ஹாமில்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்ற 34வது லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், அயர்லாந்து டாஸ் வென்று, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 89ரன்கள் சேர்த்தனர். அணியின் துவக்க வீரர் போட்டர்ஃபீல்ட் 67 ரன் எடுத்தார். ஸ்டிர்லிங் 42 ரன் எடுத்தார்.. ஜோஸ் 2 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், ஓ பிரைன் நன்றாக விளையாடினார். 75 பந்துகளில் 75 ரன் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். பால்ப்ரின் 24 ரன் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையை அஸ்வின் ஏற்படுத்தினார். அவர் 2 முக்கிய விக்கெட் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன் எடுத்தது. பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணியில், துவக்கம் மிகச் சிறப்பாக அமைந்தது. ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் செய்து 66 பந்தில் 3 சிக்ஸருடன் 64 ரன் எடுத்தார். ஷிகர் தவான் 85 பந்துகளில் 5 சிக்ஸருடன் 100 ரன் எடுத்து, இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழக்காமல் 44 ரன்களும், ரஹானே ஆட்டம் இழக்காமல் 33 ரன்களும் எடுத்து, 36.5 ஓவர்களிலேயே வெற்றிக்குத் தேவையான 260 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த 5 போட்டிகளில் இந்திய அணி, எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்துடனான ஆட்டம்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
மோடியின் பயண நேரத்தில், ரணில் பேசியதில் உள்நோக்கம் உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கைப் பிரதமர்ரணில் விக்ரம சிங்க தெரிவித்த கருத்துகள், அவருக்கு ஏதோ உள்நோக்கம் உள்ளதையேகாட்டுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, தனியார் தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ; ‘சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி எங்கள் கடல்பகுதிக்குள் வந்தால் மீனவர்களைச் சுடுவோம்; அப்படிச் சுடுவதில் எந்த மனித உரிமை மீறலும் இல்லை. இதற்குச் சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. கடந்த காலத்தில் ராஜபக்சேவுக்கு இல்லாத துணிச்சல் இன்று ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எப்படி வந்தது? இன்னும் ஒருசில நாள்களில், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியாவை மிரட்டுகிற வகையில், இலங்கைப் பிரதமர் பேசியதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இந்திய – இலங்கை அரசுகளிடையே ஏற்பட்ட உடன்பாட்டில்; ‘எல்லை தாண்டி வருகிற மீனவர்கள் எவரையும் சுடக்கூடாது” என்று அதில் கூறப்பட்டிருந்தது. அந்த உடன்பாட்டைக் காலில் போட்டு மிதிக்கிற வகையில், ரணில் விக்கிரமசிங்கே பேசியிருப்பது குறித்து, இந்திய அரசு தனது கடும் ஆட்சேபனையை இதுவரை ஏன் தெரிவிக்கவில்லை? அதற்கு மாறாக இலங்கை பிரதமர் தனிப்பட்ட முறையில் என்னிடம் வருத்தம் தெரிவித்தார் என்று கூறுவது ஆணவ பேச்சை மூடிமறைக்கிற செயலாகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் இருக்கும்போதே இலங்கைப் பிரதமர் இப்படிப் பேசுவதற்கு எங்கேயிருந்து துணிவு வந்தது? 120 கோடி மக்கள் வாழும் நாட்டுக்கு எதிராக, 2 கோடி மக்கள் வாழுகிற இலங்கை நம்மை அச்சுறுத்துகிறதா? மிரட்டிப் பார்க்கிறதா? இதற்கெல்லாம் பா.ஜ.க. என்ன பதில் சொல்லப் போகிறது? இலங்கைத் தமிழர்களின் 40 ஆண்டுகால கண்ணீரைத் துடைத்தெறிய ராஜிவ்காந்தியால் உருவானதுதான் இந்திய – இலங்கை ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 13வது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தைச் செயல்படுத்துவதற்கு கடந்த காலத்தில் ராஜபக்சே அரசும் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. பயங்கரவாதத்தைக் காட்டி, அதிகாரப்பகிர்வைக் காலம் தாழ்த்தி வந்தது. ஆனால், மே 2009 போருக்குப் பிறகு, வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்து சி.வி.விக்னேஷ்வரன் தலைமையில் ஆட்;சி அமைந்த பிறகும், தமிழர்களுக்குச் சமஉரிமை, சமவாய்ப்பு வழங்க இலங்கை அரசு மறுப்பதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இரு நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படவும், இலங்கையில் வாழ்கிற 25 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய – இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு கருதியும், பிரதமர் இந்திராவும் சிரிமாவோ பண்டாரநாயகாவும் 1974, 1976 ஆகிய ஆண்டுகளில் இரு ஒப்பந்தங்கள் கச்சத்தீவு குறித்து நிறைவேற்றினர். அதனடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, சர்வதேசக் கடல் எல்லைகள் வகுக்கப்பட்டன. ஆனால், இந்திய – இலங்கை அரசுகளால் இப்பகுதியை „வரலாற்றுரீதியான பாரம்பரிய கடல்பகுதிகள்… தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தின் அடிப்படையில் சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டியநிலை இருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் நமது மீனவர்கள் தாக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதிலிருந்து தமிழ் மீனவர்களை மீட்டு, வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கை அரசின் அராஜகப்போக்குக் காரணமாக எந்த ஒப்பந்தத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. குறுகலான கடல் எல்லைப் பகுதிகளில் இருநாட்டு மீனவர்களும் பயன்பெறும் ஒப்பந்தம் மிகவும் அவசியமாகும். ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஆணவப்பேச்சு, அந்த ஒப்பந்தத்திற்கான வாய்ப்பை முற்றிலும் அடைத்துவிட்டது. எனவே, பிரதமர் ராஜிவ்காந்தியும் அதிபர் ஜெயவர்த்தனாவும் 1987இல் உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 13வது அரசமைப்புச் சட்டத்திருத்ததின்படி, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இலங்கை அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில், ‘இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியும், இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டாரநாயகாவும் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம்” என்கிற நிலையை இலங்கை அரசுக்கு இந்தியப் பிரதமர் கடுமையான முறையில் தெரிவிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நமது ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்ற மறுக்கிறபோது, அவர்களோடு நாம் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதில் எந்தத் 28 ஆண்டுகள் கழித்து, பிரதமர் ராஜிவ்காந்திக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை செல்வதினால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. நமது பிரதமர் இலங்கை சென்று தற்போது செய்யவேண்டிய பணிகளை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராலேயே செய்யமுடியும். இதற்காக இந்தியப் பிரதமர் செல்லவேண்டிய அவசியமில்லை. அதுவும், இலங்கைப் பிரதமரின் ஆணவப்பேச்சுக்குப் பிறகு, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் மங்கிவிட்டது. இதற்குப் பிறகு, என்ன பேசி, என்ன தீர்வு காணப்போகிறார்கள்? இச்சூழலில், இந்தியப் பிரதமர் இலங்கைக்குச் செல்வதை ரத்துசெய்வதுதான், இலங்கை அரசின் எதேச்சதிகாரப்போக்குக்கு இந்தியா தருகிற சரியான பதிலடியாக இருக்கமுடியும்.
