Home Blog Page 6249

இலங்கையில் கைதான பா.ஜெயகுமாரி விடுதலை

jeyakumariஇலங்கையில் கைதான பாலேந்திரன் ஜெயகுமாரி விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் இலங்கையில் புத்துயிர் பெற உதவியதாக பாலேந்திரன் ஜெயக்குமாரியை இலங்கையில் ராஜபட்ச அரசு முன்னர் கைது செய்திருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை ஒட்டி, பாலேந்திரன் ஜெயகுமாரியை விடுதலை செய்ய மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசு முடிவு செய்தது. இதை அடுத்து, அவரை இன்று விடுதலை செய்துள்ளது.

நியூஸி.யில் இந்திய ரசிகரை அபராதத்தில் இருந்து காத்த சச்சினின் கடிதம்

sudhir-gowdam புது தில்லி: விமான நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டு, அபராதம் கட்ட வேண்டிய நிலையில் சச்சின் டென்டுல்கரின் கடிதம் ஒன்று, ரசிகர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளது. இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மூவர்ணக் கொடி வண்ணத்தைப் பூசி கையில் தேசியக்கொடி வைத்து அசைத்து கொண்டிருப்பவர் சுதிர் கௌதம். இந்திய அணிக்கு தனது ஆதரவை வழங்கி உற்சாகப் படுத்துபவர். இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரும்கூட. உலகக் கோப்பையை தனது ரசிகரான சுதிர் கவுதம் கையில் கொடுத்து சச்சின் அழகு பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பிரபலம். இப்படிப்பட்ட அவருக்கு தற்போது சச்சினின் கடிதம்தான் ஒரு இக்கட்டில் இருந்து அவரைக் காத்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக குடியேற்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அந்தநாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சுதிர் கௌதம், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆக்லாந்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது உடலில் வர்ணமாகப் பூசியும், இந்திய வரைபடத்தை தனது தலை அலங்காரமாகவும் செய்துள்ளார். இவரது தோற்றத்தைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அவருக்கு விதிமுறைகளை மீறியதற்காக 1400 நியூசிலாந்து டாலர் அபராதம் விதித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதிர் கௌதம், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். அப்போது, அவருக்கு சச்சின் டெண்டுல்கர் தனக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. அதை குடியேற்ற துறை அதிகாரிகளிடம் காட்டி, தான் கிரிக்கெட் ரசிகர்தான் என்றும், அவரது நிலையையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதை அடுத்து, அவரை நம்பிய அதிகாரிகள், அவரை விமான நிலையத்துக்குள் அனுமதித்துள்ளனர்.

ஹோலி கொண்டாட அழைத்து முன்னாள் காதலனை புது காதலனுடன் குத்திக் கொன்ற சிறுமி

murderபுது தில்லி: ஹோலியை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் வா என்று தனது முன்னாள் காதலனை அழைத்தாள் ஒரு 15 வயதுச் சிறுமி. பின்னர் தனது புதிய காதலனுடன் சேர்ந்து அவனை குத்திக் கொன்றாள். அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவம் தலைநகர் தில்லிக்கு அருகேதான் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அடுத்த அதிர்ச்சி. வடக்கு தில்லியில் புராரி பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியது…. ஜஹாங்கிர்புரி பகுதியில் தனது தாய் வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார் 15 வயதுச் சிறுமி. தாத்தா பாட்டி இருவரும் கூலி வேலை செய்பவர்கள். அதே ஜஹாங்கிர்புரி பகுதியில் வசிக்கும் 16 வயது கமல் என்ற சிறுவனுடன் இந்தச் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கமல் அந்தப் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். அவனும் கூலி வேலைக்குச் சென்று வந்தானாம். கமலும் அந்தச் சிறுமியும் காதலித்து வந்தனராம். கமலுடன் ஒன்றாக ஊர் சுற்றி, சில ஆண்டு முன் வரை நட்பாக இருந்த அந்தச் சிறுமி, நட்பு கசந்து வேறு ஒரு 17 வயதுச் சிறுவனுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார். ஆனால், இதை கமல் விரும்பவில்லை. அந்தச் சிறுவனை இதற்காக அடித்து கண்டித்ததுடன், அந்தச் சிறுமியையும் கண்டித்துள்ளான். இதனால், கமல் இல்லாவிட்டால் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றலாம் என்று சிறுமியும் அந்தப் புதிய நண்பனும் யோசிக்கவே, கமலை கொலை செய்யும் முடிவுக்கு இருவரும் வந்துள்ளனர். இதற்காக திட்டமிட்ட அவர்கள், தன் நண்பர்களின் துணையை நாடியுள்ளனர். இதை அடுத்து, ஹோலி விளையாடலாம் வா என்று புராரி பகுதிக்கு கமலை அழைத்துள்ளார் அந்தச் சிறுமி. அங்கு வண்ணப் பொடிகளைத் தூவி, ஹோலி கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். சிறுவன் கமல் சனிக்கிழமை அன்று அங்குச் சென்றுள்ளான். அப்போது, சிறுமியும், அவளின் புதிய காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4பேரும் சேர்ந்து, கமலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 20 வயதில் இருப்பவர்கள். அவர்களின் பெயர்கள் கௌதம், கெஸ்டோ, கோவிந்தா, நவீன் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் தில்லி பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்ளாட்டில் காதலியைக் குத்திக் கொன்று உடலை மூட்டை கட்டி கடத்த முயற்சி: சென்னையில் அதிர்ச்சி

chennai-murderசென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்த காதலன், தன் காதலியை குத்திக் கொன்று, அவரது உடலை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்தான். ஆனால் உண்மை தெரிந்து காவலாளி கத்தவே தப்பிச் சென்றான். போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். சென்னையில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழ்ப்பாக்கம் தலைமைச் செயலக காலனி பராக்கா சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் கண்ணப்பனின் மகன் தினேஷ் (25). இவர், அம்பத்தூரில் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த கண்ணப்பன், கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி உடனிருந்து அவரைக் கவனித்து வருகிறார். இதனால் தினேஷ் மட்டும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு 10.30 மணியளவில் தினேஷ் போர்வை, மெத்தையால் சுற்றிக் கட்டப்பட்ட மூட்டை ஒன்றை லிஃப்ட் மூலம் இறக்கிக் கீழே கொண்டு வந்தார். அதனைத் தனது காரில் ஏற்ற முயற்சித்தார். ஆனால் அவரால், அந்த மூட்டையைக் காரில் ஏற்ற முடியவில்லை. இதனால் பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த காவலாளியை உதவிக்கு அழைத்தார். மருத்துவமனையில் உள்ள தனது தந்தைக்கு தேவைப்படும் மெத்தை உள்ளிட்டவற்றை மூட்டை கட்டியிருப்பதாக அவரிடம் தினேஷ் கூறியுள்ளார். அதை நம்பிய காவலாளியும் மூட்டையைத் தூக்க உதவி செய்துள்ளார். அப்போது அந்தத் துணி மூட்டையிலிருந்து ஒரு கை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு பயத்தில் கூச்சலிட்டுள்ளார் காவலாளி. அவரது கூச்சலால் அக்கம் பக்கத்தினர் அங்கே திரண்டனர். இதனால் பயந்துபோன தினேஷ் அங்கிருந்து நழுவி, ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டு ஓடி மறைந்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்ததில், இளம்பெண்ணின் உடல் சுற்றி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் இது குறித்து போலீஸாரிடம் தகவல் அளித்தனர். தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி விரைந்து சென்று அந்தப் பெண்ணின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணைக் கொலை செய்த தினேஷ் தப்பிச் சென்றுவிட்டதால், கொலையுண்ட பெண் குறித்து போலீசார் தகவல் தெரியாமல் குழம்பினர். இதனிடையே இரவு 11 மணி அளவில், சூளை சட்டண்ண நாயக்கர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், வேப்பேரி காவல் நிலையத்தில் தனது மகள் அருணாவைக் காணவில்லை என்று புகார் அளித்தார். அப்போது அங்கிருந்த போலீசார், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலைய எல்லையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் உங்கள் மகள்தானா என்று போய்ப் பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் பதறியடித்துக் கொண்டு அருணாவின் பெற்றோரும் உறவினர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண்ணின் உடலைப் பார்த்து, இது தங்களது மகள்தான் என்று உறுதி செய்தனர். இதன் பின்னர் விசாரணை செய்த போலீஸார், தெரிவித்த தகவல்…. பி.காம் பட்டதாரியான அருணாவும், தினேசும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். அடிக்கடி தனிமையிலும் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் தினேஷ், நேற்று மாலை அருணாவுக்கு போன் செய்து, வீட்டில் யாரும் இல்லை. வா என்று அழைத்துள்ளார். அவரை நம்பி அருணா, வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டியில் புறப்பட்டுச் சென்றுள்ளார். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் அங்கே இருந்துள்ளனர். இரவில் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், அருணாவை அடித்து உதைத்து வீட்டில் இருந்த கண்ணாடி பூந்தொட்டியை உடைத்து சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அருணா உயிரிழந்துள்ளார். அருணா உடலை வேறு எங்காவது போட்டு விட்டால் தப்பி விடலாம் என்று நினைத்த தினேஷ், அருணாவின் உடலை மூட்டையாகக் கட்டி காரில் கடத்த திட்டமிட்டார். ஆனால், போர்வைக்கு வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்த அருணாவின் கை, தினேஷைக் காட்டிக் கொடுத்து விட்டது. கொலையுண்ட அருணா பி.காம். முடித்து விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கணக்கு தணிக்கை பயிற்சி மையத்தில் ‘ஆடிட்டிங்’ பட்டய படிப்பு படித்து வந்தார். நேற்று காலை புறப்பட்டுச் சென்ற அவர் இரவு வெகுநேரம் ஆன பிறகும் வீடு திரும்பாததால், தேடிக் களைத்த அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதை அடுத்தே அருணா கொலை செய்யப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.

