புது தில்லி: விமான நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டு, அபராதம் கட்ட வேண்டிய நிலையில் சச்சின் டென்டுல்கரின் கடிதம் ஒன்று, ரசிகர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளது. இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மூவர்ணக் கொடி வண்ணத்தைப் பூசி கையில் தேசியக்கொடி வைத்து அசைத்து கொண்டிருப்பவர் சுதிர் கௌதம். இந்திய அணிக்கு தனது ஆதரவை வழங்கி உற்சாகப் படுத்துபவர். இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரும்கூட. உலகக் கோப்பையை தனது ரசிகரான சுதிர் கவுதம் கையில் கொடுத்து சச்சின் அழகு பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பிரபலம். இப்படிப்பட்ட அவருக்கு தற்போது சச்சினின் கடிதம்தான் ஒரு இக்கட்டில் இருந்து அவரைக் காத்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக குடியேற்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அந்தநாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சுதிர் கௌதம், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆக்லாந்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது உடலில் வர்ணமாகப் பூசியும், இந்திய வரைபடத்தை தனது தலை அலங்காரமாகவும் செய்துள்ளார். இவரது தோற்றத்தைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அவருக்கு விதிமுறைகளை மீறியதற்காக 1400 நியூசிலாந்து டாலர் அபராதம் விதித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதிர் கௌதம், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். அப்போது, அவருக்கு சச்சின் டெண்டுல்கர் தனக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. அதை குடியேற்ற துறை அதிகாரிகளிடம் காட்டி, தான் கிரிக்கெட் ரசிகர்தான் என்றும், அவரது நிலையையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதை அடுத்து, அவரை நம்பிய அதிகாரிகள், அவரை விமான நிலையத்துக்குள் அனுமதித்துள்ளனர்.
நியூஸி.யில் இந்திய ரசிகரை அபராதத்தில் இருந்து காத்த சச்சினின் கடிதம்
Published:

