Home Blog Page 6348

ஹீரோக்கள் மதிக்கப்படும் நாள் எந்நாளோ?

Idharkuthane-Aasaipattai-Balakumara1 ராவணன் ராவணன் என்கிறார்களே! அவன் யார்? இப்போதெல்லாம் சினிமாக்களில் வில்லன்கள் விரும்பப் படுகிறார்கள். சமூகத்தின் அனைத்து வித தீச் செயல்கள் நிரம்பப் பெற்ற தீயசக்திகள் ஹீரோக்களாக மக்களால் ஏற்றுக் கொள்ள நிர்பந்தப் படுத்தப் படுகிறார்கள்.. என்ன ரசனையோ தெரியாது! ஊதாரிகள், ஊர் சுற்றிகள், மொடாக் குடியர்கள் எல்லாம், அழகான பெண்கள் விரும்பும் நபர்களின் பட்டியலில் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை உண்மை என்று நம்பி மார்க்கெட்டிங் வித்தையில் மயங்கிப் போன மான்விழியர் பலர்! அண்மையில் வந்த சினிமாப் படங்கள் இதை எடுத்துச் சொல்லும். வருத்தப் படாத வாலிபர் சங்கம், தீயா வேலை செய்யணும் குமாரு, ஆதலால் காதல் செய்வீர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. இப்படி பட்டியல் தொடர்கிறது. இதே போக்கைத்தான் சென்ற நூற்றாண்டில் ஓர் இயக்கம் விதைத்தது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று முழங்கியது அப்படித்தான். சமூகத்தால் தீச் செயல்களுக்கு உதாரணனாகக் காட்டப்பட்ட ராவணன் ஹீரோவான கதை அப்படித்தான். அதற்குக் காரணம், ராமன் என்ற ஆரியன், ராவணன் என்ற திராவிடனை அழித்த நயவஞ்சகக் கதையாம். திராவிடன் என்று குறிப்பிட்டுவிட்டால் மட்டும், மாற்றான் தோட்டத்து மல்லிகை மணம் நுகரலாமா? சென்ற நூற்றாண்டிலேயே இது காரசார விவாதத்தைப் பெற்றுவிட்டது.


1930 வாக்கில் கவியரசர் ரவீந்திர நாத் தாகூர், இலங்கைத் தமிழரான ஆனந்த குமாரசாமியை அமெரிக்காவில் வைத்து சந்தித்தார். அப்போதுதான் தென்னாட்டில் ராவணனை ஹீரோவாக்கிய “பகுத்தறிவு’ இயக்கம் மும்முரமாக வளர்ந்திருந்தது. ஒருநாள் பேச்சுக்கு இடையே ஆனந்த குமாரசாமி, “இந்த இயக்கத்தார் ராவணனைத் தமிழனாக, அதாவது திராவிடனாகக் கருதிப் போற்றி, ராமாயணத்துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வருகிறார்கள்” என்றார். “என்ன, ராவணனை வால்மீகி எந்த இடத்திலும் திராவிடன் என்று குறிப்பிடவில்லையே!” என்று வியப்பின் உச்சியில் ஆழ்ந்தார் கவியரசர் தாகூர். அதற்கு ஆனந்த குமாரசாமி, “இது அந்தப் “பகுத்தறிவாளர்’ கருத்தே தவிர தமிழர் கருத்தில்லை” என்றார் சிரித்தபடியே! “வால்மீகி ராமாயணத்தின்படி, ராவணன், பிரம்மாவின் மகனான புலஸ்தியனின் பேரன்; சிவபெருமானைத் தன் சாம கானத்தால் மகிழ்வித்தவன்; எனவே வேதியன், பிரம்ம குலத்தவனாய் வேதம் பயின்றிருந்தும் பிறன் மனைவியை விரும்பித் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான், இழிந்த செயல் புரிந்தவனாய் அழிந்தான். ராமனோ வேதியனாக இல்லாவிட்டாலும், ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருந்து ராவணனை வென்றான். எனவே, தீமைக்கும் நன்மைக்கும் நடந்ததுதான் இந்தப் போராட்டம். இதுதான் உண்மை; பகுத்தறிவுக்கும் இயைந்தது” என்றார் கவியரசர் தாகூர். “ஆமாம், இதே கருத்தைத்தான் தமிழ் முனிவர் வள்ளுவரும், “வேதியன் வேதம் பயில மறந்தாலும் பரவாயில்லை, ஒழுக்கத்தைக் கைவிட்டால் இழிந்தவனாகிக் கெடுவான் என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று கூறி அந்தக் கருத்துடைய திருக்குறளை எடுத்துச் சொன்னார் ஆனந்த குமாரசாமி. “மிகவும் அருமையானது இந்தச் செய்யுள் கருத்து. பாரத நாடு முழுவதற்கும்…. ஏன் உலகம் முழுவதற்குமே மகான் வள்ளுவரின் இந்தக் கோட்பாடு பொருந்தும்” என்று பாராட்டினார் கவியரசர் தாகூர்.


ஆனந்த குமாரசாமியும், தாகூரும் சந்தித்துப் பேசிய இந்தச் சம்பவம் எனக்குத் தெரிய வந்ததும் ஒரு அதிசயம்தான். ப்ரவாஸி என்ற பத்திரிகையில் வந்த துணுக்குச் செய்தியை ஒரு முறை வங்க மொழிபெயர்ப்பாள நண்பர் ஒருவர் படித்துக் காட்டினார். சுவாரஸ்யமாக இருந்ததால், அப்போது அவரை அதனை மொழிபெயர்த்துத் தரச் சொல்லி மஞ்சரி இதழில் வெளியிட்டேன். இப்போது இது நினைவுக்கு வரக் காரணம், மேற்கண்ட திரைப் படங்களின் கதைப் போக்குதான்! கடந்த சில வாரங்களாக சென்னையில் மாணவர்களின் அடிதடி, ரகளை, கலாட்டாப் போக்குகள் பெரும் வருத்தத்தைத் தருகின்றன. பஸ்களில் அவர்கள் போடும் ஆட்டம் ஏதோ இளமைத் துள்ளல் என்று விட்டுவிட்டு ஒதுங்கிப் போனாலும், கத்தியும், கம்புமாக வன்முறை வெறியாட்டத்தில் அவர்கள் இறங்குவதற்கு ஒரே காரணம், திரைப்படங்களில் காட்டும் சண்டைக் காட்சிகள்தான் என்பது என் எண்ணம். எப்போது ஹீரோக்கள் ஹீரோக்களாக மதிக்கப் படப் போகிறார்களோ? வளரும் சமுதாயத்தின் மீதான கருத்துருவாக்கம்தான், நாட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கப் போகிறது.

