புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாடாளுமன்ற கேன்டீனில் ரூ. 29 கட்டணம் செலுத்தி மதிய உணவு வாங்கி உண்டார். இது அனைவரையும் அங்கே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கேண்டீனில் எம்.பிக்களுக்கு சலுகை விலையில் உணவு வழங்கப்படுகிறது. இந்த கேன்டீனுக்கு எம்.பிக்கள் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்துக்கு வருவோரும் வந்து உணவு வாங்கி உண்பது வழக்கம். இதுவரை பிரதமர்கள் எவரும் இந்த கேண்டீனில் வந்து உணவு உண்டதில்லையாம். ஆனால் இன்று அதிசயமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கேண்டீனுக்கு வருகை தந்தார். அங்குள்ள மதிய உணவு எப்படி இருக்கிறது என்று சுவைத்துப் பார்க்க ஆசைப்பட்ட மோடி, சாதம், சாலட், பருப்புக் கூட்டு, கூட்டுக் கறியுடன் கூடிய மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்தார். இதற்கான கட்டணம் ரூ. 29. மோடியுடன் குஜராத்தைச் சேர்ந்த 2 எம்.பிக்களும் வந்தனர். நாடாளுமன்ற கேன்டீனில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை குறைவு. மோடி வந்து உணவு உண்டு சென்றதால், கேன்டீனில் இனிமேல் உணவின் சுவையும் தரமும் மேலும் கூடும் என்று பேச்சு எழத் தொடங்கிவிட்டது.
Popular Categories



