Home Blog Page 6177

தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்தைத் தடுக்கக் கோரி காவல் ஆணையரிடம் மனு!

சென்னை: வரும் ஏப்.14 அன்று பெரியார் திடலில் தி.க. அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாலி அறுக்கும் போராட்டத்தை தடுக்கக் கோரி, தமிழர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளது. மேலும், இச்செயலுக்கு தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் க.அதியமான் தெரிவித்தபோது, தமிழ்ப் பெண்களுக்கு தாலி என்பது ஒரு பாரம்பரிய அடையாளமாக பண்பாட்டுச் சின்னமாக உள்ளது. ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் தனது தாலியை இல்வாழ்வின் புனிதச் சின்னமாகவே போற்றி வருகின்றனர். தமிழர்களின் விழுமியங்களை ஏற்று தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான தமிழ்ப் பெண்கள் இந்த மங்கல நாணை உளமாற ஏற்றுள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் பண்பாட்டுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் தி.க. இப்படியான தாலி அறுப்பு போராட்டம் நடத்துவது வேதனையானது. இதைத் தமிழர்கள் ஒரு போதும் ஆதரிக்க முடியாது. இந்தத் தாலி அறுப்புப் போராட்டம் சமூகத்தில் மிகவும் கடுமையான வன்முறைகளைத் தூண்டிவிடக்கூடிய நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. சமூக, மத மோதல்களைத் தூண்டிவிடக் கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தமிழ்நாட்டில் நடத்துவது அபாயகரமானது. சுமூகமான சூழலைக் கெடுக்க தி.க போன்ற அமைப்புகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழ் உணர்வாளர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இந்தத் தமிழ்ப் பெண்களின் தாலி அறுப்புப் போராட்டத்தை தடுக்கக்கோரி காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளோம். காவல்துறை தடுக்கத் தவறினால் திராவிடர் திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து பல்வேறு ஆதரவு அமைப்புகளுடன் போராட்டம் நடத்தப்படும். என்று கூறினார்.

