புது தில்லி: தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தின் வயது வரம்பை அதிகரிகப்பது குறித்து மத்திய அரசு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய அமலாக்கக் குழு குறுகிய கால சேவைகளுக்கான ஓய்வூதிய வயதை 50 ஆண்டுகளில் இருந்து 55 ஆண்டுகளாக அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது. தொழிலாளர் வைப்பு நிதியின் மத்திய அறக்கட்டளைகள் வாரியம் இதனை பரிசீலனை செய்து வருகிறது. இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் குறுகிய கால சேவையினால் குறையும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
நாளை குஜராத் வருகிறது சூரிய சக்தியால் இயங்கும் விமானம்!
அபு தாபி: உலகம் முழுவதையும் சுற்றி வர முடியும் என்று காட்டுவதற்காக சாதனை முயற்சியாகத் தொடங்கப்பட்ட சூரிய சக்தியால் இயங்கும் விமானத்தின் உலக சுற்றுப் பயணத்தில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அபு தாபியில் இருந்து கிளம்பும் விமானம் நாளை குஜராத்துக்கு வருகிறது. சூரிய சக்தியில் இயங்கும் விமானம் தனது முதல் உலக சுற்றுப் பயணத்தை அபுதாபியிலிருந்து இன்று அதிகாலை தொடங்கியது. அங்கிருந்து ஓமன் சென்றுவிட்டு, நாளை இந்தியா வருகிறது. சுமார் 5 மாதங்கள் சூரிய சக்தியைக் கொண்டே உலகைச் சுற்றும் இந்த விமானம், தனது பயணத்தில் கிட்டத்தட்ட 22,000 மைல் தொலைவைக் கடக்கிறது. இந்த விமானத்தில் ஒரு சொட்டுக் கூட விமான எரிபொருள் பயன்படுத்தப் படவில்லை. இதில் ஒவ்வொரு பைலட்டும் தனியாக ஐந்து நாட்கள் பயணிக்கின்றனர். பயணத்தை தொய்வின்றித் தொடர யோகா, மனவலிமை ஏற்படுத்தும் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு இடத்தைக் கடந்த பின்னும் 20 நிமிடம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த விமானம் பறக்கும்போது விமானியால் அதன் காக்பிட்டில் எழுந்து நிற்க முடியாது. கழிவறை செல்ல வேண்டுமானால், இருக்கையை தள்ளிவிட்டுச் செல்ல முடியும். இந்த விமானத்தில் பயணிக்கும்போது, விமானிகளின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதற்கு தரையிலுள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தகவல் தொடர்பு தொடர்ந்து இருக்க வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று இந்த விமானம் புறப்படும் நேரத்தில், காக்பிட்டில் அமர்ந்திருந்த விமானி போர்ச்பெர்க்குக்கு மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் ஆன்லைனில் பேசி வாழ்த்து தெரிவித்தார். நாளை இந்தியா வரும் இந்த விமானம் பின்னர் இங்கிருந்து பர்மா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும். பின்னர், ஹவாய் தீவுகள், அமெரிக்காவில் உள்ள போனிக்ஸ், அரிசோனா மற்றும் நியூயார்க் என சுற்றிவிட்டு, அட்லான்டிக் பெருங்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் செய்து இறுதியாக அபுதாபிக்குத் திரும்பும்.
ஒட்டகத்தை மை டியர் என்றார் மனைவி: உன்னுடன் டைவர்ஸ் என்றார் கணவர்!
ரியாத்: சௌதி அரேபியாவில், தன்னைவிட ஒட்டகத்தின் மீது அதிக அன்பு கொண்டிருந்ததால், மனைவி ஒருவரை அவரது கணவர் விவாகரத்து செய்துள்ளார். சவுதி தலைநகர் ரியாத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மனைவியின் தந்தை வீட்டிற்கு அவருடன் சென்றார் கணவர். அப்போது அவளது தந்தை வளர்த்து வந்த அல் வலீஃப் என்ற ஒட்டகத்தைப் பார்த்த அந்தப் பெண், அதனிடம் தனது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தினாள். மேலும் இந்த ஒட்டகம் தான் எனது டியர், ஸ்வீட்ஹார்ட் என அவள் தன் கணவனிடம் கூறியுள்ளார். இதைஎல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கணவர், அங்கிருந்து தனது வீட்டுக்குத் திரும்பும்போது, மீண்டும் அந்த ஒட்டகத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். அப்போது, அந்தப் பெண் தனது கணவரிடம் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்தக் கணவர், அவளை விவாகரத்து செய்வதாக அறிவித்து, அவ்வாறே செய்துள்ளார். இந்தச் செய்தி இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 ரன்னில் வெற்றி: காலிறுதிக்கு தகுதி பெற்ற வங்கதேசம்; தொடரும் இங்கிலாந்தின் சோகம்
உலகக் கோப்பை போட்டிகளின் 33 வது லீக் சுற்று ஆட்டத்தில் இன்று அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில், 15 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்க தேச அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இங்கிலாந்தின் சோகம் தொடர்கிறது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து களம் இறங்கிய வங்க தேச அணி, துவக்கத்தில் இரு விக்கெட்களை தலா 2 ரன்களில் பறிகொடுத்த போதும், முகமத்துல்லாவின் பொறுப்பான ஆட்டம், சர்க்காரின் நிலைத்த ஆட்டத்தால் ரன் குவித்தது. சர்க்கார் 40 ரன் எடுத்தார். முகமதுல்லா 103 ரன் குவித்தார். முஷ்பிகுர் ரஹிம் 89 ரன் எடுத்தார். வங்க தேச அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 275 ரன் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 276 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கத்தில் சரியாக விளையாடியபோதும் பின்வரிசை சரிந்தது. அலி 19 ரன் எடுத்தார். பெல் 63 ரன் எடுத்தார். ஹேல்ஸ், ரூட் தலா 27ம், 29ம் எடுத்தனர். மோர்கன் டக் அவுட் ஆனார். டெய்லர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தது, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. இருப்பினும் பட்லர் 65 ரன் எடுத்தும், வோகர்ஸ் 42 ரன் எடுத்தும், அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஆயினும் ஜோர்டன், ப்ராட், அன்டெர்சன் ஆகியோர், 0,9,0 ரன்களில் ஆட்டம் இழந்து, அணியின் தோல்வியை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து அணி 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 260 ரன்கள் எடுத்து, 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டி, இங்கிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டியாக இருந்தது. அதில் தோற்று வெளியேறியது, இங்கிலாந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் தோற்றதன் மூலம் இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை போட்டி லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.
நாட்டை விட்டு வெளியேற கோத்தபய ராஜபட்சவுக்கு தடை
கொழும்பு: இலங்கை முன்னாள் பாதுகாப்புச் செயலரும், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரரும் ஆன கோத்தபய ராஜபட்ச, இலங்கையை விட்டு வெளியேற காலி நீதித்துறை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காலி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் குவியல் தொடர்பான விசாரணைகளின்போது, நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த மிதக்கும் ஆயுதக் குவியலில் இருந்த ஆயுதங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய இன்னொரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுதங்களும் முன்னர் மகிந்த ராஜபட்ச அரசின் காலத்தில் அச்சுறுத்தும் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக, போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், கோத்தபய ராஜபட்ச, இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன்? – அன்பழகனுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புது தில்லி: சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் சூழல் வரை காத்திருந்தது ஏன் என்று மனுதாரர் திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கு கேள்வி எழுப்பியதுடன், சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஆஜராகி வரும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும் என தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணையில், ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பவானிசிங், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ஆஜராக முடியாது என்றும், அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்துகொள்வதால் அவரை அரசு வழக்கறிஞராகத் தொடர அனுமதிக்கக்கூடாது என்றும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஆனால் இந்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதே கோரிக்கையை முன்வைத்து, க.அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மனு மீதான விசாரணை இன்று (மார்ச் 9) நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன் படி இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வுக்கு வந்தது. அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், பவானிசிங்கை நீக்கக் கோரும் மனு தொடர்பாக கர்நாடக அரசு மற்றும் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதே நேரம், அன்பழகன் தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் சூழல் நெருங்கும்வரை காத்திருந்தது ஏன் என மனுதாரரிடம் இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.
போராடினால் நிர்பயா கதிதான்!: ஸ்டார் ஹோட்டல் ஊழியரை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த துயரம்
லூதியானா: மகளிர் தினத்தில், பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் இரண்டு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் பணிபுரியும் ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் மகளிர் தினத்தன்று அதிகாலை 1.15க்கு தோழி வீட்டுக்குச் சென்றுவிட்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை உள்ளே இழுத்துப் போட்டுச் சென்றது. காரில் வந்த நபர்கள் காரின் நம்பர் பிளேட்டை கருப்புத் துணியால் மறைத்து வைத்திருந்தனராம். அவர்கள் அந்தக் காரை ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறமான ஓர் இடத்துக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். அங்கே அந்தப் பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு அவரை இருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். காரை ஓட்டி வந்த நபர் அந்தப் பெண்ணைக் கடித்துள்ளார். பின்னர் அந்த நபர்கள் அவரை ஹாஸ்டல் அருகே கொண்டுவந்து விட்டு, செல்போனில் இருந்த சிம் கார்டை எடுத்துக் கொண்டு அவரின் செல்போனை கீழே வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இதன் பின்னர், அந்தப் பெண்ணின் தோழிகள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து, போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். போலீஸாரிடம் அந்தப் பெண் கூறுகையில், என்னைக் கடத்தியவர்கள் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தவர்கள் போன்று இந்தியில் பேசினர். முந்தைய நாள்தான் வேறொரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக பெருமையாக அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். எதிர்த்துப் போராடினால் நிர்பயா கதிதான் உனக்கும் என்று என்னை மிரட்டினர். அவர்கள் இருவரின் பெயர் மோனு, விக்கி என்று அவர்கள் பேசிக் கொண்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா குறித்த ஆவணப் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், போராடினால் நிர்பயா கதிதான் உனக்கும் என்று அந்த நபர்கள் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்த கருத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பையன் நான்: அழுக்குப் பையனாகக் காட்டிவிட்டார்கள்- நடிகர் ஹரிஷ்
எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படத்தின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படுகிறது என்பார் சத்யஜித்ரே..அந்த வகையில் படத்தொகுப்பு அறைதான் ஒரு திரைப்படம் உருவாகும் கருவறை எனலாம். இப்படி படங்கள் உருவெடுக்கும் எடிட்டிங் ரூமே ஆசானாக,குருவாக மாறி பயிற்சி தந்து ஒரு நடிகரை உருவாக்கியிருக்கிறது என்றால் அது வித்தியாசமான ஒன்றுதானே..? அப்படி உருவாகியுள்ள நடிகர்தான் ஹரீஷ். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ஆஸ்தான படத்தொகுப்பாளர்கள் எடிட்டர் ‘கணேஷ் குமார் ‘இரட்டையர்.சுமார் 300 படங்கள் இவர்களது எடிட்டிங் மேஜையில் உருவெடுத்துள்ளன. இவர்களில் ஒருவரான குமாரின் மகன்தான் இந்த நடிகர் ஹரீஷ். பத்து படங்களில் நடித்துவிட்ட போதிலும் இன்னமும் புகழ் மறைவுப் பிரதேசத்திலேயே இருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசியபோது… எடிட்டர் மகன் எடிட்டர் ஆகாமல் நடிகரா? ஏனிந்த மாற்றம்? .. எனக்கு சிறுவயதிலிருந்தே சினிமா மீதுதான் ஆர்வம். அதிலும் நடிப்பில் ஈடுபாடு உண்டு. அப்பாவும் என்னை ஒரு நடிகனாக்கவே விரும்பினார். அப்பா எடிட் செய்யும் போது நானும் கூடவே இருப்பேன். ஒரு உதவியாளனாக அருகில் இருந்து எல்லாவற்றையும் கவனிப்பேன். அப்படி எடிட்டிங் ரூம் எனக்கு பயிற்சி அறையானது. எடிட்டிங் ரூம் உங்களுக்கு எப்படி பயிற்சி அறையானது? படப்பிடிப்பில் எடுத்து வரும் பிலிம் ரோல்களில், ரீல்களில் சரியான ஷாட்களையும் சரியில்லாத ஷாட்களையும் எடிட்டிங் ரூமில்தான் பிரித்து எடுப்பார்கள். ஏன் அந்த ஷாட் ஓகே ஆனது ஏன் அது ஓகே ஆகவில்லை என்பதற்கு காரணம் சொல்வார்கள். நிராகரிக்கப்படும் ஷாட்களிலிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். எதனால் அவை ஒதுக்கப் படுகின்றன என்று தெரியும்;காரணம் புரியும். ஓகே ஆனவை எதனால் எடுக்கப் படுகின்றன என்றெல்லாம் நிறை குறைகளை அறிய வாய்ப்பாக அமைந்தது.. ‘சஹானா’ டிவி தொடர் சிந்துபைரவி பாகம்- 2 என்று வந்தது. அதன் டைட்டில் பாடலை அப்பாவுடன் நானும் கூட இருந்துதான் எடிட் செய்தோம் நடிகனாக அங்கு கற்றவை என்னென்ன ? நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரேமில் நடிகர்கள் பொருந்துவது, ஒளி அமைப்பு எப்படி , பின்னணி எப்படி இருக்கவேண்டும் என்பவை கூட புரியும்.இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும் ஓகே ஆகாது. இவை எல்லாம் ஒரு நடிகருக்கு பெரிய பாடங்கள்.ஒரு நடிகரின் உடல்மொழி எப்படி இருக்கவேண்டும். குளோஸ் அப் ஷாட் எப்படி இருக்கவேண்டும். லாங்.ஷாட்,மிடில்.ஷாட் எல்லாம் எப்படி இருக்கவேண்டும். ப்ரேமில் எப்படி வர வேண்டும். எப்படி தோன்ற வேண்டும் என எல்லாம் தெரிந்தது அந்தப் படத்தில் நடித்த நடிகருக்குக்கூட தனது குறையுள்ள ஷாட்களை பார்க்க வாய்ப்பில்லை. எனக்கு அப்படி பல படங்கள் பல நடிகர்கள் நடித்த படங்களில் குறையுள்ள ஷாட்களை பார்க்க வாய்ப்புகள் கிடைத்தன.கமலின் தீவிர ரசிகன் நான். அவர் நடிப்பைப் பார்த்து வியப்பவன். படங்களில் கமல்சார் முதல் பலரிடம் இப்படி பாடம் படித்தேன். எப்படி நடிப்பை படிப்படியாக மேம்படுத்தி நடிக்கிறார்கள். என்பதைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இப்படி விஜயா, ஏவிஎம்., பிரசாத் போன்ற எடிட்டிங் ரூம்களே என் குருகுலம் போல இருந்தன.படப்பிடிப்பில் அருகிலிருந்தால் கூட இதைக் கற்றுக் கொள்வது சிரமம்..ஆகவே எடிட்டிங் டேபிளே என் பிலிம் இன்ஸ்டிடியூட்டாக இருந்தது. நடிகருக்கென்று வேறு என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொண்டீர்கள்? சினிமாதான் நம் வாழ்க்கை என்று முடிவானதும் அதற்கு என்னவெல்லாம் தேவையோ எல்லாவற்றையும் கற்றேன். கலா மாஸ்டரிடம் 8 ஆண்டுகள் சினிமா நடனம் கற்றேன். கேரளா சென்று களரி பயிற்சி 5 ஆண்டுகள் பெற்றேன். ஸ்வராலயாவில் இரண்டரை ஆண்டுகள் கிளாசிக்கல் டான்ஸ் கற்றேன். இப்படி என்னை