புது தில்லி: நாட்டையே உலுக்கிய தில்லி துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், அந்தப் பெண் பலாத்காரத்தின் போது எதிர்ப்பு காட்டாமல் அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது என்று ஆணவத்துடன் கூறியுள்ளார் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங். இந்த நிகழ்வை மையப் படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ஆவணப் படத்துக்காக அவர் கூறிய வார்த்தைகள் இவை. மேலும், பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் தவறான நடத்தையே காரணம் என அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பது தற்போது சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அந்த ஆவணப் படத்தில் அவர் கூறியிருப்பவை…. ஓர் ஒழுக்கமான பெண் இரவு 9 மணிக்கு மேல் வெளியே சுற்றக் கூடாது. பாலியல் பலாத்காரத்துக்கு அதிக பொறுப்புடையவர்கள் பெண்கள்தான். வீட்டுப் பணிகளைச் செய்வது தான் பெண்களின் கடமை. பார்களுக்கும் டிஸ்கோத்தேக்களுக்கும் செல்வது அவர்களின் செயல் அல்ல… பாலியல் பலாத்காரக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பது பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இனி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்கள் அந்தப் பெண்களை உயிரோடு விடமாட்டார்கள். முன்பெல்லாம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படும் பெண்கள் யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்று எண்ணி அந்தப் பெண்களை அதில் ஈடுபடும் ஆண்கள் விட்டுவிடுவார்கள். ஆனால் இனி அது நடக்காது” என்று முகேஷ் சிங் அந்த ஆவணப் படத்தில் கருத்து கூறியுள்ளார். முகேஷ் சிங்கின் இந்தக் கருத்து, பல்வேறு தரப்பினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரச் சம்பவத்தை மையப் படுத்தி, லெஸ்லீ அட்வின் என்பவர் தயாரித்து இயக்கிய ‘ India’s Daughter – இந்தியாவின் மகள்’ என்ற ஆவணப் படத்தில் முகேஷ் சிங் இவ்வாறு கூறியுள்ளார். இப்படி ஓர் ஆவணப் படத்தை தான் இயக்கியதற்கான காரணத்தை விளக்கிய லெஸ்லீ அட்வின், இந்தியாவில் பெண்ணுரிமைக்காக நடந்த போராட்டம் தன்னை பிரமிக்க வைத்ததாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பெண் இறந்து போன நேரத்தில், இந்தியாவில் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், லத்தி தாக்குதலையும் பொருட்படுத்தாமல் பெண்களின் உரிமைக்காக ஆயிரக் கணக்கானோர் தேசிய அளவில் நடத்திய போராட்டத்தை நினைவுகூர்ந்த அவர், பெண்கள் உரிமைக்காக இந்தியாவைப் போல வேறு எந்த நாடும் எழுந்து நின்றதாகத் தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ளார். லெஸ்லீ அட்வின் தயாரித்துள்ள இந்த ஆவணப் படம் சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8ஆம் தேதி பிரிட்டனில் தொலைக்காட்சியில் வெளியிடப் படவுள்ளது.
பலாத்காரத்தின்போது அமைதியாக இருந்திருந்தால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்காது: குற்றவாளி முகேஷ் சிங்
பிறந்த நாள் விழாவில் திரண்டது ரூ.24 லட்சம்: அறக்கட்டளைக்கு வழங்கினார் ஸ்டாலின்
சென்னை: தனது பிறந்த நாள் விழாவில் திரண்ட ரூ.24 லட்சத்தை திமுக அறக்கட்டளைக்கு மு.க.ஸ்டாலின் வழங்கியதாக திமுக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. திமுக சார்பில் வெளியான செய்திக் குறிப்பில், கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 63வது பிறந்த நாள் விழாவில் உண்டியல் மூலமும் திரண்ட ரூ. 24,10,095/- நிதியினை தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வழங்கினார். கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் 63வது பிறந்த நாளினையொட்டி கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திலும் – ஒய்.எம்.சி.ஏ. திடலிலும் நேரில் சயதித்து வாழ்த்துக் கூறிய கழக முன்னணியினர், கழகத் தோழர்கள் மற்றும் இளைஞர் அணியினர், நிதியாக ரூபாய் நோட்டிலான மாலை, கிரீடம், வாள், கேடயம், பொன்னாடை, செங்கோல்,பூச்செண்டு அணிவித்த வகையில், உண்டியல் மூலம் வரப்பெற்ற நிதி ரூ. 24,10,095/-(ரூபாய் இருபத்திநான்கு இலட்சத்து பத்தாயிரத்து தொண்ணூற்று ஐயது மட்டும்). மேற்கண்ட நிதியினை கழகப் பொருளாளர் ஸ்டாலின் தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளைக்கு வழங்கினார். – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை தமிழகம், புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், திருப்பூரில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் 20 மி.மீட்டரும், கோடைக்கானல், கழுகுமலை ஆகிய இடங்களில் தலா 10 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மாநகரைப் பொருத்த மட்டில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில நாள்களாக, தென் மாவட்டங்களில் கோடைக்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக மதுரையில் 97.34 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும் திருச்சியில் 96-ம், பாளையங்கோட்டையில் 94 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது என்றார் அவர்.
