சிங்கங்கள் கடித்துக் குதறியதில் உயிரியல் பூங்கா ஊழியர் படுகாயம்

இந்தியா

bannerghatta-national-parkபெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் கடித்து குதறியதில் ஊழியர் படுகாயம் அடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டாவில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள்  பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பூங்காவில் ஊழியர் கிருஷ்ணா என்ற கிருஷ்ணப்பா (48)  தினமும்  வன விலங்குகளை பராமரித்து உணவுவழங்கி வருகிறார். நேற்று காலை 9.30 மணி அளவில் 4 வயது நகுல் என்ற ஆண் சிங்கத்துக்கு மாமிச உணவு வழங்கினார் கிருஷ்ணா. அப்போது கூண்டில் இருந்து வெளியே வந்த சிங்கம், கிருஷ்ணா மீது திடீரென பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த  நேரத்தில் மற்றொரு சிங்கமும் கிருஷ்ணாவை தாக்கத் தொடங்கியது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார் கிருஷ்ணா. அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள், அதிகாரிகள் ஓடிவந்து, உருட்டுக் கட்டையால் சிங்கங்களைத் தாக்கி விரட்டி கிருஷ்ணாவை மீட்டனர். கிருஷ்ணாவின் கழுத்து, மார்பு, வயிற்றுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகம் வெளியேறியிருந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  தீவிர கண்காணிப்புப் பிரிவில் உள்ள கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது கிருஷ்ணாவின் உடல் நிலை குறித்து எதுவும் சொல்ல இயலாது. இன்னும் 48 மணி நேரத்துகுப் பின்னே அவரது உடல் நிலை பற்றி சொல்ல முடியும். அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை; ஊழியர்களை அடிக்கடி யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் தாக்கி வருகின்றன. சில நேரங்களில் ஊழியர்களை பாம்புகள் கடித்துள்ளன. நிர்வாகத்தின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தப் பூங்காவுக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.