பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜன.13, 14, 15 ஆகிய 3 நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும், சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும் மதுபானங்கள் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. திருவள்ளுவர் தினத்தை ஒட்டி திங்கட்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.450 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் குறிப்பிட்ட 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.850 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
அதைதொடர்ந்து காணும் பொங்கலான நேற்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை சூடுபிடித்தது. நகரப் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் கிராம புறங்களில் மது விற்பனை அதிகளவில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏறக்குறைய நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.200 முதல் 300 கோடி ரூபாய் வரை, டாஸ்மாக் கடைகளில் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டின் பொங்கல் சீசனில் மட்டும், டாஸ்மாக் விற்பனை ரூ.1,000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.