
~ கமலா முரளி ~
பத்திரிக்கைகளில், இதழ்களில், மனைவி அப்பளக்கட்டையை எடுத்துக் கொண்டு ஒடி வருவதும், அப்பாவிக் கணவன் பேந்தப் பேந்த முழிப்பதும் காண முடியும். அது ஒரு நகைச்சுவையாகக் கருதப்பட்டாலும்,உண்மையில் சில மிருகக் குணமுள்ள ஆடவர்களிடம், பெண்கள் படும்பாட்டை அவலச்சுவையில் தான் சேர்க்க வேண்டும். ‘தினம் ஒரு கொடுமை’ எனக் கட்டம் கட்டிப் போடக் கூடிய பாலியல் தொல்லைத் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன.
பெண்களுக்கான கல்வி,வேலை வாய்ப்பு,சட்டப் பாதுகாப்பு,சமூக கௌரவம் என எல்லா விதங்களிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் அவர்களின் மீதான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படவில்லை.
இத்தகைய சூழலில் ”பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்” அனுசரிக்கப்படுவது தேவையே ! சர்வதேச அளவில், பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஆண்டு தோறும் நவம்பர் 25 ம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச தினம் பற்றிய தகவல்கள்
1960 ஆம் ஆண்டு டொமினிய சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜிலோவின் உத்தரவின் பேரில் , அந்நாட்டின் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான மிராபெல் சகோதரிகள் கொல்லப்பட்டனர். இக்கொடும் சம்பவத்தை நினைவு கூரும் வகையில்,இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் பெண்கள் இயக்கத்தினர், 1981 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 25ம் நாளை பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தனர்.

1979 ஆம் ஆண்டே, ஐக்கிய நாடுகள் சபை, பெண்களுக்கெதிரான அனைத்து வகை பாகுபாடுகளையும் நீக்கும் வகையிலான வரைவுத் திட்டமும் உடன்படிக்கையும் ( CEDAW – Convention of the Elimination of All Forms of Discrimination Against Women ) கொணர்ந்தாலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.. ( இருக்கின்றன ).
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகளும், அரசு சாரா அமைப்புகளும், பெண்கள் முன்னேற்றம், கல்வி, வேலை வாய்ப்பு, பாகுபாடுகளைக் களைதல் போன்ற விஷயங்களில் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தன.
2008 ஆம் ஆண்டு, பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக UNiTE to End Violence against Women என்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் தொடங்கியது.
பல நாடுகள் மற்றும் பெண்கள் இயக்கங்களின் கோரிக்கைக்கு ஏற்ப, பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள் பற்றிய தீர்மானம் ஐ.நா பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டு, 2000 ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ( 54/134 ).
ஐ.நா சபை உறுப்பு நாடுகளும்,சர்வதேச பெண்கள் அமைப்புகளும் ( UNWomen ) ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25ம் நாளை பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அனுசரிக்கின்றன.
எல்லா ஆண்டுகளும் நவம்பர் 25 ம் நாள் தொடங்கி, டிசம்பர் 10ம் நாள் ( சர்வ தேச மனித உரிமைகள் தினம்) வரை மொத்தம் பதினாறு நாட்கள் பெண்களுக்கெதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு மற்றும் மறுபுனரமைப்பு பற்றிய நிகழ்ச்சிகள் உலக அளவில் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ”ஆரஞ்சு மயமாக்குவோம் உலகை : பெண்களுக்கெதிரான வன்முறையை உடனடியாக நிறுத்துவோம் “ என்பதாகும்.
”உலகை ஆரஞ்சு மயமாக்குமாவோம்” என்பது 2015 ஆம் ஆண்டில் இஹ்ட்ருந்து எல்லா வருடங்களிலும் கருப்பொருளாக அமைந்து வருகிறது.
ஆரஞ்சு வண்ணம் ஒளிமயமான, நம்பிக்கையான எதிர்காலத்தைக் குறிக்கிறது. எல்லா நிகழ்வுகளிலும் ஆரஞ்சு வண்ணம் முன்னிறுத்தப்படும்.
இந்த ஆண்டின் ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சி 24 நவம்பர் 2021 அன்றே துவங்குகிறது. உலக நாடுகள்,மகளிர் அமைப்புகள், தனி ஆர்வலர்களும் பங்கு பெறலாம்.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்
நமது பாரம்பரியமே பெண்களைப் போற்றுதல் தான் ! நதிகளுக்குப் பெண் பெயர்களை வைத்து தெய்வமாக வழிபடும் நாடு ! அன்னையையும் சகோதரியையும் காப்பதற்காகவே வாழும் மகன்களை இந்த புண்ணிய பூமியில் பார்க்கலாம்.
இருப்பினும், பல்வேறு தாக்கங்களினாலும், ஒரு சில வக்ரபுத்தி ஆண்களின் வஞ்சகச் செயல்களாலும் பெண்களுக்கெதிரான கொடுமைகள், வன்முறைகள் தலைதூக்குகின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, நமது நாட்டு சட்டதிட்டங்களிலும் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்கள் அமலுக்குக் கொண்டு வரப்பெறுகின்றன.
வாழ்வாதாரத்துக்கான உரிமை, சம ஊதியத்துக்கான உரிமை,பெண்மை, மானத்தை பாதுகாத்துக் கொள்ள பரிபூர்ண உரிமை,வீட்டுக்குள் நடக்கும் வன்முறைக்கு எதிரான உரிமை, இலவச சட்ட உதவி பெறும் உரிமை, தனது உயிரையும் மானத்தையும் காத்துக் கொள்ள பரிபூர்ண உரிமை என பல உரிமைகள் சட்டபூர்வமாக வழங்கப் பெற்றுள்ளன
பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், வன்முறைகள் தொடருகின்றன.
பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் அல்லது அவளது உயரதிகாரிகள் மற்றும் அவளது சகாக்களே அவளை வன்முறைக்கு ஆளாக்குகிறார்கள். தற்போது காதல் எனும் ஒற்றைச் சொல் ஒரு “அமில விளையாட்டாக” முடியும் அபாயமும் உள்ளது.
வன்முறைக்கு ஆளான பெண், அதை பொதுவெளியில் சொல்லத் தயங்குவதும், சொல்லத் தலைப்பட்டாலும் , குடும்ப கௌரவம், சார்ந்த அமைப்புகளின் கௌரவம் போன்ற பல்வேறு அழுத்தங்கள் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மூடி மறைக்கும் நிலைப்பாட்டை எடுக்க வைக்கின்றன.
எத்தனையோ வன்கொடுமைகள் வெளி உலகத்துக்குத் தெரியாமல் மனதுக்குள், குறுகிய வட்டத்துக்குள் புதைக்கப்படுகிறது.
பெண்களின் பிரச்சினை, பெண்களுக்கான அவமானம் என்ற நிலை மாறி, அவர்களை வன்முறைக்கு ஆளாக்குபவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தான் அவமானம் என்ற சமூகக் கண்ணோட்டம் ஏற்பட வேண்டும்.
பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம் போன்ற தினங்கள் அனுசரிக்கப்படாத நிலையை நாம் எட்ட வேண்டும் !