Home Blog Page 6347

About us

dhinasari logo news - 2026

Tamil Dhinasari -Tamil News portal

Developed and Maintained by,

SSS Media

***

dhinasari_logo

தினசரி – இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு. தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர் பெயருடன் சேர்ந்தே அடையாளம் காணப்படும் சுதேசமித்திரன், பின்னர் தினமணி ஆகியவை சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும் மரியாதையுடன் அடையாளம் காணப்பட்டது.

தமிழக பத்திரிகை உலக வாசகர்களின் மத்தியில் நெல்லை மண்ணைச் சேர்ந்த மகாகவியும், டி.எஸ்.சொக்கலிங்கமும், ஏ.என்.சிவராமனும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். தினமணி நாளிதழின் துவக்கம் டி.எஸ்.சொக்கலிங்கத்தை மையமாகக் கொண்டிருந்தது.

ஆனால் பின்னாளில், பணியாளர்களின் ஊதியப் பிரச்னை தொடர்பாக நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், உடன் பணியாற்றிய சிலருடன், தினமணியில் இருந்து வெளியேறிய தென்காசி – டி.எஸ்.சொக்கலிங்கம் தினசரி என்ற இதழைத் தொடங்கினார்….ஒரு பத்தாண்டு காலம் அது நல்ல முறையில் வெளிவந்தது.

ஆயினும் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது அவருக்கு! பொருளாதாரச் சிக்கல்கள்.  பின்னாளில் அவர் மீண்டும் தினமணியிலேயே பணிக்குச் சென்றார். அவருடைய சீடரான ஏ.என்.சிவராமன் தூண்டுதலில்.  ஆனால், ஆசிரியர் பொறுப்பில் அன்றி, நிர்வாகப் பணியில்! மணம் செய்து கொள்ளாமல் பத்திரிகை உலகுக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்த டி.எஸ்.சொக்கலிங்கத்துக்கு அவரது இறுதிக் காலம் வரை, ஏ.என்.சிவராமன் தன்னாலான உதவிகளைச் செய்து வந்தார்.

அவ்வாறு தமிழ்ப் பத்திரிகை உலகில் அறியப்பட்ட தினசரி, பின்னாளில் வேறு சிலரால் சிறிய அல்லது பெரிய கால இடைவெளிகளில் நடத்தப் பட்டது. அவ்வப்போது தொடங்குவதும் நடத்துவதும் தொடர்வதும் நிறுத்துவதுமாக இருந்த தினசரி அச்சுப் பதிப்பு தற்போது நின்று விட்டது. அது வெளிவரவில்லை. ஆனால், எங்கள் ஊர்க்காரர் டி.எஸ். சொக்கலிங்கத்தின் மீதான மதிப்பின் காரணத்தால், தினசரி என்ற இந்தப் பெயரைக் கைவிட ஒரு பத்திரிகையாளனான எனக்கு மனதில்லை. தென்காசி டி.எஸ். சொக்கலிங்கம், ஆம்பூர் நா. சிவராமன் ஆகியோரின் மீதுள்ள பற்றின் காரணத்தாலும், இவர்களை முன்னோடிகளாகக் கொண்டு பத்திரிகைத் துறையில் ஈடுபட்ட காரணத்தாலும், இவர்களின் அடியொற்றி என் பெயரிலும் செங்கோட்டையைச் சேர்த்து செங்கோட்டை ஸ்ரீராம் என்றே அமைத்துக் கொண்டு இதழியல் பணியில் ஈடுபட்டு, எழுதியும் வருகிறேன்.

பெரும் பணம் படைத்தவர்களே அச்சு இதழை நடத்தத்  திக்கித் திணறும்போது, என்னைப் போன்ற தனிநபரால் அது சாத்தியமில்லை. எனவே எனக்குப் பழக்கப்பட்ட இணையத்தில் தினசரியை உலவ விட உறுதி கொண்டேன்.

இருப்பினும், பெயர்க் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதால், “தமிழ் தினசரி” என்றோ, “தினசரி இணையம்” என்றோ இதன் பெயரை பதிவிட யோசனை தெரிவித்தனர் நெருங்கிய நண்பர்கள்.

சிறு வயது முதல் நெல்லை மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கேட்டு வளர்ந்த எனக்குள், எங்கள் ஊர்க்காரரான ஆசிரியர்  டி.எஸ்.சொக்கலிங்கமும் ஆம்பூரைச் சேர்ந்த ஏ.என்.சிவராமனும் பெரிதாகத் தெரிந்தார்கள். அவர்கள் பணி செய்த தினமணியிலேயே பணி செய்யும் பேறு எனக்குக் கிட்டியது.

அவ்வாறு இருந்த காலத்தில், அன்றைய தினமணியில் அவர்கள் செய்த புதுமைகள், எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. நல்ல தமிழ் நடை, செய்திகளில் உள்ள தெளிவு யாவும் தினமணியின் அன்றைய ஆசிரியர்கள், ஆசிரியர் குழுவினர், இதழியல் முன்னோடிகள் நமக்கு இட்ட பிட்சையாகக் கொண்டு கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றினேன்… அச்சு மற்றும் இணையத்தில்!

தினமணி இணையத்தில் ஆசிரியப் பணியில் இருந்த போது, பரபரப்பாக இயங்கும் தன்மை, பல்வேறு குணாதிசயங்கள், வட்டார மொழி கலாசார பின்புலம் கொண்ட நிருபர்களுடன் பேசி அவர்களுடன் கொண்ட பிணைப்பு… எல்லாம் புதிய அனுபவத்தைத் தந்தன. அந்த அனுபவத்தை விடாமல் தொடரவும், அச்சு ஊடக பின்புலம் இல்லாமல் கட்டற்ற வகையில் நேர்மையாக செய்திகளைத் தரும் வகையிலும் ஏன் இணைய ஊடகத்தைத் தொடங்கக் கூடாது என்ற என் எண்ணத்தால் எழுந்தது இந்த முயற்சி.

இந்த முயற்சியில், போகப் போக சில மாற்றங்களைச் செய்ய  எண்ணம் உண்டு. குறிப்பாக, செய்திகளின் தரம் அறிந்து தமிழறிவுடன் தங்கள் திறமையை வெளிக்காட்டும் பகுதி நேர செய்தியாளர்கள் குழுவை அமைத்து பயணிக்க திட்டமும் உண்டு.

இது வெறும் இணையம் தானே என்று எண்ணாமல், தங்கள் தமிழறிவையும் நுணுக்கத்தையும் கற்றுக்கொள்ள விழையும் இளைஞர்களுக்கு என் அனுபவங்களைக் கற்றுக் கொடுத்து தயாராக்க ஆசை.

இத்தகைய பின்புலத்தில் தினசரி தமிழ் இணையத்தைத் துவங்கி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். இது தொடங்கும் முன்னதாக, சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இது குறித்து ஒரு செய்தி வெளியிட்டேன். அதற்கு நட்பு வட்டாரம் அளித்த ஆதரவு பிரமிப்பாக இருந்தது. சிலர், எப்போது இதனை செயல்படுத்துவீர்கள், என்னையும் உங்கள் குழுவில் இணைந்து செய்தியாளராகப் பரிமளிக்க வையுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

முதலில் இந்தத் தளத்தை சிறிய அளவில், குறைந்த பகுதிகளுடன் கொண்டு சென்று, பின்னாளில் விரிவாக்கலாம் என்று கருதுகிறேன்.

ஆக, இனி குழு முயற்சியாக “சேர வாரும் ஜெகத்தீரே” என்ற அழைப்புடன் இணையத்தில் செய்திப் பணியைத் துவங்குவோம்!

