கூறினார். தொடர்ந்து மாணவர் மணிகண்டனிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாங்கள் 2 பேரும் காதலித்து வந்தோம் என்றும், தனிமையில் பேசிக் கொண்டு இருந்தபோது, திலீபன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் என்னைத் தாக்கினர் என்றும் கூறினார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.