ஹைதராபாத்: பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு லஞ்ச பெற மறுத்த போலீஸ்காரர் குறித்து அறிந்ததும், அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார் தெலங்கானா முதல்வர். தெலங்கானா மாநிலம் ஜூப்ளிஹில்ஸ் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார் ஜி.நாராயணராவ். இவர் அந்தப் பகுதியில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த ஒரு குடும்பத்தினரை நேரில் சந்தித்து தகவல்களை சரி பார்த்தார். அப்போது அவர்கள் அந்த போலீஸ்காரருக்கு வழக்கம்போல், அன்பளிப்பாக லஞ்சம் கொடுக்க முயன்றனர். அதனைப் பெற மறுத்த போலீஸ்காரர் ஜி.நாராயண ராவ், ‘‘எனக்கு அரசு சம்பளம் தருகிறது. அதனால் எந்த வித அன்பளிப்புக்கும் எனக்கு தேவை ஏற்படவில்லை’’ என்று பதில் கூறினார். போலீஸ்காரரின் இந்தப் பதிலால் ஆச்சரியப்பட்ட அந்தக் குடும்பத்தினர், உடனடியாக போலீஸ்காரரின் நேர்மை குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சந்திரசேகர ராவ், போலீஸ்காரர் ஜி.நாராயண ராவை தனது வீட்டுக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்.
Popular Categories



