
மதுரை அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலந்தை ரூ.35 கோடிக்கு
கிரையம் பேசி, ரூ.70 லட்சம் மோசடி செய்த பாஜக நகரத் தலைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த பெண்ணிடம் மதுரையில் உள்ள அழகர்கோவிலுக்கு சொந்தமான நிலத்தைக் காண்பித்து ரூ.35 கோடி வரை கிரையம் பேசி ரூ.70லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கொடைக்கானல் பாஜக நகரத் தலைவர் சதீஷ்குமாரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் அருகே உள்ளது சூலக்கரை. இங்குள்ள வீரப்பெருமாள்கோவில் தெருவைச் சேரந்தவர் நல்லசாமி. இவரது மனைவி ரெங்கநாயகி. இவர்களது மகன்கள் நாகேஸ்வரன், நாகர்ஜூன் ஆவர். ரெங்கநாயகியின் தம்பி சூர்யநாராயணன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
சூர்யநாராயணனிடம் பணம் பெற்று ரெங்கநாயகி நிலங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இதனையறிந்த கொடைக்கானலில் நகரத் தலைவராக உள்ள சதீஷ்குமார்(37), இவரது தந்தை பத்மநாபன், இவர்களது உறவினர்கள் சுமதி, அங்குராஜ் மற்றும் அறக்கட்டளை நடத்தி வரும் சந்திரன், குழந்தைசெல்வம் ஆகியோர் ரெங்கநாயகியை அணுகியுள்ளனர்.
பத்மநாபன் தன்னை ஓய்வு பெற்ற நீதிபதி எனவும், ஓய்வுக்கு பின் நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சதீஷ்குமார் கொடைக்கானல் பாஜக நகரத் தலைவர் எனவும் அறிமுகம் ஆகியுள்ளனர்.
மேலும், மதுரை மாவட்டம், வண்டியூர் அருகே சுமார் 13 ஏக்கர் காலி நிலம் உள்ளது எனவும், இதற்கான பவர் பத்திரம் சதீஷ்குமார் பெயரில் உள்ளது என பத்மநாபன் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ரெங்கநாயகியிடம், மதுரை மாவட்டத்திற்கு அழைத்துச் சென்று காலி நிலத்தை காண்பித்துள்ளனர். பின்பு, பவர் பத்திரத்தை ரெங்கநாயகியிடம் கொடுத்துள்ளனர். பின்னர், நிலத்தின் மதிப்பாக ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் என கிரையம் பேசி முடித்துள்ளனர். இதனையடுத்து, முன் பணமாக ரூ.50லட்சமும், நிலத்தை பத்திரம் போட்டுத் தருவதற்காக ரூ.20லட்சம் என ஆக மொத்தம் ரூ.70லட்சத்தை ரெங்கநாயகியிடம் பெற்றுள்ளனர்.
ஆனால், பேசியபடி நிலத்தை பதிவு செய்து தரவில்லை. எனவே, ரெங்கநாயகி, திண்டுக்காவல் மாவட்டம், பழநி அருகே சிவகிரிபட்டியில் உள்ள பத்மநாபன் வீட்டிற்கு சகோதரர் மற்றும் மகன்களுடன் சென்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாஜக நகரத் தலைவர் சதீஷ்குமார், பத்மநாபன் உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
எனவே, இதுகுறித்து மதுரை சரக காவல்துறை டிஐஜி யிடம் புகார் செய்துள்ளார். பின்பு, விற்பனை செய்வதாக கூறிய இடம் குறித்து விசாரணை நடைபெற்றுள்ளது. அந்த நிலம், மதுரை அருகேயுள்ள அழகர் கோவிலுக்கு சொந்தமான நிலம் என்பதும், அந்நிலம் இந்து சமயஅறியலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதும் தெரிய வந்தது. இதேபோல், பத்மநாபன், ஓய்வு பெற்ற நீதிபதியும் அல்ல என்பதும் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ரெங்கநாயகி, இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை காண்பித்து ரூ.70லட்சம் மோசடி செய்த பாஜக நகரத் தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் பத்மநாபன், சதீஷ்குமார், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தைசெல்வம் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்தநிலையில், மதுரையில் பதுங்கியிருந்த பாஜக நிர்வாகி சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய பத்மநாபன், சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான குற்றச் செயல்களிலும், குற்ற வழக்குகளிலும் பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து கைதாகி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதேவேளை, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தையே தனது நிலம் என்று கிரையம் பேசி பண மோசடியில் ஈடுபட்ட பாஜக கொடைக்கானல் நகரத் தலைவரின் செயலைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.