புளியங்குடி அருகே லாரி மோதி பெண் பலி
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த பணிக் குழு அமைத்தார் சிறீசேன
கொழும்பு: இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்த முன்னாள் அதிபர் சந்திரிகா தலைமையில் பணிக்குழு ஒன்றை சிறிசேன அரசு அமைத்துள்ளது. இது இந்தியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைக்கப்பட்ட பணிக்குழு. பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அவர் சிறிசேனாவிடம், ‘இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 13-வது அரசியல் சட்ட திருத்தம் விரைவில், முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார். அதற்கேற்ப, தமிழ் மக்களின் அவசர நல்லிணக்க தேவைகளை அடையாளம் கண்டறிந்து, தீர்வு காண்பதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் தலைமையில் ‘நல்லிணக்கத்துக்கான அதிபரின் பணிக்குழு’ என்ற பெயரில் ஒரு குழுவை சிறிசேனா அரசு அமைத்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று வெளியிட்டார். அப்போது, “இலங்கையில் சமூக, மத நல்லிணக்கத்தை உருவாக்கி சாதிக்க வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். தமிழ் சிறுபான்மை மக்களின் நல்லிணக்கம் தொடர்பான அவசர தேவைகளை கண்டறிவதற்காக முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்கா தலைமையில் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்குழு, நல்லிணக்கம் தொடர்பான மக்களின் கோரிக்கைகளையும் பெற்று பரிசீலிக்கும்” என அவர் கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா: பாஜகவின் விவாதக் கோரிக்கையை சோனியா ஏற்க மறுப்பு
புது தில்லி, நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்த மசோதா குறித்துக் கூறுகையில், மசோதா குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது. எதிர்ப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு விவரம் தெரிவித்தால், மசோதாவை திருத்தம் செய்ய தயார் என்றும் அறிவித்தார். கட்கரியின் கோரிக்கைக்கு கடிதத்தில் பதிலளித்துள்ள சோனியா காந்தி “விவசாய நலனுக்கு எதிரான நிலச் சட்டத்தை ஒருபோதும் ஏற்பதற்கில்லை. விவசாயிகளுக்கு எதிரான எந்த சட்டத்தையும் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது. நிலம் கையகப்படுத்தும் சட்டம் முற்றிலுமாக விவசாய நலனுக்கு எதிரானது. எனவே, நிலச் சட்டத்தை ஒருபோதும் ஏற்பதற்கில்லை. இந்த சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தங்கள் ஏற்புடையதாக இல்லை. அரசியல் சார்ந்த குறுகிய கண்ணோட்டத்தை விடுத்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலச் சட்டத்தை மாற்றாமல் அதே வடிவில் அமல் படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரூ.500 கோடி வரி பாக்கி: 18 நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு
500 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளது தொடர்பாக 18 நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலை, மத்திய வருவாய்த் துறை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, ஜெய்ப்பூரைச் சேர்ந்த கோல்ட்சுக் வர்த்தக நிறுவனம் ரூ. 75.47 கோடியும், சோமானி சிமெண்ட் நிறுவனம் (ரூ. 27.47 கோடி), ஆப்பிள் டெக் நிறுவனம் (ரூ. 27.07 கோடி), குஜராத்தின் பூனம் தொழிற்சாலை (ரூ.15.84 கோடி) என வரி பாக்கி வைத்துள்ளன. இதுதொடர்பாக, மத்திய வருவாய்த் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது… வரி வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில், ரூ. 10 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ள நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல், முதல் முறையாக பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்வகையில் 18 நிறுவனங்களைக் குறித்த விவரங்கள், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில், 11 நிறுவனங்கள் குஜராத்தைச் சேர்ந்தவை. நிறுவனங்களின் முகவரிகளும், பான் எண்களும் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சில நிறுவனங்களின் சரியான முகவரி கிடைக்கவில்லை. அவை குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
கர்ப்பிணி பிரசவத்தின் போது அசிரத்தையாக வீடு சென்ற மருத்துவருக்கு ரூ.19 லட்சம் அபராதம்
மும்பை: மும்பையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு மருத்துவ கண்காணிப்பு அவசியம் தேவைப்படும் என்ற நிலையில், அப்படியே விட்டு விட்டு அசிரத்தையாக வீட்டுக்குச் சென்று, சிசுவின் மரணத்துக்குக் காரணமான மருத்துவருக்கு ரூ.19 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை மலாட் பகுதியில், கடந்த 2003ல் கர்ப்பிணிப் பெண் சோனு அங்குள்ள மாத்ருச்சயா நர்சிங் ஹோமில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகும் என்ற நிலையில், மருத்துவ கண்காணிப்பு அவசியத் தேவை என்ற சூழலில், தனது மருத்துவமனையிலேயே அனுமதிக்கச் சொல்லியிருக்கிறார் மருத்துவர். அவரது அறிவுரையில் பேரில் சோனு 2003 அக்.18ம் தேதி மதியம் 12.30க்கு சேர்ந்துள்ளார். அவரை அன்று மாலை 4 மணிக்கு பரிசோதித்த மருத்துவர் அடுத்த 15 நிமிடங்களில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி, கண்காணிப்பு தேவைப்படும் என்றும் அறிவுறுத்திச் சென்றுள்ளார். இந்நிலையில், அதிக வலியால் அவதிப்பட்ட சோனுவுக்கு மருத்துவர் வந்து விடுவார் வந்து விடுவார் என்று இழுத்தடித்து, வேறு வழியின்றி, அங்குள்ள நர்சுகளால் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தை பேச்சு மூச்சற்ற நிலையில் இருந்துள்ளதால், பின்னர் வந்த மருத்துவர் வேறு ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிசுவை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். ஆனால், அங்கே சிசு உயிரிழந்த தகவலைக் கூறியுள்ளனர். இதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவரோ, சிசு கொண்டு செல்லப்படும் போதுதான் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். இருப்பினும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், பிறந்த பின்னர், குழந்தை தொப்புள் கொடி சுற்றி மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இதை அடுத்து, மருத்துவ வல்லுநர் குழுவின் அறிக்கையை வைத்து, சோனு கரீர் தனது குழந்தை இறப்புக்குக் காரணம் மருத்துவரின் அசிரத்தையே என்று கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், மருத்துவரின் அலட்சியப் போக்கு நன்றாகத் தெரிந்ததால், மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பாய மன்றம் மருத்துவருக்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.19 லட்சம் அபராதத்தை விதித்தது.
நியூசிலாந்தை மிகச் சிறப்பாக வெற்றி கொள்வோம்: கிளார்க்
மெல்பர்ன்: நியூசிலாந்து அணியை மிகச் சிறப்பான வகையில் வெற்றி கொள்வோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கெல் கிளார்க். இந்தியாவை வென்றதுடன் எங்களின் பணி நிறைவடைந்துவிடவில்லை, நாங்கள் மிகச் சிறந்த அணியுடன் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தப் போட்டிக்கு முன்னதாகவும் நான் அதைத்தான் சொல்லியிருந்தேன். நாங்கள் மிகச் சிறந்த எதிரணியுடன் விளையாடுகிறோம் என்று. நியூசிலாந்து இப்போது பார்மில் உள்ள அணி. அது இறுதிப் போட்டிக்கு வரத் தகுதியான அணிதான். அதை நாங்கள் நிச்சயம் சிறப்பான முறையில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.. என்று கூறியுள்ளார் க்ளார்க்.
