Home Blog Page 6238

டி.வி. அலுவலக வாயிலில் வீசப்பட்டது பட்டாசு: போலீஸார் அறிக்கை

PT_bomb_2338410gசென்னை: சென்னையில் இன்று தனியார் டிவி., அலுவலக வாயிலில் மர்ம நபர்கள் 4 பேர் வீசிச் சென்றது பட்டாசு என்று போலீஸார் தங்கள் பத்திரிகைச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், இன்று (12.3.2015) காலை 0300 மணியளவில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி வளாகம் அருகே 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் தொலைக்காட்சி அலுவலகம் உள்ளே பட்டாசுகளுடன் இருந்த 2 டிபன் பாக்ஸ்;களை பற்ற வைத்து வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக இத் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சேதுநாராயணன் இன்று கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில். அடையார் துணை ஆணையர் கண்ணன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தொலைக்காட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களின் உருவம் மற்றும் வாகனம் அடையாளம் காணப்பட்டது. அதனை கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி. கோயம்பேடு. தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கி வரும் மற்றும் இந்து இளைஞர் சேனா படையை நடத்தி வரும் ஜெயம் பாண்டியன் என்பவரின் இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் என்பதும் தெரிய வந்தது. அதன்பேரில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க விரைந்து சென்ற தனிப்படையினர் இன்று (12.3.15) இச்சம்பவத்தில் ஈடுபட்ட 1.வேணுகோபால் (29) 2.கே.மகாதேவன் (27). 3.முரளி(32). 4.சிவா (22). 5.சரவணன் (24). 6.ராஜா (25) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்கள்;.கோயம்பேட்டில், ஜெயம் பாண்டியன் நடத்தி வரும் தனியார் ஆம்னி பேருந்து நிருவனத்தின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர்கள் என்பதும். தினசரி ரு:.300-க்காக அவரது நிறுவனத்தில் பணிபுரிந்து அலுவலகத்திலேயே தங்கி வருவதும். முக்கிய குற்றவாளியான ஜெயம் பாண்டியனின் தூண்டுதலின் பேரில். ஜெயம்பாண்டியன் தயார் செய்து கொடுத்த பட்டாசுகளுடன் நீள்வட்ட டிபன் பாக்சில் எடுத்துக் கொண்டு. மேற்படி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று தொலைக்காட்சி நிறுவன வளாகத்தில் வீசிச் சென்றதும் தெரிய வந்தது. மேலும் கோயம்பேடில் உள்ள ஜெயம்பாண்டியனின் தனியார் பேருந்து நிறுவன அலுவலகத்திலிருந்து. மேற்படி சம்பவத்தில் ஈடுபடுத்திய இருசக்கர வாகனமும் பயன்படுத்தாத பட்டாசுகளும் கைப்பற்றப்பட்டன. முக்கிய குற்றவாளியான ஜெயம் பாண்டியன் இன்று (12.3.2015) மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும். இது குறித்து. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

தில்லி திரும்ப மனம் இல்லை?: விடுப்பை மேலும் நீட்டித்த ராகுல்

rahul_gandhi புது தில்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விடுப்பை மீண்டும் நீட்டித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் நேரத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 2 வார கால விடுப்பில் சென்றார். அவர் பாங்காக்கில் ஓய்வு எடுப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால், ராகுல் காந்தி பாங்காக்கில் இல்லை உத்தரகண்ட் மாநில மலைப்பகுதியில் தான் உள்ளார் என்று கூறி அதற்கான புகைப்படத்தையும் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெளியிட்டார். இந்நிலையில் ராகுல் விடுப்பு முடிந்து திங்கட்கிழமை தில்லி திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் திரும்பவில்லை. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தர ஒருவர் மனு செய்து, அது விசாரணைக்கு உகந்ததல்ல என்று தள்ளுபடி ஆனது. அப்போது, ராகுல் விடுப்பை நீட்டித்துள்ளதாகவும் இந்த வார இறுதியில் அவர் தில்லிக்குத் திரும்புவார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ராகுல் விடுப்பை மீண்டும் நீட்டித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் இந்த மாத இறுதியில் தான் தில்லி திரும்புவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சியில் பழைய ஆட்களைக் களை எடுத்து, புதிய நபர்களை அதிகம் சேர்க்க விரும்புகிறார் ராகுல் என்று கூறப்பட்டது. மேலும், கட்சியை புதுப்பிப்பது குறித்து சிந்தித்து புதிய திட்டங்கள் தீட்டி வரவே ராகுல் விடுப்பில் சென்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.

