
பிறந்தநாளின்போது வெளிநாட்டு சுற்றுலா செல்லமுடியாமல் போனதால் தன்னுடைய வீட்டையே விமான நிலையம் போல மாற்றியுள்ளார் ஒரு பெண்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலரால் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் டாடா நிகோலே என்பவர் தன் பிறந்தநாளன்று வெளிநாட்டு சுற்றுலாப்பயணம் செல்ல முடியாததால் வீட்டிலிருந்தே தன்னால் முடிந்த அளவு சிறப்பான முறையில் தன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தார்.
அதாவது, தன் வீட்டையே ஒரு குட்டி விமான நிலையம் போல் மாற்றி அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், முதலில் சுற்றுலாவிற்கு எடுத்துச்செல்லும் பைகளை ஏர்போர்ட்டிற்குள் எடுத்துச்செல்வது போலும், அங்கு பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்படுவது மற்றும் விமானத்தில் ஏறியவுடன் அங்குள்ள பணிப்பெண்கள் இவருக்கு சேவை செய்வது போன்ற காட்சிகளில் இவரே நடித்து அசத்தியுள்ளார்.

ஒரே ஆளாக அந்த வீடியோவின் அனைத்து காட்சிகளிலும் நடித்து தன் முகபாவனைகள் மூலம் இணையவாசிகளை கவர்ந்துள்ளார் டானா. அதுவும் தன் வீட்டையே குட்டி விமான நிலையம் போல் மாற்றி அமைத்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த வீடியோவை ஷேர் செய்திருந்த நிலையில், பலரும் டானாவை பாராட்டி பதிவிட்டுவருகின்றனர். அதிக நாட்கள் கழித்து ஃபேஸ்புக்கில் இதுபோன்ற ஒரு நல்ல வீடியோவை பார்த்ததாகவும் டானாவின் முக பாவனைகள் அருமை எனவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.