தகுதியுடையவனாக்கிக் கொண்டேன். சினிமாவில் முதல் பிரவேசம் எப்போது.? கஸ்தூரி ராஜாதான் என்னை அறிமுகப்படுத்தினார். ‘இது காதல் வரும் பருவம்’ என்பதுதான் என் முதல் படம். அதற்குமுன் கொஞ்சம் என் குடும்பம் பற்றி சொல்ல வேண்டும். அப்பா எதிர்பாராத விதமான 2003ல் திடீரென்று இறந்துவிட்டார். நான்தான் வீட்டில் மூத்த பையன். எனக்கு ஒரு தம்பி. அப்பா மறைந்ததும் கலங்கி விட்டேன். நடிப்பு ஆர்வத்தில் விஸ்காம் படித்தேன். முடிக்க வில்லை. அவர் மறைவுக்குப்பின் ‘மின்பிம்பங்களி’ல் எடிட்டிங் உதவியாளனாக வேலைக்குப் போனேன். நடிப்பார்வம் என்னை பணியாற்ற விடவில்லை.ஒரே ஆண்டில் வெளியே வந்து விட்டேன். பிறகு நடித்த படங்கள்? நான் சிறுவனாக இருந்தபோதே என்னைக் கூப்பிட்டு வசந்த் சார் ‘கேளடி கண்மணி’ பாடல் காட்சியில் ஆடவிட்டார். குட்டிப்பையனாக வருவேன். சினிமாவில் முதல் தோற்றம் என்றால் அதுதான். வளர்ந்ததும் கஸ்தூரிராஜாதான் என்னை அறிமுகப்படுத்தினார். நான் நடித்த 2வது படம் ‘புகைப்படம்’ .இதில்தான் பிரியா ஆனந்தும் அறிமுகமாகியிருப்பார். எனக்கு ஜோடி அவர்தான். கொடைக்கானலில் எடுக்கப் பட்ட படம். ராஜேஷ்லிங்கம்தான் இயக்குநர்.. அடுத்து 3 வதுபடமாக ‘மாத்தியோசி’ ,நந்தா பெரியசாமி இயக்கிய படம். ஷம்மு என் ஜோடி .இப்படத்தில் மதுரை பையனாக வருவேன். மதுரைப் பின்னணிக் கதை. காட்டுப் பயல்போல வருவேன். சென்னை பையனான என்னை அழுக்குப் பையனாக காட்டிய படம். முழுக்க முழுக்க வேறு ஒரு பரிமாணம்; வேறு ஒரு அனுபவம். இப்படத்தின் டபுள் பாசிட்டிவ் பார்த்துவிட்டு வந்த வாய்ப்புதான் ‘கோரிப்பாளையம்’ . அண்ணன் ராசு மதுரவன் இயக்கியிருந்தார். அவரே அடுத்த படமான ‘முத்துக்கு முத்தாக’ வாய்ப்பும் கொடுத்தார். அழுக்கு பையன் இமேஜை உடைத்து கிராமத்திலிருந்து சென்னை வந்து ஐடியில் வேலை பார்க்கும் பையனாக மாற்றினார். நான் நட்ராஜ், வீரசமர், விக்ராந்த், பிரகாஷ் என 5 பேர் நடித்தோம்.இது 5 சகோதரர்களின் கதை. பிறகு வந்த படம் ‘நேற்று இன்று’ பத்மா மகன் கொடுத்த வாய்ப்பு. படம் கேரளாவின் அச்சன் கோவில் காட்டில் எடுக்கப்பட்டது. பிரசன்னா, விமல். ரிச்சர்ட், நாடோடிகள் பரணி என பலருடன் நடிக்கும் வாய்ப்பு.என் ஜோடி அருந்ததி.ஜாலியான பிக்னிக் போய்விட்டு வந்த உணர்வைத் தந்த படம் அது. அடுத்ததாக விக்ரமன் சார் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் நடிகர் ஹரீஷாகவே வருவேன். சின்ன வேடம்தான். ‘காதல் 2014’ எனது எட்டாவது படம் சேரன் உதவியாளர் சுகந்தன் இயக்கியபடம். டெல்லி ரேப்பை மையப் படுத்திய கதை. கேபியின் ஆஸ்தான எடிட்டர் அப்பா. அந்த வகையில் உங்கள் அனுபவம்? கேபி சார், வஸந்த் சார், டிபி கஜேந்திரன்சார், சரண்சார் போன்றோருக்கு அப்பாதான் எடிட்டர். கேபிசார் அப்பாவை தான் ஒரு டைரக்டர் அவர் ஒரு எடிட்டர் என்று தள்ளி வைத்துப் பார்த்ததில்லை. தன் மகனைப் போலவே பார்த்தார். தந்தையைப் போலவே பழகினார். . அப்பாவை தன் கூடவே இருக்கச் சொல்வார். தன்னுடன் வந்து விடச் சொல்வார்.என்மீதும் அவருக்குப் பாசம் உண்டு அப்படிப்பட்ட கேபி சாரிடம் நான் நடிக்க இருப்பதைக் கூறி என் புகைப் படங்களைக் காட்டினேன். ‘ஏன்டா.. எடிட்டர் ஆகலையா.. ஆக்டர் ஆகப் போறியா?’ என்றார்.. திரைக்குப்பின் இருப்பதைவிட திரைக்கு முன் இருக்க விருப்பம் என்றேன். ‘ அப்படியா நல்லா பேசுறடா பொழச்சுப்படா என்று வாழ்த்தினார். இப்போது நடிப்பவை? ‘வெத்துவேட்டு’ என் 9வது படம்.இதில் நான் தனி நாயகனாக நடித்திருக்கிறேன் மணிபாரதி இயக்கியுள்ளார். திருப்பூர் ராமசாமி,சாவணமாணிக்கம், குமார், என மூன்று அருமையான தயாரிப்பாளர்கள். மாளவிகாமேனன்தான் என் ஜோடி. இப்பட அனுபவம் மறக்க முடியாதது. 5 பாடல்கள். தாஜ்நூர் இசையில் கலக்கியுள்ளார். திருச்சி பின்னணியில் நடக்கும் கதை. இந்தப்படத்தில் பல்வேறு பட்ட நடிகர்கள்,நடிகைகள் 22 பேருடன் நடித்தது மறக்க முடியாதது.இப்படம் மார்ச்சில் வெளிவரவுள்ளது. இது குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருக்கும். என் பத்தாவது படம் ‘இறையான்’. பத்ரகாளியம்மன் பிலிம் பேக்டரி சார்பில் தமிழ்க்கம்பன் தயாரிக்கிறார்.. இவர் இலங்கைத் தமிழர் .இயக்குபவர் சரவணன் பெரியசாமி. இந்தப்படம் நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக அமையும். அடுத்து யாசின் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்கிறேன். படப்பிடிப்பு தொடங்கி விட்டது.இப்போது தான் எனக்குத் திருமணம் நிச்சய மாகியுள்ளது. நடந்தவை போகட்டும்..இனி எல்லாம் நலமே நடக்கும். மனைவி வரும் நேரம் எப்படி உள்ளது? நல்ல அறிகுறிகள் தென்படுகின்றன. மனைவி வரும் நேரம் நம்பிக்கை கூடி வருகிறது. அவர் பெயர் அபிநயா, அவர் ஒரு டாக்டர். என் நண்பனின் வீட்டு நிகழ்ச்சியில் சந்தித்தோம். புரிந்து கொண்டோம். அபிநயா குடும்பமே டாக்டர் குடும்பம். நிறையபேர் உறவினர் டாக்டர்கள்.சினிமாக்காரனா என முதலில் தயங்கினார்கள். பின்னர் புரிந்து கொண்டு சம்மதம் சொன்னார்கள்.ஜூன் 4ல் திருமணம் என்று நிச்சயமாகியுள்ளது. அபிநயாவுக்கு சினிமா பற்றி எல்லாம் தெரிகிறது. பின்னணியிலிருந்து ஊக்கமும் பலமும் கொடுத்து வருகிறார். இதை இப்போது என்னால் உணர முடிகிறது. பத்து படங்களுக்குப் பிறகும் உங்களை வெளியில் தெரியவில்லையே ஏன்? இத்தனை படத்தில் நடித்தும் . என்பெயரை கூகுளில் போட்டால் என் படம் வருவதில்லை.பத்து படங்களும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு அனுபவம்தான்.தோல்விகள் இழப்புகளில் நான் பின்வாங்குவது இல்லை. எல்லாவற்றையும் ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்கிறேன். ‘முயற்சிகள் தவறினாலும் முயற்சிக்கத் தவறக்கூடாது. முயற்சி விதைகளை விதைப்போம். ஒரு நாளில்முளைத்து மரமாகும் .’ இது என் நம்பிக்கை . இத்தனை படங்கள் தோல்விகள் வெளிச்சமில்லாதது குறித்து வருத்தம் உண்டா? அவற்றை எல்லாம் சினிமா கற்க சில தோல்விகள், கேள்விகள் தேவைப்பட்டன என்று பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்கிறேன். முயற்சி செய்ய உழைப்பு வழங்க நான் தயார். காலியான மூளையுடன் படப்பிடிப்பு சென்று இயக்குநரின் கையில் புழங்கும் களிமண்ணாக இருக்க நான் தயாராக இருக்கிறேன்.சினிமாவில் தேடினால்தான் கிடைக்கும் ‘தொட்டு விடும் தூரத்தில்.வெற்றி இல்லை. அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை’ இதை மட்டுமே இப்போது நான் கூற முடியும்.” அழுத்தமாகக் கூறுகிறார். ஹரீஷ்.
