spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?தமிழகத்தில் பிராமணர் கட்சி ஏன் எடுபடாது...?!

தமிழகத்தில் பிராமணர் கட்சி ஏன் எடுபடாது…?!

- Advertisement -
s ve sekhar

– ஆர். வி. ஆர்

தமிழக அரசியலில் ஜாதிக் கட்சிகள் பல உண்டு – டஜனுக்கு மேல் இருக்கும். பிராமணர்களுக்கு என்று தனியாக ஒரு கட்சி கிடையாது. அப்படி ஒரு கட்சி புதிதாக உருவாகப் போகிறது, அதற்கான ஆயத்த வேலைகள் முடிந்து விட்டன, நடிகர் எஸ். வி. சேகர் இதன் பின்னணியில் இருக்கிறார், என்ற செய்தி வந்திருக்கிறது. இது பற்றி அவரும் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் யார் ஆரம்பித்தாலும் பிராமணர் கட்சி தமிழகத்தில் எடுபடப் போவதில்லை. காரணங்கள் இவை.

இந்தியாவில் பெருவாரியான மக்களுக்கு, அவர்கள் ஜாதியின் அடிப்படையில் கல்விக் கூட நுழைவுகளிலும் அரசு வேலைகளிலும் சட்டம் சில விகிதங்களில் இட ஒதுக்கீடு அளிக்கிறது. அதைத் தக்க வைக்கவும், புதிதாகச் சில ஜாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு கிடைக்கவும், அந்த அந்த ஜாதிக் கட்சிகளின் இருப்பும் போராட்டங்களும் உதவும். பிராமணர்களுக்கு என்று ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் சட்டத்தில் கிடையாது. அதை அவர்கள் பெறவும் முடியாது – அவர்களுக்கு அப்படியான ஆர்வமும் இல்லை. ஆகையால் ஜாதிக் கட்சி இவ்விதத்தில் பிராமணர்களுக்குப் பயன் தராது.

அடுத்ததாக, அரசியல் கட்சிகளின் தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகிய பதவிகளும் அவற்றின் சுகமும் பிராமணர்களை அழைப்பதில்லை. அவர்களில் மிக மிகச் சிலரே அமைச்சர், எம்.எல்.ஏ அல்லது கார்ப்பரேஷன் கவுன்சிலர் என்று தேர்வாக விரும்புவார்கள். அதற்கான தகுதியும் ஈடுபாடும் உள்ள மிகச் சில பிராமணர்கள், தமது ஜாதி தாண்டிய மக்கள் ஆதரவை எதிர்நோக்குபவர்கள், அல்லது ஒரு பெரும் அரசியல் தலைவரின் நம்பிக்கையைப் பெற்றவர்கள். இவர்கள் ஒரு தேர்தலில் பிராமணர் ஓட்டுக்களையும் பெற்று ஜெயித்தால், அது போனஸ் வரும்படி.

சில பகுத்தறிவு அமைப்புகள், சில திராவிடக் கட்சிகள், வெளிப்படுத்தும் பிராமண எதிர்ப்பைப் பிராமணர்கள் சட்டை செய்கிறார்களா? இல்லை. அவற்றின் தலைவர்கள், பொறாமை மற்றும் வெறுப்பின் காரணமாக பிராமணர்களை எதிர்க்கிறார்கள் – பிராமணீயம் என்ற மெகா ஓட்டை பாலூனில் காற்று நிரப்பிப் பறக்கவிட முனைகிறார்கள் – என்பதைப் புரிந்துகொண்டு, அந்த அரசியல் பகுத்தறிவாளர்களை பிராமணர்கள் பொருட் படுத்துவதில்லை. மற்ற சாதாரண மக்கள் கூட, இத்தகைய பிராமண எதிர்ப்பைப் புறம் தள்ளுகிறார்கள். பிராமணர்கள் இல்லங்களில் விரும்பி வீட்டு வேலை செய்யும் பெண்களே இதற்கு சாட்சி.

READ MORE: தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் தனிக்கட்சி: ‘பாஜக.,’ எஸ்.வி. சேகர் உறுதி!

    சத்தில்லாத பிராமண எதிர்ப்பைத் தட்டிவிட்டுத் தங்கள் வாழ்க்கையை, படிப்பை, வேலையை, தொழிலை – கிரிக்கெட்டையும் கூட – மேம்படுத்திக் கொள்வதில் கவனமாக இருப்பவர்கள் பிராமணர்கள். ‘பிராமண எதிர்ப்பை எதிர் கொள்ள, அதை முறியடிக்க, நமக்கு அரசியல் கட்சி தேவை’ என்று பிராமணர்கள் நினைப்பதில்லை.

