
மதுரையைச் சேர்ந்த மாணவி நேத்ரா, ஐ.நா பெயரிலான ஓர் அமைப்பு வழங்கிய பரிசுத் தொகையான ரூ. 1 லட்சத்தையும் ஏழை மக்களுக்கு பொருட்களாக வழங்கினார்.
மதுரை அண்ணாநகர் நெல்லை வீதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் முடித்திருத்தகம் வைத்து நடத்தி வருகிறார். இவர் தன் மகள் படிப்புச் செலவுக்காக ரூ.5 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தார். அத் தொகையை, மாணவி நேத்ராவின் ஆலோசனையின் பேரில், கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வாங்கி வழங்கியுள்ளனர்.
இவர்களது சமூக சேவை குறித்து அறிந்த பிரதமர் மோடி, தனது மனதின் குரல் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டினார். இதை அடுத்து, இவர்கள் மீது ஊடக வெளிச்சம் விழுந்தது. உலக அளவில் இவர்களது சேவை குறித்து வெளித் தெரிந்தது.
இதையடுத்து பாகிஸ்தானின் மலாலாவுக்கு விருது வழங்கிய ஐ.நா. பெயரிலான ஓர் துணை அமைப்பு, இவரை பாராட்டி, ஏழை மக்களின் நல்லெண்ண தூதுவராக நியமித்து ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையை வழங்கியது.
இந்தத் தொகையையும் மாணவி நேத்ரா தாமே வைத்துக் கொள்ளாமல், மதுரை ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் ரூ.1 லட்சத்துக்கும் பொருட்களை வாங்கி ஏழை மக்களுக்கு, மதுரை மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை