புது தில்லி: மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் தாதாராவ் தன்வே வியாழக்கிழமை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியிருந்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப் படி இந்த ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
மத்திய அமைச்சர் தாதா ராவ் தன்வே ராஜினாமா: மோடி ஏற்பு
செவ்வாய் கிரகத்தில் ஆர்க்டிக் கடல் அளவுக்கு ஆழமான கடல் இருந்தது: நாசா விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்தது என்று ஏற்கெனவே கடந்த சில வருடங்களாகக் கூறி வந்த நிலையில், புதிய தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இதனை உறுதியாகக் குறிப்பிட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், 6 வருட ஆராய்ச்சியில் செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய ஆழமான கடல் இருந்தது என்ற முடிவினை அறிவித்தது. செவ்வாய் கிரகத்தில் கடல் இருந்திருக்கலாம் என்று முன்னதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய ஆய்வில், இந்தக் கடலானது ஆர்க்டிக் கடல் அளவுக்கு பெரியதாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை உறுதிசெய்யும் வகையில் ஆதாரங்கள் உள்ளன என்று கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் தாழ்வான பகுதியில் கடல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கடலானது ஆர்க்டிக் கடல் அளவுக்கு பெரிதாக, ஆழமாக இருந்திருக்கலாம் என நாசா கூறுகிறது. செவ்வாய் கிரகத்தின் வட பகுதியின் அடித்தளத்தில் இந்தக் கடலானது பல பலட்சம் ஆண்டுகள் இருந்ததாம். இது உண்மையாக இருக்குமானால், பூமியைப் போலவே செவ்வாயிலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் இருந்திருக்கலாம் என்று அனுமானிக்கலாம். இதுவரை இதற்கான உரிய ஆதாரம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய தகவல்கள் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளதால் கடல் இருந்தது என்று முதல் முறையாக நாசா கூறியுள்ளது. இதனை நாசாவின் மிக்கேல் மும்மா கூறியுள்ளார்.
மாட்டிறைச்சிக்குத் தடை: மகாராஷ்டிர பாஜக அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்
மாட்டிறைச்சிக்கு தடை, முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு ரத்து என மதவாதத்தை வெளிப்படுத்தும் மகாராஷ்டிர பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இந்துத்துவத்தின் சோதனைக்கூடமாக குஜராத் மாநிலத்தை வைத்திருந்த அடிப்படைவாதிகள் இப்போது மகராஷ்டிர மாநிலத்தை அடுத்த சோதனைக்கூடமாக உருமாற்றிவருகிறார்கள். மாட்டிறைச்சி விற்பதற்கும் உண்பதற்கும் தடை விதித்திருப்பதோடு மாட்டிறைச்சியை வைத்திருந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை என அந்த மாநிலத்தில் சட்டம் போடப்பட்டிருக்கிறது. ஒருவர் எதைச் சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்பதை முடிவுசெய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்குக் கிடையாது. மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டத்துக்கு எப்படி குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கினார் எனத் தெரியவில்லை. மாட்டிறைச்சி தடை விவகாரத்தால் எழுந்துள்ள கொந்தளிப்பு ஓய்வதற்கு முன்பே அடுத்த தாக்குதலை பாஜக அரசு தொடுத்துள்ளது. முஸ்லிம்களுக்கு கல்வியில் வழங்கப்பட்டுவந்த ஐந்து சதவீத இடஒதுக்கீட்டை இப்போது அது ரத்து செய்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ள நிலையில் பாஜக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் மாநிலங்களவையில் அதற்குப் பெரும்பான்மை இல்லை. அதனால் அவர்கள் விரும்புகிற சட்டங்களைக் கொண்டுவர முடியவில்லை. எனவே பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் தனது சோதனைகளை செய்துபார்த்து 2017இல் மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற்றதும் இந்தியா முழுமைக்கும் அந்தச் சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிடுகிறார்கள். மகாத்மா புலேவும் புரட்சியாளர் அம்பேத்கரும் சீர்திருத்தப் பணிசெய்து செம்மைப்படுத்திய மாநிலத்தை இன்று மதவாதசக்திகள் தமது வேட்டைக்காடாக்கி வருகிறார்கள். சமூகநீதியை விரும்புவோர் இதனைச் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது. தலித் இளைஞர்கள் ஆணவக் கொலைகளுக்கு ஆளாக்கப்படுவதைத் தடுக்கத் துப்பில்லாத மகராஷ்டிர பாஜக அரசு மாட்டிறைச்சிக்குத் தடை விதிப்பதும், முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்வதும் கேலிக் கூத்து அல்லாமல் வேறு இல்லை. மகராஷ்டிர அரசின் மதவெறிப் போக்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
கட்டண உயர்வுக்குப் பின்னும் இழப்பில் இயங்கும் போக்குவரத்துக் கழகங்கள்: ராமதாஸ் சாடல்
சென்னை: கட்டணங்கள் உயர்த்தப் பட்ட பின்னும் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிவருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரலாறு காணாத அளவுக்கு பேரூந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட பிறகும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து இழப்பில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேடும், ஊழலும் தான் இதற்குக் காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். இந்தக் குற்றச்சாற்றுகள் உண்மை என்பதை உலகுக்கு உணர்த்துவதைப் போலத்தான் அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 6,000 புதிய பேரூந்துகள் வாங்கப்படும் என்று 2011-12, 2012-13 ஆகிய ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளில் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 30.06.2014 வரையிலான 3 ஆண்டுகளில் 4,649 புதிய பேரூந்துகள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 8 கோட்டங்களுக்காக வாங்கப்பட்டு கூடு கட்டப்பட்ட 260 புதிய பேரூந்துகள் 5 முதல் 8 மாதங்களாக இயக்கப்படாமல் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆன பிறகு அவரது கைகளால் தொடங்கி வைக்கப்படுவதற்காகத் தான் இப்பேரூந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 260 புதிய பேரூந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்துக் கழகங்களின் இழப்பும், கடன்சுமையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இந்தப் பேரூந்துகள் போக்குவரத்துக் கழகங்களின் கையிருப்புப் பணத்திலிருந்து வாங்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு பேரூந்தும் தலா ரூ.16 லட்சம் என்ற விலையில், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடம் ரூ.41.60 கோடியை கடனாகப் பெற்றுத் தான் வாங்கப்பட்டுள்ளன. இதற்காக ஆண்டுக்கு 12.25% வீதம் ஒவ்வொரு மாதமும் ரூ.42 லட்சம் வட்டியாக செலுத்த வேண்டும். பேரூந்துகள் வாங்கப்பட்டு குறைந்தபட்சம் 5மாதங்கள் ஆனதாக வைத்துக் கொண்டாலும், இதுவரை ரூ. 2.10 கோடி வட்டியாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பேரூந்துக்கும் ரூ.3500 வீதம் காலாண்டு வரியாக ரூ. 9.10 லட்சம் செலுத்தப்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயித்துள்ள ஆண்டுக்கு 4% தேய்மானத்தின்படி பார்த்தால், 5 மாதங்களில் ஏற்பட்ட தேய்மானத்தின் மதிப்பு ரூ.69.33 லட்சம் ஆகும். ஆக மொத்தம் புதிய பேரூந்துகளை இயக்காததால் போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.2.88 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர ஒரு பேரூந்துக்கு ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் 260 பேரூந்துகளுக்கு 5 மாதங்களில் ரூ.58.50 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டயர்களை வாங்கவும், உதிரி பாகங்களை வாங்கவும் பணம் இல்லாததால் இருக்கும் டயர்களை ரீ- ட்ரேட் செய்தும், தேய்ந்த உதிரிபாகங்களை தற்காலிகமாக சரி செய்தும் பேரூந்துகளை இயக்கும்படி தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதனால் விபத்தும், பேருந்து பழுதடைந்து வழியில் நிற்பதும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சூழலில் இயக்குவதற்கு தயாராக இருக்கும் பேரூந்துகளை, ஊழல் குற்றவாளி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தான் இயக்கவேண்டும் என்று தடுத்து நிறுத்தி வைத்திருக்கும் ஆட்சியாளர்களுக்கு எத்தகைய தண்டனை அளிக்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். போதிய பேரூந்துகள் இல்லாமல் மக்கள் படும் அவதியை உணராமல், ஊழல் குற்றவாளியை மகிழ்விக்கும் நோக்கத்துடன் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. சென்னையில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பெருநகரத் தொடர்வண்டி சேவையைத் தொடங்க சென்னை பெருநகரத் தொடர்வண்டி நிறுவனம் தயாராக இருந்தும், அந்த சேவையையும் ஜெயலலிதா தான் தொடங்கி வைக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு திட்டமிட்டே தாமதித்து வருகிறது. ஒட்டு மொத்த தமிழக அரசும் ஜெயலலிதா என்ற ஒற்றை மனிதருக்காகத் தான் செயல்பட்டு வருவதைப் போலவும், மக்கள் அனைவரும் அடிமைகள் தான் என்பதை போலவும் ஆட்சியாளர்கள் செயல்படுவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. அமைதியின் சின்னமாக திகழும் பொதுமக்கள் பொறுமை இழந்துவிட்டால் அதன்பின் அவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இதை உணர்ந்து, மக்கள் பொங்கி எழுவதற்கு முன்பாக, தமிழகத்தில் தயார்நிலையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் தொடங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். என்று கூறியுள்ளார்.
பன்றிக் காய்ச்சல் பாதிப்பு: சென்னையில் பெண் உயிரிழப்பு
சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியானார். இதனால், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, பன்றிக் காய்ச்சலுக்கு சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் பலியானார். சென்னை எழும்பூர் கெங்குரெட்டி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமாரின் மனைவி அமிர்தலட்சுமி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதை அடுத்து அவர் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அமிர்தலட்சுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிர்தலட்சுமிக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது புதன் அன்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அமிர்த லட்சுமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அமிர்தலட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து கேள்விப் பட்ட அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சுகாதாரத் துறையினர் இன்று காலை எழும்பூர் கெங்கு ரெட்டி தெரு பகுதிக்குச் சென்று, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அமிர்தலட்சுமி வசித்து வந்த வீட்டை சுத்தப்படுத்தி வெள்ளை அடித்தனர். பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க, சுகாதாரத் துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவுக்கு 183 ரன் வெற்றி இலக்கு: நிர்ணயித்தது மேற்கு இந்தியத் தீவுகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 28 வது லீக் சுற்றில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் இந்திய அணியும் மோதும் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் செய்வதாக அறிவித்து களம் இறங்கியது. முதலில் ஆடிய அந்த அணி 44.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 182 ரன் எடுத்தது. இந்தியாவுக்கு 183 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பேட்டிங் செய்யக் களம் இறங்கிய மேற்கு இந்தியத் தீவு வீரர்கள் துவக்கம் முதலே திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் வேகப் பந்து வீச்சை எதிர்கொள்வதில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மென் ஸ்மித்தும், கெய்லும் திணறினர். ஸ்மித் 20 பந்துகளில் 6 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். கெயில் 21 ரன் எடுத்தார். சாமுவல்ஸ் 2, ராம்தின் 0, கார்ட்டர் 21, சிம்மன்ஸ் 9 என முன்னணி பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். சமி 26 ரன் எடுத்தார். அவர் ஆட்டம் இழந்த ஒரு கட்டத்தில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்திருந்தது. ஆனால் பின்னர் வந்த ஹோல்டரும் டெய்லரும் ஓரளவு நின்று விளையாடினர். ஹோல்டர் 57 ரன் எடுத்தார். டெய்லர் 11 ரன் எடுத்தார். இதனால் 44.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 182 ரன் எடுத்தது. இதை அடுத்து, இந்திய அணிக்கு 183 ரன் என்ற இலக்கை அந்த அணி நிர்ணயித்தது.
தமிழகத்தில் பரவும் பன்றிக் காய்ச்சல்: வேலூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாதிப்பு
வேலூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், சில இடங்களில் அது பரவி வருகிறது. வேலூரில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையிலும், அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறையின் அறிவுரைப்படி, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணிப் பெண் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 5 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது வேலூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
விலை மதிப்புள்ள நாடுகள் பட்டியல்: இந்தியா முந்தியது
புது தில்லி: உலகி்ன் விலை மதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இந்தியா முந்தியுள்ளது. அது, சீனா, ஜப்பானை பி்ன்னுக்குத் தள்ளி முன்னேற்றம் அடைந்தது. இந்தத் தகவல், குஷ்மன் அண்ட் வேக்பீல்ட் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகி்ன் மிகவும் விலை மதிப்புள்ள வியாபார அலுவலகம் அமைந்துள்ள நகர்களின் பட்டியலில் புது தில்லியி்ன கன்னாட்பிளேஸ் 5-ம் இடத்தைப் பிடித்துள்ளது. ஹாங்காங், பிரேசில், அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்கள் முதல் ஐந்து இடங்களுக்குள்ளும், ரஷ்யா, சீனா, ஜப்பானில் உளள வர்த்தக நகரங்கள் புதுதில்லிக்கு அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
அடகுக் கடைக்காரரிடம் கத்தி முனையில் 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் கொள்ளை
சேலம்: சேலம் அருகே அடகு கடை உரிமையாளர், மனைவியை கட்டிப் போட்டு கத்தி முனையில் மிரட்டி 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பொன்னுரங்கம் (71) அவரது மனைவி கண்ணம்மாள் (63). இருவரும் பூசாரிப்பட்டியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான திருமண மண்டபம், வணிக வளாகம், அடகுக் கடையுடன் வீடு அமைந்துள்ளது. இவர்களது மகன்கள் இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் இருவரும் வீட்டில் இருந்தபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கட்டிப்போட்டது. பின்னர் கண்ணம்மாளை கத்தியால் கையில் கிழித்து காயப்படுத்தி, நகை, பணம் இருக்குமிடத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் மிரண்டு போன பொன்னுரங்கம் நகை, பணம் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அடமான நகை 350 பவுன், ரொக்கம் 4.50 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் தலைமறைவாகிவிட்டது. வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். வீடு முழுவதும் ரத்தம் சிதறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இருவரையும் மீட்டு தீவட்டிபட்டி போலீஸுக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து மூன்று செல்போன்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எடுத்துச் சென்ற செல்போன்களின் டவர், சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருகே காட்டியதையடுத்து, போலீஸார் குரும்பப்பட்டி வன உயிரியல் காப்புக்காடு பகுதியில் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

