உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் பி பிரிவு 35 ஆவது லீக் சுற்றுப் போட்டியில், இலங்கை ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட் செய்யக் களம் இறங்குவதாக அறிவித்தது. அதன் படி களம் இறங்கிய இலங்கை வீரர்கள், சிறப்பான துவக்கம் அளித்து ரன் சேர்த்தனர். திரிமனே 4 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், சங்ககரா, தில்ஷன் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் சதம் அடித்து அசத்தினர். சங்ககரா 124 ரன் எடுத்தார். தில்ஷன் 104 ரன் எடுத்தார். பின்னர் நடுவரிசையில் மேத்திவ்ஸ் 21 பந்துகளில் 51 ரன் என அதிரடி காட்டினார். இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 363 ரன் என்ற பெரும் இலக்கை ஸ்காட்லாந்து அணிக்கு நிர்ணயித்தது.
“காரடையார் நோன்பு 15-03-2015”
“காரடையார் நோன்பு 15-03-2015” (மாசிக் கயிறு பாசி படரும்)(விருத்தியாகும்) நல்ல நேரம்; அதிகாலை ஸுமார் 04-05 மணி முதல் 05-10 வரை. சொல்ல வேண்டிய வாக்கியம்’ உருக்காத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும். நோன்புச் சரடு (மஞ்சள் கயிறு) கட்டிக் கொள்ள மந்திரம். தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யhஹம் பர்த்து; ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா
ராகுலை கண்டுபிடித்துத் தரக் கோரும் மனு: நீதிமன்றம் தள்ளுபடி
லக்னோ: காணாமல் போய்விட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை கண்டுபிடித்துத் தரும்படி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு ஏற்க உகந்ததல்ல என்று கூறி அலஹாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது குறித்து, உள்ளூர் வழக்குரைஞர் ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு அமர்வில் வந்தபோது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் டிஒய் சந்த்ரசூட், நீதிபதி ராஜன் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என்று கூறி தள்ளுபடி செய்தது. இந்த மனுவில், சிறப்பு காவல் படை தலைமை இயக்குனர், மத்திய அரசு இரு தரப்பும் ராகுல் காந்தியின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டியும், எஸ்பிஜியின் கண்காணிப்பில் ராகுல் இல்லை என்றால் அதனை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டிருந்தது.
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ஆம் ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். ஆனால், கடந்த 2010ஆம் ஆண்டு துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சில விதிமுறைகளை இயற்றியது. அதன்படி, ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்தால் மட்டுமே, அவரை துணைவேந்தராக நியமிக்க முடியும். எனவே இதனை சுட்டிக்காட்டி கல்யாணி மதிவாணன் நியமனத்தை எதிர்த்து கெயராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். கல்யாணி மதிவாணனை நியமிக்கும்போது பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறையை பல்கலைக்கழகம் கடைபிடிக்கவில்லை என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில், கல்யாணி மதிவாணன் நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து கல்யாணி மதிவாணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், கல்யாணி மதிவாணன் துணைவேந்தராகத் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது. கல்யாணி மதிவாணனை துணைவேந்தராக நியமித்தது பல்கலைக்கழகம்தான் என்றும், எனவே, பல்கலைக்கழகத்தின் தவறுக்கு துணைவேந்தர் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், யுஜிசி விதிப்படி கல்யாணி மதிவாணன் நியமனம் சரிதான் என்றும் நீதிபதி எஸ்ஜே முகோபாத்யாயா தலைமையிலான அமர்வின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால் மட்டுமே அந்த ரூ.15 லட்சம் : அருண் ஜேட்லி
புது தில்லி: வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணம் முழுமையாக மீட்கப் பட்டால்தான் மட்டுமே அனைவருக்கும் ரூ15 லட்சம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் எப்போது போடப்படும் என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்.பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அருண் ஜேட்லி…. கறுப்புப் பணம் தொடர்பான விசாரணையில் இதுவரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட 3,250 கோடி ரூபாய் தான் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் மீட்டுக் கொண்டு வரப்பட்டால் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும் என தேர்தல் பிரசாரத்தின் போது மோடி கூறினார். அந்தப் பேச்சானது வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் தொடர்பாக வெளியான பல மதிப்பீடுகளின் அடிப்படையில் உத்தேசமாக சொல்லப்பட்டதாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் எச்.எஸ்.பி.சி., வங்கியில் கறுப்பு பணம் பதுக்கி இருப்போர் என முதலில் 628 பேர் பட்டியல் வெளியானது. அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி வரும் 31-ந் தேதிக்குள் முடிந்து விடும். கறுப்பு பணம் குறித்து விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஒவ்வொரு மாதமும் உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர். அத்துடன் கறுப்பு பணம் உருவாவதையும் அதை வெளிநாட்டில் பதுக்குவதையும் தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்குவது தொடர்பாகவும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி உள்ளனர். சிறப்புக் குழுவினரின் பரிந்துரைகளில் சில மத்திய பட்ஜெட் அறிவிப்பில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ளன. மேலும் கறுப்புப் பண பதுக்கலை தடுக்க தனிச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது… என்று கூறினார்.
சம்மன் அனுப்பப்பட்டதில் அதிருப்தியே; ஆனாலும் சட்டத்துக்கு மதிப்பளிக்கிறேன்: மன்மோகன் சிங்
புது தில்லி: நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது அதிருப்தி அளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். தனக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மன் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்த சம்மன் எனக்கு அதிருப்தி அளிக்கிறது. ஆனாலும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு நான் மதிப்பளிக்கிறேன். என் தரப்பு நியாயங்களை தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். எந்த விதமான சட்ட விசாரணைக்கும் வெளிப்படையாக பதிலளிக்க நான் தயாராக உள்ளேன். வாய்மையே வெல்லும் என கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. மன்மோகன் சிங் நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த 2005ம் ஆண்டு குமார்மங்கலம் பிர்லாவுக்கு சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒடிஷாவின் தலபிரா நிலக்கரி சுரங்கம் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. மன்மோகன் சிங்குக்கு குமார்மங்கலம் பிர்லா 2 கடிதங்கள் மூலம் கேட்டுக்கொண்டதால் இந்த ஒதுக்கீடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் மன்மோகன்சிங்கிடம் விசாரணை நடத்த கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் திகதி சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து கடந்த ஜனவரி மாதம் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மன்மோகன்சிங், தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி. பாரக் உள்ளிட்டோர், ஏப்ரல் மாதம் 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தில்லி சி.பி.ஐ. நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெங்களூரு நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி ஆஜர்
பெங்களூரு: பெங்களூரு நீதிமன்றத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று ஆஜரானார். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சாமி இன்று தனது எழுத்துபூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று காலை 10:45க்கு பெங்களூரு நீதிமன்றத்துக்கு நேரில் வந்த சுப்ரமணிய சாமி, தனது வாதத்தை எழுத்து பூர்வமாக, 14 பக்கங்களில் தாக்கல் செய்தார். இதன்பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். சுப்ரமணிய சாமி தாக்கல் செய்துள்ள எழுத்துபூர்வமான வாதத்துக்கு இன்று மதியம் ஜெயலலிதா தரப்பு வழக்குரைனஞர்கள் பதில் அளிக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படக்கூடும்.
“என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை…!”
“என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை…!” ENGINEERING படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்… அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்… அவரிடம் கேட்டான்… ENGINEER: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..? விவசாயி: அது பழகின மாடு தம்பி..,அதுவே சுத்திக்கும்… ENGINEER: நீங்க உள்ளே வந்த உடனே ,அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..? விவசாயி: அதோட கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம்வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்… ENGINEER: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துலநின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..! அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..? விவசாயி: இதுக்குதான் தம்பி. நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை…!
தமிழக மீனவர்களை சுடுவோம்: ரணிலின் கருத்துக்கு இலங்கை மீனவர்கள் வரவேற்பு
கொழும்பு: எல்லை தாண்டி வந்தால் மீனவர்களைச் சுட சட்டத்தில் இடமிருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தைத் தாங்கள் வரவேற்பதாக யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க கூட்டமைப்பு சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்பகுதியில் எல்லைமீறி வந்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடுவதில் தவறில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து தடை செய்யப்பட்ட தொழில்களைச் செய்வதையும், தமது கடல் வளத்தை அழிப்பதையும் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும், இந்திய மீனவர்கள் விஷயத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள கருத்தைத் தாங்கள் வரவேற்பதாகவும் அவர்கள்கூறியுள்ளனர். அண்மையில் யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் உள்ளுர் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்கி, சிலரைக் காயப்படுத்தியதாகவும், அதை அடுத்தே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு ஒரு கடுமையான நிலைப்பாடை வெளிப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கவின் கருத்து கடுமையாக இருந்த போதிலும், நாட்டின் குடிமகன் என்ற வகையில் அதற்கு முரண்பாடான கருத்தைத் தங்கள் தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்ட எமிலியான் பிள்ளை, இந்திய மீனவர்களை நீண்ட காலமாகவே எல்லை தாண்டி வரவேண்டாம் என்று தாங்கள் எச்சரித்திருந்தும், அவர்கள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. இருநாட்டு மீனவர்களும் நடத்திய பேச்சுக்களின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்ப நடந்து கொள்வதாக அளித்த உறுதிமொழியை அவர்கள் கடைப்பிடிக்கத் தவறியதால், இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், திறந்த மனதுடன் பேச்சுக்களின் மூலம் ஓர் உடன்பாட்டுக்கு வர முடியும்; அவ்வாறு எட்டப்படும் முடிவை அவசியம் கடைப்பிடிக்க இந்திய மீனவர்களும், இந்திய அரசும் முன்வர வேண்டும் என்று அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தேசப் பாதுகாப்பே முதலில்; கூட்டணி இரண்டாம் பட்சம்: ராஜ்நாத் சிங்
புது தில்லி: “தேசத்தின் பாதுகாப்புக்கே மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது; ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் கூட்டணி அரசில் நீடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஜம்மு – காஷ்மீரில் ஹுரியத் பிரிவினைவாத தலைவர் மஸரத் ஆலம் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் அரசு மேலும் 800 பிரிவினைவாதிகளை விடுதலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது… தேசப் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய பாஜக அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. எந்த அரசாக இருந்தாலும் சரி, அந்த அரசில் நாங்கள் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். நாட்டுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்போம். ஜம்மு-காஷ்மீர் ஹுரியத் பிரிவினைவாதத் தலைவர் மஸரத் ஆலம் விடுதலை விவகாரம் தொடர்பாக தற்போது எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. எனது விளக்கத்தை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்து விட்டேன். மஸரத் ஆலம் விடுதலை குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசிடம் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளேன். அதுகுறித்து மாநில அரசின் பதில் கிடைத்ததும், மேற்கொண்டு எனது கருத்தைத் தெரிவிப்பேன். மஸரத் விடுதலை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சயீது என்னுடன் பேசவில்லை. இப்போது மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாகவே, அவருடன் (முஃப்தியுடன்) நான் பேசவில்லை என்றார் ராஜ்நாத் சிங்.