For Contact:

SSS Media

F – 101, VGN Southern Avenue,
Potheri, Chennai – 603 203
Cell No., : +91 88388 53843
Mail your suggestions to: dhinasarinews@gmail.com

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

ramanuja-moolavar-medium-horz ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் ‘அடிமனத்திலிருந்து உண்மையாக ‘ ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம் செய்தாலோ சாதி வேறுபாடு ஒழிந்துவிடுமா? சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் இறை உணர்வுக்கு ஆட்பட்ட அடியார்களுக்கு மட்டுமே சாதி தொலைந்திருக்கிறது. வெளி வேஷதாரிகள் சுயநலமிகளாக இருந்தனர் என்பதை ஒதுக்கி விட்டு இறையடியார் வாழ்வையே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி எத்தனையோ அடியார்கள் இருந்து உணர்த்திய போதிலும் வைணவ மார்க்கம் பாரதமெங்கும் தழைக்கச் செய்த மகான் ராமானுஜரின் வாழ்வு உணர்த்திய விதம் வெள்ளிப்படையானது. அவர் வாழ்வின் இரண்டு உதாரண வெளிப்பாடுகள்… [su_heading size=”15″]ஸ்ரீராமானுஜர் வாழ்வில் இரு சம்பவங்கள்[/su_heading] உறையூர் சோழராஜாவிடம் மெய்க்காப்பாளனாக இருந்தவர் பிள்ளை உறங்காவில்லி. அவர் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடை பிடித்துக்கொண்டு போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் மனையாளின் பின்னே சேவகனாய்ச் சென்ற இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே? ஒரு நாள் நண்பகல். காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற பிள்ளை உறங்காவில்லியின் செயலைக் கண்டார். இப்படியோர் பெண்பித்தரோ? என்று வியந்து, அவரைத் திருத்திப் பணிகொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரிடம் அவர் செயல் குறித்து வினவ, அவரோ இவள் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன் என்றார். எம்பெருமானார் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார்… இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக் காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்… கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ? என்றார். சொல்லிவிட்டு, திருவரங்கம் அரங்கனின் சன்னதி நோக்கி அழைத்துச் சென்றார். அரவணைத் துயிலும் அரங்கனின் பேரழகை , கண்ணழகைக் காட்டி, அந்த அழகை அனுபவிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன. [su_pullquote]பங்குனி பிரம்மோற்சவ தீர்த்த வாரி சமயம் நீராடப் போகும் போது. முதலியாண்டான் என்ற சீடர் கரம் பற்றி நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்து கரையேறும்போது பிள்ளை உறங்காவில்லி தாசரின் கரம் பற்றி எழுவார். [/su_pullquote] பங்குனி பிரம்மோற்சவ தீர்த்த வாரி சமயம் நீராடப் போகும் போது. முதலியாண்டான் என்ற சீடர் கரம் பற்றி நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்து கரையேறும்போது பிள்ளை உறங்காவில்லி தாசரின் கரம் பற்றி எழுவார். இது வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது என்றும் பிராமணன், கீழ்குலத்தோனைத் தொடுவது தவறல்லவோ என்று கூறி சீடர்கள் ராமானுஜரின் செயலுக்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர் இப்படி பதிலளித்தார்… எத்தனை தான் ஞானம் பெற்றாலும் உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணமே ஆணவமாக நின்று, இறைவனை அடையும் நிலையான அடியார்க்கு அடிமை என்ற நைச்யம் (தாழ்ந்த நிலை) பெற முடியாமல் போய் விடுகிறது. எனவே இப்பிறவியால் உண்டான அகங்காரத்தை, அகங்காரமே சிறிதுமற்ற இந்த அடியவரைத் தீண்டி உடல் சுத்தி செய்து கொள்கிறேன்… என்றார். பிறப்பின் பெருமையால் ஒருவன் அகங்காரம் கொள்வதோ, அல்லது மனத்தாழ்ச்சி கொள்வதோ தகாது. இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மிக உள்ளமும் மகான் ராமானுஜரின் இந்த உபதேசத்தை மனத்தில் கொள்ள் வேண்டும். பிள்ளை உறங்காவில்லி தாசரின் இந்தக் கதையிலிருந்து இன்னொரு செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. பிள்ளை உறங்காவில்லி மனையாளின் பின்னே மோகத்தால் சுற்றி வந்தார். எம்பெருமானார் அவரை அரங்கனிடம் ஆற்றுப்படுத்திய பிறகு, சோழராஜனிடம் செய்து வந்த சேவையை விட்டு, அரங்கன் மேல் பக்தியும் அன்பும் கொண்டு கையில் வாளேந்தி பெருமாளின் விக்கிரகத்திற்குப் பாதுகாவலாய் செல்லத்தொடங்கினார். இவர் பரமபதித்த போது, அவருடைய திருமேனிக்கு பொன்னாச்சியார் கண்ணீர் உகுக்காமல் சடங்குகளை உடனிருந்து ஆற்றினார். அத்திருமேனி கொண்டு செல்லப்பட்டு அவர் பார்வையிலிருந்து மறையும் வரை இருந்து, மறைந்ததும் தன் உடலை விட்டு உயிர் பிரியப் பெற்றார். இந்த ஆச்சர்யத்தை அறிந்து இரு திருமேனிகளையும் ஒன்றாய்த் தகனம் செய்தார்கள். இருவரும் கொண்ட அன்பின் ஆழம் அத்தகையது. பிள்ளையுறங்காவில்லி மனைவிதாசனாய் இருந்தபோது மனைவியின் பின் இவர் சென்றார். அவரே அரங்கன் தாசனாய் ஆனபின்பு, பொன்னாச்சியார் இவர் பின்னே சென்றார். இறை பக்தியின் பெருமை அத்தகையது. இதற்குக் காரணமாக இருந்தது, எம்பெருமானாரின் திருவுள்ளம். ராமானுஜரின் இன்னொரு வாழ்வியல் செய்தி…. [su_highlight]ஆளவந்தாரின் எண்ணப்படி ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து வைத்த பெரிய நம்பிகள், தம் ஆசார்யரான ஆளவந்தாரின் இன்னுமொரு சீடரான (தாழ்குலத்தைச் சேர்ந்த) மாறனேரி நம்பிக்கு, ராஜபிளவை என்ற புண்ணைக் கழுவி மருந்திட்டு, உணவும் அளித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பிராமணர்கள் நிந்தையை அவர் பொருட்படுத்தவில்லை.[/su_highlight] மாறனேரி நம்பி திருநாடு அலங்கரித்த போது, ஞானத்தால் சிறந்த அந்தணர்க்குரியதான ப்ரஹ்மமேத சம்ஸ்காரம் என்ற சிறந்த நிலையால் பள்ளிப்படுத்தினார். இதற்கு, வர்ணாஸ்ரம தர்மத்தை மீறி இப்படிச் செய்யலாமோ? என்று பெரிய நம்பிகளிடம் ராமானுஜர் கேட்டார். அதற்கு பெரிய நம்பிகள், “”சாமான்ய தர்மத்தை நிலை நாட்டுகிற சக்ரவர்த்தித் திருமகனான ராம பிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு இந்த சம்ஸ்காரத்தைச் செய்தாரே! அவரிலும் நான் பெரியனோ? அல்லது ஜடாயுவைக் காட்டிலும் மாறனேரி நம்பி சிறியரோ? இது கிடக்கட்டும். சாமான்ய தர்மத்தைக் கொண்ட யுதிஷ்டிரன் விதுரருக்கு இதைச் செய்யவில்லையா? தர்மபுத்திரரைக் காட்டிலும் நான் பெரியவனோ? அல்லது விதுரரைக் காட்டிலும் இவர் சிறியவரோ? சரி இதுவும் இருக்கட்டும்… ஆழ்வார், “பயிலும் சுடரொளி” என்ற பதிகத்திலும், “நெடுமாற்கடிமை” என்ற பதிகத்திலும் பாகவதர்களின் சிறப்பைக் கூறி, “எம்மையாளும் பரமர்” என்றும், “எம் தொழுகுலம் தாங்களே” என்றும் கூறியவை எல்லாம் வெற்று வார்த்தைகளேயோ? அவை அனுஷ்டிக்கத் தக்கவை அன்றோ?” என்று சொல்லி, (தாழ்குலத்தோராயினும்) பாகவத உத்தமர்கள் எவ்வகையிலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்களே என்று கூறி நிலைநிறுத்தினார். இது எம்பெருமானாருக்குத் தெரியாததல்ல! ஆயினும் தகுந்த பெரியோர் மூலமாக, தம்மைச்சேர்ந்தவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற அவாவினால் இப்படியோர் நிகழ்வை நிகழ்த்தினார். பாகவத உத்தமர்களுக்குள்ளே சாதியால் உயர்வு தாழ்வு இல்லை என்பதே ராமானுஜரின் இவ்விரு வாழ்வியல் செய்திகளும் சொல்லும் உண்மை… கி.பி.1017 இல் அவதரித்த மகான் ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் உற்ஸவங்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை உலகுக்கு எடுத்துச் சொல்லும் கடமை தமிழர் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு நாளில்….

Vedaranyam_salt_march_April_19302014 ஏப். 30 –  இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான். நம் நாட்டில் நடைபெற்ற சுதந்திர வரலாற்றுப் போர் நிகழ்ச்சிகளை நினைவுகூர்தல் என்பது, நமது அடுத்த சந்ததிக்கான தேசப் பற்றை மனதில் பதியச் செய்வது. நம் நாடு எத்தகைய இன்னல்களைத் தாண்டி, இந்த நிலைக்கு வந்துள்ளது என்பதை உணரச் செய்வது. இன்று இந்தச் செய்தியை இணையத்தில் பதிவு செய்திருந்தோம். வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக 85ம் ஆண்டு நினைவு By அம்பிகாபதி, வேதாரண்யம் First Published : 30 April 2014 10:34 AM IST வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வின் 85வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து, திருச்சியில் இருந்து சென்ற வேதாரண்யம் உப்புசத்தியாக்கிரகக் குழுவினர் வேதாரண்யம் கடல் பகுதியில் உப்பு அள்ளி, அன்றைய சுதந்திரப் போராட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தனர். ஆங்கிலேயர் கடந்த 1930 ஆம் ஆண்டில் இந்தியர்கள் கடல் பகுதியில் உப்பு அள்ள விதித்த கட்டுப்பாட்டுத் தடையை எதிர்த்து காந்திஜி தலைமையில் தண்டி யாத்திரை நடைபெற்றது. அதுபோல் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் உப்பு யாத்திரை திருச்சியில்  இருந்து வேதாரண்யம் வரை நடைபெற்றது. இந்த நிகழ்வின் 85 ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில், வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக குழுவின் தலைவர் செல்வகணபதி, சர்தார் வேதரத்தினத்தின் பெயரன் வேதரத்தினம் உள்பட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், குருகுலம் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், காந்தியவாதிகள், காந்தியவாதி சசிபெருமாள் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். – மேற்கண்ட இந்தச் செய்திக்கான கருத்தாக ஒருவர் இவ்வாறு பதிவு செய்திருந்தார்…. //வேலை வெட்டியில்லாத வெட்டிப் பயலுகளுக்கு வேற வேலையைச் சொல்லுங்கள் பார்ப்போம். ஏன், காந்தி ஒத்துழையாமை இயக்கம் கூட தான் நடத்தினார், அதையும் நடத்துங்களேன்.// – இந்தக் கருத்தினைப் படித்த எனக்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியக் கட்டமான உப்புச் சத்தியாக் கிரக நிகழ்வின் பின்னணி  நெஞ்சில் நிழலாடியது. உப்பு சத்தியாகிரகம் நடந்து 85 ஆண்டுகளில் இப்போது இந்தியா இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால், அதன் மகத்துவம் புரியும். நமது மத்திய அரசு சாதாரண உப்பு விற்பதற்குத் தடை விதித்தது. பன்னாட்டு நிறுவனங்கள், இப்போதெல்லாம் சாதாரண சில்லரை விற்பனைத் துறையில்கூட நுழையத் தொடங்கியாயிற்று. பன்னாட்டு நிறுவனங்கள் நல்ல லாபம் ஈட்டுவதற்கும் அரசுக்கு ஒரு வகையில் பங்கு கிடைக்கவும் இன்றைய மத்திய அரசு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது. இதற்காக அரசு தங்கள் கைவசம் உள்ள விளம்பரத் துறையின் மூலம் பலத்த பிரசாரம் ஒன்றைச் செய்து வந்தது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, அயோடின் கலந்த உப்பின் அவசியம் பற்றி பிரசாரம் செய்து, அதைத் தவிர வேறு சாதாரண உப்பு வாங்கி சாப்பிட்டால், கைகால் வீக்கம் வரும், உடல் வலு குன்றும் என்றெல்லாம் பயமுறுத்தப் பட்டு வருகிறது. அரசின் இந்த விளம்பர உத்தியால் பாதிக்கப்பட்டது சாதாரண உப்பு வியாபாரிகள்தான். சாதாரண உப்பு தயாரிக்க எந்த வித மூலதனமும் தேவையில்லை. அயோடின் உப்பு தயார் செய்ய மூலதனம் வேண்டும். அதற்கு அந்த ஏழை உப்பு உற்பத்தியாளர்கள் எங்கே போவார்கள். தூத்துக்குடியில் சென்று பார்த்தால், இவர்களின் வாழ்க்கைத் தரமும் நிலையும் நமக்குப் புரியவரும். அரசின் இந்த முடிவுக்குப்  பின்னர் சாதாரண உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்க்கை நிலை கடினமாகத்தான் போனது. பொதுமக்களாகிய நம்மை எடுத்துக் கொண்டால்கூட முன்பெல்லாம் உப்பு வாங்க ரூ.2 முதல் ரூ.5 வரை செலவு செய்தோம். 20 வருடங்களுக்கு முன்னர் என் கிராமத்தில் பெரிய உப்பு மூட்டையை சைக்கிளில் வைத்துக் கொண்டு வீதிகளில் சுற்றி வரும் வியாபாரியிடம் ஒரு படி (பக்கா) ரூ.2க்கும் 3க்கும் வாங்கியதும் உண்டு. ஆனால், இப்போது அதற்குப் பதிலாக ரூ.15/- முதல் ரூ.20 வரை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டுச் சென்று 67 ஆண்டுகள் ஆகியும், நமது அடிமைத்தனம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. உப்புக்கு வரி விதித்ததற்காக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் தண்டி யாத்திரை நடந்தது. ஆனால் சுதந்திர இந்தியாவில், நமது அரசே, நம் நாட்டின் சாதாரண உப்பை விற்கத் தடை விதித்தது. அறிவுஜீவிகள் சிலரோ அயோடின் கலந்த உப்பையே விற்கவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அயோடின் உப்பு சாப்பிடுவதால் மட்டுமே குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகமாகும் என்கிறது அரசுத் தரப்பு. அப்படியானால் இத்தனை ஆண்டுகளாக சாதாரண உப்பைச் சாப்பிட்ட நமது முன்னோர்கள் புத்திக் குறைபாடுடையவர்களாக, மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவா இருந்தார்கள்? உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தால் தைராய்ட் நோய் வரும் என்றது அரசு. மேலும் அதிகமாக உடலில் அயோடின் சத்து இருந்தாலும் பலதரப்பட்ட நோய்கள் வரத்தான் செய்கின்றன. அயோடின் மனிதனுக்கு மிகவும் அவசியம் என்று அரசுத் தரப்பிலிருந்து எந்த நிரூபணமும் தரப்படவில்லை! மருத்துவம் நன்கு அறிந்திவர்கள், நாம் தினமும் உண்ணும் உணவிலிருந்தே ஒரு மனிதனின் உடலுக்குத் தேவையான அயோடின் சத்து கிடைக்கிறது என்கிறார்கள். 1920 இல் முதலில் அமெரிக்கா அயோடின் கலந்த உப்பைத் தயார் செய்தது. 1950 இல் அந்த நாட்டுக் கம்பெனிகளின் கவனம் சீனா, மற்றும் இந்தியாவின் மீது திரும்பியது. அயோடின் உப்பு இல்லாமல் உண்பதால் உலகமே ஆபத்தை நோக்கிச் செல்கிறது என்று பிரசாரம் செய்தனர். அவர்களுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப் ஆகியவையும் கைகோத்தன. 1997 இல் நமது நாட்டில் முதலில் சாதாரண உப்பு விற்க தடை வந்தது. அந்த நேரத்தில் சிலர் அயோடின் உப்பை பயன்படுத்தத் துவங்கினார்கள். முதலில் இதை 71% மக்கள் வாங்கத் தொடங்கி நாளடைவில் அது குறைந்து அதிகபட்சமாக 22% பேர்தான் அந்த உப்பை பயன்படுத்தினர். வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசு, சாதாரண உப்பை விற்கும் தடையை நீக்கி, அதை எல்லோரும் பயன்படுத்தலாம் என்ற நடைமுறையை மீண்டும் அமலுக்குக் கொண்டு வந்தது. ஆனால் அது சிறிது நாட்களிலேயே வந்த வழி போனது. சாதாரண உப்பு விற்கும் திட்டத்திற்கு தடை விதித்தது ஐ.மு.கூட்டணி அரசு. மீண்டும் ஆங்கில ஆட்சியின் எச்சம்… அதன் திணிப்பு! நம்மையுமறியாமல்.. நாமாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டு!

இலங்கை அழிந்ததேன்..? இரவி மறைந்ததேன்?

nandalalaதமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்… அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை! கவிஞர் நந்தலாலா – நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்… கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும். ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான். ஒரு நாள் காலை… பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் சுற்றுப் புறச் சூழல் மறந்து! அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார். சிறுவயதில் சொல் விளையாட்டு எங்களுக்கும் அத்துபடிதான். எல்லாம் நம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்துப் பழகியிருக்க வேண்டும்… அந்த வாய்ப்பு கிடைத்தது நான் செய்த புண்ணியம். கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி? அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்… அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு! பெரியவர் கேட்பாராம்… “இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?” இதற்கான ஒற்றைச் சொல் பதில் – “இராமன் தாரத்தால்”! அதெப்படி…? இலங்கை அழிந்தது – இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது – இரா மந்தாரத்தால்! இன்னொன்று.. அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்? இதற்கான பதில்… “பார்ப்பான் இல்லாமையால்!” பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்து வருகிறது! தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்… இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்! – உள்ளத்தில் உழன்று கொண்டிருக்கிறது இந்த வாசகம்!

பேர் ஆசை; பேராசை!

kural பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து  பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும். வயது 23. அதுவரை பெரிதாக எதுவும் எழுதி அச்சில் வந்துவிடவில்லைதான். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வருடாந்திர தொகுப்புகளில் கவிதைகளும், வானியல், கணிதம் குறித்த கட்டுரைகளும் வந்திருந்தன. ஆனால் இதழ்களில் அப்படி ஏதும் நான் அதுவரை முயற்சி செய்யவில்லை. அப்படியாக இதழியல் துறைக்கு வந்த புதிது என்பதால், எனக்குள்ளும் நம் எழுத்தை அச்சில் பார்க்க மாட்டோமா என்று இருந்தது. வழக்கம்போல் சிறு கவிதைகள் எழுதினேன். இரு வரிகளில் அமைந்த புதுக் குறள் எனும் கவிதை எழுதினேன். அவற்றில் தளை தட்டாமல் குறள் வெண்பாவெல்லாம் அப்படி ஒன்றும் சரியாக அமைந்திருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இருந்தாலும் கருத்தொடு நின்றது. அப்படி ஒரு புதுக்குறள் கவிதையை கணினி அச்சுக் கோர்ப்பவர் அடித்து, மெய்ப்பு திருத்த (புரூஃப் பார்க்க) வைத்திருந்தார். அப்படியாக அச்சில் வந்த அந்தப் புதுக்குறள்.. பொய்யர்தாம் என்றேனும் மெய்கூறின் அம்மெய்யும் பொய்யெனக் கருதப் படும். நாகலிங்கம் என்று ஒரு பெரியவர். சினிமாத் துறை பழக்கமுள்ளவர். திரைக்கதைகளை செப்பனிட்டுத் தரும் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் அவர் பழுத்த அனுபவம் உள்ளவர் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அவருக்கு வயது 75ஐத் தொட்டிருந்தது. இந்த மெய்ப்பைப் பார்த்தவர் வெடுக்கெனச் சிரித்தார். எனக்கோ, ஏதோ தவறு நேர்ந்துவிட்டதோ என்று உள்ளம் பதறியது. கலவரத்துடன் அவர் முகம் பார்த்தேன்…. சிரித்தபடியே என்னிடம் கேட்டார்… “1330 குறள்களை எழுதின அவரோட பேர் என்ன தெரியுமா?” கேட்டார் சலனமில்லாமல். “திருவள்ளுவர்” என்றேன். “அது நாமாக வைத்த பெயர்… அவரோட பேர் என்ன தெரியுமா?” “தெரியாது.” “1330 குறள் எழுதின அவரே தன் பேரை எங்கயுமே சொல்லிக்கலை… நீ ஏதோ குறள்னு ஒண்ணு எழுதிட்டு…. அந்தக் கவிதை அச்சாகியிருக்கற 10 பாயிண்ட் லெட்டர் சைஸை விட பெரிதாக உன் பேரை 14 பாயிண்டில் போட்டிருக்கே….” எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வேதம்புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில் சிறுவன் அங்கயும் இங்கயும் அடித்து திருப்பும் சத்தமும் காட்சியும்தான் மனதில் ஓடியது. எழுத வந்த துவக்கத்திலேயே பேர் ஆசையை விட்டுவிட்டேன். பேராசையையும்தான்! எழுத்தாளன் என்ற கர்வத்தை மூட்டை கட்டி பரண் மேல் போட்டு விட்டு, பத்திரிகையாளன் என்ற ஏணிப்படியாய் என்னை மாற்றிக் கொண்டேன். அந்தத் துவக்கம்… எனக்குள் பெரும் மாற்றத்தைத் தந்தது. அதற்குக் காரணமாய் அமைந்தவர் நாகலிங்கம் தாத்தா… அவரை நன்றியுடன் இப்போதும் நினைவு கூர்கிறேன்..!

கண்கள் எனும் கவிதைத் தூரிகை

artistMaruthi கண்கள் – உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை! கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்! ஆணோ, பெண்ணோ… ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே உதவுகின்றன! அதுவே பேசும் உண்மையையும் பொய்யையும் பிரித்துக் காட்டிக் கொடுத்துவிடும்! எனக்கும்கூட கண்களைப் பார்த்துப் பேசுவதே மிகவும் பிடிக்கும். சிலர் கண் கூர்மைக்கு அஞ்சி பார்வையை அங்கே இங்கே முகம் திருப்பிப் பேசுவர். அப்போது தெரிந்துவிடும்…! சரி விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஓவியர்கள் இங்கே பலர் உண்டு. ஒவ்வொருவரும் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள். அந்தப் பட்டியலில் எனக்குப் பிடித்த பிரதான இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர் ஓவியர் மாருதி! அவருடைய ஓவியங்கள் மாத இதழ், நாவல்களின் அட்டைகளை அலங்கரித்ததுண்டு. சிறு வயதில் குற்றால முனிவர் ரசிகமணி டி.கே.சி.யை உணர்வுபூர்வமாகப் படித்ததாலோ என்னவோ… கவிதையோ, படமோ, ஓவியமோ.. தெய்வச் சிலையோ… அழகு முகமோ… எனக்குள்ளும் ரசிகத் தன்மை புகுந்து விடும். அலங்காரத்தை ரசிப்பேன். அழகுக் கவிதை புனைவேன். ஓவியத்தில் நிஜத்தைப் போல் பளிச்சிடும் தோடு, அசையும் குண்டலம், ஆடும் ஜிமிக்கி, பளீரிடும் மூக்குத்தி, பார்த்துச் சிரிக்கும் புல்லாக்கு… அட இதெல்லாம் சூடிய முகத்துக்கு ஏற்ற அழகை வெளிப்படுத்துகிறதா என்று தோன்றும். சில ஓவியர்கள் திருத்தமாக இவற்றை வெளிப்படுத்தும்போது… என்ன ஒரு வசீகரம்! அழியாத அழகாக ஓவியம் என்னமாய் மிளிரும்!? ஓவியர் இளையராஜாவின் ஓவியத்தைக் காணும்போதெல்லாம் இந்த ஆச்சரியம் என்னில் தலைக்கட்டும். இயற்கையாக எடுத்த புகைப்படத்தை வண்ணத் தூரிகையால் உயிர்கொடுத்ததுபோல் அவ்வளவு பொலிவு! ஓவியர் இளையராஜாவிடம் மனம் திறந்த பாராட்டைச் சொல்லி, அவரின் கைவண்ணத்துக்கான ரகசியத்தையும் வினவியிருக்கிறேன். இப்படி… ரசிக்கத்தக்க அழகுப் பெண் முகத்தை கண்களிலேயே காட்சிப் படுத்திவிடுபவர் – ஓவியர் மாருதி. பல நேரங்களில் நடிகை மீனாவின் முகத்தை அது நினைவூட்டும். நாலைந்து வருடங்களுக்கு முன்னர் (விகடனுக்காக) மாருதியிடம் படம் வரைந்து வாங்கச் சென்றிருந்த ஒரு தருணத்தில் அவர் கேட்டார்… ஏன் ஸ்ரீராம்… இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே? நான் சொன்னேன்… நீங்க படம் வரைவீங்களே… ஒரு அழகான முகம்..! எத்தனை படம் வரைந்தாலும், அந்த அழகும் வசீகரமும் மட்டும் மாறவே மாறாதே! அதுபோல்… ஒரு முகத்தை இதுவரை நான் பார்க்கவில்லை! பார்த்தால் உடனே செய்துகொள்கிறேன்..! என் உளக் கிடக்கையும் அவருக்கான பாராட்டும் ஒருசேர வெளிப்படும்.. அவர் முறுவலிப்பார். ம்… நல்ல அழகுக் கலைஞன். ரசனைக் கலைஞன். இந்தப் படமும் அவரிடம் கேட்டு வரைந்து வாங்கியதுதான்! இது தினமணி தீபாவளி மலருக்காக சிலம்புக் காட்சிக்கு அவர் வரைந்த ஓவியம். இதிலும் கண்கள் சொல்லும் கவிதையை நான் ஒவ்வொரு கணமும் ரசித்து வருகிறேன். என்ன ஒரு இறுமாப்பு!? கனிவும் காதலும் ஒருங்கே காட்டும் தூரிகையின் நளினம்! பெண்ணுக்கு புருவம் நேராக இருக்கக் கூடாதாம்! வில் போன்று வளைந்த புருவம் – அழகின் வெளிப்பாடு. கருவிழிக்குக் கவிதை உயிர் கொடுக்கும் கருவே இந்தப் புருவம்தானே! கண்களை அகல விரித்து ஆச்சரியத்தால் அழகை விழுங்குகிறேன்! அது உள்ளத்தின் உண்மையை எனக்கு உணர்த்துகிறது! கண்களைத் திருப்பிக் கொண்டோ, சுவரைப் பார்த்துக் கொண்டோ, நாம் பேசும்போது, சொல்லவந்ததை மறைத்து உள்ளத்தைப் பூட்டிவைத்து உதட்டால் வெளிப்படுத்துகிறோம். இப்படி… வேறு எங்கோ வெறித்துக் கொண்டு பேசுபவரின் பேச்சை பெரும்பாலும் நான் உள்வாங்கிக் கொள்வதில்லை! அவர்கள் உள்ளத்தில் இருந்து உண்மை வெளிவருவதில்லை என்பதால்! உண்மை இல்லாத ஒன்றை எதற்காகக் கேட்டுக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?!

தரிசனம் : வல்லக்கோட்டை முருகன்

vallakkottai_murtis கடந்த சில ஆண்டுகளாக ஒரு விநோதப் பழக்கம் எனக்கு… ஒவ்வொரு தமிழ்ப் புத்தாண்டு (சித்திரை விஷு) அன்றும், முதல்முறையாக ஒரு முருகன் கோவிலுக்குச் செல்வது என்பது… அதாவது அதுவரை பார்த்திராத, அன்றுதான் முதல்முறையாக அந்தக் கோவிலுக்குச் செல்வது… என்பது ஒரு பழக்கமாக கைக் கொண்டிருக்கிறேன். சென்னைக்கு வந்த இந்தப் பதினைந்து ஆண்டுகளில், சென்னையைச் சுற்றியுள்ள முருகப் பெருமான் தலங்களுக்கு இப்படிச் சென்றுவந்திருக்கிறேன். வெளியில் எங்காவது செல்ல இயலாவிட்டால்… சுற்றுப் புறத்தில் அருகே இருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுவது… முருகன் என்ற தமிழ்க் கடவுளுக்கு தமிழ்ப் புத்தாண்டு அன்று அர்ச்சனை செய்து போற்றி வழிபட்டு வருவது நல்லதுதானே.! இப்படி ஆண்டார்குப்பம், சிறுவாபுரி, அறுபடைவீடு முருகன், திருப்போரூர், கந்தக் கோட்டம், ஏழாம்படைவீடு என்று அன்பர்கள் அழைக்கும் திருவல்லிக்கேணி முருகன், குன்றத்தூர், குமரன்குன்றம், மயிலம்  உள்ளிட்ட தலங்களுக்குச் சென்று வந்துள்ளேன். ஆனால், திருத்தணியும் வல்லக்கோட்டையும் இந்தப் பட்டியலில் டிக் செய்யப்படாமல் வெகுநாட்களாக அப்படியே இருக்கிறது. அறுபடை வீடுகளில் இன்னும் நான் தரிசனம் செய்யாமல் இருப்பது திருத்தணி… ஆனால், இம்முறை கட்டாயம் வல்லக்கோட்டை சென்றாக வேண்டும் என்று ஒரு விருப்பம். நேற்றே தயாராகி விட்டேன். நானும் வருகிறேன் என்றார் நண்பர் சரவணன். இருவரும் இன்று காலை வல்லக்கோட்டைக்குச் சென்றோம். முருகப் பெருமானின் அழகு வசீகரிக்கும் அழகு. இன்று முத்தங்கி வேறு சாத்தியிருந்தார்கள். வேலும் மயிலும் சேவற்கொடியுமாய் அழகனின் தரிசனம் முடித்து வழக்கம்போல் கோயில் செயல் அலுவலரைச் சந்தித்தேன். மிக மிக வித்யாசமாக, இதுவரை கோயில் செயல் அலுவலர் என்ற தன்மையுடம் இருக்கும் மற்ற எல்லா நபர்களிடத்தும் இருந்து விலகி, கருத்து விதைக்கத் தொடங்கினார். பேச்சின் இனிமையும், இலக்கிய ஆர்வமும் என்னை அவரின் பின்னணி குறித்து ஆராயத் தூண்டியது. முத்துராஜ் என்பது பெயர். குருப் 1 தேர்வெழுதி இப்போதுதான் நேராக வல்லக்கோட்டைக்கு வந்திருக்கிறார். சிவகங்கை மண்ணின் மைந்தர். சட்டம் படித்தவர். துளிர் என்ற இதழில் இதழாளராகவும் பணியாற்றியுள்ளார். என்னிடம் எழுத்தாளர் ஜெயமோகனின் சிற்சில எழுத்துக்கள் குறித்து சிலாகித்தார். நம் கை சும்மா இருக்குமோ? உடனே ஜெயமோகன் செல் அழைப்பில் வந்தார். அவருக்கு வழக்கம் போல் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து விட்டு, அவரின் வாசகராக முத்துராஜ் சொன்ன பாராட்டுகளையும் ஜெ.மோ.வுக்கு தெரிவித்து விட்டு, அவரிடமே கைபேசியைக் கொடுத்தேன். அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. பின்னே…. எழுத்தாளனும் வாசகனும் ஒருவர் ரசனையை ஒருவர் பாராட்டினால்தானே…!! ஆக… இன்று வல்லக்கோட்டை முருகப் பெருமானை தரிசிக்கப் போய்.. ஒரு இலக்கிய தாகம் மிகுந்த கோயில் செயல் அலுவலரையும் சந்தித்து வந்தாயிற்று. வரும் வழியில் வழக்கம்போல், சித்திரையில் செய்ய திருவாதிரை என்று இந்த நட்சத்திரத்துக்கே பெருமையைத் தேடித் தந்த எம்பெருமானார் ஸ்ரீராமானுஜரின் அவதாரத் தலத்தையும் கும்பிடு போட்டுவிட்டு, ஸ்வாமியின் அனுக்ரஹம் பெற்று வீடு வந்து சேர்ந்தேன்…

கி.வா.ஜ. பிறந்த நாள் நினைவாக…

KiVaJa என்னவோ படித்துவிட்டு, என்னவோ வேலை செய்து, ஏதோ ஓர் உந்துதலில் திடீரென ஒரு நாள் பத்திரிகை அலுவலகத்தில் பணிக்காகக் கால் வைத்த எனக்கு இதழியல் நுணுக்கங்கள் அவ்வளவாய்த் தெரியாதுதான். ஆனால், மிகக்  குறுகிய காலத்திலேயே சென்னை வாழ்க்கை சில பல படிப்பினைகளைத் தந்தது என்றாலும், மூத்த இதழாளர்களின் வழிகாட்டலும் அரவணைப்பும் எனக்குக் கிடைத்தது பெரும் பேறு. ஒரு சிலரை பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில்தான்  படித்திருந்தேன் என்றாலும், அவர்கள் தொடர்புடையவர்கள் அல்லது சீடர் குழாமை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதும் பெரும் பேறுதான். இலக்கிய யாகம் வளர்த்த தென்காசியில் ரசிகமணியின் பெயரனார் தீப.நடராஜன் உள்ளிட்டோருடன் ஒரு தொடர்பு இருந்ததென்றால், நம் ஊர்க்காரர் என்று சொல்லிச் சொல்லியே உரம் ஏற்றப்பட்ட டி.எஸ்.சொக்கலிங்கமும் ஏ.என்.சிவராமனும் பத்திரிகையியல் தாகத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். இருந்தாலும், தமிழ்த் தாத்தா என்று உ.வே.சா. உரம் ஏறிய அளவுக்கு அவர் சீடர் பெயர் மனத்தில் பதியாமல் போனது. பள்ளிக்கூடப் புத்தகத்தில் அவர் பெயர் அழுத்தமாய் ஏறாதது ஒரு காரணமாக இருக்கலாம். ஆயினும் ஓரளவு வயது வளர்ந்த நிலையில், சிற்சில ஏடுகள் அந்தப் பெயரைப் பளிச்சிட்டுக் காட்டின. பன்னிரண்டு வருடங்களுக்கு முன் கலைமகள் காரியாலயத்தில் காலடி வைத்த பிறகுதான் கி.வா.ஜ., என்ற அறிஞரின் பெருமையும் திறமையும் எனக்குள் பிடிபட்டது. அதுவரை வெறுமனே கி.வா.ஜ. என்றால் அவரின் சிலேடைகள் என்று மட்டுமே பதியப் பட்டிருந்தது. ஆனால், தமிழ் உலகுக்கு அவர் அளித்த கொடைகளைப் பார்க்கையில், எட்டவியலாத் தொலைவுதான் என்று தோன்றியது. மஞ்சரி இதழாசிரியராக இருந்த லெமன் என்ற லெட்சுமணன் ஐயாதான், அப்போது உடன் இருந்த எனக்கு கி.வா.ஜ.வின் இயல்புகள், அவர் தமிழறிஞர்கள் எழுத்தாளர்களிடம் நடந்துகொண்ட விதம், அவர்களுடனான உரையாடல்கள் என பலவற்றைச் சுவையாகச் சொல்லி மகிழ்ந்தார். கலைமகள், கண்ணன் இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு. கலைமகள் அலுவலகத்தில் நான் பணியில் இருந்த சுமார் ஐந்து வருடங்கள், அந்த நூலகத்தில் இருந்த பழைய கலைமகள் இதழ்களில் இருந்து அவருடைய இதழியல் நுணுக்கங்களை உணர்ந்து கொள்ள முற்பட்டிருக்கிறேன். அவருடைய கதைகள், இலக்கியக் கட்டுரைகள் என்னைக் கவர்ந்திருந்தாலும், ஏதோ ஓரளவு தமிழ் படித்திருந்த எனக்கு அவரின் விடையவன் பதில்களே பெரிதும் கவனத்தை ஈர்த்து, தமிழ் இலக்கணத்தைப் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தியிருந்தது. வாசகர்களின் இலக்கண, இலக்கிய, தமிழ்ச் சொல்லாடல்களின் ஐயங்களுக்கு அவர் அளித்த விடைகள் அவ்வளவு அற்புதமானவை. கி.வா.ஜ.வின் இலக்கியக் கட்டுரைகளில் அவர் சங்க இலக்கியப் பாடல்களுக்கு அளித்திருக்கும் விளக்கமே அலாதியானதுதான். படிக்கத் தொடங்கினால் தமிழ் நடை தெளிந்த நீரோடை போல தட்டுத் தடங்கின்றி எங்கும் தேங்காமல் சென்று கொண்டேயிருக்கும். ஒரு முறை அவரின் திருக்குறள் விளக்க நூலைப் பார்த்து பிரமித்துப் போனேன். குறளுக்கு அதுபோன்ற சிறந்த ஒப்பீட்டு விளக்கங்களை அதுவரை யாரும் தர முற்பட்டிருக்கவில்லை என்றே தோன்றியது. அவருடைய கவி பாடலாம் நூல் கவிதை, யாப்பு பற்றிய திருத்தங்களை எனக்குள் விதைத்தது. கி.வா.ஜ.வின் மகனார் சுவாமிநாதனும் நன்றாகக் கதை எழுதுவார். உருவகக் கதைகள் எழுதுவதில் கில்லாடி அவர். அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த காரணத்தால், அவற்றை அவரிடமிருந்தே கேட்டு ரசித்திருக்கிறேன். ஒரே பத்திரிகையில் ஆசியராக இருந்து வெகுகாலம் கோலோச்சியவர்கள் என்று இருவரைக் குறிப்பிடுவார்கள் தமிழ்ப்  பத்திரிகை உலகில். முதலாமவர் கி.வா.ஜ., இரண்டாமவர் ஏ.என்.எஸ். சுமார் அரை நூற்றாண்டுகள் ஒரே பத்திரிகையில் பணியில் அமர்ந்து ஆசிரியப் பொறுப்பில் கோலோச்சியவர்கள் இருவரும். பின்னவரை அவரின் இறுதிக் காலத்தே கண்டிருக்கிறேன் என்றாலும், முன்னவரை நான் படத்தில் மட்டுமே கண்டிருக்கிறேன். காரணம் நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே அவர் முருகன் திருவடி அடைந்துவிட்டார். கி.வா.ஜ. பிறந்த தேதியும் இறந்த தேதியும் எனக்குள் ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர் பிறந்தது ஏப்ரல் மாதம் 11ம் தேதி.  அதாவது 11ம் தேதி 4வது மாதம். (வருடம் 1906). அவர் இறந்ததோ 4ம் தேதி 11வது மாதம் (வருடம் 1988) கரூரைக் கடந்து நாமக்கல் மோகனூர் வழியே எப்போதாவது செல்ல நேரந்தால், கூடவே கி.வா.ஜ.வின் நினைவும் வந்துவிடும். அந்தக் காவிரி ஆற்றின் ஆற்றொழுக்கும் இனிமையும் ஒரு தமிழறிஞரை நமக்குத் தந்திருக்கிறது. அவருடைய பல படைப்புகள்… என் நினைவில் நின்று கொண்டேயிருக்கும். இன்று அவருடைய பிறந்த நாள். அவருடைய நினைவாக, நான் ரசித்துப் படித்த பல கட்டுரைகளில்… ஒரு கட்டுரை உதாரணத்துக்கு… மரம் அனையான் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை…. ஒரு நாள் ஒளவைப் பிராட்டியார், ஒரு வீட்டுக்குப் போயிருந் தார். அங்கே ஒரு பெண்ணின் அழுகைக் குரல் கேட்டுக் கொண் டிருந்தது. அந்தப் பெண்ணின் கணவன், அவளை அடித்துக் கொண்டிருந்தான். ஒளவையார் உள்ளே எட்டிப் பார்த்தார். அந்தப் பெண் சிறந்த அழகியாக இருந்தாள். “அட பாவி! இவ்வளவு அழகான மனைவியைப் போட்டு அடிக்கிறானே? அவன் மனிதன்தானா? அல்லது மரமா? இவனுடைய கைகள் கட்டைகளைப் போல் இருக்கின்றன. அவற்றால் இவளைப் போட்டு அடிக்கிறானே?” என்று ஒளவைப் பிராட்டிக்கு இரக்கம் உண்டாயிற்று. “ஏன் அப்பா, இந்த அழகியை அடிக்கிறாய்?” என்று கேட்டாள். “”இவளை அடிக்கும் உரிமை எனக்கு உண்டு. இவள் நான் சொன்னபடி செய்யவில்லை! இவள் இருந்தால் என்ன? இறந்தால் என்ன?” என்றான். “”நீ என்ன சொன்னாய், இவள் அதைச் செய்யவில்லை?” என்று கேட்டாள் ஒளவை. “இவள் நினைத்துக் கொண்டால் கோயிலுக்குப் போய்விடுகிறாள். அங்கே சாமியிடம் வரம் கேட்கப் போகிறாளோ? வீட்டு வேலைகளைக் கவனிக்காமல் சாமி தரிசனம் என்ன வேண்டிக் கிடக்கிறது?” “கோயிலுக்குப் போவது நல்ல காரியந்தானே! பெரியவர்கள் எல்லாம் “ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று சொல்லியிருக்கிறார்களே – இறைவன் திருவருள் கிடைத்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும்” என்றாள் ஒளவைப் பாட்டி. “அதெல்லாம் உன்னைப் போன்ற கிழவிகளுக்கு ஏற்ற காரியம். இவள் கோயிலுக்குப் போனால் பல வீட்டுப் பிள்ளைகள் இவளைக் கண்டு கண் அடிப்பார்கள். அது முறையாகுமா? அதனால்தான் இவளைக் கோயிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறேன்” என்றான் அவன். அவன் நல்ல வழியில் நடப்பதாகத் தெரியவில்லை. ஒளவைப் பிராட்டிக்குக் கோபம் கோபமாக வந்தது. யாரை நோவது? “இந்த அழகான பெண்ணுக்கு மரத்தைப் போன்றவனைக் கணவனாகும்படி தலையில் எழுதிய பிரமனைத்தான் கோபிக்க வேண்டும்” என்று எண்ணினாள். அந்தப் பிராட்டியினுடைய கருத்து ஒரு பாடலாக உருவெடுத்தது. அற்றதலை போக அறாத்தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ – வற்றல் மரம்அனை யானுக்கிந்த மானை வகுத்திட்ட பிரமனையான் காணப் பெறின்! பிரமனுக்கு ஆதியில் ஐந்து தலைகள் இருந்தன. சிவபெருமானுக்கும் ஐந்து தலைகள் உண்டு. அதனால், “சிவனும் நானும் ஒன்று’ என்ற கர்வம் பிரமனுக்கு உண்டாயிற்று. அதனை அறிந்த சிவபெருமான் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். அந்தத் தலையின் கபாலத்தைக் கையில் ஏந்திக் கொண்டார். அதனால் அவருக்குக் கபாலி என்ற பேர் வந்தது. ஒளவைப்பிராட்டி இந்த வரலாற்றை எண்ணிப் பாடினார். சிவபெருமான் கிள்ளிய ஒரு தலை போக, மற்ற நான்கினையும், கையால் இறுகப் பற்றிப் பறிக்க மாட்டேனோ? உயிரற்ற கட்டை போன்ற இந்தக் கொடியவனுக்கு, மானைப் போன்ற மென்மை உடையவளை மனைவியாக அமைத்த பிரமனை நான் கண்டால், “அறாத்தலை நான்கினையும் பற்றித் திருகிப் பறியேனோ?’ என்று பின் முன்னாகக் கூட்டிப் பொருள் காணவேண்டும். இந்தப் பாடலைக் கேட்ட பிறகாவது அந்த மரம் அனையான் திருந்தினானோ இல்லையோ, யார் அறிவார்?

வெல்லக்கட்டியாய் வேம்பின் பைங்காய்!

art1 நண்பர்களாகட்டும்… சில மனிதர்களாகட்டும்… அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்… போன்றவைகளாகட்டும்…, எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்! காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில் மாட்டப் பட்டிருக்கும் அழகிய சித்திரம் கண்டால் போதும்….. அன்றைய மனநிலை மகிழ்ச்சிகரமாகத் துவங்கும். சில நேரம் மன அழுத்தத்தின் காரணத்தால் அதே அழகான படம்கூட சலிப்பைத் தரலாம். விருப்பு வெறுப்பற்ற மனநிலை கைவர வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே பயிற்சி மேற்கொண்டு வந்தேன். ஆனால்… பழக்கத்தால் சிலரிடம் விருப்பும் நடத்தையால் சிலரிடம் வெறுப்பும் தொற்றிக் கொண்டு விடுகிறது. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் மனத்தில் வெறுப்பைத் தோற்றுவித்த சில நபர்கள் பணியிடத்தில் இருந்தபோதும், வெறுப்பை விலக்கி விருப்பை விதைக்க முயன்றேன். முடியவில்லை. நினைக்கும் போதெல்லாம் மனது வெறுப்பையும் வெறுமையையும் தந்துவிடுகிறது. எனவே புறக்கணித்தல் அல்லது அம்மக்களை மறத்தல்- இதுவே வழி என செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. இது ஒருபுறம் இருக்கட்டும்…. உளவியலில் இன்னொரு புறம்..! தினந்தோறும் பார்த்து ரசிக்கும் அதே காட்சி… அதே முகங்கள்… அதே அழகு! அதே புன்னகை! இருந்தாலும், காட்சியின் கோலமும் எழிலும் மனம் நன்றாக இருக்கும் நேரத்தில் எழிலாய்த் தோன்றும், மனநிலை மாய்ந்தால் வெறுப்பாய்க் கழியும். மாற்றம் பார்க்கப்படும் பொருளில் இல்லை என்றாலும், பார்க்கும் மனத்தில் இருந்துவிடுகிறது. இப்படியெல்லாம் எத்தனை எத்தனை உளவியல் தத்துவங்களை படிப்பது, எழுதுவது, பேசுவது?! இந்த உளவியல் கலையை எப்படி நம் முன்னோர் தமிழ்க் கவியாய்ப் படைத்துக் காட்டியுள்ளனர்.? தோழியும், தலைவன், தலைவியும், தாயும், தாதியும் இல்லாமல் சங்க இலக்கியமா? ஒவ்வொருவரின் கூற்றும் ஒவ்வொரு உளவியல் காட்சியைக் காட்டிச் செல்லுமே! ஒரு பாடல்….. பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் படித்த நினைவு, ஆண்டு பல கழிந்தாலும் அகல மறுக்கிறது மனதை விட்டு! தோழியின் கூற்றாக வருகிறது… வேம்பின் பைங்காய் என் தோழி தரினே தேம்பூங் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய அற்றால் அன்பின் பாலே! – என்று வாயில் வேண்டிப் புக்க தலைவனுக்கு தோழி கூறியதாக வருகிறது. (அதாவது, தன்னுடன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம், ஊடலைத் தணித்து உடன்படச் செய்யுமாறு தூது செல்ல தலைவியின் தோழியிடம் தலைவன் துணை நாடுகிறான். அதற்கு, தோழியானவள், இந்தப் பாடலைக் கூறி, உன்னுடைய மனது அன்று எப்படி இருந்தது… அன்று என் தோழியை எப்படி எல்லாம் புகழ்ந்தீர்… இன்று எல்லாம் மாறிவிட்டதே! எப்படி உம்மை நாம் நம்புவது என்று தூது செல்ல மறுக்கிறாள்….) ஒரு காலத்தில், கசப்போ கசப்பென்று படுகசப்பாக இருக்கும் வேம்பின் இளங்காயை என் தோழி உமக்குத் தந்தபோது, நீர் அதனை வாங்கி,.. அட… அட… என்ன ஓர் இனிப்பு!? வெல்லக் கட்டி போல் அல்லவா இருக்கிறது என்று புகழ்ந்து உண்டீர். அவள் அழகும் அணுக்கமும் உம்மை கிறக்கத்தில் ஆழ்த்தியிருந்தன. ஆனால் இன்று… பாரி வள்ளலின் பறம்பு மலையில் தை மாதக் குளிரில் அதனினும் குளிர்ந்த தண்மையுடன் சுனையில் வரும் சுவை நீரை வாங்கிப் பருகிய நீர், என்ன இது இவ்வளவு வெப்பமாக உவர்ப்புச் சுவையுடன் இருக்கிறது என்று கூசாமல் வெறுப்பை உமிழ்கிறீர். அன்று நீர் எம் தோழியைப் பாராட்டிய போது வசந்த காலத்தே மகிழ்வில் மிதந்தாள் தோழி…. இன்று வெறுப்பில் இயற்கை அழகை, இனிய சுவையை மறுத்து ஒதுக்குகையில், மனம் கசந்த காலமிதுவோ என எம் தோழி மருண்டு ஒதுங்குகிறாள்… என்னே உம் மன நிலை?! இனியும் உமக்காகத் தூது போவானென்? என்று விலகிச் செல்கிறாள் அவள். இந்தப் பாடல் காட்டும் தலைவனின் மனநிலையில் நான்..!

சொன்னது ஒன்று! புரிந்து கொண்டதோ வேறு!

yashoda krishna - 2026பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்  பாடத்திட்டம் இல்லாமலே!  போன வருஷத்து அனுபவப் பாடமாம்! பள்ளி திறந்து மாதம் மூன்றாகி விட்டது; ஆனால் பாடத் திட்டம் வந்த பாடில்லை! அப்போது சொன்னார்… “நம்ம ஸ்கூலுக்கு சில ‘பஸ்’ தான் வருதேயொழிய, இன்னும் ‘சிலபஸ்’ வந்தபாடில்லை!”

அட! இந்த மாதிரி நாமும் பேசும்போது உபயோகித்தால் என்ன? என்ற ஆர்வம் அப்போது துளிர் விட்டது. அதன் பிறகு இருபொருள் தரும் சொல்லை அகராதியில் தேடத் தொடங்கியது மாணவ உள்ளம்.

இச் சொல் பயன்பாட்டில் சில நேரம் விபரீதம் தந்தாலும் பல நேரங்களில் சுகமாகத்தான் இருந்தது… காரணம் பலரும் பொருள் தெரிந்து ரசித்ததால். நம்மால் நாலுபேரை சந்தோஷப்படுத்த முடிகிறதே என்ற எண்ணம்தான்!

ஒரு நாள் இரவு பக்கத்து வீட்டு நண்பரிடம் “நாளை சீக்கிரம் எழுந்து நெல்லை ஜங்ஷனுக்குப் போகணும்…” என்று சொல்லி வைத்தேன். மறுநாள் காலை… வழக்கம் போல் சோம்பல். வியப்போடு பார்த்த நண்பர் கேட்டார்… “ஏ என்ன? போலயா?” கேள்வி கேட்ட வேகத்துக்கு ஈடு கொடுத்து “போல” என்றேன். விறுவிறுவென என் அப்பாவிடம் சென்ற நண்பர் சொன்னார்… “மாமா, உங்க பையன் என்னை ‘போல’ ண்ணு  சொல்லிட்டான்…”  ‘போகல’ என்ற சொல்லில் ‘க’ கண்ணாமூச்சி காட்டியதால் எழுந்த வினை இது!

சொலவடையா? சிலேடையா? எப்படி இருந்தால் என்ன? பயன்பாட்டில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்! என்ன பேசுபவருக்கும்  கேட்பவருக்கும் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்! கி.வா.ஜ வின் சிலேடைகளைக் கேட்டு இன்புறாத தமிழர் உள்ளமும் உண்டோ?

தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த உத்தி இருந்து வருகிறது.

நம் இன்னொரு தொன்மையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் சிலேடைக்கவிகள் ஏராளம். அவற்றில் பெரும்பாலும் உவமையாகவே கையாளப்பட்டிருக்கும்.

தமிழில் கடைசி முடிப்பு, இரண்டுக்கும் பொதுவாக அமைந்து அழகு காட்டுவது போல், பெரும்பாலும் சம்ஸ்க்ருதத்தில் பாடலின் முதல் வரியிலேயே சிலேடை இன்பம் வெளிப்படும். காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை எவ்வளவு தூரம் நாம் அசை போட்டிருப்போம்…? ‘எள்ளுக்கும் பாம்புக்கும்’ காட்டும் ‘ஆடிக்குடத்தடையும்’ பாடல் நம் காதுகளிலே ரீங்காரம் இடுகிறதே!

சம்ஸ்க்ருதக் கவி…
ஜீவனக்ரஹணே நம்ரா: க்ருஹீத்வா புநருந்நதா:/
கிம் கனிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: கடீயந்த்ரஸ்ய துர்ஜனா://

கடீ யந்த்ரம்  நீர் இறைக்கும் எந்திரம்  ஏற்றச்சால். துர்ஜனா  தீயோர். சந்தர்ப்பவாதி என்றும் கொள்ளலாம். இவ்விரண்டில் எந்திரம் தீயவனுக்கு இளையவனா? மூத்தவனா? என்று கேள்வி கேட்டு, இரண்டுக்குமான ஒப்புமையை இரு பொருள் தரும் வகையில் கவி கையாண்டிருக்கிறார். ‘ஜீவன க்ரஹணே’ என்றதில் ‘ஜீவனம்’ என்று, தண்ணீருக்கு ஒரு பெயர் உண்டு.

ஜீவிகை என்றதான உயிர் வாழ்தலுக்கும் ஒரு பெயர் உண்டு. ஏற்றச் சாலில் தண்ணீர் மொண்டு கொள்வதற்காக அது கிணற்றில் இறங்கும்போது, தலை தாழ்த்தியிருக்கும். நீரை மொண்டு கொள்ளும் வரையில்தான் தலை வணங்கும்; மொண்டு கொண்ட பிறகு உடனே தலை தூக்கும். அதுபோல் தீயோர்(சுயநலவாதிகள்) பயன் அடையும் வரையில்தான் மற்றோர் காலில் விழுந்து கிடப்பர். பிறகு செருக்கோடு தலை நிமிர்ந்து அலைவர்.

இதுபோல் கத்திக்கும் கருமிக்குமான சிலேடை சுவையானது; உள்ளத்தை ஊடுருவுவதும் கூட!
த்ருடதர நிபத்தமுஷ்டே: கோச நிஷண்ணஸ்ய ஸஹஜமலிநஸ்ய/
க்ருபணஸ்ய க்ருபாணஸ்ய ச கேவலமாகாரதோ பேத://

க்ருபணன்  கருமி; க்ருபாணம்  கத்தி. இரண்டுக்கும் உச்சரிப்பில் ஒரு ‘ஆ’காரம்தான் வேற்றுமையே தவிர இரண்டின் சுபாவமும் ஒன்றுதான்! இவ்விரண்டின் சுபாவத்தை மூன்று விஷயங்கள் ஒற்றுமைப்படுத்தி, சிலேடை இன்பம் தருகிறது. ‘த்ருடதர நிபத்தமுஷ்டே’  கத்தியைக் கையில் பிடிக்க, நன்றாக முஷ்டி பிடித்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். கருமியும் அப்படியே! எங்கே கை திறந்தால் காசு விழுந்து விடுமோ என்று அஞ்சி கையை இறுக்கிப் பிடித்திருப்பான்.

‘கோச நிஷண்ணஸ்ய’  கத்தி உறையையும் பொக்கிஷத்தையும் ‘கோசம்’ என்பர். கத்தி அதன் உறையில் தங்கும். கருமி எப்போதும் பொக்கிஷத்தைக் காவல் காத்து, பூட்டைப் பற்றியவாறு தொங்கிக் கொண்டு கிடப்பான்.

‘ஸஹஜ மலிநஸ்ய’  கத்தி, இரும்பால் செய்யப்படுவதால் இயற்கையாகவே கருப்பாக இருக்கும்; அழுக்கடைந்து துருப்பிடித்து இருக்கும். கருமியோ வெள்ளைத் துணி அழுக்காகும்; அதை சலவைக்குக் கொடுத்தால் காசு செலவாகுமே என்று அஞ்சி அழுக்குத் துணியையே அணிந்திருப்பான். ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாமல் மலினனாகவே இருப்பான். அதனால் இவ்விரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ‘கேவலம் ஆகாரதோ பேத:’ என்றபடி ‘ஆ’கார சப்தத்தில் மட்டுமே வேற்றுமை என்பதை உணரலாம்.

இப்படி ஒரு பொருளுக்கும் மனிதனின் குணத்துக்கும் ஏற்ப ஒப்பிட்டு சிலேடை இன்பத்தைத் தருவது கவிகளுக்குக் கைவந்த கலையே!

கண்ணனைப் பாடிய கவிகள், எத்தனையோ சொல்லின்பத்தையும் பக்தி இன்பத்தையும் தந்திருக்கிறார்கள். கண்ணனின் குறும்புகளை தம் கவித்திறனால் அழகுற வெளிப்படுத்திய நம் பாரதியைப் போல், பிற இந்திய மொழிகளிலும் இச்சுவை உண்டு. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில்,  ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான், தலை பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்…’ என்று கோபியருடன் கண்ணன் செய்த குழந்தைத் தனக் குறும்புகளை பாரதி வெளிப்படுத்தியது போல், சம்ஸ்க்ருதக் கவிஞரும் இதைப் பாடியிருக்கிறார். அதிலே சிலேடை உண்டு; கண்ணனின் வார்த்தை சமத்காரமும் உண்டு.

அம்ஸே ஸலீலமதிரோப்ய சுகம் ஸ்வஹஸ்தாத்
கோப்யா பயாகுல த்ருச: குதுகீ முகுந்த:/
அம்ஸம்கதம் சுகமிஹா பநயேதி வாசம்
தஸ்யா நசம்ய ச ததம் சுகமாசகர்ஷ//

கண்ணனின் லீலா விநோதம் இந்தப் பாடலில் அனுபவிக்கப் படுகிறது. கண்ணன் ஒரு கோபியின் தோளில் விளையாட்டாக ஒரு கிளியை ஏறவிட்டான். திடீரென ஏதோ ஒன்று தோளில் தட்டுப்பட, பயந்து போன கோபி கண்ணனிடம் சொன்னாள்… “ஹே க்ருஷ்ணா, அம்ஸம் கதம் சுகம் அபநய…” என்று! அம்ஸம்  தோளை, கதம்  அடைந்திருக்கும், சுகம்  கிளியை, அபநய  அப்புறப்படுத்து… அதாவது, “கண்ணா! என் தோளின் மேல் ஏறியுள்ள இக் கிளியை அகற்று” என்ற பொருளில் சொன்னாள்.

ஆனால் அதை அப்படியே கேட்டுச் செய்தால் கண்ணனுக்கு என்ன சிறப்பு? கண்ணன் குறும்பு எப்படி வெளிப்படும்? கோபி சொன்ன வார்த்தைக்கு சிலேடையாகப் பொருள் கொண்டு, கண்ணன் ஒரு குறும்பைச் செய்கிறான்…

கோபி சொன்ன ‘அம்ஸம் கதம் சுகம் அபநய’  என்பதையே, ‘அம் ஸங்கதம் சுகம் அபநய’ என்று ஆக்கிக் கொண்டான் கண்ணன். அம் ஸங்கதம்  அம் என்ற எழுத்தோடே சேர்ந்த; சுகம் அபநய  சுகத்தைத் தள்ளு… அதாவது, அம் என்பதோடு சேர்ந்த சுகம்  அம்சுகம்! அதற்கு ‘ஆடை’ என்று பொருள்! இப்படிப் பொருள் கொண்டு, அம் என்ற சுகத்தோடு அம்சுகத்தைத் தள்ளு என்று பொருள் கொண்டு, கோபியின் தோளின் மேலேறியிருக்கும் மேலாடையைப் பிடித்திழுத்தான்… பிறகு “கோபி நீ சொன்னபடியேதான் நான் செய்தேன்…” என்று கள்ளச் சிரிப்பும் சிரித்தான்!

கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம்