காங். பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்: ஜெயலலிதா நடவடிக்கை

Published:

jayalalitha சென்னை: மூத்த காங்கிரஸ் பிரமுகர் கிள்ளிவளவனுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் … அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணாவோடு நெருங்கிப் பழகியவரும், பல்வேறு பணிகளில் அண்ணாவுக்கு உறுதுணையாக விளங்கியவரும், அண்ணாவின் மறைவுக்கு பிறகு பல அரசியல் தலைவர்களிடம் நெருங்கிப் பழகியவரும், காங்கிரஸ் இயக்கத்தில் நீண்ட காலம் பணியாற்றியவருமான 90 வயதுடைய கிள்ளிவளவன் முதுமையும், ஏழ்மையும் வாட்டி வரும் சூழலில் நோயுற்று கவனிப்பார் இன்றி தனிமையில் தவித்து வருகின்றார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமுற்றார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் வாழ்வில் வழி இழந்து வாடி நிற்கும் மனிதர்களின் துயரங்களைப் பற்றிய செய்தி அறிந்த உடனே அவர், எவர் என்றும் பாராமல், எந்த இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற பாரபட்சம் காட்டாமல் மனிதாபிமானம் என்ற மாண்பின் அடிப்படையில் அவர்தம் துயர் களைய உடனடி உதவிகளை வழங்கி வரும் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கிள்ளிவளவனின் துயர் துடைத்திடும் வகையில், அவருடைய பெயரில் 5 லட்சம் ரூபாயை நிலை வைப்பில் செலுத்தி, அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதா மாதம் பணம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ததோடு, அவரது உடனடி செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயையும் வழங்குமாறு ஆணையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து 10-3-2015 அன்று (நேற்று) மாலை அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.பழனியப்பன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கம் குளக்கரை சாலையில் உள்ள கிள்ளிவளவனுடைய வீட்டிற்குச் சென்று, ஜெயலலிதா சார்பாக நலம் விசாரித்ததோடு, கழகத்தின் சார்பில் 5 லட்சம் ரூபாயை வங்கியில் நிலை வைப்பில் செலுத்தி, அதில் இருந்து வரும் வட்டித்தொகையில் அவருடைய அன்றாடச் செலவுகளை செய்துகொள்வதற்கு ஏதுவாக மாதா மாதம் பணம் கிடைக்கும் வகையில் ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளது பற்றி தெரிவித்து, உடனடி செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயை வழங்கி, அவருக்கு ஆறுதல் கூறினார்கள். நிதியுதவியினைப் பெற்றுக்கொண்ட கிள்ளிவளவனும், அவரது குடும்பத்தினரும், தங்கள் சூழ்நிலையை அறிந்து உடனடியாக உதவி செய்த, ஏழை, எளிய மக்களின் கண்கண்ட காவல் தெய்வமாய் விளங்குகின்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கருணை உள்ளத்தை நினைத்து, நெஞ்சம் நெகிழ்ந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img