எச்.எம்.டி. கடிகார நிறுவனம் மூடப் படுகிறது?

புது தில்லி: இந்தியாவின் பிரபல வாட்ச் நிறுவனமான எச்.எம்.டி. வாட்ச் கம்பெனி விரைவில் மூடப்படுகிறது என்று தகவல் வெளியானது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கிரிஷ் குமார் கூறியபோது, அரசிடமிருந்து நிறுவனத்தை மூடுவதற்கான அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வரவில்லை. ஆனாலும் பணியாளர்களின் ஓய்வு திட்டத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்ய இருக்கிறோம் என்றார்.

டி.வி. அலுவலகம் மீதான குண்டுவீச்சு : வைகோ கண்டனம்

சென்னை: சென்னையில் தனியார் டி.வி. அலுவலகம் மீதான குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய செயல் வன்முறை வெறியாட்டம் ஆகும். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையத்தின் முன் 8-ஆம் தேதி அன்று இந்துத்துவா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் தொலைக்காட்சி அலுவலரைத் தாக்கியதோடு கேமராவையும் உடைத்தனர். கடந்த மூன்று நாட்களாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினரைத் தொலைபேசியில் தகாத வார்த்தைகளால் அச்சுறுத்துவதும் மிரட்டுவதும் தொடர்ந்துள்ளது. இந்தப் பின்னணியில், இன்று அதிகாலை வெடிகுண்டு வீசி உள்ளனர். இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது. ஜனநாயகத்தின் உயிர்த்தன்மை காக்கும் ஊடகங்களையும், செய்தி ஏடுகளையும் தாக்குகின்ற வன்செயல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துத்துவா சக்திகளின் பாசிச கோர முகம் அம்பலமாகிவிட்டது. இந்த வன்முறைச் செயலைப் பின்னணியில் இருந்து இயக்கும் பாசிச இந்துத்துவா சக்திகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். என்று கூறியுள்ளார்.

நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! : கருணாநிதி உறுதி !

karunanidhi சென்னை: நீதி என்றும் வெல்லும், நிச்சயமாக வெல்லும் என்ற தலைப்பிட்டு இன்று திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட கடித அறிக்கையில்…. ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை, 5-1-2015 அன்று தொடங்கி, கர்நாடகா உயர் நீதி மன்றத்தில் மின்னல் வேகத்தில் வழக்கறிஞர்களின் வாதங்கள் முற்றுப் பெற்று நேற்றையதினம் நீதிபதி அவர்கள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்ப தாகத் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் , இதுவரை விசாரணை நடைபெற்ற 38 நாட்களில், நீதிபதி குமாரசாமி அவர்கள் அவ்வப்போது குறுக்கிட்டு தெரிவித்த கருத்துகளை, தீர்ப்புக்கு முன்பு அனைவர்க்கும் நினைவூட்டவே இந்தக் கடிதம்! 16-2-2015 அன்று ஜெயலலிதா வழக்கறிஞர், பி. குமார்: “இது அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்கு” நீதிபதி சி.ஆர். குமாரசாமி அவர்கள்: “இது பொய் வழக்கு, பொய் வழக்கு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள். ஆனால், குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய் வழியாக பொய் வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங் கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத் தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை” ஜெ. வழக்கறிஞர் குமார்: ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினார் நீதிபதி குமாரசாமி அவர்கள்: “முதல்வர் பதவியில் இருப்பவர் ரூ. 1 சம்பளம் வாங்கினாலும், பொது ஊழியராகத்தான் கருதப்படுவார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும் போது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் வருமானம் உள்ளதை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இல்லை என்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லையே” என்று நீதிபதி சொல்லியிருக்கிறார். சுதாகரன் திருமணச் செலவு பற்றிய விவாதம் நடைபெற்ற போது, இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க. தொண்டரா? அல்லது ஜெயலலிதாவின் மகனா? –

  • நீதிபதி குமாரசாமி அவர்கள்: குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி அவர்கள்: “இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க. தொண்டரா? அல்லது ஜெயலலிதாவின் மகனா? இதுவரை 28 நாட்கள் வாதம் செய்துள்ளீர்கள். தனி நீதிமன்ற நீதிபதி தவறாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். அவர் வழங்கியுள்ள தீர்ப்பில் என்ன குறை என்பதை 20 நாளில் உங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நானும் உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது.

சுதாகரன், இளவரசி சார்பாக முன்னாள் நீதியரசர், சுதந்திரம் வாதத்தைத் தொடங்கும்போது, நீதிபதி குமாரசாமி :- இந்த வழக்கில் முக்கியமானது 120 பி – கூட்டுச் சதி, 109 குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல். ஜெயலலிதா அரசு பதவியில் இருந்த போது சம்பாதித்த பணத்தை வைத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோ ருடன் கூட்டுச் சதி செய்து சொத்துகள் வாங்கியதாகவும், ஜெயலலிதா குற்றங்கள் செய்ய சசிகலா, சுதாகரன், இளவரசி உடந்தையாக இருந்ததாகவும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பதிவு செய்திருக்கிறது. இதைப்பற்றி சரியாக யாரும் வாதிடவில்லை. நீங்கள் 120பி, 109 பற்றி வாதிடுங்கள். சுதந்திரம் :- ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) இ-யில் 120 பி, 109 வராது. ஏ.1 ஜெயலலிதா கூட்டுச் சதியில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் தமிழக ஊழல் தடுப்பு போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை. நீதிபதி :- ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற நினைக் கிறீர்கள்? உங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளை மட்டும் வாதிடுங்கள். ஏ.1 (ஜெயலலிதா) வுக்காக வாதிட்ட வரும், ஏ.2 (சசிகலா)வுக்காக வாதிட்டவரும் சாட்சியங்களின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி வாதிடவில்லை. நீங்களாவது குற்றப் பின்னணி கொண்டவர்கள் கூட்டுச் சதி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது இல்லை என சாட்சிகளின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி வாதிட வேண்டும். மணி சங்கர் (சசிகலாவின் வழக்கறிஞர்) :- ஜெயலலிதா குற்றம் செய்ய உடந்தையாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்தனர் என எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி :- கூட்டுச் சதியில் ஈடுபடாதவர்களை எப்படி தனி நீதிமன்றம் தண்டித்து இருக்கும்? தமிழக ஊழல் தடுப்புப் போலீசார் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கை பதிவு செய்யத்தான் முடியுமா? இல்லை, இந்த வழக்கை 18 ஆண்டுகள் நடத்தி இருக்கத்தான் முடியுமா? இல்லை, இதையெல்லாம் ஆராயாமல் தனி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி யிருக்கத்தான் முடியுமா? தேவை இல்லாததைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதை விட, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறுகள் இருந்தால் அவற்றை உங்கள் தரப்பு ஆதாரங்களோடு நிரூபியுங்கள். இதுவரை 65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தேவையில்லாமல் வாதிட்டுக் கொண்டிருக் கிறீர்கள். இதுவரை 20 சதவிகிதம் கூட ஆதாரங் களோடு வாதிடவில்லை. சுதந்திரம் :- பவானி சிங் எங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் கூறி வாதிடட்டும், அதற்குப் பதில் சொல்கிறோம். நீதிபதி :- இதுபோன்ற கிரிமினல் வழக்குகளை எதன் அடிப்படையில் வாதிட வேண்டும் என்பது தெரியுமா? ஜெயலலிதாவைப் பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனுதாரரைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்களுடைய குற்றச்சாட்டுகளைப் பற்றி வாதிடுங்கள். வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு அமையும். வழக்கறிஞர் குமார் :- ஜெயலலிதா செலவுப்பட்டியலில் இருந்து சுதாகரன் திருமணச் செலவு 6.45 கோடி ரூபாயை நீக்க வேண்டும். நீதிபதி :- உங்கள் தரப்பு வாதங்களை இப்படி வாய்மொழியாகவே பேசி வருகிறீர்கள். கட்டட மராமத்துப் பணிக்காக நீங்கள் செய்த செலவுக்கான ஆதாரங்கள் என்ன? அதற்கான சாட்சியங்கள் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82 – 92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களை காட்டவும் இல்லை. 30 – 35 சதவிகிதம் வரைதான் வாதிட்டிருக்கிறீர்கள். குமார் :- 35 மார்க் எடுத்தாலே பாஸ்தான். நீதிபதி :-பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால் நீதி மன்றத்தில் எதிர் தரப்பை விட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் பண்ண முடியும். அப்படிப் பார்த்தால் உங்களை விட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ். ரூபாய் 66 கோடி வருமானத்திற்கு சொத்துள்ளது என்பதை இல்லை என்று மறுக்கும் வகையில் ஆதாரமில்லையே? ஒன்று, வாதத்திற்குத் தேவையான ஆதாரம் கொடுங்கள். இல்லையெனில் நானே ஒரு ஆடிட்டரை நியமனம் செய்து கொண்டு கணக்குகளை சரிபார்க்கிறேன். அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதமும் அவசியமில்லை. நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கி விடுகிறேன். இது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று நீதிபதி குமாரசாமி கூறியிருக்கிறார். இவ்வாறு தனது கடித அறிக்கையில் நினைவூட்டலாகக் குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

எம்.டி.என்.எல்.லை மூடும் திட்டமில்லை

புது தில்லி: எம்.டி.என்.எல். நிறுவனத்தை மூடும் திட்டமில்லை என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். எம்.டி.என்.எல்.லின் சந்தை பங்கு மதிப்பு வயர்லெஸ்ஸில் 0.36% அளவு இறங்கியும், வயர்லைன் மதிப்பு 13.10% அளவுக்கு ஜனவரி இறுதியில் இருந்ததாக தகவல் வெளியான நிலையிலும், அமைச்சரிடம் இருந்து இத்தகைய அறிவிப்பு வெளியானது.

5 கிராமங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

 

நெல்லை  மாவட்டத்தில், 5 கிராமங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அம்மா திட்ட சிறப்பு முகாம்  5 கிராமங்களில் நடைபெற உள்ளது. திருநெல்வேலி வட்டத்துக்கு உள்பட்ட கண்டியப்பேரி பகுதி-2, சங்கரன்கோவில் வட்டத்துக்கு உள்பட்ட சத்திரப்பட்டி, அம்பாசமுத்திரம் வட்டத்துக்கு உள்பட்ட இடைகால் பகுதி-1, நான்குனேரி வட்டத்துக்கு உள்பட்ட மூலைக்கரைப்பட்டி பகுதி-1, மூலைக்கரைப்பட்டி பகுதி-2 ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு-இறப்புச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்பஅட்டை உள்ளிட்டவற்றுக்கு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

நீர்வள திட்ட மேற்பார்வையாளர் பணிக்கு 17ம்தேதி நேர்காணல் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

 

நீர்வள. நிலவளத்திட்ட களப்பணி மேற்பார்வையாளர் பணியிடத்துக்கான நேர்காணல் 17ம் தேதி நடைபெறும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மீன்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டிலுள்ள நீர்வள , நிலவளத் திட்டப் பணிகளுக்காக வெளிச்சந்தையிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் நேர்முகத்தேர்வு மூலம் தற்காலிக  அடிப்படையில்  களப்பணி மேற்பார்வையாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது.   இப்பணிக்கான கல்வித் தகுதி பி.எப். எஸ்.சி அல்லது எம்.எப். எஸ்.சி அல்லது மரைன் பயாலஜி அல்லது அக்ரிகல்ச்சர் சுவாலஜி அல்லது டிப்ளமோ இன் பிஸ்சரிஸ் ஆகும்.
பணிக்காலம் 30.6.2015 உடன்  முடிவடைகிறது.  இப்பணிக்கான மாத தொகுப்பூதியம் ரூ.10,000- மேற்குறிப்பிட்ட பணிக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் 17ம் தேதி காலை 11 மணிக்கு மீன்துறை உதவி இயக்குநர்  அலுவலகம், (தொலைபேசி எண். 0462 -2581488.) சி-42, 26-வது குறுக்குத் தெரு, மகாராஜா நகர்,  பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் என்ற முகவரியில் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து்ளார்.

குழந்தை தொழிலாளர் மேற்படிப்புக்கு ஊக்கத்தொகை : நெல்லை ஆட்சியர் தகவல்

தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்கள் மேற்படிப்பு  பயில ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன், விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கென்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறப்புப் பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றது.  இச்சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகள் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு முறைசார்ந்த பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றார்கள்.
இதுவரை திட்டத்தின் மூலம் 5,238 குழந்தைகள் முறைசார்ந்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.  இவ்வாறு முறைசார்ந்த பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து கல்வி கற்று 10-ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் தேர்ச்சி அடைந்து பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசின்  மூலம் மாத ஊக்கத்தொகை ரூ.500 வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே, திட்டத்தில் பயின்று முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு தற்சமயம் மேல்படிப்பு படிக்கும் குழந்தைகள் இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித் துள்ளார்.

கள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற பாலியல் தொழில் பெண்மணி

  புதுச்சேரி: புதுச்சேரியில், ரூ.36 ஆயிரம் கள்ள நோட்டுகளை பாலியல் தொழிலாளி பெண் ஒருவர் வங்கியில் செலுத்த ஒருவரிடம் கொடுத்து விட்டுள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்க தேசத்தைச் சேர்ந்த அந்தப் பெண், புதுவை உள்பட பல்வேறு இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடுவாராம். இந்நிலையில் வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் வீட்டில் அவர் தங்கியிருந்தாராம். அப்போது அய்யனாரிடம் ரூ.40 ஆயிரம் பணத்தைக் கொடுத்து மிஷன் வீதியில் உள்ள வங்கி ஒன்றில் தனது கணக்கில் செலுத்தும்படி கூறி அனுப்பிவைத்துள்ளார். அதன்படி அய்யனார் வங்கியில் பணத்தைச் செலுத்திய போது, வங்கி காசாளர் அதில் 36 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுகள் இருப்பதை அறிந்தார். நூறு ரூபாய் நோட்டுகள் பத்தும், ஐநூறு ரூபாய் நோட்டுகள் 27ம் அதில் இருந்துள்ளன. இதுகுறித்து அவர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அய்யனாரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பெண்மணி தன்னிடம் பணத்தைக் கொடுத்தனுப்பியதைக் கூறியுள்ளார். இதை அடுத்து போலீசார் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற வாடிக்கையாளர் தனக்கு இந்தப் பணத்தைக் கொடுத்தார் என்று கூறியுள்ளார். இது கள்ளநோட்டு என்று தெரியாமல் வாங்கி விட்டதகவும், அந்த நபர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், போலீஸார் சுரேசை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கும் கள்ள நோட்டு குறித்த விவரத்தைக் கொடுத்துள்ளனர்.