“பரமேஸ்வரன் நானே”

“பரமேஸ்வரன் நானே” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.10482143_599228513527816_46027082804070919_n தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
சதாராவில் வஸந்த நவராத்திரி சமயம்.
புதுக்கோட்டையிலிருந்து நாங்கள் ஸுவாஸினி
பிக்ஷைக்காக சென்று அங்கு ஒரு வாரம்
தங்கியிருந்து வந்தோம்.
 
நாங்கள் பெரியவாளுக்கு விதவிதமான
மாலைகள்,கிரீடங்கள் தயாரித்து சமர்ப்பிப்போம்.
 
ஒருநாள் மாலைப்பொழுது, நாங்கள் பத்துப்பேர்
அமர்ந்து இருந்தோம். ஸ்ரீ பெரியவா அப்போது
வெளியில் வந்தார்கள்.நாங்கள் வந்தனம் செய்தோம்.
ராஜம் அம்மாள் ஒரு நாகாபரண கிரீடத்தை
சமர்ப்பித்தாள். அது வெட்டி வேரில் சந்தன மணி
வைத்து நாகக்குடை போல் மிக அழகாக 
அமைந்திருந்த கிரீடம்.
 
பெரியவா அந்தக் கிரீடத்தை வாங்கி அருகில் இருந்த சிவலிங்கத்துக்கு சார்த்தச் சொல்லி
பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் கொடுத்தார்.
 
உடனே, அவசரமாக, ராஜம்மாள் “இதை பெரியவா
போட்டுக்கணும்!: என்று பிரார்த்தித்தாள்.
 
பெரியவாள், சிவலிங்கத்தை சுட்டிக்காட்டி
“நான் வேறு, இவர் வேறு இல்லை நான்தான் இவர்,இவர்தான் நான்” என்று சொல்லிவிட்டு ஒரு சிரிப்புச் சிரித்தார்.
 
 
அப்போது மின்னல் போல் ஓர் ஒளி. அங்கு இருந்த
எங்கள் கண்களுக்குத் தெரிந்தது.என்ன பாக்யம்!
நாங்கள் சிலிர்த்துப் போய் வாய் அடைத்து
உட்கார்ந்து விட்டோம்

“நானே நாராயணன்”

1507603_10202994818654217_4035239553088867808_n “நானே நாராயணன்” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

 
என் பெண் ஜனா ஒரு ‘ஐஸ்வர்ய கோலம்’
தயாரித்திருந்தாள்.கண்ணாடித் துண்டுகளை
ஒட்டி கலர் செய்து நடுவில் மஹாலக்ஷ்மி வைத்து
கண்ணாடி போட்ட கோலப் படம் அது.அதைப்
பெரியவாளிடம் சமர்ப்பித்தோம்.
 
