“மண்ணில் தூசி” பட்டால்…!

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
madurai-vaigai-river-flood
madurai-vaigai-river-flood
  • ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.

“கண்ணில் தூசிபட்டால் கலங்கிடும் மானிடரே,
மண்ணில் தூசி்பட்டால்
கலங்கிட மறந்தீரே,”
என்று இரு மாணவர்கள் பாடியப் பாடலை தற்செயலாக சமூக வலைதளத்தில் இன்று கேட்டபோது யாரோ தலையில் குட்டுவதைப் போன்று உணர்ந்தேன்.

இயற்கை என்னும் இளகிய மனதுடைய தாய் வளங்களை நமக்காக அள்ளித் தந்தாள், தந்து கொண்டிருக்கிறாள்.

எதுவுமே இலகுவாக, இலவசமாக கிடைத்தால் அதனருமை புரியாது என்பதே கசப்பான உண்மை.

நம் பேராசையினால் பொறுமைக்கு இலக்கணமான நிலத்தையும், வாழ்வாதாரமான நீர்நிலைகளையும், உயிர்மூச்சான காடுகளையும், பரந்து விரிந்த ஆகாயத்தையும் நாம் மாசு படுத்தினோம்.

தொழில்மயமாக்கலிலும், நகரமயமாக்கலிலும் தொய்ந்துப் போனதோ பசுமை நிலங்கள். சாயப்பட்டறையின் கழிவுகளால் மாசடைந்த நீர்நிலைகள். ஆழ்குழாய் கிணறுகளோ பூமியின் இருதயத்தையே துளைக்கின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையும், வாகனங்களின் புகையும் ஓசோன் படலத்தையே ஊடுருவுகின்றன. மரங்களின் தியாகத்தினாலேயே பலவழிச் சாலைகள் மலருகின்றன. பெரிய மரங்களின் மூலம் கிடைக்கும் ஆக்ஸிஜன் அளவை, அந்த மரங்களுக்கு
மாற்றாக நடப்படும் சிறிய செடிகளால் ஈடுசெய்ய முடியுமா என்பது ஒரு சவாலாகவே தோன்றுகிறது. விவசாயத்திலும் மிதமிஞ்சிய உரங்களின் உபயோகத்தினால் நிலங்களும் மாசுப்பட்டதோடு அல்லாமலும் ஊட்டச்சத்து இல்லாத உணவுப்பொருட்களையும் உண்ணும் நிலமை நமக்கு ஏற்பட்டுள்ளது.

‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பதற்கிணங்க ஒவ்வொரு நொடியும் மனிதன் தன் செயல்களின் விளைவுகளை அனுபவிக்கிறான்.

பொறுத்துப் பார்த்த இயற்கை தாயும் சமீபத்திய லாக்டவுனில் அருமையாய்
ஓய்வெடுத்தாள்.

இமயமலையும் வெகு தூரத்தில் இருந்து தெரிகிறது, மாசற்ற காற்றும் கிடைக்கிறது, நீர்நிலைகளும் சுத்தமானது.

தனிமனித ஒழுக்கத்தினைக் கடைப்பிடித்து, அதன்மூலம் மக்களின் ஒத்துழைப்போடும் மாசுக் கட்டுப்பாடு என்னும் பழக்கத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் பெரும் பங்கு நமக்கு உள்ளது.

மரங்களை நட்டும், நட்ட மரங்களை பாதுகாத்தும், வாகனங்களை முறையாக பழுது பார்த்தும்,
பொது வாகனங்களை உபயோகித்தும், குறைவான தூரம் செல்ல பெரும்பாலும் மிதிவண்டிகளை உபயோகப்படுத்தியும்,
மின்சாரத்தையும், நீரையும் சிக்கனமாக பயன்படுத்தியும், நீர்நிலைகளை அசுத்தப்படுத்தாமலும் வளமான மாசற்ற இடமாக நம் பூமியை மாற்ற விழைந்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும், ஆரோக்கிய சூழலை நம் அடுத்த சந்ததியினருக்கு நாம் பரிசாக அளிப்பதே நமது தலையாய கடமையாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.