சென்னை: புதிய காப்பீட்டு மசோதாவைக் கைவிடக் கோரி, திங்கள் கிழமை இன்று இன்சூரன்ஸ் துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதன் காரணமாக, இன்சூரன்ஸ் தொடர்பான பணிகள் முடங்கின. தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெற்ற இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தில், யுனெட்டெட் இந்தியா, நேஷனல் இன்ஸ்யூரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஓரியன்டல் இன்ஸூரன்ஸ், ஜி.ஐ.சி, எல்.ஐ.சி ஆகிய பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று பணிக்கு வராததால், காப்பீட்டுத் தொகை வசூல் உள்ளிட்ட இன்சூரன்ஸ் தொடர்பான அனைத்துப் பணிகளும் முடங்கின. தமிழகத்தில், ஜி.ஐ.சி, எல்.ஐ.சி.யைச் சேர்ந்த ஊழியர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையினைக் கண்டித்து, ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்தனர். மேலும், மண்டல, கிளை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
புதிய மசோதாவுக்கு எதிராக இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சுடுவதே தீர்வெனில் இரு நாடுகளுமே பரஸ்பரம் மீனவர்களைச் சுடுவோமா? : சுஷ்மா கோபம்; ரணில் வருத்தம்
புது தில்லி: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என தான் அளித்த பேட்டிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தாம் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசியதை எடுத்துரைத்தார். “நாம் நம் எல்லைகளைத் தாண்டி வந்து மீன் பிடிக்கும் மீன்வர்களைச் சுடத்தான் போகிறோம் என தீர்மானித்தால், இரு நாடுகளுமே மீன்வர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை கடைப்பிடிப்போமா, ஏனெனில் நம் நாட்டு மீன்வர்கள் மட்டுமே இலங்கை கடல் எல்லைக்குள் புகவில்லை, அவர்களின் மீனவர்களும் நம் எல்லைக்குள் வரத்தான் செய்கிறார்கள். நமக்கான தேவை, சட்டதிட்டங்களை வைத்து ஆராய்வது அல்ல, மனிதாபிமான அடிப்படையிலான இருதரப்பு பேச்சு வார்த்தை மூலமான தீர்வு மட்டுமே!” என்று கூறினார் சுஷ்மா ஸ்வராஜ். முன்னதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தந்திடிவிக்கு அளித்த பேட்டியில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதற்கு தங்களுக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டிக்கு தமிழக தலைவர்களும், மீனவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தப் பிரச்சனை குறித்து இன்று விளக்கமளித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்திய மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்குக் கடமை உண்டு. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் ஒரு மீனவர்கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இந்தியாவில் இலங்கை மீனவர்களோ இலங்கையில் இந்திய மீனவர்களோ இப்போது சிறையில் இல்லை. பிரதமர் மோடி இலங்கை செல்வதால் இரு தரப்பு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று பேட்டியளித்தது குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேசினேன். அப்போது, தமிழக மீனவர்கள் குறித்து தாம் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என ரணில் வருத்தம் தெரிவித்தார்” என்று சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டார். மோடி இலங்கை செல்லும் நிலையில் இரு தரப்பை உறவு மேம்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் என தாம் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக அவர் விளக்கம் அளித்தார்.
தினமும் ஒரு காதல் கெஞ்சல் வீடியோ: 365வது நாளில் காதலியிடம் காட்டி “கணக்கு பண்ணிய” காதலன்!
டீன் ஸ்மித். ஒவ்வொரு நாளும் ஒரு காதல் அறிவிப்பு வீடியோவை எடுத்துவைத்தார் தனது காதலி ஜெனீஃபர் கெஸெலுக்காக. அந்த வீடியோவில், ஒவ்வொரு நாளும், தன் காதலியைப் பற்றிச் சொல்லி, தான் அவளைக் காதலிக்கும் விதத்தைச் சொல்லி, நீ என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டு ஒரு வெள்ளை அட்டையை அந்த வீடியோ முன் காட்டி பதிவு செய்து வைத்தார். தனது எஞ்சிய வாழ்நாளை எல்லாம் ஒட்டு மொத்தமாக அவளுடனேயே கழிக்க விரும்புவதாக காதல் செய்தி அதில் சொன்னார். ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியாக எழுதி, என்னை மணந்து கொள்வாயா என்று கேட்டு 365 நாளையும் ஓட்டி அதை ஒட்டுமொத்த ஒரு வீடியோ ஆக்கினார். தான் பல் துலக்கும்போதும், நாயுடன் கொஞ்சும்போதும், துணிகளை மெஷினில் துவைக்கும்போதும் என அவருடைய அன்றாடப் பணிகளை எல்லாம் அந்த வீடியோவில் பதிவு செய்தார். அந்த வீடியோக் காட்சியின் கடைசியில் இப்போது நீ திரும்பிப் பார் என முடித்து வைத்தார். அன்று கெஸெலின் பிறந்த நாள். டீன் ஸ்மித்தும் ஜெனிஃபரும் நீண்டகாலம் பழகி வந்திருந்தனர். ஆனாலும், அவருக்கு என்னவோ ஒரு ஆண்டாகக் காதல் கிளர்ந்தெழுந்தது. ஆனால் அதை உடனே கேட்டுவிட அவருக்கு மனதில்லை. ஓர் ஆண்டு தினமும் அவரை தன் முன் நிற்பது போல் நினைத்து கற்பனை செய்து கொண்டு, காதலை வெளிப்படுத்தி தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்க முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு நாளும் “நீ என்னை மணந்து கொள்வாயா? உன்னுடன் இறுதிவரை வாழ விரும்புகிறேன்” என்பது போன்ற வாசகங்களை அட்டையில் அன்றைய தேதியுடன் எழுதி வீடியோவாக பதிவு செய்து கொண்டே வந்தார். 365 நாட்களுக்கும் இது ரகசியமாகத் தொடர்ந்தது. அன்று ஜெனிஃபரின் பிறந்த நாள். அந்த வீடியோவை ஜெனிஃபர் கடற்கரையில் தனியாக அமர்ந்து பார்க்கும்படி செய்தார் ஸ்மித். அப்படி அவர் பார்த்து முடித்த பின்னர், அவருக்குப் பின்னால் அட்டையில், “என்னை மணந்து கொள் என்ற வாசகத்துடன் ஸ்மித் தயாராக நின்று கொண்டிருந்தார். ஸ்மித்தின் வீடியோ ப்ரொபோசலைப் பார்த்து முடித்ததும், ஜெனிஃபருக்கு உணர்ச்சி பொங்கியது. காதல் வசப்பட்ட நிலையில் அந்த வீடியோவில் ஸ்மித் சொன்னபடி திரும்பிப் பார்த்தவருக்கு, அங்கே ஸ்மித் கடற்கரை மணலில் நின்றிருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவர் அருகில் சென்றார் ஜெனிஃபர். ஸ்மித் கடற்கரை மணலில் மண்டியிட்டு தனது காதலைச் சொன்னார். அடுத்த கணமே ஜெனிபர் கண்கள் கலங்கின. அவரின் தந்தை, வளர்ப்புத் தாய் என கூடியிருந்த நட்பு வட்டம் கைத்தட்டி வாழ்த்து சொன்னது. இந்த வீடியோ முறை மேரேஜ் ப்ரொபோசல் – இந்த 2015ம் ஆண்டின் மிகச் சிறந்த மேரேஜ் ப்ரோபோசல் என்ற பெயரை வாங்கியிருக்கிறது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=ECRqF4BHkGk”]
மக்களவையில் எதிரொலித்த நாகா. கைதி படுகொலைச் சம்பவம்
புது தில்லி: நாகாலாந்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்த ஃபரீத்கான் என்ற நபர், நாகா. பழங்குடி மக்களால் சிறையில் இருந்து இழுத்து வரப்பட்டு, அடித்தே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று மக்களவையில் பேசப்பட்டது. இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறியதாக நாகாலாந்து மாநில அரசு மீது காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். மக்களவையில் இன்று பூஜ்ய நேரத்தில் இப்பிரச்னையை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் கௌரவ் கோகாய், “பழங்குடியினப் பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட கான் குற்றம் செய்தாரா? இல்லையா? என்பது பற்றி நாகாலாந்து அரசு அறிக்கை வெளியிடவில்லை. அவர் நீதிமன்றத்தாலும் தண்டிக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது அவருக்கு விசாரணையை எதிர்கொள்ள உரிமை உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை பாதுகாக்க மத்திய பாதுகாப்பு படை தவறிவிட்டது” என்றார். வடகிழக்குப் பகுதி மக்கள் மீதான இனப் பாகுபாட்டை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. சுஷ்மித் தேவ் வலியுறுத்தினார்.
தன் அரசுத் திட்டங்களை நிதிஷ் ரத்து செய்ததை எதிர்த்து மாஞ்சி உண்ணாவிரதம்
பாட்னா: தன் அரசுத் திட்டங்களை தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் ரத்து செய்ததைக் கண்டித்து முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உண்ணாவிரதம் மேற்கொண்டார். பீகாரில் ஜித்தன் ராம் மாஞ்சி முதலமைச்சராக இருந்த போது, 34 புதிய சலுகைகளை அறிவித்து இருந்தார். நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும், மாஞ்சி அரசு ஒப்புதல் அளித்திருந்த 34 சலுகை திட்டங்களையும் ரத்து செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜிதன் ராம் மாஞ்சி, பாட்னா காந்தி மைதானத்தில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்களும் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாஞ்சியின் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆம் ஆத்மி கட்சியினர் போல் காந்தி குல்லாவுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாஞ்சி அரசு எடுத்த முடிவுகளில் விதிமுறைகள் சரிவர பின்பற்றப் படவில்லை என்று நிபுணர்கள் கூறியதாலேயே அந்தத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக நிதிஷ்குமார் கூறியுள்ளார். அதே நேரம், முதல்வர் நிதிஷ் குமார் மாநிலத்தின் நிதியை தேவையில்லாமல் ஆடம்பரச் செலவு செய்வதாகவும், வளர்ச்சிக்காக நிதியைப் பயன்படுத்துவதில்லை என்றும் மாஞ்சி குற்றம் சாட்டியுள்ளார்.
மாத்திரைகள் மட்டுமா காலாவதியாகின்றன. சிலிண்டருக்கே காலாவதி தேதி உள்ளது. இதோ உங்கள் பார்வைக்கு
காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப்பாருங்கள். அப்புறம் வாங்குங்கள். ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date – ஐ எப்படி கண்டுபிடிப்பது? படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர்(alphabets letter) மாதத்தின் பெயரைக்குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது. A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான். A – மார்ச் -முதல் காலாண்டு(1st quarter) B – ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter) C – செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter) D – டிசம்பர் – நான்காம் காலாண்டு(4th quarter) உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்…!”
நெல்லை ஆட்சியரகத்தில் தம்பதி உள்பட 3 பேர் தற்கொலை முயற்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தம்பதியர் உள்ளிட்ட மூவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று காலை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் கருணாகரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப்பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, மனு கொடுக்க வந்திருந்த நெல்லை சந்திப்பு சித்தரங்கன் தெருவைச் சேர்ந்த தொழிலாளி மாணிக்கம், அவரது மனைவி அனிதா ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே திடீரென தாங்கள் வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தீவைக்க முயன்றனர். அப்போது விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்த தீப்பெட்டியைத் தாவிப் பிடித்து அகற்றினர். மண்ணெண்ணெய் கேனும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தங்களது சொத்தையும், வீட்டையும் சிலர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், தன்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸாரிடம் மன்றாடினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது, மேலப்பாளையம் பங்காளப்பா 3ஆம் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவரும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொள்ள முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் “என்னிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வருகிறது. அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதையடுத்து மூவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மூவர் இன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட நிதி
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியது: இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதில், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நல்ல குடிநீர் வசதி செய்து கொடுத்தல், கழிப்பறை வசதி ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித்திறன்களை வளர்த்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்காகவும் ஆண்டு விழா நடத்த வேண்டும். மேலும், பள்ளி ஆண்டு விழாவின்போது, மாணவர்களுக்கு கலை தொடர்பான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவேண்டும். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், கவுன்சிலர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கல்வியாளர்களை பங்குபெற செய்ய வேண்டும். ஆண்டு விழா நடத்துவதற்காக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ. 2,250, 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ. 2,450 என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இத்தொகையினை தொடர்புடைய ஒன்றிய கல்வி அலுவலகத்தில் உடனடியாகப் பெற்று, பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களை இனி இஷ்டத்துக்கு அழைத்துச் செல்ல முடியாது: கல்வித்துறை அதிரடி
சுற்றுலாவுக்கு செல்லும் பொழுது பல கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முன்பெல்லாம், பள்ளிகள் தாங்கள் நினைக்கும் நேரத்தில் சுற்றுலாவுக்கு நேரத்தை ஒதுக்கி மாணவர்களை அழைத்துச் சென்று வந்தன. ஆனால், பல சமயங்களில் சுற்றுலாவுக்கு செல்லும் இடத்தி்ல் விரும்பத் தகாத சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து பல கட்டுப்பாடுகளை விதித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு அம்சமாக தண்ணீர் உள்ள இடங்களுக்கு (அதாவது டேம்) மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தியுள்ள கல்வித்துறை. சுற்றுலா செல்வதற்கு முன்பாக மாவட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். மேலும். பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்ற பின்னரே மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

