
தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, ரயில்வே வாரியத் தலைவர் வினய்குமார் திரிபாதி அறிவுறுத்தியுள்ளார். சென்னைக்கு 2 நாள் பயணமாக, ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வினய் குமார் திரிபாதி வருகைபுரிந்தார். முதல்நாள், பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்ட அவர், சென்னை-மைசூரு இடையே நவம்பர் 10-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் தயாரிப்புப் பணிகளை பார்வையிட்டார்.
இரண்டாவது நாளில், சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மத்தியில் அவர் பேசியதாவது: தஞ்சாவூர்-பொன்மலை, விருத்தாசலம்-சேலம் உள்ளிட்ட 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, முக்கிய வழித்தடங்களில் வேகத்தை அதிகரிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் தடங்களில் வேகம் அதிகரித்தல், ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்தல், பயணிகள் வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றில் துரிதமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
