
சமூகவலைத் தளங்களில் வெளியான போலி அறிக்கை தொடர்பாக, யாதவ மகா சபை தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு மிரட்டல் அல்ல எச்சரிக்கை என்று குறிப்பிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்… அவரது அறிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முதியவர் மீது தாக்குதல் நடத்திய தீட்சிதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என எனது பெயரில் சமூகவலைத் தளங்களில் வெளியான கண்டன அறிக்கை போலியானது
திமுக விஷமிகள் சிலர் திட்டமிட்டு வெளியிட்ட இந்த போலியான அறிக்கையை யாரும் நம்ப வேண்டாம். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் வழிபாட்டு உரிமையில் யாதவ மகா சபை எப்போதும் தலையிட்டதில்லை சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிராகப் பேசியும், அவர்களை மிரட்டியும், அவர்களின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட்டும் அராஜகப் போக்குடன் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி, தீட்சிதர்களின் பரம்பரை வழிபாடு பூஜை விஷயத்தில் இந்து சமய அறநிலையத்துறை தலையிட முடியாது. கோயில் நிர்வாகம், அரசின் கையில் இல்லாதபோது, தீட்சிதர்களை மிரட்டுவதும், காவல்துறையை ஏவிவிடுவதும் சரியான செயல்பாடுகள் அல்ல.
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் மூக்கை நுழைத்து குறிப்பிட்ட ஜாதியினருக்கு எதிராகவும், பொதுமக்களுக்கு எதிராகவும் இச்சமூகத்தை திருப்பிவிடும் விஷமத்தனமான செயல்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கிறேன். அமைச்சர் செந்தில்பாலாஜியின் வழியில் சேகர்பாபு செயல்படுவதாக தெரிகிறது. செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட அதே கதிதான் சேகர்பாபுவுக்கும் ஏற்படும். இந்த அராஜகப் போக்கை அவர் உடனடியாக கைவிட வேண்டும் என யாதவ் மகா சபை கேட்டுக் கொள்கிறது.
சேகர்பாபுவின் அத்துமீறிய நடவடிக்கைகளும், தீட்சிதர்களுக்கு எதிராக அவரது பேச்சையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் இன்னமும் கண்டிக்கவில்லை? எனவே அமைச்சர் சேகர்பாபுவை உடனே பதவிநீக்கம் செய்ய வேண்டும்.
திருக்கோயில்கள் ஆன்மிக நம்பிக்கை இந்து தர்மத்திற்கு எதிரான கோட்பாடுகளை கொண்டுள்ள திமுகவின் இந்த செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளாவிடில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மக்கள் இந்த ஆட்சிக்கு சாவுமணி அடித்துவிடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை.