சென்னை: மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் … அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவோடு நெருங்கிப் பழகியவரும், பல்வேறு பணிகளில் அண்ணாவுக்கு உறுதுணையாக விளங்கியவரும், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல அரசியல் தலைவர்களிடம் நெருங்கிப் பழகியவரும், காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றியவருமான 90 வயதுடைய கிள்ளிவளவன் முதுமையும், ஏழ்மையும் வாட்டி வரும் சூழலில் நோயுற்று கவனிப்பார் இன்றி தனிமையில் தவித்து வருகின்றார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமுற்றார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் வாழ்வில் வழி இழந்து வாடி நிற்கும் மனிதர்களின் துயரங்களைப் பற்றிய செய்தி அறிந்த உடனே அவர், எவர் என்றும் பாராமல், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற பாரபட்சம் காட்டாமல் மனிதாபிமானம் என்ற மாண்பின் அடிப்படையில் அவர்தம் துயர் களைய உடனடி உதவிகளை வழங்கி வரும் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கிள்ளிவளவனின் துயர் துடைத்திடும் வகையில், அவருடைய பெயரில் 5 லட்சம் ரூபாயை நிலை வைப்பில் செலுத்தி, அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதா மாதம் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ததோடு, அவரது உடனடி செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயையும் வழங்குமாறு ஆணையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 10-3-2015 அன்று (நேற்று) மாலை அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.பழனியப்பன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள கிள்ளிவளவனுடைய வீட்டிற்குச் சென்று, ஜெயலலிதா சார்பாக நலம் விசாரித்ததோடு, கழகத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாயை வங்கியில் நிலை வைப்பில் செலுத்தி, அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதா மாதம் பணம் கிடைக்கும் வகையில் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளது பற்றி தெரிவித்து, உடனடி செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயை வழங்கி, அவருக்கு ஆறுதல் கூறினார்கள். நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட கிள்ளிவளவனும், அவரது குடும்பத்தினரும், தங்கள் சூழ்நிலையை அறிந்து உடனடியாக உதவி செய்த, ஏழை, எளிய மக்களின் கண்கண்ட காவல் தெய்வமாய் விளங்குகின்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கருணை உள்ளத்தை நினைத்து, நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
காங். பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்: ஜெயலலிதா நடவடிக்கை
ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி.க்கு 3 மாத அவகாசம்
மதுரை: திருச்சியில், ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நேற்று ராமஜெயம் கொலை வழக்கு நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், வழக்குரைஞர் எஸ்.ரவி ஆகியோர் ஆஜரானார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் இது குறித்த விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் சி.ரமேஷ், ‘போலீஸாரின் விசாரணையில் குற்றவாளிகள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து விடுவோம். எனவே, விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணைக்கு 3 மாத கால அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை வரும் ஜூன் மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் திருச்சியில் நடைப்பயிற்சிக்காக காலையில் சென்ற போது கடத்தி கொலை செய்யப்பட்டார். கிட்டத்தட்ட கொலை நடந்து 3 ஆண்டுகள் முடியும் நேரத்தில், கொலையாளிகள் குறித்து எந்தத் தகவலையும் போலீஸார் இதுவரை வெளியிடவில்லை. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குற்றவாளிகள் யார் என்பதை போலீசாரால் இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று கோரி ராமஜெயத்தின் மனைவி லதா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
ஆலங்குளம் அருகே ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: பிளஸ்-2 மாணவன் பலி: 30 பேர் படுகாயம்
திருநெல்வேலி அடுத்த ஆலங்குளத்தில் இருந்து அரசு பேருந்து தடம் எண் 303 நெல்லை டவுண் பஸ் நிலையத்திற்கு நேற்று செவ்வாய் கிழமை மாலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்பட 40க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ஆலங்குளம் அடுத்த நெட்டூர் ஆற்றுப்பாலம் அருகே வரும் போது பஸ், டிரைவர் கட்டுப்பாட்டை மீறி தடுப்பு சுவரின் மீது மோதி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுப்பையாபுரத்தை சேர்ந்த கோயில் என்பவரின் மகன் சிவரத்தினம் (17) சம்பவ இடத்தில் இறந்தார். பஸ்சில் இருந்த மாணவிகள், பெண்கள், முதியவர்கள் உள்பட 30 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தோருக்கு பாளை அரசு மருத்துவமனை, ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் இறந்த மாணவன் சம்பவத்தன்று பிளஸ்-2 அரசு தேர்வு எழுதி விட்டு பஸ்சில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!”