    அரசியல் உலகில் நேரானவர், தூய்மையானவர், திறமையானவர் என்று தாங்கள் கணிக்கும் அரசியல் தலைவருக்கு, அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு, பிராமணர்கள் ஆதரவு அளிக்கத் தயார். ஆட்சியிலும் நிர்வாகத்திலும் இருப்பவர்கள் கைசுத்தமாகப் பணிசெய்ய வேண்டும், அது போல் தாங்களும் தங்கள் வேலையிடத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்து, அந்த நினைப்பில் பிராமணர்கள் பெருமிதம் கொள்கிறவர்கள். தேச நலனை முக்கியமாக விரும்புகிறவர்கள். தவறாமல் தேர்தலில் ஓட்டுப் போடுகிறவர்கள்.

    “பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது”, “தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும்”, “பாவம் செய்தவன் எம லோகத்தில் எண்ணைக் கொப்பரையில் வறுக்கப் படுவான்” என்று வீட்டுப் பெரியவர்கள் சொல்லிச் சிறுவர்கள் வளர்ந்ததும் பிராமண சமூகத்தின் பொதுவான நிதானத்திற்கும் நேர்மைக்கும் ஒரு காரணம்.

    ஒரு அரசியல்வாதி பிராமணராக இருந்து, அவருடன் போட்டியிடுபவர் வேறு ஜாதிக்காரராக இருந்தால், இந்த வேறுபாட்டை மட்டும் வைத்து, அந்த பிராமண அரசியல்வாதியை பிராமண சமூகம் ஆதரிக்காது. இருவரில் யார் சிறந்தவர், யார் பதவிக்கு வரத் தகுதியானவர், யார் தேச நலன் மிக்கவர் என்று பார்த்து அந்த அடிப்படையில் பிராமணர்கள் ஒரு அரசியல் தலைவரை ஆதரிப்பார்கள்.

    கமல் ஹாசன் ஒரு பிராமணர், ரஜினி காந்த் பிராமணர் அல்லாதவர் என்பது எல்லாருக்கும் தெரியும். ரஜினிகாந்த் தீவிர அரசியலில் வருவதாக இருந்த சமயத்தில், கமல் ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து விட்டார். நடிப்பில், அதன் பல பரிமாணத்தில், ரஜினி காந்தை விட கமல் ஹாசனுக்கு பிராமணர்கள் அதிக மார்க்குகள் கொடுக்கலாம். ஆனால் அரசியல்வாதி கமல் ஹாசனை, அவர் பிராமணர் என்பதால், பிராமண ஜனங்கள் பரவலாக ஆதரிக்கவில்லை – ரஜினியைத்தான் அவர்கள் வரவேற்றார்கள். சுயநலம் குறைந்து தேச நலன் அதிகம் கொண்டவர் ரஜினிகாந்த் என்பது அதற்கான முக்கிய காரணம்.

    பாஜக தலைவர் அண்ணாமலை பிராமணர் அல்ல. இவரையும் கமல் ஹாசனையும் பார்க்கும் போது பிராமணர்கள் அண்ணாமலையின் பின்தான் நிற்பார்கள், கமல் ஹாசனை ஆதரிக்க மாட்டார்கள். காரணம், அண்ணாமலை சிறந்த தனிமனிதர், நேர்மையாளர், தேச நலன் போற்றுபவர், சுயநல காரணத்திற்காக அரசியலைப் பயன்படுத்துகிறவர் அல்ல, துணிவானவர், தெளிவாகப் பேசுபவர், தலைமைப் பண்புகள் உடையவர், ஆனால் இந்தத் தகுதிகள் கமல் ஹாசனிடம் துளியும் இல்லை என்று பிராமணர்கள் நினைக்கிறார்கள். அண்ணாமலையின் இந்த குணங்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்னதாகவே பல்லாண்டுகளாக புடம் போட்டு ஒளிவீசுகின்றன. மோடியும் பிராமணர் அல்ல. தமிழக பிராமணர்கள் மோடியைத்தான் கொண்டாடுவார்கள், பிராமணக் கொள்ளுத் தாத்தாவை – கொள்ளுப் பாட்டியைக் கொண்ட ராகுல் காந்தியை அல்ல.

