Home அடடே... அப்படியா? முதலில் பிச்சை பின்பு சுயமாய் டீ விற்று பிழைப்பு..! வரும்படியில் இல்லாதவர்க்கு உதவும் பட்டதாரி...

முதலில் பிச்சை பின்பு சுயமாய் டீ விற்று பிழைப்பு..! வரும்படியில் இல்லாதவர்க்கு உதவும் பட்டதாரி இளைஞர்!

tamilarasan1

பேரிடர்க் காலங்கள் பெரிய மனதுக்காரர்கள் பலரை இந்தச் சமூகத்துக்கு அடையாளம் காட்டிவிட்டுப் போகும். இந்தக் கொரோனா காலமும் அப்படித்தான் பல நல்ல உள்ளங்களை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வெளிச்சத்தின் ஓரத்தில் பட்டதாரி இளைஞர் தமிழரசனும் தெரிகிறார்.

பட்டதாரி என்றதும் படிப்பை முடித்துக் கை நிறையச் சம்பாதிக்கும் மாதச் சம்பளக்காரர் என்று நினைத்து விடாதீர்கள். கொரோனா காலம் தொடங்குவதற்கு முன்பு வரை தமிழரசன் மற்றவர்களிடம் கையேந்திப் பிழைத்த யாசகர். ஆனால், இப்போது தன்னைப் போல அன்றாடச் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் தெருவோரத்து மக்கள் 20 பேருக்கு தனது உழைப்பில் ஒருவேளை சாப்பாடு தந்து கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்துக்காரர் ஆ.தமிழரசன். இரண்டு வயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்த இவருக்கு அடைக்கலம் கொடுத்தது அருப்புகோட்டையில் உள்ள ஓர் அனாதை இல்லம். அங்கேயே இருந்து 12-ம் வகுப்பு வரை படித்து முடித்த தமிழரசன், பள்ளி நாட்களிலேயே பட்டிமன்ற மேடைகளையும். ரியாலிட்டி ஷோக்களையும் வசீகரித்தார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு பிஎஸ்சி பட்டதாரி ஆனார்.

பட்டம் வாங்கியதும் வேலை தேடிச் சென்னைக்குப் பயணமானார். இரவில் மெரினாவில் படுத்து உறங்கி, பகலில் வேலை தேடி அலைந்தார். எந்த வேலையும் அகப்படவில்லை. மாறாக, மெரினாவில் தமிழரசன் தலைக்கு வைத்துப் படுத்திருந்த தனது உடைமைகளைப் பறிகொடுத்ததுதான் மிச்சம். இதனால், அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கே கையேந்த வேண்டிய நிலை. பட்டதாரி என்றெல்லாம் கவுரவம் பார்க்காமல் சீர்மிகு சென்னையின் தெருக்களில் கையேந்த ஆரம்பித்தார் தமிழரசன்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சென்னையில் யாசகம் வாங்கி வயிற்றைக் கழுவினார் தமிழரசன். ஒரு கட்டத்தில் சென்னை வெறுத்துப் போனதால் மதுரைக்கு ரயிலேறினார். மதுரை ரயில்வே ஸ்டேஷனிலேயே உண்டு உறங்கிக் கொண்டு யாசக பிழைப்பைத் தொடர்ந்தார். இடையிடையே குப்பை சேகரித்து அதில் கொஞ்சம் காசு திரட்டினார். அந்தப் பிழைப்புக்கும் வந்தது வினை. ‘இங்கெல்லாம் படுக்கக்கூடாது கெளம்பு’ என்று ரயில்வே போலீஸார் லத்தியைக் காட்டியதால் மதுரை ரயிலடியைவிட்டுப் பொடி நடையாகவே புறப்பட்டார் தமிழரசன்.

tamillarasan

நடந்தே அவர் அலங்காநல்லூர் அருகே வந்தபோது கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் வேறெங்கும் நகரமுடியவில்லை. கையில் சுமார் 7 ஆயிரம் ரூபாய் சேமிப்பு இருந்ததால் அங்கேயே தங்கிவிடலாம் என இருப்பிடம் தேடினார் தமிழரசன். அலங்காநல்லூர் அருகே கல்லணையில் அவருக்கு ஒரு ஜாகை கிடைத்தது. பிறகு நடந்தவற்றை தமிழரசனே கூறுகிறார்.

”நான் இங்க வந்த சமயத்துல ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால ஊருக்குள்ள டீக்கடை கூடத் திறக்கல. அதனால, ஒரு சைக்கிளையும் டீ கேனையும் வாடகைக்கு எடுத்து நானே டீ போட்டு சைக்கிள்ல எடுத்துட்டுப் போயி விற்க ஆரம்பிச்சேன். செலவெல்லாம் போக ஒரு நாளைக்கு முந்நூறு ரூபா கையில தங்குச்சு. நான் சைக்கிள்ல டீ விற்கப் போன இடங்கள்ல என்னைப் போல ரோட்டோரத்துல ஆதரவற்று இருந்தவங்களுக்கும் இலவசமாவே டீ குடுக்க ஆரம்பிச்சேன். நாளாக நாளாக வருமானம் கூடிக்கிச்சு.

தினமும் 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும் இருப்பு சேர்ந்துச்சு. இதை வெச்சு, ஆதரவற்றவங்களுக்கு ஒருவேளை சாப்பாடாச்சும் குடுக்கலாமேன்னு எனக்குள்ள தோணுச்சு. உடனே, கையில இருந்த காசுல முப்பது, நாப்பது பேருக்குச் சாப்பாடு வாங்கிக் குடுத்தேன். ஆனா, அது எனக்கு கட்டுப்படி ஆகல. அதனால நான் தங்கி இருக்கிற வீட்டுலயே தினமும் முப்பது, முப்பத்தஞ்சு பேருக்குக் குடுக்குற மாதிரி நானே சமையல் பண்ண ஆரம்பிச்சேன்.

அதுக்குள்ள ஊரடங்கு தளர்வுகள் வந்துட்டதால டீக்கடைகள திறக்க ஆரம்பிச்சுட்டாங்க. இருந்தாலும் நான் வாடிக்கையா குடுக்கிற கம்பெனிகள், ஆபீஸ்கள், பட்டறைகள்ல எனக்கான வியாபாரம் எப்போதும் போல இருந்துச்சு. இப்ப ரோட்டோரத்துல இருக்கிற இருபது பேருக்கு தினமும் சாப்பாடு குடுக்குறேன். நான் இப்படி உதவுறதப் பாத்துட்டு இரக்கப்படற சிலரும் என்கிட்ட காசு குடுத்து, இல்லாதவங்களுக்கு உதவச் சொல்றாங்க” என்றார் தமிழரசன்.

தமிழரசன் மூன்று நாட்களுக்கு முன்பாக இன்னொரு செயற்கரிய காரியத்தையும் செய்திருக்கிறார்.

சென்னை சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சூரியகலா என்ற பெண்மணி, ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு, வீட்டு வேலைக்குச் சென்று நான் எனது பிள்ளைகளை வளர்த்து வந்தேன். இப்போது கொரோனா அச்சத்தால் வீட்டு வேலைக்குச் செல்வதும் தடைப்பட்டுவிட்டதால் நான்கு மாதங்களாக தினப்படி சாப்பாட்டுக்கே நாங்கள் சிரமத்தில் இருக்கிறோம்.

எனக்குத் தையல் வேலை தெரியும். எனவே, யாராவது எனக்கொரு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தால் அதை வைத்து நாங்கள் பிழைத்துக் கொள்வோம்’ என்று தனது கஷ்டத்தை யாரிடமோ சொல்லிப் புலம்பி இருக்கிறார். இவரது புலம்பலைக் கேட்ட அந்த மனிதர் அதை அப்படியே முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இந்தக் தகவல் எப்படியோ வாட்ஸ் அப் வழியாகத் தமிழரசனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

அதுபற்றி தமிழரசன் கூறுகிறார். அந்த தாயம்மாவின் நிலையைப் படிச்சதுமே மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு. உடனே அந்தம்மாவின் செல்போன் நம்பரை வாங்கி உண்மையில் அவங்க கஷ்டத்துலதான் இருக்காங்களான்னு விசாரிச்சேன்.

அது உண்மைதான்னு தெரிஞ்சதும் சென்னையில இருக்கிற என்னோட நண்பர் வெங்கடேசனுக்குப் பணம் அனுப்பித் தையல் மெஷின் ஒண்ணையும் அதுக்குத் தேவையான மத்த பொருட்களையும் வாங்கிட்டுப் போயி அந்தம்மாகிட்ட குடுக்கச் சொன்னேன்.

அதுமட்டும் போதாதுன்னு எனக்குத் தோணுச்சு. அதனால அம்பது நாளைக்கு அந்தத் குடும்பத்துக்குத் தேவையான மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிக்குடுக்க ஏற்பாடு செஞ்சேன். அனைத்தையும் அந்தம்மாவுக்கு வாங்கிக்குடுத்த என்னோட நண்பர், அந்தம்மாவோட வீட்டுலருந்தே என்னை வீடியோ கால்ல கூப்டார். வீடியோவில் என்னையப் பார்த்ததும் அந்தம்மாவுக்குப் பேரதிர்ச்சி. தனக்கு உதவி செஞ்சிருக்கிற மனுஷன் தொழிலதிபராவோ அரசு அதிகாரியாவோ இருப்பார்னுதான் அதுவரை அந்தம்மா நினைச்சுட்டு இருந்திருக்காங்க. அதனால என்னைப் பார்த்ததும் கண்கலங்கி, அழுதுட்டாங்க. அந்தத் தாயம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன்.

இனிமே உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் என்னைக் கேளுங்கன்னு சொல்லி இருக்கேன்” என்று சொன்ன தமிழரசன், ”முன்பு நான் வேலை தேடி அலையாய் அலைஞ்சேன். அப்ப எனக்கு வேலை கிடைக்கல. ஆனா இப்ப, எனக்கு வேலை தர்றதா பலரும் அழைக்கிறாங்க. ஆனா, எனது சுயநலத்துக்காக நான் ஏதாவது ஒரு வேலையில் போய் அமர்ந்துட்டா என்னை நம்பி இருக்கிற ஆதரவற்ற மக்களுக்கு உதவ முடியாமப் போயிடலாம். எனவே, எனக்கு வேலைக்குப் போக இஷ்டமில்லை.

இப்போது நான் செஞ்சிட்டு இருக்கிற சேவையை இன்னும் விரிவாக்கணும். அதுக்காக அலங்காநல்லூரிலேயே டீக்கடையுடன் சேர்த்து ஒரு உணவகத்தை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அந்த உணவகத்துல 20 ரூபாய்க்குச் சாப்பாடு தரணும், ஆதரவற்ற மக்களுக்கு இலவசமா சோறு போடணும். இதுக்கான வேலைகள்ல தான் இப்ப இறங்கியிருக்கேன்” என்றார் தமிழரசன்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று சாமானியரான தமிழரசன் செய்து கொண்டிருக்கிறார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Translate »