நாத்திகம், பகுத்தறிவு பற்றி கவிஞர் கண்ணதாசன்

ஈ வே ரா சேலத்தில் நடத்தியது போல் சென்னையிலும் ஒரு ஆபாச ஊர்வலம் நடத்த முயன்ற போது கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை இது. இதை தொடர்ந்து அந்த அந்த ஆபாச ஊர்வலம் கைவிடப்பட்டது. கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் என்ற நூலிலிருந்து நான் ஒரு இந்து. இந்து என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் எல்லா மதத்தினரையும் மனமார நேசிக்கிறேன்; ஆனால் இந்துவாகவே வாழ விரும்புகிறேன். நான் கடவுளை நம்புகிறேன்; அவனைக் காட்டியவனைப் போற்றுகிறேன்; அந்தக் கடவுளைக் கல்லிலும் கருத்திலும் கண்டு வணங்குகிறேன். ஆன்மா இறைவனோடு ஒன்றிவிடும்போது, அமைதி இருதயத்தை ஆட்சி செய்கிறது. நாணயம், சத்தியம், தர்மம் இவற்றின் மீது நம்பிக்கை பிறக்கிறது. நேரான வாழ்க்கையை இருதயம் அவாவுகிறது. பாதகங்களை, பாவங்களை கண்டு அஞ்சுகிறது. குறிப்பாக ஒரு இந்துவுக்குத் தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி, வேறு யாருக்கும் கிடைப்பதில்லை. கடைசி நாத்திகனையும், அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது. என்னை திட்டுகிறவன்தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறான்; ஆகவே அவன்தான் முதல் பக்தன்” என்பது இறைவனின் வாக்கு. இந்து மதத்தைப்போல் சகிப்புத்தன்மை வாய்ந்த மதம் உலகில் வேறு எதுவும் இல்லை . நீ பிள்ளையாரை உடைக்கலாம்; பெருமாள் நாமத்தை அழிக்கலாம்; மதச்சின்னங்களை கேலி செய்யலாம்; எதைச் செய்தாலும் இந்து சகித்துக் கொள்கிறான். ஏதோ பரம்பரையாகவே பகுத்தறிவாளனாகப் பிறந்தது போல் எண்ணிக் கொண்டு, பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தைக் கேலி செய்யும் பகுத்தறிவுத் தந்தைகள் இஸ்லாத்தின் மீதோ, கிறிஸ்துவத்தின் மீதோ கை வைக்கட்டும் பார்க்கலாம். கடந்த நாற்பது வருசங்களில் ஒரு நாளாவது அதற்கான துணிவு ஏற்பட்டதாக தெரியவில்லையே! பாவப்பட்ட இந்து மதத்தை மட்டுமே தாக்கித் தாக்கி, அதை நம்புகிற அப்பாவிகளிடம் ‘ரேட்டு ‘ வாங்கிச் சொத்துச் சேர்க்கும் ‘பெரிய ‘ மனிதர்களைத்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் பேசுகிற நாத்திக வாதம், அவர்கள் ‘குடும்பம் நடத்தும் வியாபாரம்’ என்பதை அறியாமல், வாழ்கையையே இழந்து நிற்கும் பல பேரை நான் அறிவேன். பருவ காலத்தில் சருமத்தின் அழகு மினுமினுப்பதைப் போல், ஆரம்ப காலத்தில் இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். நடிகையின் ‘மேக் அப்’ பைக் கண்டு ஏமாறுகிற சராசரி மனிதனைப்போல், அன்று இந்த வாதத்தைக் கேட்டு ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். அந்த கவர்ச்சி எனக்கு குறுகிய காலக் கவர்ச்சியாகவே இருந்தது இறைவனின் கருணையே! என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் இன்று சந்திர மண்டலத்துக்குப் பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு, ஆன்மீக நெறியில் திளைக்க வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது? வேண்டுமானால் ‘பணத்தறிவில் ‘ முன்னேறிவிட்டது என்று சொல்லலாம். ஆளுங் கட்சியாக எது வந்தாலும் ஆதரித்துக் கொண்டு, தன் கட்சியும் உயிரோடிருப்பதாகக் காட்டிக் கொண்டு, எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு வாழ்கையை சுகமாக நடத்துவதற்கு, இந்த நாத்திக போலிகள் போட்டிருக்கும் திரை, பகுத்தறிவு! உலகத்தில் நாத்திகம் பேசியவன் தோற்றதாக வரலாறு உண்டே தவிர, வென்றதாக இல்லை. இதை உலகமெங்கும் இறைவன் நிரூபித்துக் கொண்டு வருகிறான். அவர்கள் எப்படியோ போகட்டும். இந்த சீசனில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்கள் கோவில்களுக்கு முன்னால் பகுத்தறிவு விளையாட்டு விளையாடிப் பார்க்கலாம் என்று கருதுகிறார்கள். இதை அனுமதித்தால், விளைவு மோசமாக இருக்கும். நம்பிக்கை இல்லாதவன் கோவிலுக்கு போக வேண்டாம். நம்புகிறவனை தடுப்பதற்கு அவன் யார்? அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்கச் சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன் கடை வைக்க தொடங்குகிறார்கள். வெள்ளைக்காரனின் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டு ‘போகாதே போகாதே என் கணவா ‘ என்று பாடியவர்களுக்கு நாட்டுப் பற்று எங்கிருந்து வரும்? நாட்டு பற்று இல்லாதவர்களுக்கு தெய்வப் பற்று எங்கிருந்து வரும்? தெய்வப் பற்று இல்லாதவர்களுக்கு நாணயம், நேர்மை இவற்றின் மீது நம்பிக்கை எங்கிருந்து வரும்? இந்த நாலரை கோடி மக்களில் நீங்கள் சலித்துச் சலித்து எடுத்தாலும், நாலாயிரம் நாத்திகர்களைக் கூட காண முடியாது. பழைய நாத்திகர்களை எல்லாம் நான் பழனியிலும், திருப்பதியிலும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்! ஆகவே இந்த காரியங்களுக்கு யாரும் துணை வர மாட்டார்கள்.

நாளை முழு அடைப்பு: த.மா.கா. கலந்து கொள்வதாக ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: நாளை அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடத்தப் படவுள்ள முழு அடைப்புக்கு த.மா.கா., ஆதரவு அளித்து கலந்து கொள்வதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவதைத் தடுக்கவும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முழுமையாக நீதிமன்ற ஆணைப்படி கர்நாடக அரசு வழங்கவும் – வலியுறுத்தி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் த.மா.கா கலந்து கொள்கிறது. உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் (Riparian Water Rights)-ஆற்றங்கரை, நீர் உரிமைகள் படி கடை மடைப் பகுதி விவசாயத்திற்கும் நீர் சென்றடைய வேண்டும் என்பது தான் நியதி. கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி தண்ணீர் கொடுக்க மறுக்கிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அவமதிக்கும் செயல். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி வழக்கமாக நடைபெறும். கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடியும் நடைபெறவில்லை. 2011 ஆம் ஆண்டில் மட்டுமே சாகுபடி நடந்தது. தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாட்டால் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க முடியாத நிலையும் உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக டெல்டா விவசாயப் பகுதிகளில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுவதற்கு காவிரி நீர் போதிய அளவில் கிடைப்பதில்லை என்பது தான் காரணம். மேலும் காவிரி நீர் பாயும் தமிழகப் பகுதியின் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப் படி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் இது வரை அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் காவிரி தண்ணீர் இன்றியமையாதது. கர்நாடக அரசு உரிய காவிரி நீரைத் தர மறுப்பதோடு, காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் போன்ற பகுதிகளில் தடுப்பணைக் கட்ட முயற்சிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. அதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது கர்நாடக அரசின் பிடிவாதக் குணத்தைக் காட்டுகிறது. தடுப்பணைக் கட்டுவதற்கு கர்நாடக அரசின் தொடர் முயற்சியைத் தடுத்து நிறுத்தவும், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தடுப்பணைக் கட்டுவதற்கு ஒப்புதல் தரக்கூடாது என்பதற்கும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை ஆணையம் உடனடியாக அமைக்கவும், உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு கொடுக்கக் கூடிய தண்ணீரை காலம் தாழ்த்தாமல், முழுமையாக வழங்கிடவும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக கடந்த 21 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விவசாய சங்கங்கள் மற்றும் த.மா.கா உட்பட அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகின்ற 28 ஆம் தேதி சனிக்கிழமை தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே த.மா.கா விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியுள்ளது. இப்பொழுது நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் த.மா.கா தலைவர்களும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்வார்கள். இப்போரட்டத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் அறவழியில் செயல்பட்டு விவசாயிகள் நலன் காப்பதில் இந்த முழு அடைப்பு போராட்டத்தினை வெற்றியோடு நடத்திட வேண்டும். என்று கூறியுள்ளார்.

சோதனைகளின் போது நமது நன்மைக்கே என இறைவனை நம்ப வேண்டும்!

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே… அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய அவர் ஒரு நாள், இ றைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்க்கு பதிலளித்த இறைவன், “எனக்கு அதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலம் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகம் என்பதை மறந்துவிடக்கூடாது. என் மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள், இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு, கோவில் கர்ப்ப க்ரஹத்தில் இவர் நிற்க, இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்று கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தான். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை கர்ப்ப க்ரஹத்தில் இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருக்கும் நம் ஹீரோ பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார்.

சற்று நேரம் கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ரட்சிக்கவேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படை தேவைகள் கூட கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயாக பார்த்து ஏதாவது எனக்கு ஒரு வழி சொல்” என்று மனமுருக கண்களை மூடி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்துகொண்டான்.

சில வினாடிகள் கழித்து கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக்கொள்கிறான்.

இறைவன் வேடத்தில் நின்றுகொண்டிருந்த, அந்த சேவகரால் இப்போதும் எதுவும் சொல்லமுடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து, பணப் பையை தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான்.

அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, நம் ஹீரோ உடனே இறைவனை நினைத்துக்கொள்கிறார். “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த நம் பணியாள் நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையை கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது. கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்த நம் பணியாளிடம் இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான்.

இறைவனோ இதே கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். என்னடா இது, நம்மை பாராட்டுவான் என்று நினைத்தால் இப்படி கோபித்து கொள்கிறானே என்று பணியாள் துணுக்குற்றான்.

“நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்துகொள்ளவில்லை….? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்….? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? ”

இறைவன் தொடர்ந்து பேசலானான்…. “செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதை கொடுத்தான்.

இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமக்க செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான்.

இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்.” என்றான் இறைவன் கோபத்துடன்.சேவகன், இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான்.

“இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்துகொள்ளமுடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொருப் பொழுதையும் கழிக்கிறேன். அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.” என்றான் இறைவன் புன்னகைத்தபடி.

****

நம் வாழ்வில் இப்படித் தான்… நம்மை சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கு காரணங்களை நம்மால் புரிந்துகொள்ளமுடியாது. இறைவன் ஒவ்வொன்றிலும் ஒரு காரணத்தை ஒளித்துவைத்திருப்பான். அதை கண்டுபிடிப்பதில் தான் அனைவரும் வேறு படுகின்றனர்.

எதையும் எதிர்கொள்ளும் மனோபாவத்தையும், புரிந்துகொள்ளும் பக்குவத்தையும் இறைவனிடம் எப்போதும் வேண்டுவோம். இப்போதைய தேவை அது தான்.

அதே போல நமக்கு ஏற்படும் ஒவ்வொரு சோதனையின் போதும், மனம் தளராது இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, ‘எல்லாம் நமது நன்மைக்கே’ என்ற பக்குவத்தை நாம் வளர்த்துக்கொண்டால், எப்பேர்பட்ட சோதனைகளும் சாதனைகளாகிவிடும். எந்த துரோகமும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

– கே.எஸ்.திலீப்

திருப்பதி கோவிலுக்கு 10 டன் காய்கறி: இலவசமாக அனுப்பினர் கோயம்பேடு வியாபாரிகள்

  சென்னை: திருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு ஒவ்வொரு மாதமும் கோயம்பேடு வியாபாரிகள் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். அதுபோல் நேற்றும் 10 டன் காய்கறிகளை அனுப்பி வைத்தனர். கோயம்பேட்டில் ஒவ்வொரு கடைக்காரரும் ஒரு மூட்டையாக, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளையும் வியாபாரிகள் கோயிலுக்கு வழங்கினர். இதுகுறித்து வியாபாரி சங்கத் தலைவர் சௌந்திரராஜன் கூறும்போது, ‘‘திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் இலவசமாக சாப்பாடு வழங்கி வருகிறது. இதற்கு உதவ கோயம்பேடு வியாபாரிகள் மாதம்தோறும் காய்கறிகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வியாபாரியும் 1 மூட்டை காய்கறியை இலவசமாகத் தருகிறார்கள். இதை மொத்தமாக லாரியில் ஏற்றி திருப்பதிக்கு அனுப்பி வைத்தோம். நேற்று மட்டும் 10 டன் காய்கறிகள் அனுப்பப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம். இந்தக் காய்கறிகள் 1 வார சமையலுக்கு போதுமானது. இதேபோல் பல்வேறு நகரங்களில் இருந்தும் திருப்பதிக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. நாங்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பதிக்கு அனுப்புகிறோம்… என்றார் அவர்.

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் வரலாறு!

kamaraj-indira இப்படியும் ஒரு வரலாறு…. நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். “சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்துவிடத்தான் அழைத்தேன்” என்றார்/ பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் . சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார் . அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். ஏதாவது செய்துகொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார். கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐயரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரப் பதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார். ’தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்…

இலக்கியச் சிந்தனை கூட்டம்: கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள்!

சென்னை: இலக்கியச் சிந்தனை அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் நாளை சனிக்கிழமை மாலை 6.30க்கு சென்னை ஆழ்வார் பேட்டை ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவை அடுத்துள்ள அம்புஜம்மாள் தெருவில் அமைந்துள்ள இந்தக் கட்டத்தில், நடைபெறும் கூட்டத்தில், தனது மொழி பெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் கௌரி கிருபானந்தன். மேலும் விவரங்களுக்கு: ஆர்.ஏ.கே.பாரதி 2451 3164

விராட் கோலியால் ‘அவுட்’டான அனுஷ்கா சர்மா!

anushka(1) உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆனதால், அவரது காதலியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா மூட் அவுட் ஆனார். இதனை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இருவரையும் வறுத்தெடுத்தனர். இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும், ஹிந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா, இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் அரையிறுதிப் போட்டியை சிட்னி மைதானத்தில் பார்க்க நேரில் வந்திருந்தார். அனுஷ்கா சர்மா வருகையால், விராட் கோலி சிறப்பாக ஆடி ரன்களைக் குவிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது ஆனால் விராட் கோலியோ ஒரு ரன் எடுத்த நிலையில், எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி அவுட் ஆனதைப் பார்த்த அனுஷ்கா சர்மா, வாயில் கையை வைத்துக் கொண்டு தலையை குனிந்து மூட் அவுட் ஆனார். இந்நிலையில், அவர்கள் இருவரையும் இணைத்து டிவிட்டரில் மோசமான கமெண்டுகள் கருத்துரைகள் உலவின.

