
தன் சிறுவயது நண்பனையே பல ஆண்டுகள் கழித்து பார்த்து, காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.
அமெரிக்காவின் நியூகாஸ்டில் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தவர்கள் ஹெய்டி பார்கர் மற்றும் எட் சவித். இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்துவந்த நிலையில் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகி பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

கடந்த 2016ம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெய்டியின் தாய் மற்றும் எட்டின் தாய் பேசிக்கொண்டிருக்கும்போது ஹெய்டிக்கு 6 வ்யதாக இருக்கும்போது குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்றதாகவும் அப்போது எட் என்ற சிறுவனும் ஹெய்டியும் நண்பர்களானதாக ஹெய்டியின் தாய் கூறியுள்ளார்.
அதனை அடுத்து எட்டின் தாய் எந்த இடம் என்பது குறித்து விசாரித்துவிட்டு அது தன் மகனே என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஹெய்டி, தன் தாயிடம் அந்த புகைப்படத்தை கேட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் தற்போது தான் திருமணம் செய்துகொண்டுள்ள நபர் தான் சிறுவயதில் தன் நண்பராக இருந்த எட் என்பதை புரிந்துகொண்டுள்ளார்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹெய்டி மற்றும் எட்
அதனை அடுத்து, உற்சாகத்தின் மிகுதியில் குழந்தைகளாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மாதிரியே தற்போதும் எடுத்துக்கொண்டுள்ளனர் அந்த தம்பதி. இதுகுறித்து ஹெய்டியிடம் கேட்டபோது, “என் தாய் அந்த புகைப்படத்தை காட்டியவுடன் என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை. நான் உற்சாகத்தில் மிகவும் சத்தமாக அம்மா.. இது யார் என்று தெரிகிறதா என்று கத்திவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
சிறுவயதில் நண்பர்களாகி பின்னர் எதிர்பாராதவிதமாக பிரிந்து, தற்போது மீண்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள ஹெய்டி மற்றும் எட்டின் கதை திரைப்படங்களில் வருவதுபோன்று உள்ளதாக பலர் தெரிவித்துவருகின்றனர்.