பிளாஸ்டிக்குக்கு மாற்று வேண்டும்

AMMA-WATER-BOTTLE பிளாஸ்டிக்குக்கு மாற்று கண்டறிய வேண்டும். நம் வசதிக்காக, ஒரு முறை பயன்படுத்தித் தூர எறியும் குடிநீர் பாட்டில்களை ஒழித்தால் வருங்கால சந்ததி ஓரளவு நிம்மதியாக வாழ முடியும்… பத்து ரூபாய்க்கு விற்பனை துவங்கி, இன்று அக்வா பினா 25 ரூ. ஆகிவிட்டது. மற்றவற்றை ரூ. 20ம், 22ம் என இஷ்டத்துக்கு விற்கிறார்கள்…  ஊர் பேர் தெரியாத உள்ளூர் தண்ணீர் வியாபாரிகளும் பாட்டில்களை கடைகளில் அடுக்குகிறார்கள்… போதாக்குறைக்கு அம்மா வாட்டர் பாட்டில்கள்… இவைதான் இப்போது சக்கை போடு போடுகின்றன. மக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்…முதல்வரின் படம்  அச்சிடப்பட்ட விளம்பரத்துடன்… முதல்வரின் செயல் வரவேற்கத்தக்கது. ஆனால் செயல்முறை கண்டிக்கத்தக்கது. என்ன செய்யலாம்…? என் கருத்தில் தோன்றியது… * ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பேருந்து நிலையத்திலும், முக்கியமான அரசு அலுவலக வாயில்களிலும் அம்மா வாட்டர் – சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களை நிறுவி, அவற்றின் மூலம் லிட்டர் ரூ. 5 என்று குடிநீர் விநியோகம் செய்யலாம். அதற்கு பயனாளிகள் ஒவ்வொருவரும், நிரந்தரமாக தங்கள் கைகளில் வைத்திருக்கும் வகையில் பெட் ஜார் – பாட்டில்களை அல்லது நீர் வைக்கும் பாத்திரங்களைக் கொண்டு வர வேண்டும். ரயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு, தற்போது ஓரளவு மட்டுமே செயல்முறையில் இருக்கும் தண்ணீர் வழங்கும் மையங்கள் போல் கொண்டு வரலாம்.. திருப்பதிக்கு நடைபாதை வழியே நான் சென்றபோது, அங்கங்கே இதுபோன்ற மலிவு விலை குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் சிறப்பாக செயல்படுவதைக் கண்டுள்ளேன்… அவற்றைப் போல் இங்கும் செயல்படுத்தலாம்… உண்மையிலேயே விளம்பர மோகம் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய எண்ணினால், முதல்வர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம். * ரயில் நிலையங்களில் குடிநீர் என்று எழுதப் பட்டிருக்கும் குழாய்களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அல்லது பழுதாகி, பயன் தரத் தக்க நிலையில் இருப்பதில்லை. இதற்கான காரணம் ஏன் என்று சில இடங்களில் ரயில் நிற்கும் போது நானும் இறங்கி அங்கே இருக்கும் சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். எல்லோரும் சொல்லி வைத்தாற்போல் கூறும் ஒரே காரணம்…. – இந்தக் குடிநீர் குழாய்களால், தண்ணீர் பாட்டில் விற்பனை பாதிக்கப்படுகிறது என்பதால், இங்கே கடை வைத்துள்ளவர்கள், ஏஜென்ஸிகள் இவற்றை (சரி செய்த ஓரிரு நாட்களிலேயே) உடைத்து விடுகின்றனர் என்பதுதான். இதே நிலைமைதான் சுயநல வியாபாரிகள் இருக்கும் எல்லா இடங்களிலும்! * ஒவ்வொரு முறை பெட்டிக் கடைக்கும் மளிகைக் கடைக்கும் போகும்போதும் எந்த வித அகௌரவத்தையும் பார்க்காமல், கிராமப்புற துணிக்கடைகளில் தரும் மஞ்சள் துணிப்பை, அல்லது கட்டைப் பையை எடுத்துச் செல்வது என் வழக்கம். வீட்டில் பிளாஸ்டிக் குப்பைகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால், ஒவ்வொரு அலுவலகத்திலும் வீடுகளிலும், குப்பைக்கென தனித்தனி சிறிய ரக குப்பைத் தொட்டிகள் இருந்தாலும், அவற்றில் சேரும் குப்பைகளை எடுத்து தூய்மைப் படுத்த சோம்பேறித்தனப்பட்டு, அதனுள்ளும் பிளாஸ்டிக் கவர்களை வைத்து, அவற்றில் சேரும் குப்பைகளை எடுத்துச் சென்று மேலும் மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் சேர வழிவகை செய்கின்றோம்… இதற்கும் மாற்று வர வேண்டும். * பிளாஸ்டிக் கவர்களில் வீணான உணவுப் பொருள்களை மூட்டையாகக் கட்டி அதன் வாயை முடிச்சு போட்டு நாம் தூர எறிவதால், அதனைத் திறக்க முயன்று தோல்வியுறும் பசு மாடுகள், நாய்கள் உள்ளிட்டவை, பிளாஸ்டிக்கையும் சேர்த்துத் தின்று, உயிரிழப்புக்கு வகை செய்து கொள்கின்றன. இதற்கு நாமும் மறைமுகக் காரணமாவோம். *** பிளாஸ்டிக் உபயோகத்தைத் தவிர்க்க நம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம்…! *** நம் பகுதியில், நம் மாநிலத்தில், நல் மழைப் பொழிவுக்கு வழி வகை செய்வோம்..!!

