சென்னை: சென்னை திருவான்மியூரில் தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் போல் நடித்த மூவர் கைது செய்யப்பட்டனர். திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் திருமுருகன் (52). இவரை சில நாள்களுக்கு முன்பு 3 பேர் சந்தித்துள்ளனர். அவர்கள், தாங்கள் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துகொண்டுள்ளனர். பின்னர் அவரிடம் பல கோடி கறுப்புப் பணம் உங்களிடம் இருப்பதாக புகார் வந்திருக்கிறது, அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் பணம் தரவேண்டும் என்று கூறினராம். மேலும் பணத்தை ஓரிரு நாள்களில் தரும்படி கூறிவிட்டு, தங்களது செல்பேசி எண்ணை திருமுருகனிடம் வழங்கிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால், அந்த நபர்கள் மீது திருமுருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் இருந்து அதிகாரிகள் எவரும் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த நபர்கள் கொடுத்த செல்பேசி எண்ணில் திருமுருகன் தொடர்புகொண்டார். அதன்படி, திருமுருகன் வீட்டுக்கு காரில் வந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் மூவரும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த சண்முகம் (35), சுமன் (23), இப்ராகிம் (42) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் மூவரும் தங்களை போலீஸ் என்றும், பத்திரிகையாளர் என்றும் பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டை, போலி பத்திரிகையாளர் அடையாள அட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது மோசடி வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிபோல நடித்து தொழிலதிபரை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற மூவர் கைது
“தபஸ்-யாரோ கொடுக்கும் தண்டனை அல்ல; தனக்குத் தானே விதித்துக்கொள்ளும் புலன் கட்டுப்பாடு.”
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
பணக்காரர் பட்டியல்: முதலிடத்தில் பில் கேட்ஸ்; இந்திய அளவில் முதலிடம் முகேஷ் அம்பானிக்கே!
நியூயார்க்: உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அளவில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்துகளின் நிகர மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 200 கோடி. அவர் உலக அளவில் ஒரு இடம் முன்னேறி 39–வது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடங்களில் இந்திய அளவில், திலீப் சாங்வி, ஆசிம் பிரேம்ஜி ஆகியோர் உள்ளனர். உலக பணக்காரராக இந்த ஆண்டும் பில்கேட்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 40 கோடி ஆகும். இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களில் 290 பேர் புதுமுகங்கள். அவர்களில் 71 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். இந்தப் பணக்காரர் பட்டியலில், 90 இந்தியர்களும் இடம் பிடித்துள்ளனர். அவர்களில், சிவ நாடார் (உலக அளவில் 66–வது இடம்), இந்துஜா சகோதரர்கள் (69–வது இடம்), லட்சுமி மிட்டல் (82–வது இடம்), குமார் மங்கலம் பிர்லா (142–வது இடம்), கவுதம் அதானி (208–வது இடம்), சுனில் மிட்டல் (208–வது இடம்), அனில் அம்பானி (418–வது இடம்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
“காலே குர்யாத் ஸந்த்யாம்”
“காலே குர்யாத் ஸந்த்யாம்” சொன்னவர்-எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்
வெளிநாட்டு இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. ஒன்றாக இணைந்த அட்டை: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
புது தில்லி: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. என இருவித குடியுரிமை அட்டை வழங்கும் வேறுபாடு நீக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்படும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 6 அவசரச் சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவானது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கும் (பி.ஐ.ஓ.), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் (ஓ.சி.ஐ.) இடையே உள்ள வேறுபாட்டை நீக்குகிறது. உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இது குறித்துத் தெரிவிக்கையில், இரட்டை குடியுரிமை வழங்கும் திட்டம் இந்தியாவிடம் இல்லை; எனினும் குடியுரிமை அந்தஸ்து போல ஒரு சலுகையை இரு அட்டைத்தாரர்களும் இதனால் பெறுகின்றனர். இந்தச் சட்டத் திருத்த மசோதா பாகிஸ்தான், வங்கதேச அகதிகளுக்குப் பொருந்தாது என்றார். மக்களவையில் இதுதொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்… இச்சட்டத் திருத்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். அதில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. என இருவித குடியுரிமை அட்டை வழங்கும் வேறுபாடு நீக்கப்பட்டு ஜனவரி 9ஆம் தேதிக்குள் ஒன்றாக இணைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இச்சட்டத் திருத்தம் தொடர்பாக ஓர் அவசரச் சட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மக்களைவக் கூட்டத் தொடரின்போது இந்தத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்டது – என்றார்.
அஃப்சல் குரு உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்: பிடிபி.,யின் அடுத்த சர்ச்சை
புது தில்லி: நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் ஜனநாயகக் கட்சி கோரியுள்ளது. இதன்மூலம் அக்கட்சி மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட ஓர் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில்… அஃப்சல் குருவைத் தூக்கிலிட்டது நீதியின் தவறு. அவரைத் தூக்கிலிட்டதில் அரசமைப்புச் சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. அஃப்சல் குருவின் உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று சுயேச்சை எம்எல்ஏ ரஷீத் அகமது, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் 2011இல் கொண்டுவந்த தீர்மானம் நியாயமானது. அதை பேரவை அப்போதே நிறைவேற்றியிருக்க வேண்டும் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஒமர் அப்துல்லா தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மக்கள் ஜனநாயகக் கட்சியின் இந்தக் கோரிக்கையானது, மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமேலவைத் தேர்தலில் சுயேச்சை எம்எல்ஏ ரஷீதின் வாக்கை விலைக்கு வாங்க நடைபெறும் கொடிய முயற்சியாகும்’ என்று கூறியுள்ளார். முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முதல்வராகப் பதவியேற்ற முஃப்தி முகமது சயீது செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் அமைதியான முறையில் பேரவைத் தேர்தல் நடைபெற்றதற்கு பாகிஸ்தானும், பயங்கரவாத அமைப்புகளும் அளித்த ஒத்துழைப்பே காரணம்” என்று சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
“கான்’ நடிகர்களின் படங்களைப் புறக்கணிக்க பாஜக., எம்பி., சாத்வி ப்ராச்சி வேண்டுகோள்
இந்துப் பெண்களை இஸ்லாமிய கதாபாத்திரங்கள் காதலித்து திருமணம் செய்வது போன்ற காட்சிகள், வன்முறைக் கலாசாரத்தைப் பரப்பும் காட்சிகள் கொண்ட பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் ஆகியோரின் திரைப்படங்களை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சாத்வி பிராச்சி கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், அவர்களின் பட சுவரொட்டிகளை கிழித்தெறிவதோடு அவற்றை தீயிட்டுக் கொளுத்துமாறும் அவர் கூறினார். டேராடூனில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியபோது, “மீரட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்ட போது அங்கு ஒரு சிறுவனிடம் வாழ்க்கையில் நீ என்னவாக விரும்புகிறாய்” என்று கேட்டேன். அந்தச் சிறுவன், “நான் ஹிருத்திக் ரோஷன், ஷாருக் கான், சல்மான் கான், அமீர் கான் போல ஆக விரும்புகிறேன்’ என்று தெரிவித்தான். அதற்கு ஏன் அவ்வாறு ஆசைப்படுகிறாய்? என்று அவனிடம் கேட்டேன். அந்த நடிகர்கள் நன்றாக சண்டையிடுகின்றனர் என்று அவனது தாயார் கூறினார். “கான்’ நடிகர்களின் திரைப்படங்கள் வன்முறை கலாசாரத்தைப் பரப்பி வருகின்றன. இதனால் இளைஞர்கள் அவர்களால் கவரப்படுவதை தவிர்க்க வேண்டும். “கான்’ நடிகர்களின் திரைப்படங்களை ஹிந்துத்துவ அமைப்புகள் புறக்கணிக்க வேண்டும். அவர்களின் திரைப்பட சுவரொட்டிகளை கிழித்தெறிவதோடு அந்தச் சுவரொட்டிகளை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிழை இல்லாத வாக்காளர் பட்டியல்: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை: வாக்காளர் பட்டியலை பிழையில்லாமல் உருவாக்குவதற்காக தேசிய அளவிலான திட்டம் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் அங்கீகரிப்புத் திட்டம் என்ற அந்தத் திட்டம் 3-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள் தாமாக முன்வந்து அதை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். மேலும் அந்தத் திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான விண்ணப்பப் படிவங்களை கொடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. ஏப்ரல் 12-ந்தேதியில் இருந்து ஜூலை வரை ஒவ்வொரு மாதமும் ஒரு முகாம் நடத்தப்படும். அப்போது, வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் பெயர் இருப்பவர்கள், அதை நீக்குவதற்காக 7-ம் எண் படிவத்தை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். தகவல்களை மாற்ற வேண்டும் என்றால் 8-ம் எண் படிவத்தை அளிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள புகைப்படத்தை சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து மாற்றவேண்டும் என்றால் அதையும் கொடுக்கவேண்டும். இவற்றோடு, தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்களை எதிர்காலத்தில் வாக்காளர்களுக்கு அளிப்பதற்கு வசதியாக, தங்கள் ஆதார் எண், தனது அல்லது குடும்பத்தினரின் செல்போன் எண், இ-மெயில் முகவரி போன்றவற்றை அனைத்து வாக்காளர்களும் அந்த முகாம்களுக்குச் சென்று கொடுக்க வேண்டும். எதிர்காலத்தில் ஆதார் எண் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் மாற்றம் செய்யப்படும். இந்த புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் அரசியல் கட்சிகளின் உதவியையும் இந்திய தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனையையும் கேட்பதற்கு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதை ஒட்டி, இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடத்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி, இன்று பகல் 12 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடக்கும் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் மாநில கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தே.மு.தி.க. ஆகிய 9 கட்சிகள் கலந்து கொள்கின்றன.
குடும்ப விழாவில் கருணாநிதியைப் பார்த்தார் அழகிரி; ஆனால் பேசவில்லை!
சென்னை: சென்னையில் தங்களது குடும்ப விழாவில் திமுக தலைவரும் தந்தையுமான கருணாநிதியை நேரில் சந்தித்தார் அழகிரி. ஆனால், பேசாமல் நகர்ந்து விட்டார். கருணாநிதியின் மகன் தமிழரசு இல்ல விழா சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திங்கள்கிழமை நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் கருணாநிதி, ராசாத்தி அம்மாள், கனிமொழி, மு.க.அழகிரி, காந்தி அழகிரி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், முரசொலி செல்வம், செல்வி என கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு கருணாநிதி வந்தபோது, அழகிரி 4-ஆம் வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுச் சென்றார் கருணாநிதி. ஆனால், கடைசி வரை அழகிரி கருணாநிதியைச் சந்தித்துப் பேசவில்லை. மேலும், அழகிரி வந்திருப்பதாக கருணாநிதியிடமும் சொல்லப்பட்டது. ஆனாலும் அவரும் அழகிரியை அழைத்துப் பேசவில்லை. திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்ட பிறகு, கருணாநிதியுடன் சந்திப்பதை அழகிரி தவிர்த்து வருகிறார். கோபாலபுரம் இல்லத்துக்கு அழகிரி சென்றாலும், இருவருமே சந்திப்பைத் தவிர்த்து வருகின்றனர். இந்த விழாவிலும் நேரில் சந்தித்தும்கூட கருணாநிதியுடன் அழகிரி பேசவில்லை. வழக்கம்போல், ராசாத்தி அம்மாள், கனிமொழி ஆகியோர் அழகிரியிடம் பேசிவிட்டுச் சென்றனர்.
சி.பி.எஸ்.இ. +2, 10-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கின
புது தில்லி: சி.பி.எஸ்.இ. + 2, 10-ம் வகுப்புத் தேர்வுகள் நாடு முழுவதும் திங்கள்கிழமை நேற்று தொடங்கின. இந்தத் தேர்வுகளை தமிழகத்திலிருந்து 46 ஆயிரம் பேர் எழுதினர். பிளஸ் 2 தேர்வில் முதல் தேர்வாக ஆங்கில மொழிப்பாடமும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வும் நடைபெற்றன. பிளஸ் 2 தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும், 10-ஆம் வகுப்புத் தேர்வு 26-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன. தமிழகத்திலிருந்து பிளஸ் 2 தேர்வை 16 ஆயிரம் பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுதினர்.