கணவரை சேர்த்து வையுங்கள்: ஈரோட்டில் திருநங்கை போராட்டம்
ஈரோடு: தாலி கட்டிய கணவரை சேர்த்து வைக்கக்கோரி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கை சிம்ரன் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். ஈரோடு பழைய ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சிம்ரன் (28) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அங்கே மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி சதீஷிடம் திருநங்கை சிம்ரன் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில், நான் ஒரு திருநங்கை. எனக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்தோம். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோடு ஆலமரத்து வீதியில் உள்ள முனியப்பன் கோயிலில் வைத்து அவர் எனக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்காக நான் எனது உடலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். இந்தநிலையில் எனக்கு தாலி கட்டிய எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார். என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டார். அவரை என்னோடு சேர்ந்து வாழச்செய்ய வேண்டும். எனது கணவரால் நான் நிறைய இழந்து விட்டேன். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். நான் அவரது மனைவி என்ற முறையில் எனக்கு அவர் ஜீவனாம்சம் வழங்கவேண்டும். எனது கணவரின் வீட்டை சேர்ந்தவர்கள் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு நல்ல தீர்வு கிடைக்கச்செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். அந்த மனுவுடன் திருநங்கை சிம்ரனும் அவருக்குத் தாலி கட்டியதாகக் கூறப்படும் இளைஞரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள், திருமண மாலையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவர் கொண்டு வந்து அதிகாரிகளிடம் கொடுத்தார். இது அதிகாரிகள், மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
காசோலை பெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வேளாண் அதிகாரி கைது
தேனி: தேனியில் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்துறை உதவிப் பொறியாளர் நேற்று கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம், பி.சி.பட்டியைச் சேர்ந்த வி.ரவிச்சந்திரன் (40) வேளாண் கருவிகள் விற்பனை செய்யும் டீலராக உள்ளார். இவர் அரசின் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் விற்றது தொடர்பாக ரூ. 3.45 லட்சத்தை பெற தேனி வேளாண்பொறியியல் துறையிடம் கேட்டிருந்தார். இந்தத் தொகைக்கான காசோலையை வழங்க, வேளாண் உதவிப் பொறியாளர் வி.ராதாகிருஷ்ணன் (46), ரவிச்சந்திரனிடம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முடிவில் ரூ. 20 ஆயிரம் தருவதென பேசி முடிக்கப்பட்டது. ஆனால், லஞ்சம் தர விரும்பாத ரவிச்சந்திரன், தேனி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூ. 20 ஆயிரம் ரூபாய்த் தாள்களை ராதாகிருஷ்ணனிடம் ரவிச்சந்திரன் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ராதாகிருஷ்ணனைப் பிடித்து கைது செய்தனர்.
சிங்கங்கள் கடித்துக் குதறியதில் உயிரியல் பூங்கா ஊழியர் படுகாயம்
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் கடித்து குதறியதில் ஊழியர் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டாவில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவில் ஊழியர் கிருஷ்ணா என்ற கிருஷ்ணப்பா (48) தினமும் வன விலங்குகளை பராமரித்து உணவுவழங்கி வருகிறார். நேற்று காலை 9.30 மணி அளவில் 4 வயது நகுல் என்ற ஆண் சிங்கத்துக்கு மாமிச உணவு வழங்கினார் கிருஷ்ணா. அப்போது கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கம், கிருஷ்ணா மீது திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த நேரத்தில் மற்றொரு சிங்கமும் கிருஷ்ணாவை தாக்கத் தொடங்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார் கிருஷ்ணா. அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள், அதிகாரிகள் ஓடிவந்து, உருட்டுக் கட்டையால் சிங்கங்களைத் தாக்கி விரட்டி கிருஷ்ணாவை மீட்டனர். கிருஷ்ணாவின் கழுத்து, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வெளியேறியிருந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ள கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது கிருஷ்ணாவின் உடல் நிலை குறித்து எதுவும் சொல்ல இயலாது. இன்னும் 48 மணி நேரத்துகுப் பின்னே அவரது உடல் நிலை பற்றி சொல்ல முடியும். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை; ஊழியர்களை அடிக்கடி யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி வருகின்றன. சில நேரங்களில் ஊழியர்களை பாம்புகள் கடித்துள்ளன. நிர்வாகத்தின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தப் பூங்காவுக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு மாணவிகள் உள்ளனர்; உங்களுக்கு அனுமதியில்லை: இந்திய மாணவருக்கு ஜெர்மன் பல்கலை.யில் அவமானம்!
பெர்லின்: இந்தியாவில் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் குறித்த செய்திகள் அதிகம் வெளியாவதன் காரணத்தால், ஜெர்மன் பல்கலைக்கழகத்தில் சேர்க்கைக்காக முயன்ற இந்திய மாணவருக்கு அங்குள்ள பேராசிரியை அனுமதி மறுத்து அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். என்னிடம் மாணவிகள் அதிகம் பயில்கின்றனர். அதனால் உங்களைப் போன்றவர்களுக்கு இங்கே சேர்க்கைக்கு அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். லீப்சிக் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் ஒருவர் இன்டர்ன்ஷிப் அனுமதிக்கு விண்ணப்பித்தார். ஆனால், பலாத்கார சம்பவங்கள் பிரச்னையைக் காரணம் காட்டி, அவர் மறுத்தார். அன்னெட் பெக்-சிக்கிங்கர் என்ற அந்தப் பேராசிரியை, அந்த மாணவருக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலில், எதிர்பாராத விதமாக என்னால் இந்திய மாணவர்களின் இன்டர்ன்ஷிப்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இந்தியாவில் அதிகமான பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக நாங்கள் கேள்விப் படும் செய்தியை எங்களால் ஆதரிக்க முடியவில்லை. எங்கள் குழுவில் என்னிடம் அதிக அளவிலான மாணவிகள் உள்ளனர். எனவே இது போன்ற செயல்பாடுகளுக்கு நான் ஆதரவளிக்க முடியாது” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக பேராசிரியைக்கும் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பறிமாற்றங்களை, அவரது சக மாணவர் ஒருவர் இணையத்தில் அம்பலப்படுத்தினார். இந்த மின்னஞ்சல் பதில், அந்த மாணவரால் இணையத்தில் அதிகம் பரவவிடப் பட்டது. வைரல் போன்று ஞாயிறு அதிகம் சுற்றுக்கு விடப்பட்ட இந்த மின்னஞ்சல், தில்லி ஜெர்மன் தூதரகத்தின் கதவையும் தட்டியது. இதை அடுத்து, பேராசிரியை பெக்–சிக்கிங்கரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது. தில்லியில் உள்ள ஜெர்மனி தூதர் மைக்கேல் ஸ்டெய்னர் அவருக்கு பதில் மின்னஞ்சல் கடிதம் எழுதினார். நான் உங்களுக்கு மிகவும் வலுவாக தெரிவிப்பது, இந்தியா ஒன்றும் பலாத்காரம் செய்பவர்களின் நாடு அல்ல, இங்கே இந்தப் பிரச்னையை அரசு மிகவும் தீவிரமாக அணுகுகிறது. நாடு தழுவிய அளவில் ஆரோக்கியமான, பொது விவாதங்கள் நடக்கின்றன. நேர்மையான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. உங்கள் செயலை நான் கண்டிக்கிறேன். நீங்கள் இந்தியாவைப் பற்றி இன்னும் நிறைய படிக்க வேண்டும், அதற்கு உங்களை நான் ஊக்குவிக்கிறேன். மிகவும் துடிப்பான, அனைத்தையும் திறந்த மனதுடன் அணுகக் கூடிய விசாலமான அறிவு கொண்ட இந்திய மக்கள் உள்ளனர். உங்கள் மனதில் இந்தியாவைப் பற்றி பதிந்துள்ள பிம்பத்தை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கடிதம் எழுதினார். அவரது கடிதத்துக்கு பதிலாக, தான் தவறு செய்து விட்டதாகவும், தனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பேராசிரியை பெக்–சிக்கிங்கர் கூறி இருந்தார். இதனை வெளிப்படுத்தி, ஜெர்மனி தூதரகம் செய்திக் குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது.
மோடியின் இலங்கை பயணத்துக்கு சீமான் எதிர்ப்பு
சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனப் படுகொலை நிகழ்த்திய சிங்கள அரசின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி உலகளாவிய போராட்டங்கள் வலுவாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் உணர்வுகளையும் கோரிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்வது இந்திய இறையாண்மையை மதித்து தேசிய ஒருமைப்பட்டிருக்கு கட்டுப்பட்டு ஒன்பது கோடிக்கு மேலாக இந்திய பெருநிலத்தில் நிறைந்து வாழ்கிற தமிழ் தேசிய இன மக்களுக்குச் செய்கிற பெரும் துரோகமாகும். இலங்கை இனப்படுகொலை நிகழ்த்திய நாடு என்கிற உலகளாவிய பார்வையை மாற்றுகிற செயலாகவே இந்தியப் பிரதமரின் பயணத்தைப் பார்க்கத் தோன்றுகிறது. கடந்தகால காங்கிரஸ் அரசுக்கு சிறிதும் மாற்றம் இல்லாது பாரதீய ஜனதா அரசு ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுகளையும் காலில் போட்டு நசுக்கிவிட்டு சிங்கள சேர்க்கையையே ஆதரித்து நிற்கிறது என்பதற்கு மோடியின் இலங்கைப் பயணம் சரியான உதாரணம். தமிழக மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கேட்டு காலாகாலமாய் போராடிவரும் நிலையில், எல்லை தாண்டும் மீனவர்களை நாங்கள் சுடத்தான் செய்வோம் எனக் கொக்கரித்திருக்கிறார் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே. போரில் வெறும் 5000 மக்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என இலங்கைப் பிரதமர் ரணில் சொல்கிறார். ஆனால், 80,000 விதவைகளின் வாழ்வாதரதிற்கு உதவுவோம் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சொல்கிறார். அப்படியென்றால், 80,000 கணவர்கள் கொல்லப்பட்டது இலங்கையில் நடந்த போரில்தானே ?… அவர்களின் உறவினர்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டார்களே… அவையெல்லாம் கொலைப்பட்டியலில் அடங்காதா? கொஞ்சமும் மனசாட்சியற்ற பொய்க்கருத்துக்களைப் பேசிவரும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எங்கள் பிரதமரை நேரில் சந்திக்கும் போதுமட்டும் உண்மைகளை பந்திவைத்து பரிமாறிவிடப் போகிறாரா? லட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள அரசுக்கு இறுதிக்கட்டப் போரில் இந்திய அரசு உதவி செய்ததாக ரணில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதற்கு இன்றைய இந்திய அரசின் கருத்து என்ன? அப்படியானால் எங்கள் பிரதமர் எம் இனத்தின் சாவை ஏற்றுக்கொள்கிறாரா? போருக்கும் உதவிவிட்டு ஆறுதலுக்கும் போய் நிற்கிற அரசுதான் எமது அராசா? லட்சக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு நியாயம் கேட்கவோ, சிங்கள அரசின் பயங்கரவாதத்தைத் தட்டிக்கேட்கவோ துணியாத எங்கள் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களைச் சந்தித்துப் பேசுவேன் என அறிவித்திருக்கிறார். சிங்கள ராணுவத்தின் பன்மடங்கு மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி இருக்கும் தமிழர்கள் பிரதமர் மோடியிடம் எப்படி வெளிப்படையாகப் பேசுவார்கள்? ‘காணாமல் போன தமிழர்களைக் கண்டுபிடிக்கக் கோரி’ இலங்கையில் போராடிவரும் தங்கை ஆனந்தியின் குரலுக்குப் பதில் கொடுக்காமல், இந்தியப் பிரதமரை அழைத்துப் பொய்க்கருத்துக்களைப் பரப்பவே சிங்கள அரசு திட்டமிடுகிறது. எங்கள் பிரதமர் தங்கை ஆனந்தியை சந்திப்பாரா?உண்மை நிலையைக் கேட்டறிவாரா? இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான் என்ற ஒரு வலிமையான தீர்மானத்தை தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்றினார். அதே கருத்தை வலியுறுத்தி வடக்கு மாகாண முதல்வர் அய்யா விக்னேசுவரன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். இதற்கு எங்கள் பிரதமரின் நிலைப்பாடு என்ன? இலங்கையின் இனப்படுகொலை குறித்தும் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தும் ஈழத் தமிழர் மறுவாழ்வு குறித்தும் சிங்கள அதிபர் சிறிசேனா இந்தியாவுக்கு வந்தபோதே அவரிடம் எங்கள் பிரதமர் மோடி அவர்கள் விசாரித்து இருக்கலாமே… புதுமாப்பிள்ளை தேனிலவுக்காக ஊர் ஊராக சுற்றுவதைப்போல் நாடு சுற்றிப் பார்ப்பதையே கடமையாகக் கருதிவரும் எங்கள் பிரதமர், அதற்காகவே இலங்கைக்குப் போகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியை பெற நாங்கள் போராடிக்கொண்டிருக்கிற வேளையில் தெற்காசிய பிராந்தியத்தில் வலிமைமிக்க ஒரு வல்லாதிக்கத்தின் பிரதமர் மோடி அவர்கள் இலங்கைக்கு செல்வது அந்த நாடு செய்த அத்தனை குற்றங்களையும் ஆதரிப்பது அங்கிகரிப்பதாகிவிடாதா? உலகத்தில் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலையாக்கப்பட்ட அரக்க தேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் எங்கள் பிரதமர் மோடி அவர்களின் பயணத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிற்கிறது. . என்று கூறியுள்ளார்.
கடன் சுமையில் தமிழக விவசாயிகள்; தற்கொலைகளைத் தடுக்க அரசு நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: தற்கொலைகள் அதிகம் இருக்கும் விதர்பா விவசாயிகளைவிட தமிழக விவசாயிகள் அதிக கடன் சுமையில் இருக்கின்றனர், அவர்களைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய விவசாயிகளின் நிலைமை குறித்து தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் (National Sample Survey Organisation-NSSO) நடத்திய ஆய்வுகளின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தமிழக விவசாயிகளின் நிலைமை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி மட்டுமின்றி அனுதாபமும் அளிப்பவையாக உள்ளன. தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆணையம் நடத்திய விவசாயிகளின் நிலைமை குறித்த 70 ஆவது கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளில் 82.5 விழுக்காட்டினர் மீள முடியாத கடன்சுமையில் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே ஆந்திரா (92.90%), தெலுங்கானா (89.10%) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக கடனாளி விவசாயிகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்திலுள்ள விவசாயக் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் சராசரியாக ரூ.1,15,900 கடன் இருப்பதாகவும் இக்கணக்கெடுப்பில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. விவசாயக் குடும்பங்களின் சராசரிக் கடன் அதிகமாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 4 ஆவது இடத்தில் உள்ளது. விவசாயிகள் பெற்றுள்ள கடனில் 60% மட்டுமே வங்கிகள் உள்ளிட்ட முறையான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 40% கடன்கள் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகளில் பெரும்பான்மையினர் ஏழைகள் ஆவர். அவர்களால் சராசரியாக ரூ.1.15 லட்சம் கடனை சமாளிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகும். தமிழக விவசாயக் குடும்பங்களுக்கு வேளாண்மை மூலம் கிடைக்கும் மாத வருமானம் வெறும் ரூ.2474 மட்டும் தான். ஆனால், இந்தக் குடும்பங்களின் கடன் சுமையோ மாத வருமானத்தை விட 47 மடங்கு அதிகம் ஆகும். மாத வருமானம் 2474 ரூபாயைக் கொண்டு பசியின்றி குடும்பம் நடத்துவதே சாத்தியமில்லாத நிலையில், இதில் ஒரு பகுதியை மிச்சப்படுத்தி விவசாயிகள் தங்களின் கடனை அடைப்பது ஒருபுறம் இருக்கட்டும்….கடனுக்கான வட்டியை செலுத்துவதே குதிரைக் கொம்பை விட அதிசயமானது தான். தமிழக விவசாயிகள் அதிக அளவு கடன் சுமையில் சிக்கித் தவிப்பதற்கு காரணம் தமிழக அரசு கடைபிடித்து வரும் தவறான வேளாண் கொள்கைகள் தான். பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் மாதம் ரூ.16,349 வருவாய் கிடைக்கும் நிலையில், தமிழக விவசாயிகளுக்கு அதில் சுமார் ஏழில் ஒரு பங்கு மட்டும் தான் தமிழக விவசாயிகளுக்கு மாத வருமானமாக கிடைக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாகவே கரும்பு கொள்முதல் விலை ரூ.2650 என்ற அளவிலேயே இருக்கிறது. இதைக் கூட வழங்கத் தயாராக இல்லாத தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.2250 மட்டுமே வழங்கி வருகின்றன. சர்க்கரை ஆலைகளை எச்சரித்து மீதமுள்ள தொகையை