“நரிக்குறவனுக்கு கனாவில் ஆசி!” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
“கணபதியும் நானே!”
“கணபதியும் நானே!” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (நெட்டில் கிடைத்ததால் தட்டச்சு கொஞ்சமே) நானும் என் மைத்துனர் பெண் ஜானாவும் அடிக்கடி காஞ்சி சென்று பெரியவளை தரிசனம் செய்வோம். ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி வெவ்வேறு காணிக்கைகளை சமர்பிப்போம். ஒரு சமயம் நாங்கள் காஞ்சிபுரம் போக நினைத்தபோது ” இந்த முறை பெரியவாளுக்கு அழகாக அருகம்புல் மாலை கொண்டு போகலாம்” என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது. ஓரத்தில் அரளிப்பூவை பார்டர் மாதிரி அமைத்து பெரியதாக அருகம்புல் மாலை மிக அழகாகத் தயாரித்துக் கொண்டு போனோம். அடுத்த நாள் காலை ஸ்ரீ மடத்திற்குப் போகும்போது எட்டு மணி ஆகிவிட்டது. பெரியவா எல்லோருடனும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். நாங்கள் கொண்டு போன மாலைப் பொட்டலத்தையும் கல்கண்டுப் பொட்டலத்தையும் எதிரில் வைத்து விட்டோம். பெரியவா அதை எடுத்து ஓரமாகக் தள்ளி வைத்து விட்டார். அதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்கவில்லை. நாங்களும் நின்றபடியே தரிசனம் செய்து கொண்டிருந்தோம். சுமார் பத்து மணிக்கு ஒரு பெண்மணி வந்தார். அவர் கையில் ஒரு பிள்ளையார் வெள்ளிக் கவசம் நல்ல வேலைப்பாடுடன் மிக அழகாக இருந்தது. பெரியவா உத்தரவுப்படி அவர்கள் ஊர் கோவிலில் பிள்ளையாருக்கு வெள்ளிக் கவசம் செய்து அதை பெரியவா அனுக்ரஹத்திற்காக எடுத்து வந்திருக்கிறார், அந்த பெண்மணி. பெரியவா அந்தக் கவசத்தை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த சிஷ்யரிடம் ” அதை எடு ” என்று கையைக் காட்டினார். ஓரமாக இருந்த அருகம்புல் மாலைப் பொட்டலத்தை எடுத்துப் பிரித்துக் கொடுத்தார், அவர். ‘பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று, பெரியவா கேட்கவுமில்லை, பார்க்கவுமில்லை. ஆனால், அது பிள்ளையாருக்கு உரிய பொருள் என்று எப்படித் தெரிந்து கொண்டார் ? மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்குச் சாற்றினார். அளவெடுத்தது போல் மாலை அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தன் மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலு பக்கமும் திரும்பி திரும்பி தரிசனம் கொடுத்தார்கள், பெரியவாள். நாங்கள் மெய் சிலிர்த்துப் போனோம். கவசம் கொண்டு வந்த பரம பக்தையான அந்தப் பெண்மணி கண்களில் நீர் மல்க கையை கூப்பிக் கொண்டு நின்றார். அப்படியே அதை அப்பெண்மணி கையில் கொடுக்கச் சொன்னார் பெரியவர்கள். நாங்கள் எடுத்துப் போனது மிகவும் சாதாரணமான பொருள் தான் ! ஆனால், எங்களுக்கு ஏற்பட்ட மனநிறைவு இருக்கிறதே, அதற்கு அளவே இல்லை ! காரணம், தனக்கும் கணபதிக்கும் உள்ள அபேதத்தை எப்படியோ உணர்த்திவிட்டார்கள், பெரியவா.
9 திருத்தங்களுடன் நிறைவேறியது நிலம் கையகப் படுத்தும் மசோதா
புது தில்லி: நிலம் கையகப் படுத்துதல் மசோதா, 9 திருத்தங்களுடன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இன்று இந்த மசோதா குறித்து மக்களவையில் விவாதம் நடந்தது. இதற்காக மக்களவை நேரம் நீட்டிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக மத்திய அரசு 9 திருத்தங்களை செய்திருந்தது. இந்தத் திருத்தங்களை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சௌத்ரி வீரேந்திர சிங் கொண்டு வந்தார். நிலம் கையகப்படுத்துவதால் பாதிக்கப்படும் குடும்பங்களில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. மசோதாவில் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தங்களுக்கு, முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த பா.ஜ., கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் அகாலி தளம் திருத்தங்களுக்குப் பின்னர் ஆதரவு தெரிவித்தன. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் கட்சிகள் கோரின. நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபடி அவை வெளிநடப்பு செய்தன. இந்த மசோதா காரணமாக மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் ஓட்டெடுப்பில் தோல்வியடைந்தன. இறுதியில் இந்த மசோதா 9 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு அ.தி.மு.க., ஆதரவு அளித்தது. சிவசேனா இந்த ஓட்டெடுப்பைப் புறக்கணித்தது. மசோதா நிறைவேறியதை அடுத்து, நாளை காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்டவர்: முன்னாள் காதலி கொடுத்த பாலியல் புகாரில் கைது
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த இளைஞர், தன் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்டார். அதைப் பார்த்த அவரின் முன்னாள் காதலி, அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். கோழிக்கோடு மாவட்டம் கூராசுண்டு பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஷமீருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது நண்பர்கள் பார்ப்பதற்காக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் ஷமீர். பேஸ்புக்கில் ஷமீரின் புகைப்படங்களைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இத்னைக் குறிப்பிட்டு, போலீஸாரிடம் ஷமீர் மீது பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ‘ஷமீர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். பல்வேறு இடங்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்றித் திரிந்தோம். அவர் என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டார்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376-ன் படி பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷமீரைக் கைது செய்து 14 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி., யுகேஜி., வகுப்புகள் தேவை: சரத்குமார்
சென்னை: அரசுப் பள்ளிகளில் ப்ரிகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப் பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஒரு காலத்தில் பள்ளிப்படிப்பு 5 வயது பூர்த்தியானதில் இருந்து தொடங்கியது. பின்னர் LKG, UKG போன்ற வகுப்புகள் தொடங்கியதிலிருந்து 3 வயது பூர்த்தி ஆனதில் இருந்தே பள்ளிப்படிப்பு தொடங்கி விட்டது. இன்னும் ஒரு படி மேலாக, 3 ஆம் வயது ஆரம்பத்திலேயே Pre Kg. என்ற வகுப்பில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். பட்டப்படிப்பு, மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம் என்று கல்வி கற்கும் போது ஏறக்குறைய 20 வருடங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்க நேரிடுகிறது. Pre Kg. LKG, UKG என்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் ஆர்வம் பெற்றொர்களுக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லுதல், இதே வகுப்புகளில் குழந்தைகளுக்கு படிப்பு மட்டுமல்லாது விளையாட்டுகள் போன்ற தனி கவனம் கிடைத்தல் போன்ற காரணங்களால் 3 வயது முடிந்தவுடன் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவது அவசியமாகி விட்ட்து. பெற்றோர்களின் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கனிசமான / அபரிமிதமான கட்டணம் வசூலித்து வருகின்றன. சில பள்ளிகள் Play School என்றும் மழலையர் பள்ளிகள் என்றும் நடத்தி வருவதும் கண்கூடு. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்குக் கூட LKG,UKG படித்திருக்க வேண்டும் என்ற தகுதி நிர்ணயம் எழுதப்படாத விதியாக இருப்பதற்கு பெற்றோர்களின் ஆர்வம் காரணமா? அல்லது பள்ளிகளின் நிர்பந்தம் காரணமா? என்ற விவாதத்தை உருவாக்குகிறது. ஆக, தெரிந்தோ, தெரியாமலோ Pre kg முதலே பள்ளிப்படிப்பு ஆரம்பம் என்பது நடைமுறையாகிவிட்டது. எனவேதான் இந்த பிரச்னையில் அரசு களமிரங்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஒருபுறம் தங்கள் பிள்ளைகள் prekg முதலே படிக்க வேண்டும் என்ற ஆர்வம், மறுபுறம் தனியார் பள்ளிகளில் அபரிமிதமான கட்டணம் என்ற இரண்டுக்கும் நடுவில் சிக்கி ஏழை எளிய நடுத்தர மக்கள் தவித்து வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. Pre Kg யில் நன்கொடை கொடுக்கத் தொடங்கிதிலிருந்தே பெற்றோர்களின் கடன் சுமையும் தொடங்கி விடுகிறது. படிப்படியாக அந்த சுமை உயர்ந்து கொண்டே போகிறது. எனவே, அரசே Pre Kg. LKG,UKG வகுப்புக்களை தொடங்குவது குறித்து பரிசீலித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். இதன்மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கனவு நிறைவேறும். பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த வகுப்புகள் தொடங்குவதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளின் அபரிமிதமான கட்டண வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சமுதாயத்தில் கல்விப் புரட்சிக்கு வழிவகுக்கும். தங்கள் பிள்ளைகள் Pre Kg. LKG,UKG படித்தார்கள் என்ற மகிழ்வும் மனநிறைவும் கிராமப்புறம் சார்ந்த பெற்றோர்களுக்கும் ஏற்படும். எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் கல்வி ஆண்டு முதல் ஆரம்பப் பள்ளிக் கல்வியில் Pre Kg. LKG,UKG வகுப்புக்களைத் தொடங்குவதற்கு சீரிய முயற்சி மேற்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ராஜபட்சவுடன் கைகுலுக்கி விருந்துண்டு பரிசுப் பொருள் வாங்கி வந்தவர்கள் வீராவேசமாகப் பேசுவது வியப்பு: தமிழிசை
சென்னை: ஏதோ இலங்கைக்கு போனோம் வந்தோம் என்று இல்லாமல், சொந்த உறவுகள் கொல்லப்பட்டதைக் கண்டிக்காமல் ராஜபட்சவுடன் கை குலுக்கி விட்டு விருந்து சாப்பிட்டு விட்டு பரிசுப் பொருள்களை வாங்கி வந்து இன்று வீராவேசம் பேசிக் கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது போல் இருக்கிறது இன்றைய சுஷ்மாவின் பயணமும் நாளைய மோடியின் பயணமும் என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்று மோடி அவர்கள் 28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை செல்லும் இந்திய பிரதமராக சுற்றுப்பயணம் துவங்க உள்ளார்கள். இலங்கை நாடு என்பதனை தமிழர்களிடம் இருந்து பிரித்து பார்க்க இயலாத ஒன்று. தான் செல்வதற்கு முன்னால் முன்னோட்டமாக வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை அனுப்பி அங்குள்ள பிரச்சனைகளை, குறிப்பாக தமிழர் மீனவர் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் இந்தப்பயணத்தை மேற்கொள்கிறார் என்பது தெளிவு. ஏதோ இலங்கைக்கு போனோம் வந்தோம் என்று இல்லாமல், சொந்த உறவுகள் கொல்லப்பட்டதை கண்டிக்காமல் ராஜபக்சேவுடன் கை குலுக்கி விட்டு விருந்து சாப்பிட்டு விட்டு பரிசுப் பொருள்களை வாங்கி வந்து இன்று வீராவேசம் பேசி கொண்டு இருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவது போல் இருக்கிறது இன்றைய சுஷ்மாவின் பயணமும் நாளைய மோடியின் பயணமும் திரு. ரணில் விக்ரமசிங்;கே தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று சொன்னதற்கு பதிலடியாக, நேரடியாக அவர்கள் மண்ணில் நின்று கொண்டே சுஷ்மா அவர்கள் நீங்கள் எங்கள் மீனவர்களை இப்படி சட்ட திட்டத்திற்கு உட்பட்டு பார்க்க கூடாது, மனிதாபிமானத்துடன்தான் அணுக வேண்டும் என்று ரணில் முகத்தில் அறைந்தார் போல் நேரில் கேட்டுவிட்டு, இன்று இலங்கை பிரதமர் அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் என்ற தகவலையும் பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கிறார். இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள் சுட்டுக் கொல்லப்படும்போது முந்தைய ஆட்சியில் சும்மா இருந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இங்கு ஆட்சியிலிருந்த தி.மு.க மற்றும் கூட்டணி அதனை அப்போது தடுக்க எந்தவித தீவிர முயற்சி எடுக்காமல் இருந்து விட்டு மோடியை எதிர்த்து விமர்சனம் செய்வது வியப்பாக உள்ளது. சுடுவேன் என்று சொன்னவுடனே வெகுண்டெழுந்து கண்டனத்தை சொல்லி மன்னிப்பு கேட்க வைத்த சுஷ்மா அவர்களும், மோடி அவர்களும் தமிழர் மீது அக்கறை உள்ளவர்களா? இனப்படுகொலையின் போது தமிழர்களை சுடும்போது சும்மா இருந்துவிட்டு சுடுவேன் என்று இலங்கை பிரதமரை வாய்வார்த்தைகளால் கண்டித்து கொண்டிருக்கும் இவர்கள் தமிழர்மீது அக்கறை உள்ளவர்களா? என்பதனை இந்திய தமிழரும் இலங்கை தமிழரும் உணர்ந்து கொள்வார்கள். இலங்கையில் உச்ச கட்ட போரில் நம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கூட அதனை தடுத்து நிறுத்த குரல் கொடுக்காத திரு. மன்மோகன்சிங்கை ஏன் திரு. கலைஞர், திரு. வாசன், திரு. இளங்கோவன் கண்டிக்கவில்லை? தயவு செய்து இலங்கை பிரச்சனையை அரசியல் லாபத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, அவசியமாக நம் தமிழ் மக்களுக்கும் மீனவர்களுக்கும் விரைவில் கிடைக்க காத்திருக்கும் நல்ல தீர்வை தடுத்து விடாதீர்கள். டெல்லி வந்த இலங்கை எம்பிகளிடம் 2 மணி நேரம் செலவழித்து நேரடியாக உரையாடியிருக்கிறார் பிரதமர் மோடி.காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படி நேரடி நிகழ்வும் முயற்சியும் ஏதாவது நடந்ததா? இப்போது கூட சுஷ்மா அவர்கள், பல தமிழ் – இஸ்லாமிய அமைப்பு தலைவர்களை சந்தித்திருக்கிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இப்படி ஏதாவது நடந்ததா? பிடிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழ் மீனவர்கள் இன்று திரு. மோடியால் விடுதலை பெற்றார்களே! இதுவே நம் தமிழர்களின் வாழ்வுக்கு ஒரு விடை கிடைக்கும் என்பதற்கு நம்பிக்கை ஒளி அல்லவா? வழக்கு முடிந்து மீனவர்களின் படகுகளை மீட்க சென்ற தமிழக குழுவிற்கு அத்தனை உதவிகளையும் மத்திய அரசு செய்திருக்கிறது. மீனவர்களின் பிரச்சனையை திரு. மோடி அவர்களும், திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்களும் மிகச் சரியாக கையாண்டு வருகிறார்கள். திரு.