ஆப்கனில் இருந்து வரும் சில செய்திகள் சுவாரஸ்யமானவை. முன்பு ஆப்கன் ராணுவத்துக்கு உலக நாடுகளெல்லாம் பல உதவிகளையும் தளவாடங்களையும் கொடுத்தன இதில் அமெரிக்காவின் பங்கு அதிகம்!
இப்பொழுது ஆப்கன் ராணுவத்தை சில இடங்களில் விரட்டும் தாலிபன்கள் அந்த தளவாடங்களை கைப்பற்றுகின்றனர்! அமெரிக்கா ஆப்கனுக்கு கொடுத்த கவச வாகனங்களை கைப்பற்றி பவனிவரும் தாலிபன்கள், அமெரிக்க ஆயுதங்களாலே அமெரிக்காவின் முகத்தில் கரி பூசுகின்றனர்!
இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் சில நவீன கருவிகளை இயக்க அவர்களுக்குத் தெரியாது, ஆனாலும் அதை கொண்டு விளையாடி ஏதோ செய்து கொண்டிருக்கின்றனர்!
உதாரணமாக பாகிஸ்தான் வரை தொடர்பு கொள்ளும் சாதனங்கள் இருந்தும் அதை வைத்து உள்ளூரை தாண்டி பேச அவர்களுக்கு தெரியவில்லை, அதி நவீன கருவிகள் இருந்தாலும் அதை இயக்கும் வகை தெரியாததால் “இதை உருக்கி துப்பாக்கி செய்வோமா” என்ற அளவில் யோசிக்கின்றார்கள்.
இந்நிலையில் 2018ல் இந்தியா ஆப்கனுக்கு கொடுத்த ரஷ்ய ஹெலிகாப்டர் எம் 35 அவர்களிடம் சிக்கிவிட்டது, இதில் தாலிபனுக்கு சோகம் என்னவென்றால் அதை இயக்க அவர்களுக்கு தெரியாது. ஆம் துப்பாக்கி தூக்க தெரியும் வெடிகுண்டு வீச தெரியுமே தவிர இப்படி விமானமெல்லாம் அவர்களுக்கு சாத்தியமில்லை!
ஆனால் அவர்களிடம் பிடிபட்ட ஆப்கன் வீரர்கள் உண்டு, அந்த அரச ஊழியர்களுக்கு இதை இயக்க தெரியும். எனினும் அவர்களை இயக்க சொன்னால் நிச்சயமாக நமது மேல் அதாவது தாலிபான்கள் மேல் ஹெலிகாப்டரோடு விழுந்து சாவார்கள் என்பதை தாலிபன்கள் மனபூர்வமாக நம்புவதால் அந்த விபரீத முயற்சியில் ஈடுபடவில்லை
இப்பொழுது உலகின் பலமான ஹெலிகாப்டரை பிடித்து வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் திகைக்கின்றது தாலிபன் கோஷ்டி. சொல்ல முடியாது பாகிஸ்தானுக்கு பில்லியன் டாலருக்கு விற்கலாம்தான் ஆனால் அதெல்லாம் உடனே நடக்கும் காரியமல்ல.
இதனால் இப்போதைக்கு “அந்த பெரிய காத்தாடிய போட்டு விடுப்பா, நல்ல காத்து வரும்” என ஹெலிகாப்டர் இறக்கையில் காற்று வாங்கிக் கொண்டு ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றது தாலிபன். சரி, ஒருவேளை அமெரிக்க ஏவுகணை ஏதும் இவர்களிடம் சிக்கினால் என்னாகும்?
ஒன்றும் ஆகாது மின் கம்பத்துக்கோ இல்லை தங்கள் சால்வைகளை காயப் போட கயிறு கட்டவோ இல்லை வழுக்குமரம் ஏறி விளையாடவோ அதை பயன்படுத்துவார்கள் அதை தவிர வேறு ஒன்றும் செய்ய அவர்களுக்கு தெரியாது!
- ஸ்டான்லி ராஜன்