அதை எடுத்துப் பார்த்து ரஸித்து விட்டு,
“இது மகாலக்ஷ்மி. மகாலக்ஷ்மியை நான் எங்கு
வைத்துக் கொள்ள வேண்டும்? மார்பில் தான்
இருக்கணும்” என்று சொல்லி அந்தப் படத்தை தன்
மார்பில் வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றிப் பார்த்து
எல்லாருக்கும் அனுக்ரஹம் செய்தார்.
 
“நாராயணன் அம்சமும் நானே!” என்று பெரியவா
உணர்த்துகிறார் என்று, இதிலிருந்து நாங்கள்
புரிந்து கொண்டோம்.
 
திருச்சியை சேர்ந்த சுபலக்ஷ்மி அம்மாள் சொன்னாள்;
“பெரியவா! இன்று சோமவார அமாவாசை.
அரச பிரதக்ஷணம் செய்யணும் என்ற நினைவே
இல்லாமல் நான் காஞ்சிபுரம் புறப்பட்டு வந்து விட்டேன்”
என்று, ஒரு முறை வருத்தம் தொனிக்கப் பெரியவாளிடம்
சொன்னாளாம்.
 
பட்டென்று பதில் வந்தது; “அதனாலென்ன?
என்னை 108 முறை பிரதக்ஷணம் செய்துவிடு..
அதுவே போதும்.
 
பெரியவா நாராயணன் மட்டுமில்லே; அசுவத்த நாராயணனும் கூட.!

சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை பாலம் அருகே, சி.பி.ராமசாமி சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் மர்ம ஆசாமிகள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்தவுடன் ரசீது வரும் இடத்தில் குறி வைத்து இரும்புக் கம்பியால் உடைத்ததில் ஏ.டி.எம். இயந்திரத்தின் மேல் பகுதி லேசாக உடைந்துள்ளது. இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் காவலாளி இல்லாதது தெரிய வந்தது. இதனைப் பயன்படுத்தியே கொள்ளையர்கள் துணிச்சலுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போட்டு பார்த்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிர்பயா ரோந்துப் படை: நமீதா சாகுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

Nirbya-Patrolling-Mobile-Female-Police-SI-Namita-SahuDecline-In-Molestation-Cases போபால்: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில், பெண்கள் பாதுகாப்புக்காக, ‘நிர்பயா ரோந்து படை’ என்ற தனிப்படை உள்ளது. அதன் தலைவராக இருப்பவர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதா சாகு. நிர்பயா ரோந்துப்படை பற்றியும் நமீதா சாகு பற்றியும் பிரதமரின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு ஒன்றரை லட்சம்பேர் ‘லைக்’ செய்திருந்தனர்.  அதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, நமீதா சாகுவை ஊக்கப்படுத்த விரும்பினார். அதன்படி, நமீதா சாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி பாராட்டினார். நம்மிடம் பிரதமர்தான் பேசுகிறாரா? யாராவது மிமிக்கிரி செய்கின்றனரா? என்று ஆச்சரியமடைந்த நமீதா, பின்னர் சுதாரித்துக்கொண்டு பயமின்றி பேசினாராம். அவருடைய பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, அதே வேகத்தில் அவரது பணிகள் தொடர வேண்டும் என்றும், மற்ற பெண்களுக்கும் அவர் உந்துசக்தியாக திகழ வேண்டும் என்றும் தெரிவித்தாராம். நமீதா சாகு குடும்பத்தினரின் நலன் குறித்து விசாரித்த மோடி, தனது இ-மெயில் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அளித்து, தேவைப்படும்போது தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டாராம். பிரதமரே தொலைபேசியில் பேசியதால், பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதா சாகு, ஒரே நாளில் பெரும் புகழ் அடைந்து விட்டார். பேஸ்புக்கில் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்து விட்டது. வாட்ஸ்அப்பிலும் மெசேஜ்கள் அதிகரித்துள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் 80 சதவீத அழைப்புகள், அவரைப் பற்றியே உள்ளனவாம்!