கோலி – அனுஷ்காவை டுவிட்டரில் கலாய்த்த ரசிகர்கள்

virat kohli-anushka sarma உலகக் கோப்பை கிரிக்கெட் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த பெரும் இலக்கை நோக்கி இந்தியா விளையாடிய போது 3 ஆவது வீரராக விராட் கோலி களம் இறங்கினார். அப்போது மைதானத்தில் இருந்த அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா கைத்தட்டி உற்சாகப் படுத்தினார். கோலி அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தேவையில்லாத ஷாட் ஆடி 13 பந்துகளில் ஒரு ரன்னில் அவுட் ஆனதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோலி விளையாட வந்தபோது அனுஷ்கா உற்சாகமாக அவரது பேட்டிங்கைப் பார்க்கத் தயாரானார். மேலும் கேமரா அவர் பக்கம் திரும்பியபோது புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார். அனுஷ்காவுடன் ஒரு நண்பர் குழு வந்திருந்தது. அவர்களுடன் அனுஷ்கா உற்சாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கோலி அவுட்டானபோது அனுஷ்காவின் முகம் பெரும் சோகமாகி கோணிப் போனது. பெரும் ஷாக் அவருக்கு. கன்னத்தில் கை வைத்து உறைந்து போன அவரது முகத்தை டி.வி.யில் காட்டிக் கொண்டே இருந்தனர். ஏற்கெனவே கோலி மீது ஆத்திரத்தில் இருந்த ரசிகர்களின் வெறுப்பு அனுஷ்கா சர்மா மீதும் திரும்பியது. போட்டி முடிந்ததும் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ரசிகர்கள் இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கோலி - அனுஷ்காவை காய்த்தனர். சில இடங்களில் விராட் கோலியின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாகக் கொண்டு சென்று தீ வைத்து எரித்தனர். அனுஷ்கா சர்மாவின் படங்களையும் எரித்தனர். காதலியுடன் ஊர் சுற்றுவதே கோலியின் மோசமான ஆட்டத்துக்கு காரணம் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் கலாய்த்ததையும் காண முடிந்தது. இந்தியா அணியின் தோல்வியை விமர்சிப்பதை விட கோலி- அனுஷ்கா ஜோடியை தான் ரசிகர்கள் அதிகம் கலாய்த்தனர். #IndvsAus என்ற ஹாஷ் டாக்கில் அவர்களின் கலாய்த்தல் நேற்று டிவிட்டர் கணக்கில் பெரும் பரபரப்பாகியிருந்தது.

கோலி ஆட்டத்துக்கு அனுஷ்காவை வம்பிழுக்காதீர்கள்: சௌரவ் கங்குலி

saurav-ganguly சிட்னி: விராட் கோலி மிகவும் மோசமாக விளையாடி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதற்கு, அனுஷ்கா சர்மாவை வம்பிழுக்காதீர்கள் என்று இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். இது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். நேற்று அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, கோலியைக் குறித்தும் அனுஷ்கா சர்மாவை வறுத்தெடுத்தும் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் காய்த்து எடுத்து விட்டார்கள். இந்நிலையில், இது முதிர்ச்சியற்ற செயல் என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி. இந்த விவகாரத்தில் அனுஷ்கா சர்மா செய்த தவறு என்ன? மற்ற குடும்பத்தினர் போல், அவரும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க இங்கு வந்துள்ளார்… அவ்வளவுதான். இதற்கும் கோலியின் பேட்டிங்க்கும் என்ன தொடர்பு? இது மோசமான ஒன்று. இரண்டு பேர் காதலிப்பது ஒன்றும் அப்படி மோசமான செயல் அல்லவே” என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி.