நாமக்கல்: தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து மணல் லாரிகள் புதன்கிழமை இன்று முதல் வழக்கம்போல் இயங்கும். தமிழக அரசால் நடத்தப்படும் அனைத்து மணல் குவாரிகளிலும் 2 யூனிட்டுக்கு ரூ.1,000, 3 யூனிட்டுக்கு ரூ.1,500 வீதம் வங்கி வரைவோலை பெற்றுக் கொண்டு மணல் வழங்கக் கோரி திருச்சி மண்டலத்தில் மணல் லாரிகளை இயக்காமல் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து, கடந்த 3 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படவில்லை. மேலும், நிர்ணயித்த அளவை விட அதிகமாக மணல் ஏற்றிச்சென்ற லாரிகளைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்நிலையில், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி, 2-ஆம் மணல் விற்பனை மைய ஒப்பந்ததாரர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன்பிறகு வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்ல.ராசாமணி அறிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது… 2-ஆம் விற்பனை மையங்களில் சிறிய லாரிகளுக்கு 2 யூனிட், பெரிய லாரிகளுக்கு 3 யூனிட் மணல் மட்டுமே ஏற்றிவிடப்படும். ஓட்டுநர்கள் கேட்கும் ஊருக்கு மணல் எடுத்துச் செல்ல உரிமம் வழங்கப்படும் எனவும், இரண்டாம் விற்பனை மையங்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் செயல்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. மணல் லாரிகள் புதன்கிழமை காலை முதல் வழக்கம்போல் இயங்கும் என்றார்.
மணல் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்: இன்று முதல் இயங்கும்
மோடியின் இலங்கை பயணம் தமிழர்களுக்கு விடிவுகாலமாக அமைய வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் பிரச்னைகளுக்கு – நிரந்தர தீர்வுக்கு உரிய பயணமாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, இலங்கை இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாகும். இந்தியா அண்டை நாடுகளுடன் நட்புடன் தொடர்பு கொள்வதையே விரும்புகிறது. ஏனெனில் ஒட்டு மொத்த மக்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் நலமுடன் வாழ இந்தியா தனக்கென்று ஒரு சிறந்த பண்பை கொண்டிருக்கின்றது. மேலும் தமிழ் மக்கள் உலகில் எந்த நாட்டில் குடியிருந்தாலும் அவர்கள் நலமுடன் வாழ இந்தியாவின் பங்கு மகத்தானது. எனவே தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை நிம்மதியாக, பிரச்சனைகள் இன்றி வாழ்வதற்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு நல்ல முடிவை அவர்களுக்கு பெற்றுத் தரவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, அவசியமான ஒன்று. மாநில அரசு – தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பிரச்சனைகளின்றித் தொடர முக்கிய முடிவுகள் எடுத்து, அதனைச் செயல்படுத்தி நல்ல தீர்வு கிடைப்பதற்கு வழி வகுக்க வேண்டும். அதற்காக இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை காலம் கடத்தாமல் விரைந்து நடப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதற்காக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இந்தியப் பிரதமர் இலங்கைச் செல்வதால் அந்நாட்டு அதிபரிடம், தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி வந்து மீன்பிடித்தால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கும் சட்டத்தில் இடம் உண்டு என்று இலங்கைப் பிரதமர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் இலங்கை வாழ் தமிழர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் தொடர்பாக ஒரு முக்கிய முடிவு எடுத்து, அதனடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதனைக் குறுகிய காலத்தில் நிறைவேற்ற இந்தியப் பிரதமர் – இலங்கைப் பிரதமர் மற்றும் அதிபரைச் சந்தித்து – 13 ஆவது அரசியல் சட்டதிருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு, இந்தியாவினுடைய உதவிகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைதல், மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு உட்படுதல், இலங்கை ராணுவம் தமிழர் வாழும் பகுதியிலிருந்து கால தாமதமின்றி வெளியேறவும், கச்சத்தீவுப் பிரச்சனை, இலங்கை வாழ் தமிழர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்று இயல்பு வாழ்க்கை வாழவும், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள், சலுகைகள், பாதுகாப்பு போன்றவைகள் கிடைப்பதற்கும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவைகள் அனைத்தும் ஒரு காலக் கெடுவிற்குள் நிறைவேற இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்கும் ஒரு தீர்க்கமான, நிரந்தர, சுமூக முடிவு கிடைக்கும் வகையில் இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் அமைய வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு. என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஐ’ படத்துக்கு வரிச் சலுகை வழங்காத வழக்கு: புதுவை அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை: ‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்…. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ படத்தின் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதி விநியோக உரிமையை நான் பெற்றுள்ளேன். தமிழில் பெயர் வைத்துள்ள மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்குவது என்று கடந்த 2007-ம் ஆண்டு புதுச்சேரி மாநில அரசு அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில், வரிச்சலுகைக்கு தகுதியுள்ள திரைப்படங்களை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க மறுத்து விட்டது. ‘ஐ’ என்ற சொல் ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் பேச்சு வழக்கு சொல்லாகும். இந்தியாவில் எந்த ஒரு மொழி யிலும் இல்லாத தனித்தன்மை வாய்ந்த ‘ஐ’ என்ற சொல் தமிழில் மட்டுமே உள்ளது. இப்படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை வழங்க முடியாது என்று புதுச்சேரி மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சட்ட விரோதமானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து ‘ஐ’ படத்துக்கு வரிச் சலுகை வழங்க புதுச்சேரி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வழக்கறிஞர் டி.டி.ரவிச்சந்திரன் ஆஜரானார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
விரைவில் மெட்ரோ ரயில் தொடங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: மு.க. ஸ்டாலின்
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்காவிட்டால் திமுக சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவின் ஜெ.அன்பழகன் தந்தை கி.ஜெயராமன் நினைவு நாள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசினார் ஸ்டாலின். அப்போது … ஜெயலலிதா விடுதலையான பிறகு ரயில் சேவையை தொடங்கலாம் என்று அதிமுக ஆட்சி திட்டமிடுகிறதா? அவர் வரும் வரை மக்கள் காத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரைவில் தொடங்கா விட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்துவோம். சென்னை உள்பட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக தொண்டர்களுடன் போராட்டம் நடத்துவோம். அனுமதி தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தை திமுக நடத்தும். என்றார்.
ரூ.190க்கு அம்மா சிமென்ட் : 2 மாதத்தில் 25 லட்சம் மூட்டைகள் விற்பனை
சென்னை: தமிழகத்தில் அம்மா சிமெண்ட் விற்பனை மிக அமோகமாக உள்ளதாம். கடந்த 2 மாதத்தில் மட்டும் 25 லட்சம் மூட்டைகள் விற்பனையாகி உள்ளதாக அம்மா சிமென்ட் நிர்வாக இயக்குனர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியபோது… அம்மா சிமெண்ட் விற்பனை கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டது. 50 கிலோ எடை கொண்ட அம்மா சிமென்ட் ரூபாய் 190க்கு விற்பனை செய்யப்படுகிறது. தனியார் சிமெண்ட் விலையுடன் ஒப்பிடுகையில் அம்மா சிமென்ட் விலை ரூபாய் 210 குறைவு. விற்பனை தொடங்கிய 2 மாதத்தில் 24 லட்சத்து 99 ஆயிரத்து 500 மூட்டைகள் விற்பனையாகி உள்ளது. பொதுமக்கள் மத்தியில் அம்மா சிமென்ட்டுக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது. எனவே 3 லட்சம் சிமென்ட் மூட்டைகள் எப்போதும் குடோன்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதை அரசு ஏற்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோருக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தை முடக்க அரசு சார்பில் எடுக்கப்படும் முயற்சிகள் கண்டிக்கத்தக்கவை. பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவ-மாணவியர் தங்களின் கோரிக்கைகளுக்காக 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் எந்த கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. இதையடுத்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தினர். 12 நாட்கள் நீடித்த இப்போராட்டத்தின்போது முக்கிய சாலைகளில் திடீர் திடீரென மறியல் செய்தனர். இதை முறியடிக்க காவல்துறை அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. போராட்டக்காரர்களை கைது செய்து சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலுள்ள மதுராந்தகத்திலும், கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள சுடுகாட்டிலும் நள்ளிரவில் இறக்கிவிட்ட அவலமும் நடைபெற்றது. இதற்கெல்லாம் அஞ்சாமல் தங்களின் உரிமைக்காக போராடிய இவர்களுடன் 3 கட்ட பேச்சு நடத்திய தமிழக அரசு, இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது. தொடர்ந்து அமைச்சர்களுடன் இது குறித்து விவாதித்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா,சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி ஆசிரியர் வேலை வழங்குவது உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், பெயரளவில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியதைத் தவிர வேறு எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தான் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றோருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் தொடர் உண்ணாநிலை போராட்டம் மற்றும் சாலை மறியல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அழைத்து பேசுவதற்கு பதிலாக அவர்களை கைது செய்து வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விடும் அணுகுமுறையை தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, ‘‘இப்போதைக்கு உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது; நீங்கள் போராட்டம் நடத்த விரும்பினால் தாராளமாக போராடிக் கொள்ளுங்கள்’’ என்று தமிழக அரசின் உயரதிகாரிகள் கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்றவர்கள் பின்னடைவுப் பணியிடங்களில் நியமிக்கப்படுவார்கள்; முதுநிலைப்பட்டம் பெற்ற 200 பேர் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவும், 100 பேர் கல்லூரி விரிவுரையாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். இவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், வாக்குறுதி அளித்து ஒன்றரை ஆண்டுகளாகியும் இவற்றை நிறைவேற்ற அரசு தயங்குவற்கானக் காரணம் தெரியவில்லை. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை ஜெயலலிதா இன்னும் நிறைவேற்றவில்லை; சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த வரிசையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும் அரசு காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலேயே தமிழக அரசு இவ்வாறு நடந்து கொண்டால், மற்ற பிரச்சினைகளில் அரசின் செயல்பாடுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை உணரலாம். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை பொறுப்புடனும், அக்கறையுடனும் கவனித்துக் கொள்வது தான் ஒரு நல்ல அரசுக்கான இலக்கணமாக இருக்க முடியும். மாற்றுத்திறனாளிகள் வீதியில் இறங்கி போராடிய பிறகும் அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது மக்களுக்கான அரசாக இருக்க முடியாது. இதை உணர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுப்பை நீட்டித்தார் ராகுல்: விரைவில் திரும்புவார் என்கிறது காங்கிரஸ்
புது தில்லி: நீண்ட விடுப்பில் சென்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தனது விடுப்பை மேலும் நீட்டித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் விரைவில் பணிகளுக்கு திரும்புவார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன், தில்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கே சென்றார், எங்கே தங்கியுள்ளார் போன்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பியதாகவும், அதற்கு தடை ஏற்பட்டதால் அவர் கோபத்தில் வெளியேறியதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், அவரது விடுப்பு குறித்து காங்கிரஸ் கட்சியினரே, காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள் என்றெல்லாம் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியதால் சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது. இந்நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், ”ராகுல் காந்தி அரசியலை விட்டு போகவில்லை. அவர், புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்காக, சில ஆழ்மனப் பயிற்சிகளை கற்றுக் கொள்ள வெளிநாடு சென்றுள்ளார்” என்றனர். இந்நிலையில், கட்சியில் சில மாறுதல்கள் செய்ய தடங்கல் ஏற்பட்டதால், ராகுல் காந்தி கோபத்தில் வெளியேறியதாக வெளியான தகவலை சோனியா காந்தி மறுத்தார். இந்நிலையில், ராகுல் காந்தி நேற்று தில்லி திரும்புவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர் தில்லி திரும்புவது குறித்தோ, அல்லது அவர் தில்லி வந்தடைந்ததாகவோ எந்தவித தகவலும் இல்லை. இதனிடையே ராகுல் காந்தி, தனது விடுப்பை மேலும் நீட்டித்துள்ளதாகவும், இந்த வார இறுதியில் அவர் தில்லி திரும்புவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும்: திருமாவளவன்
சென்னை: 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- காங்கிரஸ் ஆட்சியின்போது நடைமுறையிலிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புற உழைக்கும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆண்டில் 100 நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தாலும், அது ஒரு பயனுள்ள திட்டமாகவே விளங்கியது. தற்போது பாஜக ஆட்சியில் அந்தத் திட்டத்தைப் படிப்படியாக முடக்கும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. இதனால், இத்திட்டத்தின்கீழ் வேலை நடக்கும் பரப்பளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. தமிழகத்திலுள்ள 385 ஒன்றியங்களிலும் நடைபெற்ற இவ்வேலைகள் சுமார் 94 ஒன்றியங்களில் மட்டுமே நடைபெறுவதாகத் தெரிகிறது. இது எளிய மக்களுக்கெதிரான மாபெரும் மோசடியாகும். இந்தத் திட்டத்தை முடக்கும் முயற்சியைக் கைவிட்டு, 200 நாள் வேலைத் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும். ஊதியத்தை நாளொன்றுக்கு 200 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மார்ச் 16 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மது இல்லா கிராமங்களுக்கு ரூ.1 லட்சம்: ஜார்கண்ட் முதல்வர்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் மது இல்லா கிராமங்களுக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என மாநில முதல்வர் ரகுவர் தாஸ் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தொடரில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி மாநிலத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களின் கிராமப் பகுதிகளை மது இல்லா கிராமமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களின் முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களின் கிராமங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படு்ம் என அவர் தெரிவித்துள்ளார்.
செஷல்ஸ் தீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார் அதிபர்
விக்டோரியா: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். இதன் முதல் கட்டமாக நேற்று அவர் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்றார். நேற்று மாலை தலைநகர் தில்லியில் இருந்து செஷல்ஸ் நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டார் மோடி. நேற்று நள்ளிரவு செஷல்ஸ் தீவுகளைச் சென்றடைந்த பிரதமர் மோடியை, தலைநகர் விக்டோரியாவில் உள்ள விமான நிலையத்துக்கே வந்து அந்நாட்டு அதிபர் ஜேம்ஸ் அலிக்ஸ் மைக்கேல் வரவேற்றார். செஷல்ஸ் அதிபர் ஜேம்ஸ் மைக்கேலுடன் பேசும் பிரதமர் மோடி, பின்னர் அங்கே கடலோர ரேடார் கண்காணிப்பு கருவியையும் இயக்கி வைக்கிறார். அதன்பின் மார்ச் 11-12 இரு தினங்கள் மொரிஷீயஸில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள மோடி, இன்று பிற்பகல் மொரீஷியஸ் செல்கிறார். மொரீஷியஸில் தனது பயணத்தை மிகவும் சிறப்பான ஒரு தினமாக அறிவித்துள்ளார் மோடி. அங்கு சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் மோடி, இந்த தினத்தை சிறப்பான நாளாக அறிவித்துள்ளார். 1930ம் வருடம் இதே மார்ச். 12ல்தான் தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி மேற்கொண்டார். அங்கு அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜக்நாத்துடன் பேசும் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். பின்னர், கடலோர ரோந்துக் கப்பலை இயக்கி வைத்து, இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து இலங்கை புறப்பட்டு செல்கிறார். மார்ச் 13-14 இரு தினங்கள் இலங்கையில் பயணம் மேற்கொள்கிறார் மோடி. அங்கு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு இந்தியா சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். தலைமன்னாரில், புதிய ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தை பார்வையிடுகிறார். இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். பிரதமர் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவும் சென்றுள்ளது.