ஆண்களுடன் பழகியதால் காதலியைக் கொன்றாராம்: கல்லூரி மாணவி கொலையில் காதலன் வாக்குமூலம்

murder சென்னை: ஆண் நண்பர்களுடன் பழகியதால், தனது காதலியைக் கொன்றதாக, தாம்பரம் அருகே கல்லூரி மாணவி கொலையில் கைதான அவரது காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். வடபழனி, சைதாப்பேட்டையைச் சேர்ந்த அந்தோணியின் மகள் கிரேஸி ஷாலினி (21).  அரசு பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து வந்தார்.  கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற கிரேஸி ஷாலினி பின்னர் வீட்டுக்குத் திரும்பவில்லை. இந்நிலையில் தாம்பரத்தை அடுத்த படப்பை ஆரம்பாக்கத்தில் நத்தம் பீவி என்பவரது வீட்டில் கிரேஸி ஷாலினி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நத்தம் பீவி வெளியூர் சென்ற போது வீட்டைப் பூட்டி சாவியை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உறவினர் அப்துல் ரசாக்கின் மகன் ரபீக்கிடம் கொடுத்திருப்பது தெரிந்தது. பெயிண்டர் ரபீக்கிடம் போலீசார் விசாரித்த போது காதலியான கல்லூரி மாணவி கிரேஸி ஷாலினியை பூட்டிக் கிடந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரபீக்கை போலீசார் கைது செய்தனர். ரபீக் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்… நானும், கிரேஸி ஷாலினியும் வடபழனியில் உள்ள பள்ளியில் சிறு வயது முதலே ஒன்றாக படித்தோம். இருவரும் காதலித்து வந்தோம். கல்லூரிக்குச் சென்றது முதல் கிரேஸி ஷாலினி என்னிடம் முன்பு போல் பழகுவது இல்லை. அவள் செல்போனில் ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்தாள். இதனை நான் கண்டித்தும் அவள் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்தார். உறவினர் நத்தம் பீவி வெளியூர் சென்றதால் அவரது வீட்டுச் சாவியை என்னிடம் கொடுத்து இருந்தார். கடந்த சனிக்கிழமை கிரேஸி ஷாலினியை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இருவரும் பேசிக்கொண்டிருந்த போது ஆண் நண்பர்கள் குறித்து கிரேஸி ஷாலினியை கண்டித்தேன். அவள் என்னைத் திட்டினாள். ஆத்திரம் அடைந்த நான் மாடு கட்ட வைத்திருந்த கயிறால் அவளது கழுத்தை நெரித்துக் கொன்றேன். பின்னர் பயத்தில் வீட்டைப் பூட்டி விட்டு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

நடைப்பயிற்சி சென்ற அதிமுக கிளைச் செயலாளர் படுகொலை: ஸ்ரீவைகுண்டத்தில் பதற்றம்

murder தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்ற அதிமுக கிளைச் செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உறவினர்கள் மற்றொரு பிரிவினரின் வீடுகளை சூறையாடினர்.இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி புதுமனை தெற்குத் தெருவைச் சேர்ந்த பிச்சையா (54), அ.தி.மு.க. கிளைச் செயலாளராக உள்ளார்.  மேலும் இப்பகுதி ஊர்த் தலைவராகவும் உள்ள இவர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். பிச்சையா தினமும் அதிகாலை நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அது போல் இன்று அதிகாலை 6 மணிக்கு இந்திரா நினைவுக் குடியிருப்பு அருகே நடைப்பயிற்சிக்கு  சென்றார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர்,  கையில் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிச்சையாவை வெட்டினர். அவர்களிடம் இருந்து விலகிக் கொண்டு தப்பியோடினார் பிச்சையா.  ஆனாலும் அவரை விரட்டிய மர்ம கும்பல் பிச்சையாவை விடாமல் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியது. இதில் பிச்சையாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரைக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்தச் சம்பவங்களைக் கண்டு அலறி ஓடிய பொதுமக்கள், பின்னர் போலீஸில் தகவல் கொடுத்தனர். ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பிச்சையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிச்சையாவைக் கொலை செய்தவர்கள் யார், எதற்காகக் கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரை விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. துரை உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பிச்சையாவின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள மற்றொரு பிரிவினரின் வீடுகள் மீது கல்வீசித் தாக்கினர். அங்கிருந்த தேவாலயத்தின் பூட்டுகளை உடைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து எஸ்.பி. தலைமையில் அதி விரைவுப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக கொங்கராயகுறிச்சிக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களும் அரசுத் தேர்வுக்குச் செல்ல தயாரான நிலையில் இருந்த மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பிச்சையா கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பழிக்குப்  பழியாக இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று தெரியவந்தது. கொங்கராயகுறிச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், பள்ளி தாளாளருமான தேவசகாயம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதற்கு பழிக்குப்பழியாக பிச்சையா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.