Home Blog Page 6242

தமிழகத்தில் சீரழியும் கல்வித் துறை; பயன்படுத்தப்படாத ரூ.4400 கோடி: ராமதாஸ்

ramadoss சென்னை: தமிழகத்தில் கல்வித் துறை சீரழிந்து கொண்டிருப்பதாகவும், பயன்படுத்தப் படாத நிதி ரூ.4,400 கோடி இருப்பதாகவும் பாமக நிறுவுனர் ராமதாஸ் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அந்த அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டவும், ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளிகளை சீரமைக்கவும் வழங்கப்பட்ட ரூ.4400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவிகளுக்கு விடுதி கட்டுதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. ஒருங்கிணைந்த தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கான ஆண்டு பணித் திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்வதற்காக தில்லியில் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி நடந்த திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) 46 ஆவது கூட்டத்தில் தான் இவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்தில் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் 200 புதிய பள்ளிகளையும், 2010-11 ஆம் ஆண்டில் 344 புதிய பள்ளிகளையும், 2011-12 ஆம் ஆண்டில் 552 புதிய பள்ளிகளையும் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 2009 முதல் 2012 வரையிலான 3 ஆண்டுகளில் மொத்தம் 1096 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2009-10 ஆண்டு முதல் இப்போது வரையிலான 6 ஆண்டுகளில் மொத்தம் 125 பள்ளிகள் மட்டுமே புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் 75 பள்ளிகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. அதாவது ஓராண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய பள்ளிகள் 6 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவடையவில்லை. மீதமுள்ள 896 பள்ளிகளைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. அதேபோல், ஏற்கனவே செயல்பட்டு வரும் 2033 பள்ளிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அவற்றில் எந்த பணியும் தொடங்கப்படவில்லை. மாணவிகள் தங்கிப் படிப்பதற்காக 44 விடுதிகளை கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இதுவரை 18 விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டிருக்கின்றன. 5265 பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 920 பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன; மீதமுள்ள 4345 பள்ளிகளில் இதற்கான எந்தப் பணியும் இன்று வரை தொடங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 1616 அறிவியல் ஆய்வகங்கள், 1504 கணினி அறைகள், 1873 நூலகங்கள், 1990 கலை/கைத்தொழில் அறைகள் கட்டுவதற்கும் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதற்கான பணிகளை தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை. இடைநிலை கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாத நிதியின் அளவு மட்டும் ரூ. 4400 கோடி ஆகும். தில்லியில் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இடைநிலைக் கல்வித்துறை செயலர் பிருந்தா சரூப், மாணவ, மாணவியரின் கல்வி சார்ந்த பணிகளில் தமிழக அரசு மிகவும் அலட்சியமாக செயல்படுவதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார். மத்திய அரசு செயலாளர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்க முடியாத தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா, 2010-11 ஆம் ஆண்டில் புதிதாக கட்டப்பட வேண்டிய 344 பள்ளிக்கட்டிடங்களை வரும் ஜூன் மாதத்திற்குள் கட்டி முடிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். அக்கெடு முடிய இன்னும் 3.5 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் புதிய பள்ளிகள் எப்போது கட்டி முடிக்கப்படும்? என்பது ஆட்சியாளர்களுக்கு மட்டுமே விடை தெரிந்த வினா. புதிதாக அறிவிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை என்ற போதிலும் அப்பள்ளிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. கட்டிடங்கள் இல்லாத நிலையில் அவை மரத்தடிகளிலும், பாழடைந்த பழைய கட்டிடங்களிலும் தான் செயல்படுகின்றன. தமிழகத்தை உலகின் உயர்கல்வி மையமாக மாற்றுவோம் என்று கூறியவர்களின் ஆட்சியில் தொடக்கப்பள்ளிகள் மரத்தடிகளில் நடப்பது சோகத்திலும் சோகமான விஷயமாகும். ரூ.4400 கோடி என்பது மிகப்பெரிய தொகையாகும். இதைக் கொண்டு அரசு பள்ளிகளை சிறப்பான முறையில் மேம்படுத்தமுடியும். ஆனால், கிடைத்த பணத்தைக் கூட பயன்படுத்திக் கொள்ளாமல் மிக மோசமான சூழலில் கல்வி பயிலும் நிலைக்கு மாணவர்களைத் தமிழக அரசு தள்ளியுள்ளது. தமிழக அரசின் இந்த அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தாததால் கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு புதிய பள்ளிகளை கட்டுதல் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் நிதி உதவி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதனால் புதிய பள்ளிகளை கட்ட கடந்த 3 ஆண்டுகளாக ஒரு காசு கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஜெயலலிதா தான் நிர்வாகத்திறமை மிக்கவர்; அவரது ஆட்சியில் தான் தமிழகம் வளரும் என்ற மாயத் தோற்ற பலூன் சில சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டு வந்த நிலையில், அது வெறும் மாயை என்பதை இவ்விவரங்கள் உறுதி செய்கின்றன. எனவே, வெற்று விளம்பரங்களைச் செய்யாமல், கிடப்பில் போடப்பட்டுள்ள மத்திய அரசின் நிதிஉதவியுடன் கூடிய திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும்: வைகோ

Vaikoசென்னை: நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு நாடு முழுவதும் எழுந்துள்ள கடும் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தியுள்ள பா.ஜ.க அரசு மக்களவையில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு, மக்கள் விரோத நிலப்பறிப்புச் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த 52 திருத்தங்களை நிராகரித்துவிட்டு, பெயரளவில் சில திருத்தங்கள் கொண்டு வந்து, மோடி அரசு இச்சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றி உள்ளது. இந்தியாவின் முதன்மையான விவசாயத் தொழிலின் முதுகெலும்பை முறித்துள்ள மோடி அரசுக்குத் துணைபோன அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். பாரதிய ஜனதா கட்சி மட்டுமின்றி நிலம் கையகப்படுத்துதல் சட்டத்திற்கு ஆதரவு அளித்த கட்சிகள் அனைத்துமே நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்துள்ளதை வரலாறு மன்னிக்காது. நிலம் கையகப்படுத்தும்போது அரசு மற்றும் தனியார் கூட்டுத் திட்டங்களாக இருந்தால் 70 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். தனியார்துறை திட்டமாக இருப்பின் 80 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதலையும், மாநில அரசுகளின் திட்டங்களாக இருந்தால் 100 விழுக்காடு நில உரிமையாளர்களின் ஒப்புதலையும் பெற வேண்டும் என்று நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 இல் இருந்ததை ரத்து செய்துவிட்டு புதிதாக 10 (ஏ) என்ற பிரிவு அவசரச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதன்படி பாதுகாப்புத்துறை, தொழில்துறை, வீட்டுவசதி மற்றும் ஊரக கட்டமைப்பு, சமூக அடித்தள கட்டமைப்பு திட்டங்களுக்காக தேவைப்படும் நிலங்களை நில உரிமையாளர்களின் ஒப்புதல் இன்றி கையகப்படுத்தலாம். பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவைப்படும் நிலங்களை மேற்கண்ட ஐந்து பிரிவுகளின் கீழ் கொண்டு வந்து விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறிப்பதற்கு இச்சட்டம் வகை செய்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த முக்கியமான திருத்தம் மோடி அரசால் நிராகரிக்கப் பட்டிருக்கிறது. நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் மக்கள், பழங்குடியினர், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து சமூக மதிப்பீட்டு அறிக்கை (Social Impact Assessment) கட்டாயம் என்று இருந்ததை அவசரச் சட்டத்தில் மோடி அரசு நீக்கிவிட்டது. இதன் மீதான திருத்தமும் ஏற்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் முக்கிய பிரிவுகளை ரத்து செய்யாமல் மக்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்றி உள்ள மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள நிலப்பறிப்புச் சட்டத்தை எதிர்த்து ‘மக்கள்புரட்சி’ வெடித்தே தீரும் என்று எச்சரிக்கை செய்கிறேன்.

சென்னை தனியார் டிவி அலுவலகம் மீது ‘டிபன் பாக்ஸ்’ குண்டுவீச்சு

  சென்னை: சென்னையில் உள்ள தனியார் டிவி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக தனியார் டிவி செய்தி தெரிவித்தது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அந்த தனியார் டிவியில், தாலி பெண்களுக்கு பெருமையா? சிறுமையா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்க முடியாத இந்து மத அமைப்பினர் சிலர் அந்த தொலைக்காட்சியின் ஒளிப்பாதிவாளரைத் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 2 டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்கியுள்ளதாக செய்தி வெளியானது. அதிகாலை 3 மணி அளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அலுவலகத்தை நோட்டமிட்ட இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்று அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்துள்ளன. இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். 2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: சுகாதாரத் துறை செயலர்

  சென்னை: பன்றி காய்ச்சல் நோய் குறித்து பரிசோதனை செய்வதற்கு அரசு சார்பில் 7 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 13 அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களும் உள்ளன. அரசு ஆணைப்படி, ஒரு பரிசோதனைக்கு ரூ.3,750-க்கு மேல் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். பன்றி காய்ச்சல் நோய் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழக கிடங்கையும் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு, கண்காணிப்பு முகாமையும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உடன் வந்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது…. வட இந்தியாவில் 25 ஆயிரம் பேர் பன்றி காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு 1,370 பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடுக்கும் குறைவான இறப்பு தான் பதிவாகியுள்ளது. தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, பன்றி காய்ச்சல் தாக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயின் தாக்கம் இன்னமும் குறைவடையாததால் தமிழகத்தில் பரவாமல் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நாளொன்றுக்கு 482 விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு முகாம்கள், சுகாதார பழக்கவழக்கங்களை மக்களிடையே கொண்டு செல்வது, பன்றி காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி, மருந்து வழங்குதல் மற்ற்றும் தேவைக்கேற்ப ஆய்வு மையங்களின் மூலம் கண்டறிதல், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 6.75 லட்சம் ‘டாமிபுளூ’ மாத்திரைகள், சுகாதாரப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவை பணிகள் கழகத்தை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் 25 மருத்துவ கிடங்கின் வாயிலாக டாமிபுளூ மாத்திரையும், தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சல் நோய் குறித்து பரிசோதனை செய்வதற்கு அரசு சார்பில் 7 பரிசோதனை மையங்களும், தனியார் சார்பில் 13 அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களும் உள்ளன. அரசு ஆணைப்படி, ஒரு பரிசோதனைக்கு ரூ.3,750-க்கு மேல் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கும் தனியார் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதன்படி, சென்னையில் 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் கூடுதலாக வசூலித்த பணத்தை திரும்பி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதை கண்காணிக்க மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு பரிசோதனை மையங்களில் இது இலவசமாக செய்யப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வோர் தங்கள் பயணம் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன்பு தெரிவித்து தடுப்பூசி போடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக பன்றி காய்ச்சல் நோய் 80 சதவீதம் தொடுதல் மூலமாகவே பரவுகிறது. எனவே கையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை விழிப்புணர்வு செய்யும் வண்ணம் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில், தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 044-24350496, 24334811, 94443 40496, 93614 82899 போன்றவை தகவல் மையத்தின் தொலைபேசி எண்கள். மேலும் தகவல் பெற ‘104’ சேவையை தொடர்பு கொள்ளலாம். .. என்றார்.

மனிதக் கழிவுகளை மனிதன் அள்ள தடை: தமிழகத்தில் மார்ச் 15 முதல் அமல்

tnசென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் செயலுக்கு முடிவு கட்டும் விதமாக, தடை அமலாகிறது. வரும் மார்ச் 15ம் தேதியில் இருந்து இந்தச் சட்டம் தமிழகத்தில் அமல் செய்யப்படுவதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி அரசிதழில் வெளியிட்ட தகவல்: மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கு தடை செய்தல் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் 2013 என்ற சட்டம் 15-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு அறிவிக்கிறது. அதன்படி வரும் 15-ந் தேதியில் இருந்து எந்தவொரு தனிநபரோ, உள்ளாட்சி அமைப்போ, முகமையோ தங்களின் ஊழியரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, மனிதக் கழிவுத் தொட்டியை (செப்டிக் டாங்க்) கழுவும் ஆபத்தான பணிக்கு பயன்படுத்தக் கூடாது. இந்தத் தடை குறித்து பணீந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியபோது….. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றிய நடவடிக்கைகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மனிதக் கழிவுகளை அகற்றும் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை வைத்தே கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. தனி நபர்களும் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டாங்கில் இனி மனிதர்களை இறக்கி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ளக் கூடாது. இதற்காக தனியார் நிறுவனங்களிடம் எந்திரங்கள் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். ஒவ்வொரு வீடுகளிலும் செப்டிக் டாங்க், அரசால் நிர்ணயிக்கப்பட்ட முறையில் கட்டப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி கட்டப்பட்டால்தான் அதில் விஷ வாயு தேங்காமல், இயற்கையாக வெளியேறிவிடும். முறைப்படி அமைக்காவிட்டால், விஷ வாயு உருவாகி, அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே முறைப்படி செப்டிக் டாங்க் கட்டாமல் விட்டிருந்தால் அவர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். பின்னர் அதை முறைப்படி கட்டுவதற்காக அவர்களுக்கு உத்தரவிடப்படும். என்று அவர் கூறினார்.

“இதை எழுதினவா பேர் என்ன?”

“இதை எழுதினவா பேர் என்ன?

அவர் பெங்களூரா?” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
பெங்களூரிலிருந்து புதுக்கோட்டை வந்திரூந்த என்
நாத்தனாரின் கணவர், ஸ்ரீராமஜெயம் எழுதிய ஒரு
நோட்டையும் பத்து ரூபாய் பணத்தையும் கொடுத்து
“இதை மஹா பெரியவாளிடம் வைத்து, பெங்களூர்
குப்புசாமி அய்யர் இந்த நோட்டையும் பத்து ரூபாயையும்
சமர்ப்பிக்கச் சொன்னார் – என்று சொல்லு” என்று கூறி
என்னிடம் கொடுத்தார். காஞ்சி ஸ்ரீ மடத்துக்குள் நான் சென்றபோது மஹாபெரியவாள் பக்கத்தில் நல்ல கூட்டம். பெரிய
பண்டிதர்கள்,பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள்.
ரொம்ப நேரம் நிற்க முடியாததால், யாரோ வைத்திருந்த
பழத்தட்டின் மேல் ஸ்ரீராமஜெயம் நோட்டையும், பத்து 
ரூபாய் பணத்தையும் வைத்துவிட்டு நகர்ந்து நின்று
கொண்டேன். கொஞ்சம்,கொஞ்சமாகக் கூட்டம்
கலைந்தது. பெரியவாளும் எழுந்து நின்றார்.
அவர் கையில் அந்த நோட்டு.
 
“இதை யார் வைத்தது?” என்று கேட்டார்கள்.
 
“நான்” என்றேன்.
 
“இதை எழுதினவா பேர் என்ன? அவர் பெங்களூரா?
இதைத் தவிர வேறு என்ன கொடுத்தார்?
 
-என்று பெரியவா கேட்கவும், ஆடிப் போய் விட்டேன்.
“பெரியவா ! பெங்களூரிலிருந்து குப்புசாமி அய்யர்
புதுக்கோட்டை வந்திருந்தார். இந்த நோட்டையும்
பத்து ரூபாயும் கொடுத்தார். நான் பெரியவாளிடம்
சொல்லாமல் வைத்தது தப்புதான்; மன்னிக்க
வேண்டும் என்றேன்.
 
நான் சொல்லத் தயங்கியதை என் வாயால்
சொல்ல வைத்து விட்டார்கள். முகத்தில்
என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு வேறு!
 
பெரியவாளிடம் எதையும் மறைக்க முடியாது.
என்ன சொல்லச் சொன்னாலும் அப்படியே சொல்லி
பெரியவாளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை
இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது246400_479182102136836_1433845875_n

“காமாக்ஷியும் நானே”

“காமாக்ஷியும் நானே!” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
பெரியவா முகாம் இட்டிருந்த அந்த ஊரில் ஒரு
பெண்மணிக்கு பெரியவா மேல் அபார பக்தி.
ஆனால், அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பிப் போய்
தரிசனம் செய்ய அவளால் முடியவில்லை.
குடும்பச் சூழ்நிலை அப்படி.
 
ஒரு நாள் எப்படியோ வீட்டிலிருந்து கிளம்பி
ஸ்ரீமடம் முகாமுக்கு வந்துவிட்டாள். பிற்பகல் நேரம்.
ஸ்ரீபெரியவா பூஜை மேடையிலேயே ஒரு பக்கம்
அமர்ந்து பலருடன் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இந்தப் பெண்மணி, கையில் சூடம் வைத்த தட்டுடன்
ஹாரத்தி எடுக்க வேண்டும் என்று மேடை அருகில்
சென்று பெரியவா முகத்தைப் பார்த்தாள். ஆனால்
சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டார்,
பெரியவா. இதேபோல் இரண்டு,மூன்று முறை 
முயன்றும் பெரியவா முகம் திரும்பிப் பார்க்கவில்லை.
 
இந்தப் பெண்மணிக்கு ரொம்ப துக்கம். பெரியவா
கொஞ்சம் திரும்பியது போல் இருந்த ஒரு
சந்தர்ப்பத்தில் கர்ப்பூரத்தை ஏற்றி விட்டாள்.
அருகில் போய் ஹாரத்தி ஏற்றுவதற்குள் பெரியவா
எழுந்து உள்ளே போய் விட்டார்கள். திகைத்துப் போனவள் “அம்பிகே! ஏன் இப்படி 
சோதிக்கிறாய்? நான் என்ன பாவம் செய்தேண்?”-
என்று புலம்பிவிட்டு ‘சரி உனக்கே ஹாரத்தி எடுக்கிறேன்’
என்று பூஜையில் உள்ள அம்பாள் திருபுரசுந்தரிக்கே
எடுத்துவிட்டு, மிகுந்த ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும்
திரும்பி விட்டாள்.
 
அவள் பந்தலின் வெளியே வரும்போது ஒருவர் ஓடி வந்து
“அம்மா! பெரியவா உத்திரவாகிறது”- என்று சொன்னார்.
“என்னையா?- இருக்காது”-என்று தயங்கினாள், அவள்,
“உங்களைத்தான் அம்மா,வாருங்கள்” என்று சொல்ல,
தயங்கியபடி உள்ளே சென்றாள், அப்பெண்மணி.
 
அங்கு அமர்ந்திருந்த பெரியவா, ” எனக்கு ஏற்றிய சூடத்தை
அம்பாளிடம் எடுத்துவிட்டோம் என்று குறைப்படாதே.
இப்போ ஹாரத்தி காட்டு”- என்று சொன்னதும் அவள்
தட்டுத்தடுமாறி மறுபடி சூடத்தை எடுத்து தட்டில் வைத்து
கை நடுங்கப் பற்ற வைத்து பெரியவா அருகில் சென்று சுற்ற
அந்த தீப ஒளியில் பெரியவாளைப் பார்த்தாள்.
 
கரும்பு வில்லும்,பாராங்குசமும்,மந்த ஹாஸ முகமுமாக
அப்படியே அம்பாளாகவே பெரியவா காட்சி கொடுக்க
அந்த அம்மாள் மயங்கி விழாத குறையாய் ‘அம்மா அம்மா!’
என்று பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக்
கொண்டாராம்.
 
‘மேடையில் இருந்த அம்பாளும் நானும் ஒன்றுதான்!’
என்று புரிய வைத்த நிகழ்ச்சி இது.
 
(அந்தப் பெண்மணி திருச்சியை சேர்ந்த நாகலக்ஷ்மி.
அவரே என்னிடம் சொன்னார். பலமுறை பலபேருக்கு
மஹாபெரியவாள் அம்பாளாகக் காட்சியளித்ததை
அவர்களே சொல்ல நான் கேட்டிருக்கிறேன்-
734324_514749501889171_935875765_nராதா ராமமூர்த்தி)

உறவினர் சடலத்துடன் செல்ஃபி: இலங்கை இளைஞருக்கு வலுத்த எதிர்ப்பு

srilanka-man-selfieகொழும்பு: செல்ஃபி மோகம் ஆட்டிப் படைக்கும் இந்த நவீன காலத்தில், இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் இலங்கை இளைஞர் ஒருவர். இறந்து போன உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்ட அந்த இலங்கை இளைஞரின் எதிர்பார்ப்புக்கு மாறாக சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே அந்தப் படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். அதிகம் செல்பிகளை எடுத்து வெளியிடுவது அகந்தை அல்லது தாழ்வு மனப்பான்மையையின் வெளிப்பாடு என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

TNPSC GROUP 2 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் பட்டியல் வெளியீடு

ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-II ல் (தொகுதி-II) அடங்கிய துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர்-நிலை-II, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை  ஆய்வாளர், கைத்தறி  ஆய்வாளர்,  வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிகளுக்கான 1130 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.11.2014 மு.ப & பி.ப. மற்றும் 09.11.2014 மு.ப & பி.ப. ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 11497 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. 26.03.2015 முதல், சென்னை-3 பிரேசர் பாலச்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும்.   குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத்தவறினால், அன்னார் அடுத்தக்கட்ட தெரிவு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகிறார். சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மட்டுமே அடுத்தக்கட்ட நிலைக்கு உரிமை கோர இயலாது.

சிவகிரி:வயலுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் : நெற்பயிர்–கரும்புகள் சேதம்

  சிவகிரியில் வயலுக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் கரும்புகளை நாசம் செய்தன.  

நெல்லை மாவட்டம் சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியில் வயல்கள் மற்றும் தோட்டங்கள் உள்ளன. இங்கு நெல், கரும்பு உள்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்குள்ள வயல்கள் மற்றும் தோட்டங்களுக்குள்  காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில் இன்று அதிகாலை  காட்டு யானைகள் சிவகிரி பகுதியிலுள்ள வயலுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை காலால் மிதித்தும், கரும்புகளை துதிக்கையால் முறித்தும் சேதப்படுத்தின.
இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.