அரங்கன் அடியார் துயிலும் கரை

அற்புதமான ஒருthiruvarasu2 ஞாயிறு. திருவரங்கத்தில் காலடி படுவதே புண்ணியம் என்றானபோது, ஆசார்யப் பெருமக்கள் சமாதி கொண்டருளும் திருவரசு மண்ணில் நம் பாதம் படுவதே பெரும் பேறு. ஸ்ரீவைஷ்ணவ லட்சணங்களில் ஒன்று – ஆசார்யரை மனித ஸ்வரூபமாகக் கருதாமலிருத்தல்! அந்த வகையில் வைஷ்ணவ ஆசார்யப் பெருமக்கள் பலரும், தம் ஜீவ ஆத்மாவை பெரியகோவிலான திருவரங்கத்தில், பெரிய பெருமாளான திருவரங்கன் திருப்பாதத்தில், பெரிய (பரம)ஆத்மாவான  திருவரங்கன் உள் கலந்து, சரீரத்தை அவன் கண்வளர்ந்தருளும் உபய காவேரி மத்தியிலான திருவரங்கத்தின் புனித மண்ணில் உகுத்தலையே இப்பிறப்பின் நோக்கமெனக் கொண்டு வாழ்ந்தவர்கள். அரங்கன் சந்நிதியை ஒட்டி சுவாமி ராமானுஜருக்கு மட்டிலும் சந்நிதி இருந்தாலும், கொள்ளிடக் கரையில் வைணவ ஆசார்யப் பெருமக்கள் பலரின் திருவரசு சந்நிதிகள் உள்ளன. சுவாமி ராமானுஜரின் குருவானவரும், தமிழ் வேதமாம் திவ்யப் பிரபந்தத்தை சுவாமி நம்மாழ்வார் மூலம் மண்ணில் மீண்டும் நம் கைகளில் கிடைக்கச் செய்தவருமான சுவாமி நாதமுனிகளின் திருப்பேரனார்  ஸ்ரீஆளவந்தாரின் திருவரசும் அதில் ஒன்று என்பது ஆச்சரியம்… ஆச்சரியம். திருவரங்கம் நண்பர் விஜி என்ற விஜயராகவனுடன் அவரது பைக்கில் கொள்ளிடக் கரையில் பயணித்தேன். ஓரிடத்தில் பிருந்தாவனங்களாக இருக்க, ஸ்வாமி சற்றே வண்டியை நிறுத்தும். உள்ளே போய் பார்த்துவரலாம் என்றேன். சரி போவோமே… நானும் இங்கே வந்ததில்லை என்று கூறி உடன் வந்தார். அந்த இடத்தை பராமரித்து வரும் பாஸ்கர் என்பவர் வரவேற்று அழைத்துச் சென்று, ஒவ்வொரு பிருந்தாவனமாகக் காட்டிக் கொண்டே வந்தார். அவற்றில் ஒன்று, சுவாமி ஆளவந்தாருடையது என்றார். அந்தத் திருவரசில் ஆளவந்தாரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சந்நிதி அழகாகக் கைங்கரியம் செய்யப்பட்டு தூய்மையாகக் கிடக்கிறது. இருப்பினும், அதன் மேலோ பக்கவாட்டிலோ இது சுவாமி ஆளவந்தார் திருவரசு என்று எழுதிப் போடவில்லை. அங்கே விளக்கு ஏற்ற ஏற்பாடு செய்யுங்கள் என்று பாஸ்கரிடம் தெரிவித்து சிறு தொகை கொடுத்து வந்தேன். அடுத்து, பெயர்ப் பலகை அல்லது கல்வெட்டு ஒன்று வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சுற்றிலும் சில பிருந்தாவனங்களில் ஆசார்யப் பெருமக்களின் வரலாறை கல்வெட்டில் போட்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலும் ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர்கள் என்பது தெரிகிறது. சில 80 வருட குறுகிய காலத்துக்குள் அமைந்தவை என்பது தெரிகிறது. இங்கே அருகில்தான் ஆளவந்தார் படித்துறை என்று உள்ளது. தவராசன் படித்துறையும் அருகேதான். இந்த ஆளவந்தார் திருவரசு பற்றி ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசாரியாரின் குமாரர் வாசுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்… சுவாமி அது, பின்னாளில் வைக்கப்பட்டதாயிருக்கும். அடியேன் விவரம் அறிந்து, கொள்ளிடத்தில் முன்னொரு காலம் வெள்ளத்தில் ஆளவந்தார் திருவரசு அடித்துச் செல்லப்பட்டது என்றும், மகானுபாவர்கள் அதனை சற்று தள்ளிக் கொண்டு வந்து, இப்போது இருக்கும் அந்த இடத்தில் மீண்டும் நிறுவியிருக்கிறார்கள் என்றும், அதுவும் ம்ருத்திகா பிருந்தாவனம் போல்தான் என்றும் கூறினார். இந்த முழு விவரம் எதுவென நமக்குத் தெரியாது. இதற்கு தகுந்த கல்வெட்டு ஆதாரங்களோ வேறெதுவுமோ கிடையாது. இருப்பினும், வைணவ மரபின்படி நம் நம்பிக்கைக்கு உரிய வகையில் இப்போதும் இது இங்கே திகழ்வது நமக்கெல்லாம் தெரியவேண்டும். திருவரங்கம் செல்லும்போது, மறக்காமல் வடக்கு வாசல் கோபுரம் வழியே கொள்ளிடம் செல்லும் வழியில் சென்று, வலது புறம் திரும்பி சற்று தொலைவில் இருக்கும் இந்த பிருந்தாவனங்களையும் தரிசித்து வாருங்கள்.

சுவாமி மணவாள மாமுனிகள் திருவரசு புனர்நிர்மாணம்

mamuni4 வைணவ சம்பிரதாயத்தில், இன்றிலிருந்து சுமார் 600 வருடங்களுக்கு முற்பட்டவரான, ஆசார்ய பரம்பரையில் கடைசி ஆசார்யராகப் போற்றப்படும் சுவாமி மணவாள மாமுனிகளின் திருவரசு என்று கருதப்படும் இடம் இது. தற்போது இடப் பிரச்னை காரணமாக  நீதிமன்றத்தின் பிடியில் வழக்கில் சிக்கியுள்ளது இந்த இடம். தற்போது சந்நிதி அமைக்கப்பட்டுள்ள இந்த இடத்தின் பின்புறம் உள்ள தோப்புப் பகுதியில்தான் முன்னர் ஒரு நகரமே இருந்ததாம். சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்ட இடம். இந்தச் சிறு நகரில் நான்கு வேதங்களையும் ஓதிய வேதியர் வாழ்ந்துவந்தனராம். இங்கேதான் வைணவ ஆசார்யப் பெருமக்கள் சிலரும் வசித்து வந்தனராம்.  mamuni1திருவரங்கத்தை ஒட்டிய வீதிகளில் அரையர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோயில் கைங்கர்யபரர்கள் வாழ்ந்து வந்தனர் என்றும், திருவரங்கப் பெருநகரின் பழங்காலக் கட்டமைப்பில், கொள்ளிடக் கரையை ஒட்டிய இந்தப் பகுதியில்  சிறு     நகரமாக சதுர் வேதி மங்கலம் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் முன்னர் கேசவப் பெருமாள் கோவில் ஒன்று இருந்துள்ளது என்றும், இதற்கு நேர் எதிரே, 500 மீட்டர் தொலைவுக்குள் கொள்ளிடக் கரை இருந்ததாகவும் தெரிகிறது. இந்தச் சிறு நகரில்தான், சுவாமி மணவாள மாமுனிகளின் திருவரசு அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்போது சீரமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்தச் சிறிய இடத்துக்குப் பின்புறத்தில், ஒரு மோட்டார் பம்புசெட் உள்ளது. அதன்கீழ் சிறு கற் குவியல் mamuni5உள்ளது. அந்தப் பகுதியில் இன்றும் நாகம் ஒன்று ஊர்ந்துவந்து படமெடுத்துச் செல்வதாக அவ்வாறு கண்ட ஒருவர் தகவல் தெரிவித்தார். சுவாமி மணவாள மாமுனிகள் ஆதிசேஷன் அவதாரம் என்பது ஸ்ரீவைணவர்களின் நம்பிக்கை. தற்போது, தமிழக அரசின் சார்பில் யாத்ரி நிவாஸ் கட்டப்படும் இடம், இந்த இடத்தை அடுத்து உள்ள ரயில்வே லைன் பகுதியை அடுத்துள்ள இடம்தான். யாத்ரி நிவாஸுக்காக பள்ளம் தோண்டியபோது, அங்கே சிறு சிறு விக்ரகங்கள், கருங்கல் தூண்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பகுதியில் அவ்வாறு முன்னர் நன்றாக செழித்திருந்த சதுர்வேதி மங்கலம், கேசவப் பெருமாள் கோயில் உள்ளிட்டவற்றின் அகழாய்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு நண்பர் கூறினார். மணவாள மாமுனிகள் பள்ளிப் படுத்தப் பட்ட இடம் என பழைமையான குறிப்புகளில் குறிக்கப்பட்டிருந்த இந்தப் பகுதியில் இருந்து மண் எடுத்துவந்து,  அதில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் இந்த மிருத்திகா பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. பிப்.26ம் நாள் மணவாள மாமுனிகளின் அத்யயன உற்சவத்தின் போது இந்த இடம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் பெருமுயற்சியில் இந்த இடம் வாங்கப்பட்டு இப்போது திருப்பணிகளைத் துவக்கியுள்ளார்கள். mamuni3அந்த வகையில் இது ஒரு மிருத்திகா பிருந்தாவனமாகவே திகழ்கிறது. ஆக, இப்போது இருக்கின்ற இந்த சந்நிதிக்கு  20 அடி தொலைவுக்குள் உள்ள இடம்தான் மணவாள மாமுனிகள் பள்ளிப் படுத்தப் பட்ட திருவரசு என்பதை இங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். அங்கிருந்து மண் எடுத்து வந்து இந்த மூலஸ்தானத்தில் உள்ள சிலையை வடிவமைத்து, மிருத்திகா பிருந்தாவனமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும், இதுவே மணவாள மாமுனிகளின் திருவரசு என்று கூறமுடியாது என்றாலும், திருவரசு இருந்த இடத்தின் விஸ்தீர்ணமான நிலப் பகுதிக்குள் இது அமைந்துள்ளதால், அதற்குண்டான அனைத்து சிறப்பும், பெருமையும் இந்த சந்நிதிக்கும் உண்டு என்றார் அந்த நண்பர். மணவாள மாமுனிகளின் இந்தத் திருவரசு  அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நேர் எதிரே சற்று தொலைவில்தான் கொள்ளிடக் கரையில் தவராசன் படித்துறை உள்ளது. இங்கே சுவாமி ராமானுஜர் கொள்ளிடத்தில் ஸ்னானம் செய்து பூஜை புனஸ்காரங்களைச் செய்துள்ளாராம். அருகில் இதே பகுதியில் ஆளவந்தார் படித்துறை உள்ளது. mamuni2இப்போது மணவாள மாமுனிகளின் திருவரசு புனர்நிர்மானம் துவங்கியுள்ளது. திருவரங்கப் பெருங்கோயிலின் நிர்வாகத்தை சுவாமி ராமானுஜர் பெருமளவில் முயற்சி செய்து சீர் படுத்தினார். அவருடைய காலத்துக்குப் பின்னர் சீர்கெடத் தொடங்கிய கோயில் நிர்வாகத்தை, வழக்கத்தை மீண்டும் சீர்தூக்கி செப்பனிட்ட பெருமை சுவாமி மணவாளமாமுனிகளுக்கு உண்டு. தமிழ் வேதமாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மேன்மேலும் செழித்துக் கிளை பரப்பி பூத்துக் குலுங்கிடச் செய்த மகான் ஸ்ரீமணவாளமாமுனிகள். இன்றும் தென்னாச்சார்ய சம்பிரதாயஸ்தர்கள் தங்கள் வீடுகளிலும் சந்நிதிகளிலும் சொல்லி வரும் சாற்றுமுறையின் இறுதியில், மணவாளமாமுனியே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் என்று மங்கலஸ்துதி சொல்லி வருகிறார்கள்.  இன்னும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாக இது  தழைக்க வேண்டுமாயின் இந்தத் திருவரசு மீண்டெழ கைங்கர்யம் செய்வோராகுவோம்.

வாகன மாற்றம் என்று சோசியன் சொன்னானோ?

murugan இந்தக் காட்சியைக் கண்டு எனக்குத் தோன்றியது… உங்களுக்கு என்ன தோன்றுகிறது? தன் வாகனத்தைத் தம்பிக்குத் தந்து அண்ணன் அயர்ந்து அமர்ந்து விட்டார்! எந்த சோதிடன் பலன் சொன்னானோ? வாகன மாற்றம் உண்டு என்று? ஆயிரம்தான் இருந்தாலும், அதிககனம் இருந்தாலும், இயல்புக்கு மாறாக இளவல் நிற்பினும் முழி பிதுங்குது மூஞ்சுறு! சோடி தேடி ஓடிப் போனதோ இல்லை… சோகத்தோடே பறந்து போனதோ? தோகை மயில்! கவலை அறுத்த உள்ளம் கருணை பொங்கும் கண்கள் முறுவல் பூத்த முகம் முருகன் என்றால் அழகன்தானே! ஒய்யாரக் கோலம்… ஓய்வான நேரம்! ஆண்டி என நின்றதால் அச்சம் இல்லை. மடியில் கனம் இல்லை மனத்தில் பயம் இல்லை… உணர்ந்த உண்மை இது! மனையாள் பயம் இல்லை மாலைக்குள் திரும்ப வேண்டாம்! கைகட்டி சேவகம் என எங்குமே குனிந்திருக்க வேண்டாம்! குடும்பக் கவலையு மில்லை… குழந்தை குட்டி பிக்கல் பிடுங்கல் கொஞ்சமும் இல்லை என்றால் முகத்தின் புன்னகை முழுநேரம்தானே! உணர்ந்த உண்மை இது! கையில் கொண்ட கோல் ஒன்று நிமிர்ந்து நிற்கும் நிலைத்திருக்கும்! செங்கோல் வழுவாது… செங்கைவிட்டு நழுவாது! (சென்னை, கே.கே.நகர் சிவன் பூங்கா அருகிலுள்ள, விநாயகர் கோவில் மண்டபத்தில் க்ளிக்கியது!)

அடுத்து வருமா “அம்மா” டீக் கடை?

amma_unavagam மாலை வழக்கம்போல் சகாக்கள் சகிதம் அம்பத்தூர் எஸ்டேட்டில் அலுவலகத்தை அடுத்து உள்ள டீக்கடைக்குச் சென்று டீ மேஸ்ட்ரோ பழனியிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஐயா நமோ டீக்கடை பற்றி வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டார். ஒரு டீக்கடைக்காரரு இந்த நாட்டின் பிரதமரா வருவார்ன்னா எங்களுக்கெல்லாம் பெருமை சார்ன்னார். ரெம்ப சந்தோசம் அண்ணாச்சின்னு சொல்லிவிட்டு நிக்கயில… பேச்சு அம்மா – வரிசைக்கு வந்துச்சு. அம்மா உணவகத்தில் சப்பாத்தியாமே! அதுவும் 3 ரூபாய்க்கு! அவ்ளோதான்… பழனி அண்ணாச்சி புளகாங்கிதம் அடைஞ்சி… இன்னும் என்னல்லாம் அம்ம சவுகரியம் செஞ்சி கொடுத்தாங்கன்னா… நல்லாருக்கும்னு பட்டியல் போட ஆரமிச்சிட்டாரு.. டீக்குடிக்க வந்த ரெண்டு மூணு பேரு நக்கலா…. டாஸ்மாக்கை எடுத்துட்டு அம்மா பேரை அதுக்கு வைக்கணுமாம்… அம்மா வைன் ஷாப்னு.. காதுல விழாத மாதிரி… நாங்க எங்க பக்கம் திரும்பிக்கிட்டு, உடன் இருந்த சகா வேல்முருகனிடம் பேச்சுக் கொடுத்தேன்.. அவருக்கு ஆம்லெட் சாப்பிடுவதில் பிரியம் அதிகம். சார்… ஒரு ஆம்லெட் 15 ரூவாய்க்கு விக்கிறானுங்க சார்… அம்மா உணவகத்துல ஆம்லெட் 5 ரூவாய்னோ, 7 ரூவாய்னோ வெச்சி வித்தாங்கன்னா… நல்லாருக்கும் சார்ன்னார். இன்னொரு சகா, பாலா… சார் அம்மா வாடகை வீடுகள் திட்டத்தை சென்னை மாநகராட்சியில் தொடங்கணும். சென்னை மாநகராட்சி சார்பாவே, நல்ல இடத்துல நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டி, குறைஞ்ச வாடகைக்கு விட்டு, ஹவுஸ் ஓனர்கள் கொட்டத்தை அடக்கணும் சார்ன்னார்… டீக்கடைக்காரர் பழனி தன் பங்குக்கு ஏதோ கமெண்ட் அடிக்க, கொஞ்சம் நக்கல் கலந்த கோபத்தில் பழனியிடம் சத்தமாகச் சொல்லி வந்தேன்.. அடுத்து அம்மா தொடங்கபோறது அதாங்கேம்.. பாருய்யா பாரு.. ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள்… சென்னை மாநகராட்சி சார்பில…. தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு “அம்மா டீக் கடை” தொடங்கி, 2 ரூவாய்க்கு டீ கொடுத்து, உங்க கொட்டத்தை எல்லாம் அடக்கப்போறாங்க… நீ வேணா பாரு. போன மாசம் 6 ரூபாய்.. இப்போ 7 ரூபாய்னு நீ சொன்னதும் மறுக்காம கொடுத்தோம்ல… இனி பாரு… உங்க நிலையை?! அப்ப பேசுவீங்களா இப்டி? பழனி முகத்தில் ஈயாடவில்லை. ஆனாலும் சிரித்துக் கொண்டே… சார் மக்களுக்கு அவ்வளவு குறைஞ்ச விலையில் கொடுத்தா நல்லதுதானே சார்… நானும் மனமுவந்து வரவேற்கிறேன்னார்…. ஆக…… தமிழக அரசே தமிழக அரசே…. அடுத்து அம்மா பெயரில் ஆரம்பிக்க வேண்டியது…. ஆவின் நிர்வாகத்துடன் கைகோத்து அம்மா டீக்கடையை! அம்மா அம்மா…… எங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்!

அழியாத கோலங்களாய் எண்ண அலைகள்…

janarthanan கிட்டத்தட்ட 50 ஆண்டுகள்… ஆகிவிட்டது…. இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு! 5 வருடங்களுக்கு முன்னர் குற்றாலம் – ஐந்தருவி அருகே உள்ள சங்கராஸ்ரமத்திற்குச் சென்ற போது நான் இந்தப் புகைப்படம் சுவரில் மாட்டப்பட்டிருப்பதைக் கண்டு கேமராவில் க்ளிக்கிக் கொண்டேன். இந்தப் படத்தின் வரலாற்றுப் பெருமை என்னவென்று எனக்குத் தெரியாது. எல்லோருக்கும் நடுவே சுவாமி சங்கரானந்தர் அமர்ந்திருக்கிறார். அவ்வளவுதான் தெரியும். பெரும்பாலும் இது போன்ற பழைய படங்கள் எங்காவது கண்ணில் பட்டால் அதை உடனே சுட்டு வைத்துக் கொள்வது என் கைப்பழக்கம். அப்படித்தான் கேமராவை எடுத்துக் கொண்டுவந்து இந்த ஆஸ்ரமத்துடனும், சுவாமி சங்கரானந்தருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயாவிடம் காண்பித்தேன். அப்போதுதான் கவனித்தேன்… இந்தப் படத்தில் ஜனார்த்தனன் சாரும் வலது ஓரமாக கையை பின்னால் கட்டியபடி நின்றிருக்கிறார் என்பதை! 1965 பிப்.16ம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் படம், செங்கோட்டை காந்தி மன்றத்தில் அப்போதைய செங்கோட்டை நீதிமன்ற உதவி நீதிபதி ஏ.சோமசுந்தரம் என்பவருக்கு வழங்கப்பட்ட பிரிவுபசார நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உள்ள மற்றவர்கள் குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. அப்போது ஜனார்த்தனன் சார் சிலர் குறித்து தகவல் சொன்னார். ஆனால் இப்போது அது என் நினைவில் இல்லை. இந்தப் படத்தில், வழக்குரைஞர்கள் எஸ்.சங்கர நாராயணன், இசக்கி தாஸ், எம்.கோபாலகிருஷ்ண முதலியார், ஏ.ஆர்.கரையாளர்- தலைவர் (அனேகமாக காந்தி மன்றமாக இருக்கலாம்…), சுவாமி சங்கரானந்தர், ஏ.சோமசுந்தரம், டாக்டர் சன்ஸார் சந்த் பட், எம்.எஸ்.முத்துசாமி கரையாளர், கே.ஏ.கணபதி முதலியார், என்.சுப்ரமணிய ஆசாரி.. ஆகியோர் அமர்ந்திருக்க, ஷேக், கேகே.ராமசாமி ராஜா, ஏ.சுப்பையா, கேஎஸ்பி ஆறுமுகம், டாக்டர் ராமசுப்பு, என்.ஏ.முத்தையா, எஸ்.மாடமுத்து, வி.ஜனார்த்தனன் (தலைமை ஆசிரியர்) ஆகியோர் நின்றிருக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தின் பின்னணியை அறிய ஆவல் இருந்தாலும், பின்னணியாக உள்ள இயற்கைக் காட்சி மிக அழகு. இதில் இருக்கும் இன்னும் சில நபர்களைப் பற்றி அறிய ஆவல்தான். ஜனார்த்தனன் சார் இருந்தால், இப்போது அவரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்தான்.. ஆனால்… அவரைப் போல் இன்னொரு நபரை நான் தேட வேண்டுமே! எத்தனை இரவுகள்… நிசப்தமாய்  இருக்கும் தெரு. பின்னே ஆற்றங்கரை ஓரம் என்பதால், வண்டுகளின் ரீங்காரம், பூச்சிகளின் சலசல சத்தம் காதுகளில் கேட்டுக் கொண்டேயிருக்கும். அந்த அர்த்தராத்திரியிலும், 12 மணி தாண்டியும் நீளும் பேச்சுக் குரல். அவர் வயதோ அப்போது 70க்கு மேல்.. நானோ 20ல் நின்ற இளைஞன். என் அம்மா அவ்வப்போது வந்து காது கொடுத்துச் செல்வார்… அப்படி என்னதாண்டா பேசிக்கறேள்..! என்று முணுமுணுத்தபடி….. எல்லாம் ஞானப் பொக்கிஷங்கள். மலையாள இலக்கியத்தை எனக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார். மோகினிக் கதைகள் சொல்வார். பிவி.தம்பியின் நாவல்களை அடுக்குவார். எழுத்தச்சனை பிரித்து மேய்வார். மலையாள இலக்கியம் எப்போது தோன்றியது… அதன் அடிப்படை, அது வளர்ந்த விதம் எல்லாம் அவர் வாய்மொழியால் என் நெஞ்சில் உரமாய்ப் பாய்ந்தது. அந்தப் பேச்சில் குமாரனாசான் அவ்வப்போது தலைக்காட்டுவார். மாத்ருபூமி இதழ்களில் படித்த படைப்புகளை கோடிட்டுக் காட்டுவார். இதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா என்று கேட்டு எனக்குள் ஒரு சுவாரஸ்யத்தைத் தூண்டுவார். கம்பன் கழகங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், ராமாயண பாத்திரங்களின் படைப்புகள், அவற்றில் அவர் கண்ட ரஸம்.. எல்லாம் அலுக்காமல் கேட்டுக் கொண்டிருப்பேன். நான் ஆரம்பப் பள்ளி முடித்த காலத்தில் அவர் அனேகமாக பணி ஓய்வு பெற்றிருக்கக் கூடும். எனவே அவர் எனக்கு ஆசிரியராக இருந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவர் வகுப்புகளை நான் கேட்டதில்லை. அப்படியே கேட்டிருந்தாலும் ஒன்றும் மண்டையில் ஏறியிருக்கப் போவதில்லை. ஆனால், கல்லூரி படிப்பு முடித்து வெளிவந்த புதிதில் எனக்குக் கிடைத்த இந்த அனுபவப் பாடங்கள் நன்றாகவே மனதில் ஏறியிருந்தன. மலையாள அட்சரங்களுக்கும் கிரந்த லிபிக்கும் இடையே உள்ள சின்னச் சின்ன வேறுபாடு… எப்படி இவை புழக்கத்துக்குள் வந்திருக்கும்.. என்றெல்லாம் என் கேள்விக் கணைகள் பாயும். பெரிய அளவில் எனக்கு பத்திரிகை அறிவோ, அதைப் பற்றிய புரிதலோ ஏதும் அப்போது இல்லைதான். அத்தகைய நிலையில் இதழியல் கலாசாரத்தை சுவை குன்றாமல் எனக்குள் திணித்தார் ஜனார்த்தனன் சார். அப்போது நான் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக மார்க்கெடிங் பணியில் இருந்தேன். ஊர் சுற்றி இரவு வீடு வந்து சேர்ந்ததும் சாப்பிட்டவுடன் அடுத்த வேலை… சாருடன் வீட்டுத் திண்ணையில் அமர்வதுதான். அமர்ந்து பேசுவதற்காகவே அக்ரஹாரத்து வீடுகளின் திண்ணைகள் விசாலமாகவே இருக்கும். எங்கள் தெரு வழியே வயக்காட்டு வேலைக்குப் போவோராயினும், காய்கறிக் கூடைகளை தலையில் சுமந்து சந்தைக்குச் செல்வோராயினும்… யாராயினும் சரி… தலைச் சுமை இறக்கி வைத்து சற்றே இளைப்பாறிச் செல்ல பரந்த மனதுடன் திறந்து வைத்த திண்ணைக் கலாசாரம்… ஆச்சி… குடிக்க கொஞ்சம் தண்ணி கொண்டுட்டு வாங்க… தாகமா இருக்கு… – குரல் கேட்ட அடுத்த நொடி என் அம்மை நீர்ச் செம்போடு வாசலில் நிற்பார். அங்கே கதைகள் பரிமாறப்படும். இரு வேறு கலாசாரங்களின் பின்னணியில் இருப்போரிடையே சிநேகம் துளிர்விட்டு மரமாய்க் கிளைத்தெழுந்திருக்கும்! அப்படித்தான் எங்களுக்குள்ளும் சிநேகம் கிளைத்தது. மலையாள இலக்கியத்தில் கம்யூனிஸ சித்தாந்தங்களின் தாக்கம் இழையோடும். அவற்றின் பின்னணியும் உள்ளர்த்தமும் அவரிடம் இருந்து நான் உள்வாங்கிக் கொண்டேன். சிறு வயதில் வெறும் பக்தி இலக்கியங்களை மட்டுமே படித்து வந்த எனக்கு இவையெல்லாம் புதிய அனுபவமாகவே இருந்தன. காசு கொடுத்து வகுப்புக்குப் போய் முறையாகப் படித்துக் கற்றுக் கொண்டதை விட, இப்படி அனுபவப் பெரியவர்களின் வாய்மொழியே கற்றது நிறைய! வாஞ்சிநாதன் கதை, பாரதமாதா சங்கம், தென்காசி-செங்கோட்டை-புனலூரில் நிகழ்ந்த புரட்சிச் சிந்தனை, நெல்லையில் வாஞ்சியின் பணி, வாஞ்சி உயிர்த்தியாகம் செய்த பின்னே பாரத மாதா சங்கத்துக்கு நேர்ந்த கதி, ஆங்கிலேயரின் தேடுதல் வேட்டை, செங்கோட்டையில் ஹரிஹர ஐயர் என்ற பெயருடைய பல இருக்க, சங்கத்தின் ஒரே ஒரு குறிப்பை வைத்துக் கொண்டு ஹரிஹரன் என்ற பெயர் உள்ள எல்லோரையும் ஆங்கிலேயர் சல்லடை போட்டுத் தேடியது,  பயத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது… இப்படியாக ஒரு நாள் கதை போனதென்றால், கணித மேதை எஸ்.எஸ். பிள்ளை எனப்பட்ட செங்கோட்டை சிவசங்கர நாராயணப் பிள்ளை ஒருநாள் தலைக்காட்டுவார். எஸ்.ஜி.கிட்டப்பா என்ற செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பா வாழ்ந்த வீட்டின் நேர் எதிர் வீடுதான் என்பதால், அந்த வீட்டின் திண்ணையைப் பார்த்தபடியே ஜனார்த்தனன் சாரிடம் என் கற்பனைகளை விரிய விடுவேன். சார்… இங்கே எத்தனை இரவுகள் கிட்டப்பா தன் நண்பர்கள் சூழ பாட்டுப் பாடியிருப்பார்… என்று! அப்போது கிட்டப்பா பற்றிய பேச்சுகள் காத்துவாக்கில் ஓடும். சரக்கு என்ற அந்தச் சாராயத்தின் வீரியத்தால் ஒரு மாபெரும் கலைஞன் முப்பதைத் தாண்டுவதற்குள் கருகிய செடியாய் உதிர்ந்து போன கதையைக் கேட்கும்பொதெல்லாம்… கூடா நட்பின் கேடு என் மனத்தில் ஓங்கி உரைக்கும். அதே தெருவில், எங்கள் வீட்டு வரிசையில் கடையில் இருக்கும் மண்டபத்தை ஒட்டிய வீட்டில்தான் செங்கோட்டை ஆவுடையக்காள் என்ற அந்த பிரும்ம ஞானி இருந்தாள் என்ற கதையைச் சொன்னபோது, பாரதியின் முன்னோடியாமே இவர் என்று ஆச்சரியம் தென்படும். கிளிப்பாட்டும் குயில்பாடும் அங்கே ஒன்று கலக்கும். ஆவுடையக்காளின் அத்வைதப் பாடல்கள் குறித்த செய்திகள் அப்போதுதான் எனக்கு அறிமுகமாயின. ஏதோ சில பாடல்களை சிறுவயதில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு மாமிகள் சிலர் பாடியதைக் கேட்டிருந்தேன் என்றாலும், அவற்றை ஏற்கத் தயாராயிருந்த அறிவுநிலை எட்டிய இந்த வயதில் அவை எனக்கு பிரமாண்டமாகவே பட்டன. அவற்றை ஜனார்த்தனன் சார் சொல்லும் அழகே தனி. பின்னாளில் ஞானானந்த தபோவனத்தில் இருந்து நித்யானந்தகிரி சுவாமிகளின் மேற்பார்வையில் செங்கோட்டை ஆவுடையக்காள் புத்தகம் தொகுக்கப்பட்டது. அவருடைய நண்பர் வட்டம் பெரிது. அவ்வை நடராஜன் பற்றிச் சொல்வார். கம்பன் கழகம், திருக்கோவிலூர் கபிலர் விழா பற்றிச் சொல்வார். அவர் கலந்து கொண்ட அனுபவங்களைச் சொல்வார். தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வருடந்தவறாமல் அவர் சொற்பொழிவு இருக்கும். திருக்குறள் விளக்க நூல்களை எழுதியுள்ளார் ஜனார்த்தனன். அவருடைய நண்பர்களான தீப.நடராஜன் (ரசிகமணி டி.கே.சியின் பேரன்), தி.க.சி., கி.ரா., என ஒரு வட்டம் ஓடும். பின்னாளில் பத்திரிகையுலகுக்குள் நுழைந்து, மிகச் சிறு வயதில் (27) நான் மஞ்சரி டைஜஸ்ட் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற போது, எனக்கு வழிகாட்டியாய் அமைந்தது, அந்தச் சிறுவயதில் நான் அனுபவ பூர்வமாய் ஜனார்த்தனன் சாரிடம் கேட்ட இலக்கிய சுவாசமே! எத்தனை மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் அவரிடம் இருந்து வற்புறுத்திக் கேட்டுப் பெற்று வெளியிட்டிருப்பேன். நான் ரசித்த அந்த இலக்கிய சுவாசத்தை வாசகர் அறியட்டுமே என்ற உந்துதல். அவருக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்ட போதும், அவ்வப்போது ஊருக்குச் சென்று அவர் வீட்டில் சற்று நேரமேனும் அமர்ந்து பேசி, எதையாவது விஷயத்தை எழுதி வாங்கிக் கறந்துவந்து விடுவேன்… 2006ம் வருட மஞ்சரி தீபாவளி மலரில் எழுத்தாளர்களின் புகைப்படத்துடன் கட்டுரைகளை வெளியிட்டிருந்தேன். அதற்காக ஒரு கட்டுரை கேட்டுப் பெற்றேன் ஜனார்த்தனன் சாரிடம். அதற்காக சார் உங்களை ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளட்டுமா என்று கேட்டேன்… இல்லை வேண்டாம். என் முகம் சரியாயில்லை.. கண் சற்று பிரச்னை. நான் வேறு படம் தருகிறேன் என்றார். அப்படியே தள்ளிப் போனது… அவரைப் படம் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை… பின்னர் அந்த நேரம் அமையவேயில்லை! பின்னாளில் ஒரு முறை அவரை அழைத்து வந்து சென்னையில் ரசிகமணி டி.கே.சி. குறித்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினேன். அதற்காக 10 வருடங்களுக்கு முன்னர் அவரை பத்திரமாக அழைத்து வந்து, என் வீட்டில் தங்க வைத்து, பணிவிடை செய்த பேறு எனக்குக் கிட்டியது. நிமிர வைத்த நெல்லை என நெல்லைக்காரர்கள் குறித்த தொகுப்பு நூல்களைக் கொண்டுவந்த வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் நானும் எப்போது சந்தித்தாலும், பேசிக் கொண்டாலும், உடனே அவர் விசாரிப்பது… என்ன சிர்ராம் சார்… ஜனார்த்தனன் சார் எப்படி இருக்கிறார். ஊருக்குப் போனீங்களா.. பாத்தீங்களா? என்பதுதான். செங்கோட்டை ஆற்றங்கரைத் தெரு அக்ரஹாரத் தெருவில் சிறு வயதில் நான் ஓடி விளையாடிய அந்த வீட்டைத்தான் பின்னாளில் ஜனார்த்தனன் சார் விலைக்கு வாங்கி எடுத்துக் கட்டி நவீனப் படுத்தியிருந்தார். அதனால் எனக்கு விவரம் தெரிந்த வயதில் அந்த வீட்டுக்குள் செல்லும் போதெல்லாம், செங்கல் தளம் பாவிய தரையில் 3ம் வகுப்பு படித்த நாளில் ஆத்திச்சூடியும், திருக்குறளும் கொன்றை வேந்தனுமாக நானும் என் தங்கையும்  போட்டி போட்டு இடத்தைப் பிரித்துக் கோடு போட்டு, வரப்பு தாண்டாமல் சுண்ணக் கட்டியால் எழுதி எழுதிக் குவித்து நீர் விட்டு அழித்த நாட்களை மனதில் அசைபோட்டுக் கொள்வேன். இப்போது அந்த வீட்டில் ஜனார்த்தனன் சாரும் இல்லை. இனி அவர் அங்கே இருக்கப் போவதுமில்லை… அழியாத கோலங்களாய் சாக்பீஸால் வரப்பு கட்டி ஆத்திசூடி எழுதிப் பழகிய அந்தச் செங்கல் தரைத் தளமும் இப்போது இல்லை…  சண்டை போட்டு வரப்பு பிரித்த என் தங்கையும் என்னுடன் இல்லை. அவர்கள் அமரர் உலகில்… நினைவுகள் மட்டும் என் உள்ளத்தில்!

