சென்னை: சர்வதேச மகளிர் தினத்தில் இந்தியாவைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஆஸ்திரேலியாவில் கொல்லப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு கவனம் செலுத்தி, ஆஸ்திரேலிய பிரதமருடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம், ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் இந்தியர்கள் பணிபுரிகின்றனர். இப்போது நடந்துள்ள சம்பவம் போல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, அங்கிருக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து இந்திய அரசு தீவிரமாக செயல்பட்டு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று, ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் இந்தியப் பெண் பொறியாளர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. . சிட்னியின் புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மீட்டில் உள்ள பாராமட்டா பூங்காவில் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிரபா அருண் குமார் (வயது 41) கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். இதைக் கண்டு அந்த வழியே சென்ற ஒருவர், அவசர உதவி மையத்துக்கு அளித்த தகவலையடுத்து, வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப் பட்டார். காயம் மிகவும் கொடூரமாக இருந்ததாலும், அவரது உடலில் இருந்து அதிகப்படியாக ரத்தம் வெளியேறி விட்டதாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் கத்தியால் குத்தியவர் யார் என்பது தெரியவில்லை.
இந்தியாவின் மகள் ஆவணப் பட தடையை நீக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்
சென்னை: நிர்பயா – இந்தியாவின் மகள் ஆவணப் படத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நிர்பயா பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து உலகப் புகழ்பெற்ற ஆவணப் பட இயக்குனர் லெஸ்லீ உட்வின் தயாரித்துள்ள ‘இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும். கருத்துரிமையைப் பறிக்கும் போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும் என மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். நிர்பயா சம்பவத்தில் குற்றவாளியாக இருக்கும் முகேஷ் சிங்கின் பேட்டி அந்த வழக்கின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற காரணத்தைச் சொல்லி தடையை மத்திய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது. அது ஏற்புடையதல்ல. அந்த ஆவணப் படத்தில் முகேஷ் சிங்கின் பேட்டி மட்டுமின்றி நிர்பயாவின் பெற்றோர்களது நெஞ்சை உருக்கும் பேட்டிகளும், லீலா சேத், கோபால் சுப்ரமணியம் உள்ளிட்ட சட்ட நிபுணர்களின் பேட்டிகளும் உள்ளன எனத் தெரிகிறது. அந்தப் படத்தைத் தடை செய்தது சரியல்ல என்று ‘எடிட்டர்ஸ் கில்ட்’ உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தானும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்தான் எனக் கூறியிருக்கும் லெஸ்லீ உட்வின் அந்த ஆவணப் படத்தை எடுப்பதற்கு உரிய அதிகாரிகளிடம் எல்லாவிதமான சட்டரீதியான அனுமதியையும் பெற்றிருப்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கியிருக்கிறார். அந்த ஆவணப் படம் உலகமெங்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் பிரச்சனையைப் பேசுவதாக இருக்கிறது என அதைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்கும்போது அதற்குத் தடை விதிப்பது எந்தவகையிலும் நியாயமல்ல. இந்தியாவில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகின்றன என்பதை அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிவரங்களே உறுதிப்படுத்துகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் டெல்லியில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என டெல்லி போலிஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸ்ஸி கூறியிருக்கிறார். 2014ஆம் ஆண்டில் 2,069 கற்பழிப்பு வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு கற்பழிப்புக் குற்றங்கள் நானூறு சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார் கற்பழிப்புகள் மட்டுமின்றி நாடெங்கும் ஆணவக் கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன. அவற்றைத் தடுத்து பெண்கள் கண்ணியத்தோடும் பாதுகாப்போடும் வாழக்கூடிய நாடாக இந்தியாவை உருவாக்குவதே முக்கியம். அதற்குப் பதிலாக இந்தக் கொடுமைகள் குறித்து பேசக்கூடாது எனத் தடை விதிப்பது எல்லாவற்றையும் மூடிமறைத்து அந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறவே ஊக்கமளிக்கும். நிர்பயா வழக்கின் முதன்மைக் குற்றவாளி முகேஷ் சிங்கும், அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்காடும் வழக்கறிஞர்களும் பெண்கள் குறித்து தமது பேட்டிகளில் தெரிவித்துள்ள கருத்துகள் பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் பெண்ணுரிமைக்கு எதிராகப் பேசிவரும் கருத்துகளைப் போலவே உள்ளன. அது அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில்தான் மத்திய அரசு தடை விதித்திருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ‘இந்தியாவின் மகள்’ ஆவணப் படத்துக்கு விதித்திருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு விலக்கிக்கொள்ளவேண்டும். நீதிபதி வர்மா கமிஷன் அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பவானி சாகர் அணை நாளை திறப்பு: ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: பாசனத்துக்காக பவானி சாகர் அணை நாளை திறக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையிலிருந்து அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன் கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்கு மார்ச் 10–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது. இதனால், ஈரோடு மாவட்டம், கோபி செட்டி பாளையம் மற்றும் பவானி வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: அதிமுக அமைச்சர்களின் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் அனைத்து அரசுத்துறைகளிலும், அனைத்து நிலைகளிலும், இலஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. மக்கள் பணிகள் நடைபெறாமல் முடங்கிப் போய் உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற மத்திய அரசு நேரடியாக தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 07.01.2015 அன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு, தீர்மானம் நிறைவேற்றியது. தேமுதிகவின் குற்றச்சாட்டுகள் தற்போது உண்மையாகி வருவதாகவே தெரிகிறது. திருநெல்வேலி வேளாண்மைப் பொறியியல் துறையில் ஓட்டுனர் பணியிடங்களை நியமனம் செய்ததற்கு, அத்துறையின் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியிடம், இத்துறையின் அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இலஞ்சம் கேட்டதாகவும், கடுமையான சொற்களால் அவரை மிரட்டியதாகவும், அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் நேர்மையான அதிகாரி என அப்பகுதியில் நற்பெயர் எடுத்த திருநெல்வேலி வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன் தொடர்ச்சியாகத்தான் அதிமுக கட்சி பதவியில் இருந்தும் வேளாண்மைத்துறை அமைச்சர் பதவியில் இருந்தும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கத்திற்கு வேளாண்மைத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த சி.பி.ஐ.விசாரணை நடத்தக்கோரி சில மாதங்களுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான, ஈரோட்டில் உள்ள இடத்தை விற்பனை செய்வதில் வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனர், வாரியத்தலைவர், மற்றும் துறையின் அமைச்சர் மீது புகார் எழுந்தது. வீடியோ ஆதாரங்களுடன் அந்த இடம் விற்பனை குறித்த சர்ச்சையில் சிக்கிய ஈரோடு வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் பழனிச்சாமி தற்கொலை செய்துகொண்டார். இதில் சம்மந்தப்பட்டவர்கள் யார் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் வீட்டு வசதித்துறையில் CMDA மூலம் கட்டிட அனுமதிக்கு சதுரடிக்கு ரூ.55 முதல் ரூ.100 வரையிலும் மற்றும் DTCP அனுமதிக்கு ஏக்கருக்கு ஏழு இலட்சம் முதல் பத்து இலட்சம் வரை இலஞ்சம் பெறப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் சொல்லப்படுகிறது. இந்தநிலையில் இத்துறையின் அமைச்சருக்கே கூடுதல் பொறுப்பாக வேளாண்மைத்துறையையும் அளித்து இருப்பது வியப்பாக உள்ளது. அவருடைய துறையில் ஏற்கனவே உதவி செயற்பொறியாளர் தற்கொலை செய்துகொண்டதில் எவ்விதபிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டதற்குத்தான் இந்த கூடுதல் பொறுப்போ? இதுதான் அதற்குரிய தகுதியோ என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆவின் பால் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேட்டில் தொடர்புடைய அதிமுகவைச் சேர்ந்த வைத்தியநாதனுக்கும், அத்துறையின் அமைச்சராக இருந்த மாதவரம் வி.மூர்த்திக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லை அவர் நேர்மையானவர் என்றால், எதற்காக அவரிடம் இருந்த பால் வளத்துறை அமைச்சர் பதவி ஏன் பறிக்கப்பட்டது என்ற கேள்வி மக்கள் மத்தியில் இன்றும் இருக்கிறது. இப்பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகள் எதுவுமே யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. செய்தி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி மீது, 2011 சட்டமன்ற தேர்தலில் அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ள சொத்து மதிப்பிற்கும், தற்போது அவரிடம் உள்ள சொத்துக்களின் மதிப்பிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என உயர்நீதிமன்றம் வரை இந்த அமைச்சர் மீது புகார் செய்யப்பட்டது.அதிமுக அரசின் ஒவ்வொரு அமைச்சர் மீதும் இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. இதுகுறித்து கேட்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ விளக்கம் அளிக்க முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும் முன்வருவதில்லை, சம்மந்தப்பட்ட அமைச்சர்களோ வாயே திறப்பதில்லை. தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாக உள்ளார். தவறு செய்கின்ற அமைச்சர்களை தட்டிக்கேட்கும் திராணியும், நேர்மையும் அவருக்கு இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் வெளியே தெரிந்தபின்பும் அமைச்சர்கள் மீது இவர் ஏன் எவ்வித சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை? அமைச்சர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில் இவர் உள்ளாரா? வேறுஏதேனும் மறைமுக நிர்பந்தம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறதா? இந்த ஆட்சி இலஞ்சம், ஊழல், முறைகேடுகளற்ற ஆட்சி என்றால் சி.பி.ஐ.விசாரணைக்கு அதிமுக அரசை உட்படுத்தி, அதில் உள்ள உண்மைகளை பொதுமக்கள் அறியச்செய்ய வேண்டும். மேலும் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும். அவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்தால் தான் இதில் உள்ள உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் என்பதையும் தமிழக மக்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்.
விளையாடும்போது ஆட்டோகிராஃப் போடக்கூடாது: கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ கட்டுப்பாடு
மும்பை: இனி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, வீரர்கள், ரசிகர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடக் கூடாது என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, கிரிக்கெட் வீரர்களிடம் மைதானத்தில் எல்லைக்கோடின் அருகில் இருக்கும் ரசிகர்கள் ஆட்டோகிராப் வாங்குவது வெகு சாதாரணம். ஆனால் இனி அவ்வாறு ஆட்டோகிராப் வாங்க முடியாது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் மூத்த விசாரணை அதிகாரி கே. எஸ். மாதவன் கூறுகையில், வீரர்கள் ஐபிஎல், போட்டிகளில் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் சூதாட்டத்துக்கு வழி வகுக்கும் என்றார்.
பண ஸ்பரிசம் (பணத்தின் ‘டச்’)
பொதுத் தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். பொதுவாகவே பணத்தின் ‘டச்’ (ஸ்பரிசம்) வந்துவிட்டால் அதோடு ஒரு காரியத்தில் அநேகக் கெடுதல்களும் வந்துவிடும். பொதுத் தொண்டு செய்யப் புறப்படுகிறவர்கள் பணவிஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நல்ல ஆதரவு திரவிய ஸஹாயமாகவும் நம் கார்யத்துக்குக் கிடைத்தால் கூட அதனால் Over – enthusiastic ஆகி (அதீத உத்ஸாஹம் அடைந்து), இப்போது இந்தியா கவர்மென்ட் செய்கிற மாதிரி ambitious planning (அதி ஆசைத் திட்டம்) போட்டு நிறைய பணம் ‘கலெக்ட்’ பண்ண ஆரம்பிக்கக் கூடாது. இப்படி ஆரம்பித்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. இதனாலே பரோபகாரம் என்கிற அன்பு எண்ணத்தையும், அதில் அங்கமாகச் செய்கிற தேவாலய கைங்கர்யங்களின் பக்தி எண்ணத்தையுங்கூட ‘வசூல் எண்ணம்’ முழுங்கிவிடும். எப்போது பார்த்தாலும் ரசீது புஸ்தகமும் கையுமாக அலைவதும், ‘பேப்பர்காரர்களைப் பிடித்து அப்பீல் பண்ணலாமா, அட்வர்டைஸ்மென்ட் பிடித்து ஸோவனீர் போடலாமா?’ என்பதே சிந்தையாகத் தவித்துக் கொண்டிருக்கும்படியும் ஆகும். நிறைய பணம் சேர்ந்து அதைக் கையாள வேண்டியிருக்கும் போது நாமே எப்படி மாறிப் போய்விடுவோமோ என்ற பயம் ஸதாவும் இருக்கணும். அதுவுமில்லாமல், ரொம்பவும் பணம் சேர்ந்தால் ஊரிலிருப்பவர்களுக்கும் அது ஸரியாகப் பிரயோஜனமாகிறதா என்ற ஸந்தேஹம் எழும்பும். இதோடுகூட, சற்றுமுன் சொன்ன மாதிரி, இஷ்டமில்லாதவனையும் நிர்ப்பந்தப்படுத்தி வாங்குவதும், இப்படி வாங்கி விட்டதால் அப்புறம் அவனிடம் பவ்யப்பட்டு நிற்பதும் நம் பணியையே அசுத்தம் செய்துவிடும். ஆனதால் எந்த நல்ல காரியமானாலும் ‘அதி’யாக அதைக் கொண்டுபோய் விடாமல் அவசியத்தோடு நிறுத்திக்கொண்டு, செட்டும் கட்டும் சிக்கனமுமாகவே அதற்கான வரவு செலவுகளை நிர்வஹிக்க வேண்டும்.
அருண் சிங் – அமெரிக்காவுக்கான இந்திய தூதராக நியமனம்!
