ஹெமெட் (கலிபோர்னியா, அமெரிக்கா): அமெரிக்காவில் 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹெமெட் பகுதியில் ஒரு முதியோர் காப்பகம் உள்ளது. அந்தக் காப்பகத்துக்குள் புகுந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், 2 பாட்டில் பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து மூதாட்டியின் வாயில் ஊற்றி அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர். அலறியடித்து அந்த மூதாட்டி அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பட்டனை அழுத்தி காவலாளிகளை உதவிக்கு அழைத்தார். இந்த சத்தத்தைக் கேட்டதுமே மாணவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அதன்பின், அந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதன்பின்னர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர், சக்கர நாற்காலியின் துணையுடன் உலவி வருகிறார். மூதாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாணவர்கள் ரூபன் ஜோஸ் மெலன்சன் (15), ரேமன்ட் மைக்கேல் மிரிண்டா(14) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கினார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்குப் பின்னர் கைதிகளுக்கான சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த மூதாட்டி, நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தை பறித்து விட்டீர்கள். நீங்கள் கட்டாயம் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும் என கண்ணீர் மல்கக் கூறினார்.
87 வயது மூதாட்டி பலாத்காரம்: 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை
தனியார் டிவி அலுவலக குண்டுவீச்சு: உள்துறை அறிக்கை கேட்பு
சென்னை:
சென்னையில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீதான குண்டு வீச்சு தாக்குதல் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேர் டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசினர். இந்தச் சப்மவம் குறித்து கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில், திமுக எம்.பி. கனிமொழி பேசினார். இதையடுத்து, இந்தத் தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.
5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி. ஒப்பந்தம்
புதுதில்லி: ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசுத் துறை போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையில், நாட்டின் மிகப் பெரிய அரசு காப்பீட்டுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. முதலீடு செய்கிறது. ரயில்வே துறையை மேம்படுத்தவும், கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்துவதற்காகவும் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதியை ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் தில்லியில் நேற்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது. ஒப்பந்தத்தின்படி, ரயில்வே வளர்ச்சி மற்றும் கட்டுமானப்பணிக்காக எல்.ஐ.சி நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் ரூபாய் 1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும். இதற்கான வட்டியும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி மீதான தாக்குதல் : ஒருவர் சரண்
சென்னை: சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று மதுரையில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். மதுரையில் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் நீதிமன்றத்தில் சரண் அடைந்த அவர் ஜெயம்பாண்டியன் என்றும், தாம் இந்து இளைஞர் சேனா அமைப்பின் தலைவர் என்றும் தெரிவித்துள்ளார். தமது அமைப்பைச் சேர்ந்த நபர்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தம்மிடம் தொலைபேசியில் தெரிவித்தனர் என்றும் அதனால் தாம் சரண் அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே அவர் தொடர்பாக நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்ட பின் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
தனியார் டிவி மீதான தாக்குதல்: மாநிலங்களவையில் கனிமொழி கண்டனம்
புது தில்லி: சென்னையில் தனியார் டிவி ஒன்றின் மீது நிகழ்த்தப் பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., கனிமொழி பிரச்னை எழுப்பிப் பேசினார். முன்னதாக, கம்யூனிஸ்ட் எம்பி., டி.ராஜா இது குறித்துப் பேச எழுந்தார். ஆனால், அவைத்தலைவர் குரியன், இது குறித்துப் பேச ஏற்கெனவே கனிமொழி அனுமதி கோரியிருப்பதாகக் கூறினார். பின்னர் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய கனிமொழி, ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் விதத்தில் புதிய தலைமுறை அலுவலகம் மீது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், எழுத்தாளார் பெருமாள்முருகன் மீதான தாக்குதல் குறித்தும் பேசினார். அப்போது, அதிமுக எம்பிக்கள் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் குறுக்கிட்டு தொடர்ந்து பேசிய கனிமொழி, தமிழக அரசுக்கு எதிராகப் பேசவில்லை, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்றே இதனைக் குறிப்பிடுகிறேன் என்று தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் செய்தித் தொலைக்காட்சி அலுவலக வாசலில் இன்று குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை அலுவலக வாசலில் 2 பைக்கில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் 2 டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசிச் சென்றனர். இந்த குண்டுகள் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை வியாழக்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்த அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அரசு குழுவினருடன் குரோம்பேட்டையில் கடந்த 2–ந்தேதி முதல் கட்ட பேச்சு வார்த்ததை நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2–ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அரசு குழுவினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். பேச்சு வார்த்தையின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
சிதம்பரம் பல்கலை., மாணவன் பலி: பஸ் ஓட்டுநர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவன் தனியார் பஸ்ஸில் அடிபட்டு பலியான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே லால்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மாணவர் குணசேகரன் (வயது 19) மோட்டார் சைக்கிளில் உடற்பயிற்சி வகுப்புக்கு நேற்று காலை சென்றார். சிதம்பரம் கீழவீதியில் வந்தபோது, முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி, குணசேகரன் உயிரிழந்தார். இது தொடர்பாக சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் வழக்குப்பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவர் ஆழம்பாடியை சேர்ந்த பாலு மகன் பிரபாகரனை (37) கைது செய்து, சிறையில் அடைத்தார்.
நெல்லை, பொதிகை ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைப்பு
சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி.பெட்டி இணைக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … சென்னை எழும்பூர்-நெல்லை (வ.எண். 12631) மற்றும் நெல்லை-எழும்பூர் (வ.எண்.12632) இடையே இயக்கப்படும் ‘நெல்லை எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் நிரந்தரமாக குளு, குளு வசதியுடைய மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. நெல்லையில் இருந்து புறப்படும் ரெயிலில் இன்று (வியாழக்கிழமை) முதலும், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதலும் இந்த புதிய ஏ.சி. பெட்டி இணைக்கப்படும். இதே போன்று சென்னை எழும்பூர்-செங்கோட்டை (வ.எண்.12661) மற்றும் செங்கோட்டை- எழும்பூர் (வ.எண். 12662) ‘பொதிகை எக்ஸ்பிரஸ்’ ரெயிலிலும் நிரந்தரமாக மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதலும், செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரெயிலில் 14-ந் தேதி (சனிக்கிழமை) முதலும் இந்த புதிய பெட்டி இணைக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.
கேரளா வனப்பகுதிகளில் மாவேயிஸ்ட் தேடுதல் வேட்டை
கேரளா எல்லை பகுதிகளில் மாவேயிஸ்ட் தேடுதல் வேட்டையை இருமாநில காவல்துறை,வனத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழக கேரளா எல்லையோரபகுதியான நெல்லை,கொல்லம் ஆகிய இரு எல்லையோர மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டம் ஆரியங்காவு பகுதியில் நடைப்பெற்றது.இந்நிலையில் இன்று தீடீர் என தென்மலை மாவட்ட வன அதிகாரி கார்த்திகேயன்,குற்றாலம் காவல் துறை ஆய்வாளர் ஜமால் ஆகியோர் தலைமையில் ஆரியங்காவு வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர்,காவல்துறையினர் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் அதிகாலைமுதல் மாலைவரை ஈடுப்பட்டனர்.இதில் யாரும் சிக்கவில்லை.
பணக்காரரிடம் கேட்டுப் பழக்கமில்லை; திரும்பத் திரும்பக் கொடுக்கும் உன்னிடமே கேட்கிறேன்: தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: தேர்தல் பணிக்காக தாராளமாக நிதி வழங்குமாறு கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்… 2016-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக அரசின் பொதுத்தேர்தல் வரவுள்ளது. 5 ஆண்டு காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப்பார்க்கும் போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், “அவர்கள் இல்லாவிட்டால் நாம் தானே”, என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம் ஆளுங்கட்சியினரிடம் அதிகமாகவே உள்ளது. அவர்களை எதிர்த்து போட்டியிட-வாக்குகளுக்கு அவர்களை போல நிதி கொடுக்க-ஆடம்பரச் செலவுகளைச் செய்திட நம்மிடம் நிதியில்லை என்ற போதிலும், அத்தியாவசியமான, அவசியமான செலவுகளைச் செய்திட ஓரளவு நிதியையாவது நாம் சேர்க்க வேண்டாமா? இன்னும் சரியாக ஓராண்டு தான்-ஆம் பன்னிரண்டே மாதங்கள். அதற்குள் நாம் ஆற்ற வேண்டிய ஜனநாயகப் பணிகள் ஏராளம்-அதிலே ஒன்று தான் தேர்தல் நிதி திரட்டும் பணி. இப்பணி மட்டுமல்ல, கட்சி பணி எதுவாயினும் முகம் சுளிக்காமல் அதனை நிறைவேற்ற, கட்சி காளைகள் ஆயிரம் ஆயிரம் பேர் தயாராக இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். தி.மு.க. சார்பில் 65 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களாக வந்துள்ள அனுபவம் பெற்ற மூத்த தளகர்த்தர்களும்-புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இளங்காளையரும் இந்த தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சியை போட்டியாகவே ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை. தேர்தல் நிதிக்கான நன்கொடைச்சீட்டுகள் கட்சி தலைமையகத்தில் முறைப்படி அச்சிடப்பட்டு மாவட்ட செயலாளர்கள் வாயிலாக வழங்கப்படவுள்ளன. நானோ, பொதுச்செயலாளரோ, பொருளாளரோ-கலந்து கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் தேர்தல் நிதியளிப்பு அவசியம் இருந்திட வேண்டும். கட்சி நிகழ்ச்சிகளிலோ அல்லது நேரிலோ; எங்களைக் காண வருவோர்-வரும்போது மாலை ஒன்று கொண்டு வருவதற்கு பதிலாக-கைத்தறி ஆடை ஒன்று அணிவிப்பதற்கு பதிலாக-நூறோ, இருநூறோ என்று தேர்தல் நிதி கொண்டு வர வேண்டும். அதையும் ஒரு கவருக்குள் வைத்து, கவரின் மீது உங்களுடைய முகவரியும், எவ்வளவு ரூபாய் என்பதையும் தெளிவாக எழுதிக் கொண்டு வர வேண்டும். வரும் தேர்தலில் ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வாதிகாரமாக நடைபெறும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்த தேர்தல் நிதி பயன்படும் என்ற எண்ணம் உனக்கு தோன்றிடும். நான் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். நீங்களும் வாரி வாரி வழங்கியிருக்கிறீர்கள். பணக்காரர்களிடம், பல கோடி வைத்திருப்போரிடம் கேட்டுப் பழக்கப்பட்டவனல்ல நான்; உன்னிடம் தான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன், நீயும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாய்; இப்போதும் கொடுப்பாய் என்ற நம்பிக்கையோடு தான் இருக்கிறேன். என்று அதில் கூறியுள்ளார்.