மோடியின் இலங்கை பயணம் தமிழர் வாழ்வில் நிச்சயம் ஒளியேற்றும். அதற்கான ஒளிக்கீற்று நம்பிக்கையுடன் புலப்படுகிறது. பிரதமர் இலங்கை செல்லக் கூடாது என்ற திரு. இளங்கோவன் போன்றவர்களின் வாதம் தேவையற்றது. திருமதி. சுஷ்மா சுவராஜ் அவர்கள் மீனவர்களைக் காக்கும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது என்றும் மோடி அரசு பொறுப்பேற்றபின் எந்த மீனவரும் சுட்டுக் கொல்லப்படவில்லை என்றும், மீனவர்களின் பேச்சுவார்த்தை தங்காலிகமாகத் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் திரு. மோடி அவர்களின் பயணத்திற்கு பின்பு நிச்சயம் பேச்சுவார்தை நடைபெறும் என்றும் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய பிரதமர் அங்கு செல்வது இலங்கைத் தமிழருக்கும், இந்திய மீனவர்களுக்கும் ஓர் நல்வாழ்க்கையை மீட்டுத்தரும் என்று சொன்னதோடு, இலங்கை சிறையில் ஒரு மீனவர் கூட இல்லை, படகுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். ஆக இவ்வளவு திட்டங்களை மீனவர்களுக்குக்காக தீட்டிக் கொண்டிருக்கும் திரு. நரேந்திரமோடி அவர்கள் மீனவர்களின் உண்மையான நண்பனாக திகழ்கிறார் என்பதை மீனவச் சகோதரர்கள் அறிந்திருக்கிறார்கள். அறியாதது போல் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை. இப்படி நெடு நாளாக தீர்க்கப்படாமல் இருக்கும் மீனவர் பிரச்சனைக்கும் – இருண்ட இலங்கை தமிழர் வாழ்வில் அரசியல் அதிகாரத்துடன் கூடிய ஒரு சுதந்திரமான நல்வாழ்க்கை அமைய திரு. மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நம் ஆதரவு தெரிவிக்க வேண்டுமே அன்றி பிழைப்பதற்காக அரசியல் பேசி அங்குள்ள நம் தமிழர்களின் பிழைப்பை கெடுத்துவிடாதீர்கள். இலங்கை தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு என்பதே நம் அனைவரின் ஒருமித்த கருத்தாக இருக்க வேண்டுமே தவிர, இதையும் அரசியலாக்கி கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளை கண்டு வருத்தமே!
தெரு, ஊர்களுக்கு சாதிப் பெயர் நீக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தமிழகத்தில் தெருக்கள், ஊர்களின் பெயரிலுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் பொன்.தம்மபாலா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசு 3.10.1978-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. மேலும், அரசுத் துறை ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் உள்ள சாதிகளைக் குறிப்பிடும்போது, சாதிப் பெயர்களில் குறிப்பிடாமல் மொத்தமாக ஆதிதிராவிடர் வகுப்பினர் எனக் குறிப்பிட வேண்டும் என்று தமிழக ஆதி திராவிடர் நலத் துறை 24.2.2007-ல் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைகள் அமல்படுத்தப் படவில்லை. இந்த அரசாணைகளை முறையாக அமல்படுத்தியிருந்தால் தமிழகத்தில் சாதி வேறுபாடற்ற நிலை ஏற்பட்டிருக்கும். வாக்காளர் பட்டியலிலும் தெருக்களின் பெயர்கள் சாதிப் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள் சாதிப் பெயரில் இருப்பதால், அப் பகுதிகளில் சாதிப் பாகுபாடு நிலவுகிறது. சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக 37 ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த அரசாணை இன்னமும் முறைப்படி அமலுக்கு வராதது வேதனையானது. எனவே, அரசாணை அடிப்படையில் தமிழகத்தில் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலர், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை வரும் மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