    பிராமணர்களுக்காக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கப் பட்டால், அதனால் மட்டும் அந்தக் கட்சி பிராமணர்களின் ஓட்டைப் பெருவாரியாகக் கவராது. புதிய பிராமணர் கட்சியானது, மற்ற எந்தக் கட்சியின் தலைவரை, மற்ற எந்த அரசியல் கட்சியை, ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது, அந்த மற்ற கட்சியின் கொள்கை, கோட்பாடு, லட்சணம் என்ன என்பதைப் பார்த்துத் தான் அந்தப் பிராமணக் கட்சியின் சொல்லுக்கு பிராமணர்கள் மத்தியில் மதிப்பு கிடைக்கும்.

    வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டு வைக்காமல், ஒரு புதிய பிராமணர் கட்சி தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு எம்.எல்.ஏ சீட் ஜெயிப்பதும் நடக்காது. ‘புதிய பிராமணர் கட்சி எந்தக் கட்சியுடனாவது கூட்டணி அமைக்கட்டும். பிராமணர் கட்சியின் பிரதிநிதியாக, தங்கள் ஜாதி மனிதர்கள் ஒன்றிரண்டு பேராவது எப்படியோ எம்.எல்.ஏ-வாக உட்காரட்டும். அதுவே நமக்குத் திருப்தி’ என்றும் பிராமணர்கள் நினைக்கப் போவதில்லை.

    ஒரு எம்.எல்.ஏ தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள ஒரு பிரபல பழைய கட்சி, புதிய பிராமணர் கட்சிக்கு அந்தத் தொகுதியை ஒதுக்கி ஒரு பிரமணரை அங்கு ஜெயிக்க வைத்தால், அது பிராமணர் கட்சியின் வெற்றி ஆகாது. யாரையோ தோற்கடித்து மக்களுக்கு ஏதோ சேதி சொல்ல நினைக்கிறது பழைய கட்சி, என்று அர்த்தம். எந்த விளையாட்டிற்கும் சிலர் கிடைப்பார்களே?

    பிராமணர்களுக்கு அரசியலில் என்னதான் ஆசை? ‘இந்துக்கள் பொதுவாக ஒன்றுபடவேண்டும், அவர்களை அரசியல்வாதிகள் கிள்ளுக் கீரையாக நினைத்து, இந்துக்கள் தலைமீது ஆரசியல் கட்சிகள் நடக்கக் கூடாது. இந்திய தேசத்தில் காணப்படும் இந்தப் பெரும் சோகம் நீங்க வேண்டும்’ என்பதுதான் பிராமணர்களின் பிரதான அரசியல் ஆதங்கம் – நல்லாட்சி தவிர. இந்த எண்ணத்தைப் பிரதிபலித்து, இந்தியாவில், தமிழகத்தில், ஏற்கனவே ஒரு அரசியல் கட்சி தீவிரமாகச் செயல் படுகிறது என்பதும் பிராமணர்களின் கணிப்பு.

    மேலே சொன்னதுதான் மிகப் பெருவாரியான தமிழக பிராமணர்களின் எண்ணமாக இருக்கும். வருகின்ற பாராளுமன்ற அல்லது தமிழக சட்டசபைத் தேர்தல்களில் முதன்முறை ஓட்டளிக்கத் தகுதி பெறும் இளம் பிராமணர்கள், எந்தப் புதிய பிராமணர் கட்சியையும் ஏறெடுத்துப் பார்ப்பதே சந்தேகம். “நம்ம படிப்பைக் கவனிப்போம்” என்று பலரும், அவர்களில் பலர் “விசா கிடைக்கணும்” என்றும் மும்முரமாக இருப்பார்கள்.

    தமிழகத்தில் ஒரு புதிய பிராமணக் கட்சியை எளிதில் உருவாக்கலாம். ஆனால் அந்தக் கட்சி கணிசமான பிராமணர்களின் ஆதரவை ஈர்க்காது – அவர்களின் சக்தியைத் தேர்தல் முடிவுகளில் ஒருமுகமாக வெளிக்காட்டும் தெர்மா மீட்டராக இருக்காது.


    Author: R. Veera Raghavan, Advocate, Chennai


    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari
    Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
    https://www.whatsapp.com/channel/dhinasari

    Follow us on Social Media

    19,184FansLike
    386FollowersFollow
    93FollowersFollow
    0FollowersFollow
    4,866FollowersFollow
    18,200SubscribersSubscribe