“மீண்டும் தலை தூக்கும் பால் திருட்டு, தடுக்குமா காவல்துறை…?!”
சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் கடைகளில் இறக்கி வைக்கப்படும் பால் பாக்கெட்டுகள் நீண்ட காலமாகவே டப்புகளுடன் திருடப்படும் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் அரங்கேறி வந்ததை பாதிக்கப்பட்ட முகவர்களின் கடைகளில் உள்ள சிசிடிவி காட்சி ஆதாரங்களோடு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் காவல்துறையில் சமர்ப்பித்து புகார் அளித்ததால் பால் திருட்டு பெருமளவு குறைந்திருந்தது.
ஆனால் தற்போதைய கொரோனா கால ஊரடங்கை பயன்படுத்தி இக்குற்றச் செயல்களில் ஒருசில சமூக விரோதிகள் குறிப்பாக இளைஞர்கள் மீண்டும் பால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது கவலையளிப்பதாக இருக்கிறது.
சென்னை அண்ணா நகர், திருமங்கலம் பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவரான திரு. தனுஷ் (சேட்டன் மில்க் ஏஜென்சி) என்பவர் கடையில் கடந்த மே மாதம் 17ம் இறக்கி வைக்கப்பட்ட பாலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சுமார் 36லிட்டர் பாலினை திருடிய நிலையில் இந்த மாதம் 11ம் தேதி இறக்கி வைக்கப்பட்ட பாலில் சுமார் 48லிட்டர் பால் அடையாளம் தெரியாத மர்ம நபரால் மீண்டும் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவரான திரு. ஆறுமுகம் என்பவரது “A.R.பால் நிலையம்” முன் இன்று அதிகாலை சுமார் 3.00மணியளவில் இறக்கி வைக்கப்பட்ட 4000ரூபாய் மதிப்பிலான பாலினை 2000ரூபாய் மதிப்பிலான பால் டப்புகளுடன் அதிகாலை 3.45மணியளவில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து திருடிச் சென்றுள்ளனர்.
ஏற்கனவே சொற்ப வருமானத்தில் மக்கள் சேவையில் மனநிறைவை கண்டு வரும் பால் முகவர்கள் இந்த கொரோனா கால ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழ்நிலையில் இது போன்ற பால் திருட்டுகளால் கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது.
எனவே சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் பாக்கெட்டுகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தொடர்ந்து திருடப்படுவதை தடுக்க காவல்துறையினர் இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை நேர கண்காணிப்பினை அதிகப்படுத்த வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான முறையில் பால் கொண்டு செல்லும் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆய்வுக்குட்படுத்தி உண்மையில் அந்த நபர் பால் முகவர் தானா..? என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு விடுவிக்க வேண்டும் என தமிழக காவல்துறையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
பின் குறிப்பு :- பால் திருட்டு தொடர்பான சம்பவங்கள் பலவற்றில் சிசிடிவி காட்சி ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் அளித்தும் கடந்த காலங்களில் ஒரு புகாரில் கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருத்தததிற்குரியது.
- சு.ஆ.பொன்னுசாமி
நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.