சென்னை: இலங்கைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் சுடுவது தவறாகாது என்று, மோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கை செல்லவுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக் கடற்படையினர் சில சமயங்களில் அப்பாவித் தமிழக மீனவர்களைச் சுட்டுள்ளனர். இலங்கைப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் மீன்பிடிக்க வருகின்றனர்? ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால் நான் அவரைச் சுடலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது என்று ரணில் கூறியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர மீன்பிடிக்க வருவதை, வீட்டில் கொள்ளை அடிக்க முயலுவதாக ரணில் ஒப்பிட்டுள்ளார். கடலில் மீன்பிடித்தால், அதற்காகச் சுடலாம் என்பது நீதியா? கச்சத்தீவை விட்டுத் தரமாட்டோம் என்றும் ரணில் கூறியுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்று அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் நான் வலியுறுத்தினேன். மேலும், கச்சச்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கைக்குச் செல்லப் போகும் நேரத்தில் ரணில் இப்படி பேட்டி கொடுத்திருப்பது சரியில்லை. கண்டனத்துக்கு உரியதாகும். எனினும், இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலனுக்காக தமது பயணத்தை நரேந்திர மோடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 13-ஆவது சட்டத் திருத்தத்தைப் பற்றி மட்டும் பேசாமல், வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவது, பறிக்கப்பட்ட நிலங்களைத் தமிழர்களிடமே திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது, வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு காவல் துறை, நில நிர்வாகம் உள்ளிட்டவை வழங்குவது தொடர்பாகவும் மோடி பேச வேண்டும். இதை மோடி நிறைவேற்றுவார் என நம்புவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
மோடியின் பயணத்தின் போது ரணில் இப்படி பேசியிருக்கக் கூடாது: கருணாநிதி
நிலம் கையகப் படுத்தும் மசோதா மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு
புது தில்லி: நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது மக்களவையில் செவ்வாய்க்கிழமை இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை நேற்று தொடங்கியது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியும் தனது ஆட்சேபங்களை எழுப்பியிருந்தது. முன்னதாக, இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற பல்வேறு கட்சித் தலைவர்களையும் மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர். எனினும், இந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் திருத்தங்களைச் செய்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை தாங்கள் எந்த வடிவத்தில் கொண்டு வந்தோமோ அதே வடிவில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அப்படி இருந்தால், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என்று அது தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது. இது குறித்து சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த் பேசுகையில், “”விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகம் செய்வதற்குப் பதிலாக அவற்றை குத்தகைக்கு எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இதன்மூலம், நிலத்தை வழங்குவோருக்கு குத்தகை மூலம் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்கும்” என்றார். தெலுங்கு தேச எம்.பி. ஜெயதேவ் கல்லா, “”ஆந்திரத்தில் புதிய தலைநகரை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு சாதகமான நிலம் கையகக் கொள்கையை மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், நிலம் கையக மசோதாவை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்” என்று கோரினார். தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, “”விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயம் என்ற ஷரத்தை அரசு நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்குவது விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமையும்” என்றார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதை விரிவாகப் பரிசீலிப்பதற்காக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது, எம்.பி.க்களின் விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இந்த மசோதா நிறைவேற எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் அவசரச் சட்டத்துக்கு மாற்றான இந்த மசோதா, அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். வரும் 20ஆம் தேதி வரைதான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதன் பிறகு மசோதாவை நிறைவேற்ற இயலாது. சமூகம் மற்றும் நாட்டின் நலனைக் கருதி, நிலம் கையக மசோதாவில் மேலும் திருத்தங்களைச் செய்யவும் அரசு தயாராக உள்ளது என்றார். இத்தகைய சூழலில், மக்களவையில் இன்று இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மணமாகாமல் சேர்ந்து வாழ்பவர் வழக்குகள் பலாத்கார சட்டப் பிரிவிலேயே தொடரும்: தில்லி நீதிமன்றம்