மத்திய பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 4.4 லட்சம் கோடி குறைப்பு: வைகோ கண்டனம்
சென்னை: மத்திய பட்ஜெட்டில் சமூக நலத் திட்டங்களுக்கு ரூ. 4.4 லட்சம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக மதிமுக., பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 விழுக்காடு சரிந்துவிட்ட நிலையில், மத்திய அரசு கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 3.70 ரூபாயும் உயர்த்தி இருக்கிறது. பா.ஜ.க. அரசின் சாதனையாக பணவீக்க விகிதம் 5 விழுக்காடு அளவுதான் என்று நிதி அமைச்சர் கூறினார். ஆனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியும், சேவை வரி 12.36 விழுக்காடு என்பதை 14 விழுக்காடு என்று அதிகரித்தும், பட்ஜெட்டுக்குப் பிறகு விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த, சாதாரண ஏழை, எளிய மக்களைப் பற்றிக் கவலைப்படாத மத்திய அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். மோடி அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்தால், கடந்த ஆட்சியின் போது சமூக நலத்திட்டங்களுக்கும், விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கடந்த 2014-15 நிதி ஆண்டில் வேளாண்துறைக்கு 19,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது 17,004 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நிதி 12,107 கோடி ரூபாயிலிருந்து பாதியாகக் குறைக்கப்பட்டு, 6,244 கோடி ரூபாய் ஆகியிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பட்ஜெட்டில் நீர் ஆதாரத் திட்டங்களுக்கு 6,009 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. இதில் தற்போது சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. நில மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 3,759 கோடி ரூபாயிலிருந்து 1,637 கோடி ரூபாய் என்று குறைந்துவிட்டது. மேலும் பல சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் வெட்டப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டங்களுக்கு 2014-15 இல் 18,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு இருந்தது. ஆனால், தற்போது 10,400 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோர் நலன் துணைத் திட்டங்களுக்கான நிதி 13 ஆயிரம் கோடி ரூபாயும், பழங்குடியினர் நலன் துணைத் திட்டங்களுக்கு 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது மதிய உணவுத் திட்டத்துக்கு 11,770 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கான ஒதுக்கீடு 68 ஆயிரத்து 968 கோடி ரூபாய் நிதி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.8 விழுக்காடு மட்டுமே ஆகும். காங்கிரஸ் கூட்டணி அரசு, சமூக நலத்திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து சுமார் 4.4 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைத்துள்ள பா.ஜ.க. அரசு, பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகையை மட்டும் 5.49 இலட்சம் கோடி ரூபாயிலிருந்து 5.89 இலட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறது. இதன் மூலம் மோடி அரசு பெரு நிறுவனங்களால், பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசு என்பதை இந்த நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசுவதா?: திருமாவளவன் கண்டனம்
சென்னை: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசுவதா? என்று இலங்கை அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றிய இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி இராணுவம் அபகரித்த தமிழர்களின் நிலங்கள் தொடர்பாக அப்பட்டமான பொய்த் தகவல்களை அளித்துள்ளார். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஐநா மன்றத்தின் மாண்பைக் கெடுக்கும்வகையில் பொய் பேசியுள்ள இலங்கைப் பிரதிநிதி மங்கள சமரவீரவை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஐநா மனித உரிமை ஆணையரை வேண்டுகிறோம். நேற்று தொடங்கிய ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய அந்த அமைப்பின் ஆணையர் திரு ஸெய்த் ரா அத் அல் ஹுசைன் அவர்கள் “பயங்கரவாதம் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி எந்தவொரு நாடும் தம் குடிமக்களுக்கு மனித உரிமைகளை மறுக்கக்கூடாது” என வலியுறுத்தியிருந்தார். அவர் பேசியதற்கு நேர் மாறாக இலங்கை அரசின் பிரதிநிதியின் பேச்சு அமைந்திருக்கிறது. “2009ஆம் ஆண்டு பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அத்தியாவசியமானது. அது நடத்தப்படவில்லையென்றால் மனித உரிமைகளை மீட்பதோ, தேசத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பதோ முடியாமல் போயிருக்கும்” என இலங்கை வெளியுறவு அமைச்சர் பேசியிருக்கிறார். தமிழர்கள் மீதான இராணுவத் தாக்குதலை இப்படி ஐநா மனித உரிமைக் கவுன்சிலிலேயே நியாயப்படுத்துகிற ஓர் அரசு எப்படி நடுநிலையான விசாரணையை நடத்தும்? எனவே, இப்போதாவது இலங்கையின் வடக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் நியாயத்தை ஐநா மனித உரிமை கவுன்சில் புரிந்துகொள்ளவேண்டும். அதனடிப்படையில் போர்க்குற்ற விசாரணை வரம்பை விரிவுபடுத்தவேண்டும். இராணுவம் அபகரித்துள்ள நிலத்தைப் பற்றிப் பேசிய அமைச்சர் மங்கள சமரவீர “அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் அதில் முதல் கட்டமாக 220 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் ” எனவும் பேசியுள்ளார். வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனைச் சந்தித்து இராணுவம் ஆக்கிரமித்துள்ள 6,500 ஏக்கர் நிலத்தில் ஐந்தாயிரம் ஏக்கரையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கேட்டபோது, அமைச்சர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக மாகாண சபையில் பேசும்போது தெரிவித்திருந்தார். அதற்கு மாறாக, இப்போது மங்கள சமரவீர வெறும் ஆயிரம் ஏக்கர் நிலம் எனப் பேசியுள்ளார். இது முழுப் பூசணிக்காயை ஒரு சோற்றுப் பருக்கையில் மறைக்க முயற்சிக்கும் செயலாகும். தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதலை நியாயப்படுத்தி ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியிருக்கும் இலங்கை அமைச்சரை இந்திய அரசு கண்டிக்க முன்வரவேண்டும். இதற்கு மேலும் இலங்கை அரசின் வார்த்தைகளை நம்பிடாமல் இனப்படுகொலை குறித்த விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை கவுன்சில் உத்தரவிடவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். — என்று கூறியுள்ளார்.
கைத்தறி நெசவாளருக்கு மானியத்துடன் கூடிய கடன் ரூ.1 லட்சமாக உயர்த்தப் பட வேண்டும்: ஜி.கே.வாசன்
சென்னை: கைத்தறி நெசவுத் தொழில் தங்கு, தடையின்றி வளர, தொழிலாளர் நலன் காத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கைத்தறி நெசவாளர்கள் தொழில் தங்கு, தடையின்றி வளர, தொழிலாளர் நலன் காத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கைத்தறி ஜவுளிகள் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. அப்படி வரும் ஜவுளிகளுக்கு அரசு மானியம் சாதாரணக் காலங்களில் 20 சதவீதமும், விஷேசக் காலங்களில் 30 சதவீதமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சாதாரணக் காலங்களில் ரூ.100 ம், விஷேசக் காலங்களில் ரூ. 150 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மானியச் சலுகை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கச்சாப் பொருட்கள் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு போன்ற காரணங்களினால் ஜவுளிகளின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அந்த உச்ச வரம்பை 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும்; 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாகவும் அரசு மானியமாக உயர்த்த வேண்டும் அல்லது உச்சவரம்பு என்பதை தவிர்த்து விற்பனை செய்யப்படும் ஜவுளிகளின் தொகைக்கு முழு மானியம் கிடைப்பதற்கு அரசு ஆணைப் பிறப்பிக்க வேண்டும். தமிழகத்தில் சுமார் 1354 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. கூட்டுறவு சங்கங்களுக்கு 2012 மார்ச் முதல் 2014 ஆகஸ்ட் வரை அரசிடம் இருந்து வர வேண்டிய தள்ளுபடி மானியத் தொகை சுமார் 300 கோடி நிலுவையில் உள்ளது. அதனால் ரிபேட் நிலுவைத் தொகைக் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் கோ-ஆப் டெக்ஸ் துணிகளின் ரகங்களை கொள்முதல் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் வழக்கமாக நடைபெறும். எனவே இந்த கொள்முதல் தொடர்பாக கைத்தறி துறை அதிகாரிகள், கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் / மேலாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டு முத்தரப்பு அலோசனைக் கூட்டம் நடக்க வேண்டும். பின்பு சங்கத் தலைவர்கள் எடுக்கும் முடிவின் படி ஜவுளி ரகங்கள் கொள்முதல் செய்ய உற்பத்தி திட்டம் அமைய ஆவண செய்ய வேண்டும். மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வழங்கும் டிசைன்கார்டு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளையும் உற்பத்தித் திட்டத்தில் சேர்த்துக் கொண்டு கொள்முதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள சுமார் லட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ வசதி, காப்பீடு, முதியோர் ஒய்வூதிய திட்டம் போன்ற அனைத்து வசதிகளும் முறையாக, தங்கு தடையின்றி, கால தாமதமின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கும் கூட்டுறவு வங்கி மூலம் கிடைக்கும் வங்கிக் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைப்பதற்கும் வழி வகுக்க வேண்டும். மத்திய அரசு வர்த்தக வங்கிகள் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் தொகையை ஒரு இலட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவுத் தொழில் வளரவும், சிறக்கவும்; தொழிலாளர்கள் நலன் காத்திடவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ராம் மாதவ் இலங்கை பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 13ம் தேதி இலங்கைக்குச் செல்லவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக, ராம் மாதவ் இலங்கை செல்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாஜகவுக்கு கடந்த வருடம் வந்த ராம் மாதவ், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கையில் இந்திய மீனவர்கள் கைதாகி படும் பிரச்னைகள் இவற்றில் ஆர்.எஸ்.எஸ். பின்புலக் கருத்துகளை முன்வைத்துள்ளார். எனவே, பிரதமரின் இந்த இலங்கை பயணத்துக்கான முன்னேற்பாடுகளைச் செய்ய அவர் அனுப்பப் பட்டுள்ளதாகக் கருதப் படுகிறது. ஏற்கெனவே மோடியின் நியூசிலாந்து பயணத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தவர் ராம் மாதவ் என்பது குறிப்பிடத் தக்கது.
