சுடுவதே தீர்வெனில் இரு நாடுகளுமே பரஸ்பரம் மீனவர்களைச் சுடுவோமா? : சுஷ்மா கோபம்; ரணில் வருத்தம்

Published:

sushma-swaraj12 புது தில்லி: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம் என தான் அளித்த பேட்டிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தாம் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசியதை எடுத்துரைத்தார். “நாம் நம் எல்லைகளைத் தாண்டி வந்து மீன் பிடிக்கும் மீன்வர்களைச் சுடத்தான் போகிறோம் என தீர்மானித்தால், இரு நாடுகளுமே மீன்வர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை கடைப்பிடிப்போமா, ஏனெனில் நம் நாட்டு மீன்வர்கள் மட்டுமே இலங்கை கடல் எல்லைக்குள் புகவில்லை, அவர்களின் மீனவர்களும் நம் எல்லைக்குள் வரத்தான் செய்கிறார்கள். நமக்கான தேவை, சட்டதிட்டங்களை வைத்து ஆராய்வது அல்ல, மனிதாபிமான அடிப்படையிலான இருதரப்பு பேச்சு வார்த்தை மூலமான தீர்வு மட்டுமே!” என்று கூறினார் சுஷ்மா ஸ்வராஜ். முன்னதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தந்திடிவிக்கு அளித்த பேட்டியில் எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதற்கு தங்களுக்கு சட்டம் அனுமதி அளித்துள்ளது என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டிக்கு தமிழக தலைவர்களும், மீனவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தப் பிரச்சனை குறித்து இன்று விளக்கமளித்த சுஷ்மா ஸ்வராஜ், இந்திய மீனவர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்குக் கடமை உண்டு. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் ஒரு மீனவர்கூட சுட்டுக் கொல்லப்படவில்லை. இந்தியாவில் இலங்கை மீனவர்களோ இலங்கையில் இந்திய மீனவர்களோ இப்போது சிறையில் இல்லை. பிரதமர் மோடி இலங்கை செல்வதால் இரு தரப்பு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் எல்லை தாண்டினால் சுடுவோம் என்று பேட்டியளித்தது குறித்து ரணிலிடம் நீண்ட நேரம் பேசினேன். அப்போது, தமிழக மீனவர்கள் குறித்து தாம் அவ்வாறு கூறியிருக்கக் கூடாது என ரணில் வருத்தம் தெரிவித்தார்” என்று சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டார். மோடி இலங்கை செல்லும் நிலையில் இரு தரப்பை உறவு மேம்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும் என தாம் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாக அவர் விளக்கம் அளித்தார்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

Related articles

Recent articles

spot_img