புது தில்லி: திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் தம்பதிகள் தொடர்பான வழக்குகளை பாலியல் பலாத்கார சட்ட வரம்பில் இருந்து நீக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ‘நாடு முழுவதும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஆண்-பெண் இணையர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அத்தகைய நபர்களுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படும் போது காவல் நிலையங்களில் 376-வது பிரிவின் கீழ் (பாலியல் பலாத்காரம்) வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதை மாற்றி 420-வது பிரிவின் கீழ் (ஏமாற்றுதல்) மட்டுமே வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்கேற்ப சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ரோஹினி, நீதிபதி ராஜீவ் சஹாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்…. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் இணையர் தொடர்பான வழக்குகளை 376-வது சட்ட வரம்பில் இருந்து நீக்கினால் அத்தகைய தம்பதியருக்கு சட்டபூர்வமான திருமண அங்கீகாரம் அளித்தது போலாகிவிடும். அதற்கு சட்டத்தில் இடமில்லை. இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் வரும்போது ஆழ்ந்து ஆராய்ந்து விசாரிக்கப்படுகின்றன. இவ்வகையில் ஆண்கள் மீது தொடரப்பட்ட பலாத்கார வழக்குகளில் சுமார் 70 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். மனுதாரர் கோரியபடி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் இணையர் தொடர்பான வழக்குகளை பாலியல் பலாத்கார சட்ட வரம்பில் இருந்து நீக்க முடியாது. – என்று கூறினர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 : மார்ச் 23 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டசெய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வு-II ல் (தொகுதி-II) அடங்கிய துணை வணிகவரி அலுவலர், சார்பதிவாளர்-நிலை-II, தொழிலாளர் உதவி ஆய்வாளர், நிதித்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், சட்டத்துறையில் உதவிப் பிரிவு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 19 பதவிகளுக்கான 1130 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 08.11.2014 மு.ப & பி.ப. மற்றும் 09.11.2014 மு.ப & பி.ப. ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 11497 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் அளித்துள்ள தகுதிகள் மற்றும் விவரங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. 26.03.2015 முதல், சென்னை-3 பிரேசர் பாலச்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள், நேரம் குறித்த தகவல்கள் தனியே அனுப்பப்படும். குறிப்பிட்ட நாளில் உரிய அசல் சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளத்தவறினால், அன்னார் அடுத்தக்கட்ட தெரிவு நிலைகளுக்கான தகுதியினை இழந்தவராகிறார். சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள், இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதால் மட்டுமே அடுத்தக்கட்ட நிலைக்கு உரிமை கோர இயலாது. இவ்வாறு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா வெளியிட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.104 குறைவு
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்து, திங்கள்கிழமை ஒரு பவுன் ரூ.19,832-க்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில், ஜனவரி மாதம் முதல் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. பிப்ரவரி 7-ஆம் தேதி வரை தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.21 ஆயிரம் என்ற அளவிலேயே விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் தங்கம், வெள்ளி விலை கணிசமாகக் குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டது. இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு ரூ.224 வரை சரிவைக் கண்டது. வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை நேற்று மாலை நிலவரப்படி, சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.104 குறைந்தது. இரண்டு நாள்களில் மட்டும் தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.328-ம், கட்டி வெள்ளி ரூ. 385-ம் குறைந்துள்ளது. பங்குச் சந்தையில் அதிக முதலீடு, சர்வதேச சந்தை நிலவரம் போன்றவை தங்கம் விலை குறைவுக்குக் காரணம் என நகை வணிகர்கள் தெரிவித்தனர். திங்கள்கிழமை விலை நிலவரம்(ரூபாயில்) ஒரு கிராம் தங்கம் 2,479 ஒரு பவுன் தங்கம் 19,832 ஒரு கிராம் வெள்ளி 38.50 ஒரு கிலோ வெள்ளி 36,000 சனிக்கிழமை விலை நிலவரம்(ரூபாயில்) ஒரு கிராம் தங்கம் 2,492 ஒரு பவுன் தங்கம் 19,936 ஒரு கிராம் வெள்ளி 38.50 ஒரு கிலோ வெள்ளி 35,965
ஜோதிகாவின் புதிய படம் – 36 வயதினிலே!
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஜோதிகா, மலையாளத்தில் ஹிட்டான “ஹவ் ஓல்ட் ஆர் யூ” கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தை அவரது கணவர் சூர்யாவே தயாரிக்கிறார். இதில் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடிக்கிறார். பெண்களை மையப்படுத்தி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு இதுவரை தலைப்பு வைக்காமல் இருந்தனர். இந்நிலையில் இப்போது 36 வயதினிலே என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். படம் கோடைக்கால வெளியீடாக திரைக்கு வருகிறது. மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ், தமிழிலும் இதனை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து 2வது முறையாக சிங்கப்பூர் முதலிடம்: உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில்!