புது தில்லி: அமெரிக்காவுக்கான புதிய தலைமைத் தூதராக அருண் சிங்கை மத்திய அரசு நியமித்துள்ளது. அமெரிக்காவுக்கான தலைமைத் தூதராகப் பொறுப்பு வகித்துவந்த ஜெய்சங்கர் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளராக ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, இப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், இப்பதவிக்கு அருண் சிங்கை நியமித்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்ஸ் நாட்டின் தலைமைத் தூதராக அருண் சிங் பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் பிரான்ஸ் நாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடியின் பயணத்துக்குப் பின்னர் அமெரிக்க தலைமைத் தூதர் பதவியை அருண் சிங் ஏற்றுக் கொள்வார் என தில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தலைமை தூதரகங்களில் கூடுதல் செயலாளராக பணியாற்றியவர் அருண் சிங். மேலும், ஜப்பான், இஸ்ரேல் நாடுகளில் உள்ள இந்திய தலைமை தூதரகங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள இந்திய தலைமை தூதரகத்தில் சுமார் 5 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்
திருநெல்வேலியில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழக வேளாண் துறையில் 4 ஓட்டுநர்கள் நியமனத்துக்கு ரூ.12 லட்சம் லஞ்சம் கேட்டு, அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி தொல்லை கொடுத்ததால், நெல்லை மாவட்ட வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துக் குமாரசாமி தற்கொலை செய்து கொண்டார் என்று புகார் கூறப்பட்டது. இதை அடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தர விட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கட்சிப் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதை அடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைவர் அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார். முன்னதாக, ஜன.20ம் தேதி நெல்லை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து வேளாண் துறை செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட வழக்கை நெல்லை ரயில் நிலைய போலீஸார் விசாரித்து வந்தனர்.
புது பைக்கில் பழனி கோவிலுக்கு சென்ற தம்பதி கார் மோதி பலி
திண்டுக்கல்: புதிய பைக்கில் பழனி கோவிலுக்குசாமி கும்பிடச் சென்று திரும்பிய தம்பதியர் கார் மோதி பலியாகினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சத்யாநகரைச் சேர்ந்த வீரமணி(23) அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மலர்விழி(19). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு குழந்தை இல்லை. வீரமணி சில தினங்களுக்கு முன் புதிதாக பைக் ஒன்று வாங்கினார். அதில் அவர் நேற்று மனைவியுடன் பழனிக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். சாமி தரிசனம் முடித்து பைக்கில் வீட்டுக்குத் திரும்பியபோது, விருபாச்சி மேட்டுப்பகுதியில் எதிரே வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது. இதில் வீரமணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மலர்விழி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை: எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் வாக்குக்கு ரூ.2 ஆயிரம் பணம் கொடுத்தது குறித்து ஒருவர் தேர்தல் ஆணையத்துக்கு டிடியுடன் கடிதம் அனுப்பியுள்ளார். அ.தி.மு.க. பணம் கொடுத்துத்தான் வாக்கு கேட்டது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று. நெல்லையில் மூத்த அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர் ஒருவர்தான் காரணம் என்று கூறியிருந்தேன். இது தொடர்பாக அவரிடமிருந்து கட்சிப் பதவி யையும், அரசுப் பதவியையும் பறித்துள்ளனர். ஏற்கனவே ஒரு முறை இவர் அமைச்சராக இருந்த போது, தவறு செய்தார் என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் அவருக்கே பிறகு மீண்டும் பதவியைக் கொடுத் தார்கள். கொலு கொண்டாடுபவர்கள், வைக்கப் படும் பொம்மைகளை ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி வைப்பது போல், அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சரவை மாற்றப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் எழுத்தாளர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பெருமாள்முருகன் என்ற எழுத்தாளர் தாக்கப்பட்டார். தற்போது, கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த எழுத்தாளர் புலியூர் முருகேசன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இப்பிரச்சினை மேலும் பெரிதாகாமல் அரசும், காவல் துறையும் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்ச் மாதத்தில் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கச் சென்றவர்களுக்கு பருப்பு வழங் கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்குப் பருப்பு சப்ளை செய்த நிறுவனத்துக்கு தமிழக அரசு பணம் கொடுக்காததுதான் கால தாமதத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்கள். 14வது நிதிக்குழு அறிக்கை மற்றும் மத்திய பட்ஜெட்டில் விலக்கிக் கொள்ளப்பட்ட உதவித்தொகை காரணமாக 2015-2016-ம் ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுமென்று மதிப்பிடுகிறார்கள். 2013-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,563 பேரும், 2014-ம் ஆண்டில் 15,190 பேரும் இறந்துள்ளனர். 2015-ம் ஆண்டில் ஜனவரியில் மட்டும் 1,337 பேர் இறந்துள்ளார்கள். இந்தியாவில் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழகம்தான் தொடர்ந்து முன்னிலையிலே உள்ளது. திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அ.தி.மு.க. ஆட்சியில் 2013-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்திய போது, அவர்களின் கோரிக்கைகள் அனைத் தும் நிறைவேற்றப்படுமென ஜெயலலிதா அறிவித்தார். கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் தற்போது தமிழக அரசைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

