அரியலூர் மாவட்டம் கீழகாவாட்டங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குந்தவபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் அபிநயா, படிப்பில் சிறந்து விளங்குபவர்.
கிராமப்புற மக்களுக்கு மிகவும் அந்நியப்பட்ட செஸ் விளையாட்டிலும் மிகவும் திறமைசாலி. கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியம், ஒட்டப்பந்தயம் என அனைத்திலும் முதல் மாணவியாக அசத்தி, ஏராளமான பரிசுப் பொருள்களை பெற்று குவித்துள்ளார்.
சிறு விவசாயியான இவரது தந்தை, கடந்த ஜனவரி 1-ம் தேதி, புத்தாண்டு தினத்தன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகம். கடும் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறது அபிநயாவின் குடும்பம். இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
அந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சியோடு நினைவுகூரும் இப்பகுதி மக்கள், அபிநயா, வெளியூர்ல உள்ள தன்னோட பாட்டி வீட்ல இருந்தப்ப ஊரடங்கு அறிவிக்கப்பட்ட்டது.
மற்ற இடங்கள்ல எல்லாம், சிலர் மக்களுக்கு உதவிகள் செய்றதை டி.வி-யில பார்த்திருக்கிறாள். தன்னோட ஊர்மக்களுக்கு தானும் ஏதாவது உதவி செய்யணும்னு ஆசைப்பட்டு, தன்னோட அம்மாவுக்கு ஃபோன் பண்ணி பேசியிருக்கிறார். நாமளே சோத்துக்கு திண்டாடிக்கிட்டு இருக்கோம். நாம எப்படி உதவி செய்ய முடியும்’னு அபியோட அம்மா சொல்லியிருக்காங்க. ஆனாலும், ஏதாவது செஞ்சே ஆகணும்னு அபி உறுதியா சொல்லியிருக்கார். வேணும்னா, நீ உண்டியல்ல சேர்த்து வைச்சிருக்குற பணத்தை எடுத்து, ஊருக்கு உதவி செய்’னு அபியோட அம்மா கொஞ்சம் கோபமா சொல்லியிருக்காங்க.
உடனே, ஊருக்கு கிளம்பி வந்து உண்டியலை உடைச்சிப் பார்த்திருக்கார். மூவாயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கு. இந்த பகுதியில உள்ள சமூக ஆர்வலர்கள்கிட்ட ஆலோசனை கேட்டு, மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய மூலிகைகள் அடங்கிய சூப், கபசுர குடிநீர் தயார் செஞ்சி, கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சி முழுக்க கொடுத்திருக்கார்.
ஊர் முழுக்க மூலிகை சாம்பிராணி போடவும் உதவி செஞ்சிருக்கார். இந்த விஷயத்தை, எங்க பகுதியைச் சேர்ந்த தங்க.சண்முக சுந்தரம், அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான சீனிவாசனிடம் சொல்லியிருக்கிறார்.
இந்த சின்ன வயசுல, அதுவும் மிகவும் ஏழ்மையான நிலையில, இந்த பொண்ணு, ஊர்மக்களுக்கு மிகப்பெரிய நன்மை செஞ்சிக்கு. சிறுக சிறுக சேர்த்து வைச்ச பணத்தை எடுத்து, ஊருக்கு நல்லது செய்றதுங்கறது, நினைச்சிக்கூட பார்க்க முடியாதது. நேர்ல போயி, பாராட்டியே ஆகணும்’னு சொல்லி, அபிநயா வீட்டுக்கே வந்துட்டார் எஸ்.பி. சால்வை போர்த்தி பாராட்டியிருக்கார். ஐ,ஏ.எஸ் ஆகணும்னுங்கறது அபிநயாவோட கனவு. இதை நிறைவேற்ற உதவிகள் செய்றதாகவும் எஸ்.பி. சொல்லியிருக்கார். அபிநயாவும், இவரோட அம்மாவும் கண்கலங்கிட்டாங்க’’ என தெரிவித்தார்கள்.
இதுகுறித்து நெகிழ்ச்சியோடு பேசும் அபிநயா,“கொரோனா வராமல், எங்க ஊர் மக்களை பாதுகாக்கணும். இதை விட, நான் சேர்த்து வைச்ச பணம் பெருசில்ல. நான் செஞ்சது ஒரு சின்ன உதவிதான்” என பெரிய மனதுடன் பேசுகிறார். .