சிங்கப்பூர்: உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 2வது முறையாக சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. பொருளாதார புலனாய்வுப் பிரிவு என்ற அமைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 93 நாடுகளில், 140 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகிலேயே செலவு மிகுந்த நகரம் என சிங்கப்பூர்தான் தெரிய வந்துள்ளது. பாரீஸ், ஓஸ்லோ, ஜூரிச், சிட்னி ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த முறை நடத்தப்பட்ட ஆய்விலும் இதே இடங்களை இந்நகரங்கள் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யம் கம்ப்யூட்டர் வழக்கு: ஏப்.9ல் தீர்ப்பு என சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு
ஹைதராபாத்: சத்யம் கம்ப்யூட்டர் வழக்கில் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் வரவு செலவுக் கணக்கில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு செய்து, லாபத்தை மிகைப்படுத்தி காட்டிய விவகாரம் 2009 ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் ராமலிங்க ராஜூ அவரது சகோதரர் ராமராஜூ உள்ளிட்ட 10 பேரைக் கைது செய்தது. இவர்கள் மீது மோசடி, குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைவரும் இப்போது ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் குறித்த வழக்கு விசாரணை, ஹைதராபாத் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த டிச. 23ல் விசாரணை நடந்து முடிந்து, மார்ச் 9ஆம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இன்று நீதிபதி பி.வி.எல்.என். சக்கரவர்த்தி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மாட்டிறைச்சிக்கு அனுமதி: மும்பை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு
சென்னை: மாட்டிறைச்சிக்கு இடைக்கால அனுமதி அளித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு தெரிவிப்பதாக அதன் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை : ஒடுக்கப்பட்ட மக்களின் சத்துணவான மாட்டு இறைச்சிக்கு மராட்டிய மாநில அரசு விதித்துள்ள தடை நாடெங்கும் உள்ள மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.க. அரசின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போர்ப் பிரகடனமாகவே பார்க்க வேண்டியுள்ள சூழலில் மராட்டிய மாநில உயர்நீதிமன்றம் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்து இடைக்கால அனுமதிக்கு உத்திரவிட்டதை வரவேற்கிறோம். மகாராஷ்டிராவில் இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என கோரி பாரதிய கோவனிஷ் ரக்சன் சன்ரக்சன் பரிசத் என்ற அமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை உடனடியாக தடுக்கும்படி உத்திரவிட்டது. மாட்டு இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பை புறநகர் மாட்டிறைச்சி விற்பனையாளர் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்ற நீதிபதிகள் ‘அரசுக்காக தனிமனிதரின் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. எனவே ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்த தடைவிதித்து, வியாபாரிகள் தங்களிடம் ஏற்கனவே உள்ள மாடுகளை வெட்ட இடைக்கால அனுமதி அளிக்கப்படுகிறது’ என உத்தரவில் குறிப்பிட்டனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை வரவேற்கிறோம். இடைக்கால உத்தரவு, நிரந்தர உத்தரவாக மாறவேண்டும். இந்தியாவின் பெரும்பாலான மக்களின் உணவு உரிமைக்கு அரசுகளும், நீதித்துறையும் உத்திரவாதம் வழங்கவேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.
சரத் பொன்சேகாவை விடுவித்தது நீதிமன்றம்: நிரபராதி என தீர்ப்பு
கொழும்பு: இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை நிரபராதி என இலங்கை நீதிமன்றம் அறிவித்து விடுவித்தது. இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, ராஜபட்ச ஆட்சியின்போது விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கினார். பின்னாளில் ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து விலகிய பொன்சேகா, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வெற்றி பெற்ற ராஜபட்சவால், பொன்சேகா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை அடுத்து அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது குடியுரிமை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிக்கப்பட்டன. இதை அடுத்து, பொன்சேகா மீதான வழக்குகள் கொழும்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டகளாக நடைபெற்று வந்தன. அண்மையில் இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச தோல்வி அடைந்து, சிறிசேனா அதிபராகப் பொறுப்பேற்றார். உடனே, சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு அளித்து சிறிசேனா அறிவித்தார். இந்நிலையில் சரத் பொன்சேகா மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னகோன் அளித்த தீர்ப்பில், சரத் பொன்சேகா மற்றும் அவரது செயலாளர் சேனக சில்வா ஆகியோர் நிரபராதிகள் எனக் கூறப்பட்டு, அவர்களை விடுதலை செய்தார்.

