சக வேட்பாளரே.. கமல் எழுதும் கடிதமே!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்
kamal 1
kamal 1

கோவை தெற்கு தொகுதி சக வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் மடல் எழுதியுள்ளார். தேர்தல் என்பது போர்க்களமோ, கிரிக்கெட் போட்டியோ அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

பிரச்சாரத்தின்போது, துக்கடா, லிப் சர்வீஸ் போன்ற வார்த்தைகள் தெறித்ததால், பெரும் பரபப்பில் இருக்கிறது கோவை தெற்கு. இந்த நிலையில்

நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்கு தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள் என்று டுவிட்டரில் வெளியிட்ட மனம் திறந்த மடலில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கோவை தெற்குத் தொகுதியின் சக வேட்பாளர்களே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கமல்ஹாசனின் அன்பு வணக்கம்.

தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது இரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக்கொள்ள கூடாது என நான் என் சகாக்களிடம் அடிக்கடி குறிப்பிடுவேன்.

கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் நடைபெற இருக்கும் தேர்தல் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நிகழவேண்டுமென விரும்புகிறேன். யார் வென்றால் தனக்கு நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் வெல்லட்டும். நம்மில் யார் வென்றாலும் கோவை தெற்குத் தொகுதி மக்கள் வென்றதாகவே பொருள்.

மக்கள் பணிக்கு வந்திருக்கிறோம். வென்றவரோடு போட்டியிட்ட அனைவரும் தோள் கொடுத்தால் அது மிகப்பெரிய ஜனநாயகப் பண்பாடாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நேர்மையாக நிகழ்ந்தேற நாம் அனைவருமே ஒத்துழைக்கவேண்டும்.

ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய முன்னகர்வில் கோவை தெற்கு இந்தியாவிற்கு வழிகாட்ட வேண்டுமென விரும்புகிறேன். உங்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மிக்க அன்புடன் கமல் ஹாசன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.