புது தில்லி: கட்சியில் பிளவு எல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ். ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துளளார். ஆம் ஆத்மி கட்சி கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் ஏற்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியாகின. வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் பேசிவருவதாக கூறப்பட்ட நிலையில், அவர்களை கட்சியை விட்டு விலக்கும் முடிவையோ அல்லது அவர்களிடம் விளக்கம் கேட்கும் முடிவையோ கேஜ்ரிவால் எடுப்பார் என்று கூறப்பட்டது. இதனால், ஆம் ஆத்மி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. இதனை அக்கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் மறுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “கடந்த 2 நாட்களாகவே என்னைப் பற்றியும் பிரசாந்த் பூஷன் பற்றியும் செய்திகள் பரப்பப்படுகின்றன . அடிப்படை ஆதாரமற்ற பிரச்னைகள் கிளப்பப்படுகின்றன. அது சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கிறது. சில சமயம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. சில சமயம் கற்பனைகளை உருவாக்குகிறார்கள். இதனை ஒதுக்கி விட்டு நிறைந்த மனதுடன் பணியாற்ற வேண்டும்” என்றார் அவர். முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி, ஒருநபரில் கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதாக அரவிந்த் கேஜ்ரிவால் மீது பிரசாந்த் பூஷண் குற்றம் சாட்டியிருந்தார்.
Popular Categories



