புதுதில்லி: ஏற்கெனவே உள்ள தேசிய நீர் வழிப் பாதைகளுடன் கூடுதலாக 101 தேசிய நீர்வழிப் பாதைகள் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் . ஆண்டு முழுவதும் நீர்வழிப் பயணம் செய்யும் வாய்ப்பு குறித்து. இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில், தேசிய நீர்வழிப் பாதைகளுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் மக்களவையில் தெரிவித்தார் .
கூடுதலாக 101 தேசிய நீர்வழிப் பாதைகள் : பொன். ராதாகிருஷ்ணன்
தெலங்கானா: ரிலையன்ஸ் பைப் லைனில் எரிவாயு கசிவு; பெரும் விபத்து தவிர்ப்பு
ஹைதராபாத்: தெலங்கானாவில் ரிலையன்ஸ் எரிவாயு பைப் லைனில் வாயு கசிவு தெலங்கானாவின் சங்கரெட்டி பகுதி வழியே செல்லும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எரிவாயு பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. இதனை அடுத்து துரித கதியில் இறங்கி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. காக்கிநாடாவிலிருந்து கிழக்கு கோதாவரி வழியே குஜராத்தின் பரீச் பகுதி வரை இயற்கை எரிவாயு பைப் லைன் உள்ளது. இந்த நிலையில் திங்கள் கிழமை இன்று காலை தெலங்கானாவின் மதிகுந்தா கிராமப் பகுதியில் அமைந்துள்ள பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. சில நிமிடங்களில் மும்பையிலிருந்து ரிலையன்ஸ் அதிகாரிகளும் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எச்சரிக்கை அளித்தனர். அப்போது பைப்லைனிலிருந்து ஏற்பட்ட சிறு தீ உடனடியாக கட்டுப்படுத்தப் பட்டு, மேலும் பாதிப்புகள் பரவமால் இருக்க எரிவாயு குழாயில் சப்ளை நிறுத்தப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரிலையன்ஸ் பணியாளர்களின் துரித நடவடிக்கையால், எரிவாயு கசிவினால் ஏற்பட இருந்து மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றம் ஏப்.23ல் கலைக்கப்படும்: ரணில் விக்ரமசிங்க
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் வரும் ஏப்ரல் 23-ந் தேதி கலைக்கப்படும். இந்நிலையில் மார்ச் மாதம் பிரசாரத்தைத் தொடங்க இருப்பதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 23-ந் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஏற்கெனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். இந்நிலையில் மார்ச் மாதம் முதல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் பொதுத் தேர்தலுக்குத் தயாராகுமாறு அதிபர் மைத்ரீபால சிறீசேனவும் இலங்கை சுதந்திரக் கட்சித் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மண்டல அலுவலகங்கள், இணைப்பு அலுவலகங்களின் உறுப்பினர்களை அழைத்து கட்சியை பலப்படுத்துமாறு அதிபர் மைத்ரீபால சிறீசேன கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அரசு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மானியமில்லா சமையல் கேஸ் சிலிண்டர்: ரூ. 5 விலை உயர்வு
புது தில்லி: மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 5 வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதை அடுத்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இனி ரூ. 610–க்கு விற்பனை செய்யப் படும். மேலும், விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ. 3,849 உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் 7 முறை குறைக்கப்பட்டது. மொத்தம் ரூ. 317.50 வரை விலை குறைக்கப்பட்டது. இப்போது தான் முதல் முறையாக ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. அரசுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் பிளவு இல்லை என்கிறார் ஆம் ஆத்மியின் யோகேந்திர யாதவ்
புது தில்லி: கட்சியில் பிளவு எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துளளார். ஆம் ஆத்மி கட்சி கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பேசிவருவதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை கட்சியை விட்டு விலக்கும் முடிவையோ அல்லது அவர்களிடம் விளக்கம் கேட்கும் முடிவையோ கேஜ்ரிவால் எடுப்பார் என்று கூறப்பட்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இதனை அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் மறுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த 2 நாட்களாகவே என்னைப் பற்றியும் பிரசாந்த் பூஷன் பற்றியும் செய்திகள் பரப்பப்படுகின்றன . அடிப்படை ஆதாரமற்ற பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன. அது சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கிறது. சில சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சில சமயம் கற்பனைகளை உருவாக்குகிறார்கள். இதனை ஒதுக்கி விட்டு நிறைந்த மனதுடன் பணியாற்ற வேண்டும்” என்றார் அவர். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி, ஒருநபரில் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக அரவிந்த் கேஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியிருந்தார்.
லஞ்சம் பெற மறுத்த போலீஸ்காரரை நேரில் அழைத்து முதல்வர் பாராட்டு
ஹைதராபாத்: பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு லஞ்ச பெற மறுத்த போலீஸ்காரர் குறித்து அறிந்ததும், அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார் தெலங்கானா முதல்வர். தெலங்கானா மாநிலம் ஜூப்ளிஹில்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார் ஜி.நாராயணராவ். இவர் அந்தப் பகுதியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த ஒரு குடும்பத்தினரை நேரில் சந்தித்து தகவல்களை சரி பார்த்தார். அப்போது அவர்கள் அந்த போலீஸ்காரருக்கு வழக்கம்போல், அன்பளிப்பாக லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதனைப் பெற மறுத்த போலீஸ்காரர் ஜி.நாராயண ராவ், ‘‘எனக்கு அரசு சம்பளம் தருகிறது. அதனால் எந்த வித அன்பளிப்புக்கும் எனக்கு தேவை ஏற்படவில்லை’’ என்று பதில் கூறினார். போலீஸ்காரரின் இந்தப் பதிலால் ஆச்சரியப்பட்ட அந்தக் குடும்பத்தினர், உடனடியாக போலீஸ்காரரின் நேர்மை குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சந்திரசேகர ராவ், போலீஸ்காரர் ஜி.நாராயண ராவை தனது வீட்டுக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்.
பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார்; ஆனால் நான்? : ‘உத்தமவில்லன்’ கமல்ஹாசன்
சென்னை: இயக்குனர் பாலசந்தர் இல்லாமலும் ரஜினி உருவாகியிருப்பார். ஆனால் நான் உருவாகியிருக்க மாட்டேன் என்று உத்தமவில்லன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் பேசினார். ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல்’, “திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ள படம் “உத்தம வில்லன்.’ ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலஹாசன், ஆண்ட்ரியா, பூஜாகுமார் ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் நடிகர் நாசர், நடிகைகள் கவுதமி, ஊர்வசி, டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், லிங்குசாமி, விக்ரமன், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிப்ரான் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய கமலஹாசன்… “ரஜினியையும், என்னையும் பாலச்சந்தர்தான் கண்டுபிடித்தார் என்று கூறி வருகிறார்கள். பாலச்சந்தர் இல்லாவிட்டாலும் கூட ரஜினி முரட்டுக்காளை போன்ற, வேறு ஏதாவது ஒரு படத்தின் மூலம் நடிகனாகி இருப்பார். ஆனால் பாலச்சந்தர் இல்லாமல் நான் உருவாகி இருக்க மாட்டேன். பாலச்சந்தர் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றை இந்த மேடையில் ஒலி பரப்பினார்கள். அதைக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டுப் போனேன். எனக்கும் பாலச்சந்தருக்குமான பாசப்பிணைப்பு நெடுங்காலமாகத் தொடர்கிறது. இயக்குநர் பாலசந்தரால் என்னைப் போல் நிறைய பேர் அடையாளம் காணப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் எனக்கு மட்டும் அவர் குருவாக இல்லாமல், மகா குருவாக இருந்திருக்கிறார். உத்தம வில்லன் படத்தில் பாலச்சந்தர் நடிக்க ஒப்புக் கொண்டது எனக்குக் கிடைத்த பெரிய பெருமை. இந்தப் பாடல் வெளியீட்டு விழா மேடையில் அவர் இருப்பார் என்றுதான் அப்போது நான் கருதியிருந்தேன். அவர் இருக்க மாட்டார் என்று முன்பே தெரிந்திருந்தால் இன்னும் பல சிறப்புகளை அவருக்குச் செய்திருப்பேன். பாலச்சந்தர் என்ற மாமனிதரின் நிழலாக நான் இருப்பேன். அவர் பணிகளை தொடர்ந்து செய்வேன். காலமெல்லாம் அவருக்கு நன்றி உள்ளவனாகவும் இருப்பேன். என்று கூறினார். [su_youtube url=”https://www.youtube.com/watch?v=6h94KRvPsYE”]
நாடாளுமன்ற கேண்டீனில் மதிய உணவு உண்ட பிரதமர் மோடி!
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்ற கேன்டீனில் ரூ. 29 கட்டணம் செலுத்தி மதிய உணவு வாங்கி உண்டார். இது அனைவரையும் அங்கே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் எம்.பிக்களுக்கு சலுகை விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த கேன்டீனுக்கு எம்.பிக்கள் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்துக்கு வருவோரும் வந்து உணவு வாங்கி உண்பது வழக்கம். இதுவரை பிரதமர்கள் எவரும் இந்த கேண்டீனில் வந்து உணவு உண்டதில்லையாம். ஆனால் இன்று அதிசயமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கேண்டீனுக்கு வருகை தந்தார். அங்குள்ள மதிய உணவு எப்படி இருக்கிறது என்று சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்ட மோடி, சாதம், சாலட், பருப்புக் கூட்டு, கூட்டுக் கறியுடன் கூடிய மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்தார். இதற்கான கட்டணம் ரூ. 29. மோடியுடன் குஜராத்தைச் சேர்ந்த 2 எம்.பிக்களும் வந்தனர். நாடாளுமன்ற கேன்டீனில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை குறைவு. மோடி வந்து உணவு உண்டு சென்றதால், கேன்டீனில் இனிமேல் உணவின் சுவையும் தரமும் மேலும் கூடும் என்று பேச்சு எழத் தொடங்கிவிட்டது.
கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகள் பலாத்காரம்: பாதிரியார் கைது
அமெரிக்காவில் கன்னியாஸ்திரி முகாம் நடத்தி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஒரு பாதிரியார். அவர், ‘தான் கடவுளின் மனிதன்’ என்று கூறி அந்தச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து தலைமறைவானாராம். அவரை காவல்துறையினர் பிரேசிலில் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் மின்னிபொலிஸ் அருகே உள்ள ஃபின்லேசன் பகுதியில் கிறிஸ்துவ மத தொண்டூழியம் செய்ய வரும் இளம் பெண்களுக்கான கன்னியாஸ்திரி முகாம் உள்ளது. இதனை பாதிரியார் விக்டர் அர்டன் பெர்ணார்ட் என்பவர் நடத்தி வந்தார். 53 வயதான அவர், அந்த முகாமில் பயிற்சிக்காக வந்த சிறுமியை 13 வயதில் இருந்து சுமார் 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் எழுந்தது. மேலும், அதே முகாமில் தங்கியிருந்த மற்றொரு பெண், தன்னையும் அவர் 12 வயது முதல் 20 வயது வரை ஒன்பது ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். ‘நான் கடவுளின் மனிதன்; என்னுடன் இருந்தால் உங்களின் கன்னித் தன்மை பாதிக்காது’ என்று கூறி அவர் அந்தச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்தாராம். இவ்வாறு அந்தப் பெண்கள் போலீஸில் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் விக்டர் அர்டன் பெர்ணார்ட் கடந்த 2010 ஆம் ஆண்டு திடீரென தலைமறைவானார். அவரை அமெரிக்க காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், அமெரிக்க அரசால் தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த அவர், பிரேசில் நாட்டில் உள்ள ப்ரையாடா பிப்பா கடற்கரைப் பகுதியில் ஒரு பங்களாவில் தங்கியிருந்தபோது, அவரை பிரேசில் காவல்துறையினர் கைது செய்தனர். அவருடன் இருந்த 33 வயது மதிக்கத்தக்க பிரேசில் நாட்டுப் பெண்னும் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர்கள் விரைவில் அமெரிக்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாந்த் பூஷண்: ஆம் ஆத்மியில் கருத்து வேறுபாடு!
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சியில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக கருத்து வேறுபாடுகள் முளைத்துள்ளன. தில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சர் ஆனார். இந்நிலையில், தற்போது கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தூண்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க., கிரண் பேடியை களம் இறக்கியபோது அவருக்கு பிரசாந்த் பூஷண் வாழ்த்து தெரிவித்தார். இதனால் அவர் மீது கேஜ்ரிவாலுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதே போல் யோகேந்திர யாதவும் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ளார். இதனால் இவர்கள் இருவரையும் கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்க அரவிந்த் கேஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக தில்லியில் ஒரு தகவல் பரவியது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் மார்ச் 6–ஆம் தேதி கூடுகிறது. இதில் பிரசாந்த் பூஷண், யோகேந்திரயாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே கட்சி தலைமையை எதிர்த்து குரல் எழுப்புபவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று ஆம் ஆத்மி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது இன்னும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.