வசூலித்துத் தருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை என்பது தான் சோகம். விவசாயத்திற்கு தேவையான தரமான விதைகள், இடுபொருட்கள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு தடையின்றி கிடைப்பதற்கான எந்த ஏற்பாடும் தமிழகத்தில் இல்லை. விவசாயிகள் இலாபகரமானத் தொழிலாக மாறாமல் இருப்பதற்கும், விவசாயிகள் கடன் வலையில் சிக்கித் தவிப்பதற்கும் இவை தான் காரணமாகும். விவசாய வளர்ச்சிக்கு தேவையான சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தாததால் தான் தமிழகத்தில் வேளாண்துறை வளர்ச்சி மைனஸ் 12 விழுக்காடு என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்வதற்கோ அல்லது வேளாண் வளர்ச்சிக்கு தடையாக உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றுவதற்கோ தமிழக அரசு ஒருபோதும் தயாராக இல்லை. விவசாயிகள் தற்கொலைகள் அதிக அளவில் நடக்கும் விதர்பா பகுதியை உள்ளடக்கிய மராட்டிய மாநிலத்தைவிட அதிக அளவிலான கடன் சுமை தமிழக விவசாயிகளுக்குத் தான் உள்ளது. இந்த நிலை மாற்றப்படாவிட்டால் ஒரு கட்டத்தில் விதர்பாவுக்கு இணையாக தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்க முடியாமல் போய்விடும். எனவே, விவசாயிகளின் கடன் சுமையை குறைப்பதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்துவதுடன், இனிவரும் காலங்களிலாவது விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என் பாதயாத்திரையில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: அன்னா ஹசாரே
புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிராக சமூக சேவகர் அன்னா ஹசாரே, மகாராஷ்டிரத்தின் சேவாகிராமில் இருந்து தில்லி வரையிலான பாதயாத்திரையை வரும் மார்ச் 25ஆம் தேதி தொடங்குகிறார். சேவாகிராம் மாகாத்மா காந்தி ஆசிரமம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் இது தொடர்பாக தன் உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவிற்கு எதிரான பாதயாத்திரை, மார்ச் 25ல் சேவாகிராமில் இருந்து துவங்கும். ஏப்ரல் 27ஆம் தேதி தில்லியில் நிறைவடையும். தில்லி ராம்லீலா மைதானத்தில் நிறைவடையும் பாதயாத்திரையின் பொதுக்கூட்ட மேடையில் அரசியல் தலைவர்களுக்கு அனுமதி கிடையாது. பாதயாத்திரை மேற்கொள்ளப்படும்போது அதில் வன்முறைக்கு இடம் கிடையாது. வன்முறை நிகழ்ந்தால் பாதயாத்திரை அப்போதே நிறுத்தப்படும்… என்றார்.
உலகக் கோப்பை : இந்தியாவுக்கு 260 ரன் வெற்றி இலக்கு
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஹாமில்டன் நகரில் நடைபெறும் 34வது லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், அயர்லாந்து டாஸ் வென்று, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 89ரன்கள் சேர்த்தனர். அணியின் துவக்க வீரர் போட்டர்ஃபீல்ட் 67 ரன் எடுத்தார். ஸ்டிர்லிங் 42 ரன் எடுத்தார்.. ஜோஸ் 2 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், ஓ பிரைன் நன்றாக விளையாடினார். 75 பந்துகளில் 75 ரன் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். பால்ப்ரின் 24 ரன் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையை அஸ்வின் ஏற்படுத்தினார். அவர் 2 முக்கிய விக்கெட் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன் எடுத்தது.