ஆற்றில் குளித்தபோது செல்போனில் படம் பிடித்த இளைஞர்: ‘தர்ம அடி’ கொடுத்த மாணவிகள்
ஸ்ரீரங்கப்பட்டினம்: தாங்கள் ஆற்றில் குளித்தபோது, அதைப் படம் எடுத்த இளைஞருக்கு, மாணவிகள் தர்ம அடி கொடுத்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருச் சேர்ந்த மாணவிகள் சிலர் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு சுற்றுலாவாக வந்தனர். அங்குள்ள காவிரி ஆற்றில் அவர்கள் குளித்தனர். இதனை இளைஞர் ஒருவர் மரத்தில் மறைந்திருந்து தனது செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார். ஆற்றில் மாணவி ஒருவர் குளித்துவிட்டு வந்து, மரத்தின் மறைவிடத்தில் உடை மாற்றி இருக்கிறார். அதையும் அவர் செல்போனில் படம் பிடித்து உள்ளார். அப்போது, அதை கவனித்து விட்ட மாணவி. உடனே கூச்சல் போட்டுள்ளார். அவரது கூச்சலைக் கேட்ட கிராம மக்களும் மற்ற மாணவிகளும் ஓடி வந்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் உதவியுடன் ஆபாச படம் எடுத்த அந்த இளைஞரைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கி, செருப்படி கொடுத்து உதைத்துள்ளனர். அதன்பின், அந்த இளைஞர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது அளிக்கப் பட்ட புகாரைப் பெற்று கொண்ட போலீசார், மேலாபுறா கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
ஆவணப் படத்தைப் பார்த்தால் மோடி உண்மையைப் புரிந்து கொள்வார் : லெஸ்லி உட்வின்
லண்டன்: பிரதமர் மோடி குறைந்தது ஒரு மணி நேரம் ஒதுக்கி, ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்தைப் பார்த்தால், உண்மையைப் புரிந்துகொள்வார், என்று கூறியுள்ளார் அந்த ஆவணப் படத்தை இயக்கிய லெஸ்லி உட்வின். தில்லி மருத்துவக் கல்லூரி துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பாலியல் பலாத்காரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி முகேஷ் சிங்கிடம் தில்லி திகார் சிறையில் எடுக்கப்பட்ட பேட்டி, ‘இந்தியாவின் மகள்’ என்ற தலைப்பில் ஆவணப்படமாகியுள்ளது. இதனை இயக்கிய பிரிட்டனைச் சேர்ந்த லெச்லி உட்வினுக்கு இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அந்த ஆவணப் படம் ஒளிபரப்பப் படுவதையும் தடை செய்தது. இந்தியாவின் தடைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்தப் படத்தை இயக்கிய லெஸ்லி உட்வின், பிரதமர் மோடி இந்த ஆவணப் படத்தைப் பார்த்தால் உண்மையைப் புரிந்துகொள்வார் என்று கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினமான நேற்று, லண்டனில் ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படம் ஒளிபரப்பப்பட்டது. இதில் கலந்துகொண்ட லெஸ்லி உட்வின், “உண்மையில் இந்தியாவின் மகள் மூலமாக இந்தியாவுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவே விரும்பினேன். ஆனால் அதை தவறாகப் புரிந்து கொண்டு அப்படத்தை தடை செய்தது நடைமுறைக்கு முரணாக உள்ளது. நிர்பயாவுக்காக ஒட்டுமொத்த நாடும் எப்படி எழுச்சியுடன் போராடியது என்பதையும், இந்தியா புதிய மாற்றத்தின் பாதையில் நடை போடத் தொடங்கியிருப்பதையுமே அப்படத்தில் காட்சிப் படுத்தியுள்ளேன். படத்தை தடை செய்ததன் மூலம் இந்தியா தன்னை தானே சர்வதேச அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளது. பிரதமர் மோடி ஒரு மணி நேரம் தனது நேரத்தை ஒதுக்கி இந்த ஆவணப் படத்தைப் பார்த்தார் என்றால் உண்மையைப் புரிந்து கொள்வார். அவரின் ’பெண் குழந்தைகளைக் காப்போம்’ என்ற இயக்கத்தின் மூலம் சொல்லி வரும் அதே கருத்தைத்தான் நானும் எனது ஆவணப்படத்தில் முன் வைத்துள்ளேன்.” என்று பேசினார்.