குறுக்கே வந்த நாய்; பிரேக் போட்ட இளைஞர்; லிப்ட் கேட்டுச் சென்ற பெண் பலி
திருவள்ளூர்: குறுக்கே திடீரென நாய் ஒன்று ஓடியதால், திடீரென பைக்கின் பிரேக்கைப் போட்ட இளைஞர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அவருடன் லிப்ட் கேட்டு ஏறிச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள மும்முடிக்குப்பம் கீழாண்டை தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தியின் மனைவி தேவகி (45). இவர் நேற்று காலை மும்முடிக்குப்பத்தில் இருந்து வயலூருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செழியன் (23) என்பவர் பைக்கில் வயலூர் நோக்கிச் சென்றார். அவரிடம் ‘லிப்ட்’ கேட்டு ஏறிக் கொண்டார் தேவகி. உச்சிமேடு காலனி அருகே பைக் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்து ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க, திடீர் ‘பிரேக்’ போட்டார் தனஞ்செழியன். இதனால் பைக் சறுக்கி விழுந்ததில் கீழே விழுந்த தேவகி, தனஞ்செழியன் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தேவகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனஞ்செழியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேகதாது: கர்நாடக முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த பேரவையில் தமிழக முதல்வரின் தனித் தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரச்சினையில், தமிழகத்தில் சனிக்கிழமை நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தனித் தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மான விவரம்: காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின் படி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மாதாந்திர வாரியாகப் பெறுவதற்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கர்நாடக அரசு மேகதாதுவில் இரண்டு புதிய அணைகள் கட்ட முயற்சிப்பதையும், குடிநீர் வழங்கல் என்ற போர்வையில் காவிரி நீர்வாரி நிகமம் வாயிலாக மேற்கொள்ளவுள்ள திட்டங்களையும், தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்துக்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணைகள் கட்டும் திட்டம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடகம் செயல்படுத்த முனையக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும்.
- கடந்த 5.12.2014 அன்று இந்த மாமன்றத்தால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
- மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 25 கோடி ரூபாயை கர்நாடக அரசு தனது நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ளதற்கு இந்த மாமன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது.
- கர்நாடக அரசு, மேகதாது நீர்மின் திட்டம் மற்றும் வேறு பல திட்டங்களை எடுத்துக் கொள்வதை நிறுத்தி வைக்கும்படி கர்நாடகத்திற்கு அறிவுரை வழங்கக் கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2.9.2013 அன்று கடிதம் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
இதேபோல், கர்நாடக அரசு, காவிரி நீர்வாரி நிகமம் என்ற அமைப்பின் மூலமாக, பல நவீன மயமாக்கும் திட்டங்களை நிறுத்தி வைக்க, கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கும்படி பிரதமருக்கு 3.9.2013 அன்று கடிதம் அனுப்பினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தமிழகத்தின் அனுமதியில்லாமலும் இத்திட்டங்களை கர்நாடகம் மேற்கொள்ள தடை விதிக்க கோரியும், மேல்முறையீட்டு மனுக்களில் தீர்வு ஏற்படும் வரையிலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும் தற்போதைய நிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவு வழங்கவும் கோரி ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் 11.4.2014 அன்று தமிழக அரசு தாக்கல் செய்தது. மேகதாதுவில் புதிய அணைகள் கட்ட தொழில் நுட்ப சாத்திய அறிக்கை தயார் செய்வதற்காக கர்நாடக அரசின் விருப்பம் கோரும் அறிவிப்பை நிறுத்தி வைத்திடவும் குடிநீர் வழங்கல் என்ற போர்வையின் அடிப்படையில் எந்த ஒரு திட்டத்தையும் கர்நாடக அரசு தமிழ்நாட்டின் இசைவு பெறாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்கவும் 12.11.2014 அன்று நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 18.11.2014 அன்று இடைக்கால மனு ஒன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்காக ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கர்நாடக அரசு தனது 2015-2016 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கம் செய்ததை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல், எந்த திட்டத்தையும் கர்நாடகம் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்க 21.3.2015 அன்று பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். இது தொடர்பாக 26.3.2015 அன்று மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ததது. இத்தகைய நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுதலையும், நன்றியையும் இந்த மாமான்றம் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறது. மேகதாதுவில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை கர்நாடகத்தால் தயாரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்றும்; காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத்திற்கு வரும் வரையிலும் மற்றும் தமிழ்நாட்டின் அனுமதியின்றியும் மேகதாதுவில் அணை, நீர்த்தேக்கம் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் கர்நாடக அரசு எடுக்கக் கூடாது என கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்; காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்த மாமன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தட்டச்சர் பணியிட தேர்வர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு தகவல்!
உயர் நீதிமன்ற தட்டச்சர் பணியிட தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு; சென்னை உயர்நீதிமன்றப் பணியில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கு 139 காலிப் பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 22.11.2013 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது. மேற்காணும் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 23.02.2014 அன்றும் Skill Test 12.07.2014 முதல் 15.07.2014 வரை, 27.09.2014 மற்றும் 28.09.2014 ஆகிய நாட்களில் நடைபெற்றது. மேற்படி பதவிக்கான விண்ணப்பதாரர்களின் இணையதள வழியிலான விண்ணப்பங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கும் பொருட்டும், அவ்விவரங்களின் உண்மைத் தன்மையினை அறியும் பொருட்டும் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 383 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 06.04.2015 மற்றும் 07.04.2015 ஆகிய இரு நாட்கள் சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம்(Notice of Certificate Verification) தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணைய தளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். மேற்படி அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விரைவு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்டவாறு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர்கள் அதனைத் தொடர்ந்த தெரிவுப் பணிகளுக்கு தகுதி பெற்றுவிட்டதாக கருத இயலாது. மேலும், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கலந்துக் கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்டாது. TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION: The Tamil Nadu Public Service Commission in its notification dated 22.11.2013 had invited applications from eligible candidates for appointment by direct recruitment to the post of Typist in the Madras High Court Services. The Written examination for the post was held on 23.02.2014 and skill test was held from 12.07.2014 to 15.07.2014, 27.09.2014 and 28.09.2014. A total of 383 candidates have been called for the Certificate Verification to verify and confirm the genuineness of the claims made by them in their on-line applications to fill up 139 vacancies. The Certificate Verification is scheduled to be held in the office of the Tamil Nadu Public Service Commission, Frazer Bridge Road, V.O.C. Nagar, Chennai-3 on 06.04.2015 and 07.04.2015. The memorandum for Certificate Verification has been sent to all the 383 candidates through Speed Post. The Candidates may also download the Notice of Certificate Verification from the Commission’s Website (i.e. www.tnpsc.gov.in). Consideration of the candidates for Certificate Verification cannot be construed as clearance for further selection process. If the candidates fail to appear for the Certificate Verification on the designated date and time, they will not be given any further chance to appear for the Certificate Verification.
ஜெர்மன் விமான விபத்து: துணை விமானி வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்
பாரீஸ்: ஜெர்மன் விமான விபத்து தொடர்பாக ஜெர்மனி போலீசார் அதன் துணை விமானி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் துணை விமானி லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து, சோதனையிட்டனர். அதில், முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ ஏர்பஸ் ஏ-320 விமானம், கடந்த 24-ஆம் தேதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது. பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் ஆல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி ஒன்று மலைப் பகுதியில் மீட்கப்பட்டது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவுக் கருவி பதிவுகள் ஆராயப்பட்டன. அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்தபோது விமானி அறைக் கதவைத் தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புலன் விசாரணை நடத்தும் அதிகாரி ஒருவர், “வெளியே சென்ற விமானி, மீண்டும் வந்து கதவைத் தட்டியுள்ளார். பதில் இல்லை. அதன் பின்னர் கதவை வலுவாகத் தட்டியுள்ளார். அதற்கும் பதில் இல்லை. அதன் பின் எந்த பதிலும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது” என்று கூறியுள்ளார். இதனை நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்தில் தீவிரவாத தாக்குதல் குறித்த யூகம் இல்லை என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காஸிநியூவ் கூறியுள்ளார். என்ன நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது என்றாலும், நடுவானில் விமானம் வெடித்துச் சிதறி இருக்காது என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தின் 2-வது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. இதன் மூலம் துணை விமானி சதி செய்துதான், விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், எதற்காக அவர் இந்த சதியில் ஈடுபட்டார், அதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை. இந்த விமானத்தின் துணை விமானி ஆன்ட்ரூஸ் லூபிட்ஸ் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு அருகே உள்ள மான்டபாரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். டுசல்டார்ப் நகரிலும் அவருக்கு ஒரு அபார்ட்மென்ட் இருந்துள்ளது. அவருக்கு ஒரு காதலியும் இருக்கிறார். ஜெர்மனி போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது, லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின்போது முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த லுபிட்ஸுக்கு தீவிரவாதிகளுடன் சம்பந்தம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

