சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியானார். இதனால், பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, பன்றிக் காய்ச்சலுக்கு சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஒரு பெண் பலியானார். சென்னை எழும்பூர் கெங்குரெட்டி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செல்வகுமாரின் மனைவி அமிர்தலட்சுமி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதை அடுத்து அவர் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே அமிர்தலட்சுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிர்தலட்சுமிக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது புதன் அன்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி தலைமை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அமிர்த லட்சுமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அமிர்தலட்சுமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து கேள்விப் பட்ட அவரது உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சுகாதாரத் துறையினர் இன்று காலை எழும்பூர் கெங்கு ரெட்டி தெரு பகுதிக்குச் சென்று, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அமிர்தலட்சுமி வசித்து வந்த வீட்டை சுத்தப்படுத்தி வெள்ளை அடித்தனர். பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க, சுகாதாரத் துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டு பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
Popular Categories



