புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியில் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சியில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக கருத்து வேறுபாடுகள் முளைத்துள்ளன. தில்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அரவிந்த் கேஜ்ரிவால் முதலமைச்சர் ஆனார். இந்நிலையில், தற்போது கட்சிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தூண்களில் ஒருவரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க., கிரண் பேடியை களம் இறக்கியபோது அவருக்கு பிரசாந்த் பூஷண் வாழ்த்து தெரிவித்தார். இதனால் அவர் மீது கேஜ்ரிவாலுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதே போல் யோகேந்திர யாதவும் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் உள்ளார். இதனால் இவர்கள் இருவரையும் கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்க அரவிந்த் கேஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாக தில்லியில் ஒரு தகவல் பரவியது. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் வரும் மார்ச் 6–ஆம் தேதி கூடுகிறது. இதில் பிரசாந்த் பூஷண், யோகேந்திரயாதவ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே கட்சி தலைமையை எதிர்த்து குரல் எழுப்புபவர்கள் கட்சியில் இருந்து வெளியேறலாம் என்று ஆம் ஆத்மி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது இன்னும் நிலைமையை சிக்கலாக்கியுள்ளது.
கேஜ்ரிவாலுக்கு எதிராக பிரசாந்த் பூஷண்: ஆம் ஆத்மியில் கருத்து வேறுபாடு!
Popular Categories



