70 ஆண்டுக்குப் பின்… முதல் முறையாக கோயிலுக்குள் வலம் வந்த முதலை!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல்
ananthapadmanaba-swami-temple-crocodil
ananthapadmanaba-swami-temple-crocodil

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில், அமைந்துள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயில் குளத்தில் கடந்த 70 ஆண்டுகளாக வசித்துவரும் ‘பபியா’ என்னும் முதலை, முதன்முறையாகக் கோயில் வளாகத்துக்குள் நுழைந்து சந்நிதியை வலம் வந்ததாக அக்கோயிலின் தலைமை பூசாரி சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார்.

காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபுரா என்னும் கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த அனந்த பத்மநாப சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கும் முன்னோடியாகக் கருதப் படும் பழைமையான இந்தக் கோயிலின் குளத்தில் கடந்த 70 ஆண்டுகளாக ‘பபியா’ எனும் முதலை வசித்துவருகிறது.

பக்தர்கள் கொடுக்கும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்துவரும் இந்த முதலை கடந்த 70 ஆண்டுகளில் முதன்முறையாகக் கோயில் வளாகத்திற்குள் வந்துள்ளதாம்.

உச்சிகால பூஜையின் போது வழங்கப்படும் அவல் மற்றும் வெல்லம் கலந்த சாதத்தை மட்டுமே சாப்பிட்டு குளத்தில் வாழ்ந்து வந்த பபியா, முதன்முறையாகக் கோயில் வளாகத்திற்குள் வந்து சிறிதுநேரம் உலாவிவிட்டுச் சென்றதாக தலைமை பூசாரி சந்திரபிரகாஷ் நம்பீசன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோடு அடுத்த அனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற அனந்தபத்மநாபசாமி கோவில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் மூலகோயிலாகக் கருதப்படும் இந்தக் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள பெரிய குளத்தில் வசித்து வந்த இந்த முதலை, முன்னர் வெள்ளையர்களால் சுடப் பட்டதாகக் கூறப் படுகிறது. ஆனால், இந்த முதலை தொடர்ந்து 80 ஆண்டுகளாக இந்தக் குளத்தில்தான் வசித்து வருவதாக இப்பகுதியினர் கூறுகின்றனர்.

எனவே இந்தக் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் இதனை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர். குளத்தில் இருந்து தலையை வெளியே காட்டும் போது கோவிலின் மேல்சாந்தி இந்த முதலைக்கு உணவாக சர்க்கரைப் பொங்கல் வழங்குவாராம். அதனை உண்ணும் இந்த முதலை அவ்வப்போது நீருக்கு அடியில் உள்ள குகைப்பகுதியில் சென்று மறைந்து கொள்ளுமாம்.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்ட நேரத்தில் முதன்முதலாக கோவிலுக்குள் நுழைந்து சன்னிதியில் வலம் வந்துள்ளது இந்த முதலை. இதனைக் கண்ட கோவிலின் மேல்சாந்தி சுப்பிரமணிய பட், புருஷ சூக்தம், நாராயண சூக்தம், விஷ்ணு சூக்தம் ஆகியவற்றை பாராயணம் செய்துள்ளார் அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த முதலை, பின்னர் மெதுவாக நகர்ந்து மீண்டும் குளத்துக்குள் சென்றுவிட்டதாம்.

இதன் சிசிடிவி காட்சிகளை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.