இன்று யாழ்ப்பாணம் செல்கிறார் மைத்திரிபால சிறிசேனா
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்பாணம் செல்கிறார். செவ்வாய்க்கிழமை இன்று முற்பகல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மாகாணசபை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தத் தகவலை இலங்கை அதிபரின் செயலகம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, இன்று பிற்பகல் 2 மணி அளவில் அவர் கிழக்கு மாகாணத்துக்குச் செல்கிறார். அங்கே மக்கள் பிரதிநிதிகளையும் அரசு பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்
சமையல் எரிவாயு மானியத்தைக் குறைக்கும் எண்ணமில்லை : பெட்ரோலியத் துறை
புது தில்லி: சமையல் எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் மானியங்களை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அறிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அளித்த விளக்க அறிக்கை: சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்களின் மீதான மானியங்கள் தொடரும். எனவே பொதுமக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதுபோல, மானியங்களை சீர்படுத்தவும், விநியோகத்தில் உள்ள குறைகளை நீக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். மானியங்களை குறைக்கும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சமையல் எரிவாயு, மண்எண்ணெய் மானியங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் கீழ் நிலையில் உள்ளவர்கள், ஏழைகள் நலன் கருதி வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றுதான் நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். சமையல் எரிவாயு மானியம் நேரடியாக வழங்கும் திட்டத்தின்படி இதுவரை ரூ.6,335 கோடி 11.5 கோடி மக்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் உற்பத்திவரி விதிக்கப்பட்டது, சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், கல்வி போன்றவற்றுக்காக ரூ.40 ஆயிரம் கோடி திரட்டும் வரை மட்டுமே நீடிக்கும்.
ஆர்.எஸ்.எஸ். பிரமச்சாரிகள் குழு குழந்தைகள் பெறுவது குறித்துப் பேச உரிமையில்லை: அக்பருதீன் ஓவைஸி
ஹைதராபாத்: “பிரம்மச்சாரிகளின் குழுவான ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்றவர்களிடம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூற உரிமை இல்லை’ என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் (எம்.ஐ.எம்.) மூத்த தலைவர் அக்பருதீன் ஓவைஸி பேசியுள்ளார். அவரது இந்தக் கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாதில் திங்கள்கிழமை நேற்று நடைபெற்ற அக்கட்சியின் 52ஆவது ஆண்டு விழாவில் அவர் பேசியபோது, அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபடவேண்டும். அவர்கள் மதவாத அரசியலுக்கு எதிராக தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டும். இல்லாவிடில் முஸ்லிம்களின் அடையாளம் அபாயத்துக்கு சென்றுவிடும் என்றார். பாஜக எம்.பி.யான சாக்சி மகராஜ், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னர் பேசியிருந்தார். அவரது பெயரைக் குறிப்பிடாமல், ஓவைஸி இவ்வாறு பேசினார்… ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் திருமணமே செய்து கொள்ளமாட்டார்கள். அது ஒரு பிரமச்சாரிகளின் குழு. அவர்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்கமாட்டார்கள். மனைவி, குழந்தைகளால் வாழ்வில் வரும் பிரச்னைகளை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. அப்படிப்பட்டவர்கள், 4 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று மற்றவர்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். 4 குழந்தைகள் என்ன? 12, 14 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள குடிமக்கள் தயாராக இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை அவர்களால் கொடுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் ஓவைஸி. அவரது இந்தக் கருத்து இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