இந்திய காதலர் தினம் கொண்டாடினா என்ன…?!

book-lovers-day இது இலக்கியக் காதல்… இந்தியக் காதல்…. காதல் இல்லாம.. நம்ம பரம்பரை இல்லை! காதல் இல்லாம நம்ம பக்தி இலக்கியங்கள்கூட இல்லைன்னா… அப்படிப்பட்ட காதலுக்கும் காதலர் தினத்துக்கும் எவ்ளோ முக்கியத்துவம் நாம குடுக்கணும்? காதலர் தினம்னு யாரோ ஒரு பாதிரியார் பேரைச் சொல்லி இங்க மார்க்கெடிங் பண்ணிக்கிட்டிருக்காங்களே…! நம்ம நாட்டு புராதன காதலர் தினம்னு ஒண்ணு தொடங்கலாம்னு பார்க்கறேன்.. புது வகை மார்க்கெட்டிங்தான்! கம்பராமாயணத்துல… (ஐய…. இன்னா சார்… நீங்க?! எப்ப பாத்தாலும் ராமாயணம் மகாபாரதம்னுக்கிட்டு….ன்றீங்களா?) ராமாயணத்துல சீதையை கண்ணுல காமிச்சி… ராமனோட மனசுல சூட்சுமமா இருக்கற காதலை ஜெயிக்க வைக்கிறதுக்காக விஸ்வாமித்திரரு.. நடையா நடந்து… ராமனை மட்டும் தனியா கூட்டிக்கிட்டு…. ஜனகபுரியான மிதிலைக்குப் போயி… அப்படியே அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினள்னு கம்பனைப் பாட வெச்ச அந்த ஸீனை நிறைவேத்தினதுக்காக… அந்த தினத்தை காதலர் தினம்னு நாம கொண்டாடிக்கலாம்… அப்புறம் மகாபாரதத்துல… ருக்மிணிங்கற சின்னஞ்சிறுமி… கண்ணன்ங்கிற இளைஞனைப் பத்திக் கேள்விப்பட்டு… கேள்விப்பட்டு.. மனசில் ஆசையை வளர்த்துக்கிட்டு.. நெஞ்சிலே காதல் கொண்டு… அதுக்காக காதல் கடிதமெல்லாம் எழுதி… ஒரு ஏழை அந்தணனின் உதவியை நாடி… அவர் மூலமா கடிதம் கொடுத்து…. தன்னை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்துக்க ஒரு வழியைக் காண்பித்து… காதலில் ஜெயித்த அந்த தினத்தை நாம் காதலர் தினமா கொண்டாடலாம்… அப்படியும் இல்லையா…. இருக்கவே இருக்காரு.. நம்ம வேங்கடாசலபதி! அம்மையார் பத்மாவதி – அலமேலுமங்கையைக் கரம்பிடிக்க எத்தனை தூது, எத்தனை சமரசம்… எத்தனை நிபந்தனை எல்லாம் தாண்டி கரம் பிடித்த அந்த தினத்தை காதலர் தினமா கொண்டாடலாம். அப்படியும் இல்லையா…? இதெல்லாம் தெய்வங்கள் மனித உருவெடுத்து வந்து காதலில் வெற்றி கண்டதா நாம கொண்டாடிக்கிட்டிருக்கிற விசயங்கள்… ஆனா…. நம்ம திருமங்கை மன்னர்னு ஒருத்தர் இருக்காரே… அவரு… குமுதவல்லின்னு ஒரு மங்கையைக் காதலித்து அவளைக் கரம்பிடிக்க என்ன பாடெல்லாம் பட்டாரு? கடைசியில எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு… அப்படி ஒரு மாதரசியைக் கரம்பிடிச்சதால உலகமே கொண்டாடுகிற ஒரு ஆழ்வார் ஸ்தானத்துக்கு உயர்ந்து நின்னாரு..! காதல்னா அப்படியில்ல வாழ்க்கையில் ஒரு ஆணை உயர்த்தணும்?! அப்படி திருமங்கையாழ்வார் குமுதவல்லியாரை எத்தனையோ இடையூறுகளையும் தாண்டி கரம்பிடிச்சி.. காதல்ல ஜெயிச்ச அந்த தினத்தை நாம காதலர் தினமா கொண்டாடினாத்தான் என்ன..? எப்படியும் காதலர் தினம்னு ஒரு தினத்தை நாம கொண்டாடுறதுதான் நோக்கம்னா… இப்படி ஒரு இந்தியத் தனமான காதலர் தினத்தை… அல்லது திருமங்கை மன்னரைப் போன்ற தமிழர்த்தனமான காதலர் தினத்தைக் கொண்டாடினாத்தான் என்ன….? எப்படி நம்ம ஐடியா…?

ஸ்ரீ ஹனுமத் மந்திரம்

hanuman1 - 2026

ஸ்ரீ ஹனுமத் மந்திரம்

ஓம் நமோ ஹனுமதே ஸோபிதாந நாய|
யசோல க்ருதாய|
அஞ்சநீ கர்ப்ப ஸம்பூதாய|
ராம லக்ஷ்மணா நந்தகாய|
கபிஸைன்ய ப்ரகாசந|
பருவதோ த்பாடனாய|
ஸுக்ரீவ சாஹ்யகரண ப்ரோச்சாடந|
குமார ப்ரஹ்மச்சைர்ய கம்பீர ஸ்ப்தோதயா|
ஓம் ஹ்ரீம் சர்வதுஷ்ட க்ரஹ நிவாரணாய ஸ்வாஹா|
ஓம் நமோ ஹனுமதே ஏஹி ஏஹி ஏஹி
சர்வ க்ரஹ ப்பூதாநாம்|
ஸாகிநீ டாகிநீநாம்|
விஷம துஷ்டானாம்|
ஸர்வேஷா மாகர்ஷய யாகர்ஷய|
மர்த்தய மர்த்தய|
ச்சேதய ச்சேதய|
மர்த்தியாந் மாரய மாரய|
சோஷய சோஷய|
ப்ரஜ்வல ப்ரஜ்வல|
ப்பூத மண்டல பிஸாச மண்டல நிரஸநாய|
ப்பூதஜ்வர ப்ரேதஜ்வர சாதுர்த்திகஜ்வர|
ப்ரஹ்ம்ம ராக்ஷச பிசாச ச்சேதநக்ரியா|
விஷ்ணுஜ்வர மஹேஸ்வர ஜ்வரான்|
ச்சிந்தி ச்சிந்தி ச்சிந்தி க்சிந்தி|
அக்ஷீஸூலே ஸிரோப்பியந்தரே|
ஹட்சி ஸூலே குன்ம ஸூலே பித்த ஸூலே|
ப்ரஹ்ம்ம ராக்ஷஸ குல ப்ரபல நாககுல விநிர்விஷ ஜுடிதி ஜுடிதி|
ஓம் ஹ்ரீம் ப்பட் க்கே க்கே ஸ்வாஹா||

ஓம் நமோ ஹனுமதே பவனபுத்ர வைஸ்வாநகமுக
பாபத்ருஷ்டி ஷோடாத்ருஷ்டி
ஹனுமதேகா ஆங்ஞாபுரே ஸ்வாஹா||

(குறிப்பு: என்னுடைய பாட்டனார் வீரகேரளம்புதூர் ராம ஐயங்கார் ஹனூமத் உபாசகராகத் திகழ்ந்தவர். அப்பாவும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால் நானோ தடம் மாறி சுதர்ஸன உபாஸனையை கைக்கொண்டேன். எங்கள் இல்லத்தில் கீழ்க்காணும் இந்த ஹனூமத் மந்திரம் அச்சடிக்கப்பட்டு, கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் இரண்டாவது கட்டு நிலைப்படியில் மாட்டப் பட்டிருக்கும். தாத்தாவின் சேகரிப்பில் இருந்த ஒரு ச்லோகம் இது. இந்த மந்திரத்தை எழுதியோ அச்சடித்தோ கண்ணாடி பிரேம் போட்டு வீட்டின் வாசல் நிலைப்படியில் தொங்கவிட்டால், வீட்டுக்கு எந்த தோஷமும் வராது என்றும், திருஷ்டி ஏற்படாது; பேய் பிசாசு பில்லி சூனிய தொந்தரவுகள் வராது என்றும் இந்த ச்லோகத்தின் அடிக்குறிப்பில் இருந்தது.  பொது நன்மை கருதி அதனை இங்கே அடியேன் அப்படியே தருகிறேன். ஹனுமான் அருளால் அனைவருக்கும் சகல நலன்களும் கிடைக்கட்டும்.

  • செங்கோட்டை ஸ்ரீராம் )

Disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு:

தமிழ் தினசரி.காம் தளம் – தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தமிழ் இணையச் செய்தித் தளமாக செய்திகளின் சுவை அறிந்த குழுவால் இந்தத் தளம் செயல்படுத்தப் படுகிறது.
தினசரி தளத்தில் வரும் தேசிய, உலகச் செய்திகள், தகவல்கள் ஏஜென்ஸி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை. உள்ளூர் செய்திகள், தகவல்கள் செய்திக் குழுவினரால் பெரிதும் சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும்.
தளத்தில் வெளியாகும் படைப்புகள் கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தினசரி தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.
படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.
தினசரி.காம் தளத்தில் வரும் பின்னூட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம். இருப்பினும், தனிநபரைத் தாக்காத, கேலியாகக் குறிப்பிடாத பின்னூட்டங்களை அப்படியே வெளியிட நினைக்கிறோம். அவ்வாறு குறிப்பிடப்படும் பின்னூட்டங்களின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தினசரி தளம் பொறுப்பேற்காது.
எனவே வாசக அன்பர்கள், தங்களின் பொறுப்பு உணர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தினசரி.காம் தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

SSS_logoF SSS Media Work

1/3, Rama Mandiram Street,
Villivakkam, Chennai 600 049
Ph: +91 44 26176015
mail: dhinasarinews@gmail.com