திருடுபோன திருப்புறம்பியம் பெருமாள் கோயில் விக்ரகங்கள் மீட்பு: 4பேர் கைது!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி லைஃப் ஸ்டைல்
kumbakonam perumal - 2026

கும்பகோணம்: திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கடந்த பிப்.11ஆம் தேதி 2 சீனிவாசப் பெருமாள் விக்ரகங்கள் உள்பட 3 விக்ரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருப்புறம்பயத்தில் தெற்கு வீதியில் ஆதிதாசப்ப நாயுடு பரம்பரைக்கு சொந்தமான சீனிவாசபெருமாள் கோயில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த பராங்குசம் என்பவர் தினமும் பூஜைகளைச் செய்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த பிப்.10ம் தேதி இரவு கோயிலில் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றார் பராங்குசம். தொடர்ந்து மறுநாள் மாலை 6 மணி அளவில் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தபோது, கோயிலுக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோயிலில் பூஜை செய்யப்பட்டு வந்த ஒன்றரை அடி உயரம் உள்ள ஐம்பொன்னாலான பெருமாள் விக்ரகம், பத்மாவதித் தாயார் விக்ரகம், மற்றொரு தாயார் விக்ரகம், பீரோவில் இருந்த வெள்ளி ஜடாரி, வெள்ளி பூஜை பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பராங்குசம், கிராமத்திள் உள்ளவர்களை அழைத்து சென்று பார்த்தபோது, கோயிலின் பின்பக்கம் 20 அடி உயரம் கொண்ட மதில் சுவரில் மர்ம நபர்கள் ஏறி வந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும், மேலும், கோயில் உள்ளே மூலவர் கதவில் இருந்த மணிகளில் கிரீசை தடவி சத்தம் வராமல் இருப்பதற்காக வைத்துள்ளதும் தெரிய வந்தது.

இதுகுறித்து பராங்குசம் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து, 3 பஞ்சலோக விக்ரகங்களை மீட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.