
தெகிடி என்றொரு படம். காப்பீடு செய்தவர்கள் சரியாக நாமினி பெயரை தராததால் அவர்களை கொன்று, அந்த பணத்தை ஒரு கூட்டம் தனாதாக்கிக்கொள்ளும். அருமையாக இருக்கும்.
கீழே உள்ள செய்திதான் பங்குச்சந்தையில் நடக்கும் வெள்ளை காலர் சூதாட்டம், சதிகள் இத்யாதி. எந்தெந்த வங்கிகள் எந்தெந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும், செய்கின்றன என்பதை அறிவுறுத்துகிறவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு சொல்வார்கள். இவர்கள் அந்தந்த நிறுவனங்களில் குறைவான விலைக்கு முதலீடு செய்து வைப்பார்கள். வங்கிகள் முதலீடு செய்யத்தொடங்கும்போது இதன் விலை ஏறத்துவங்கும். ஒரு கட்டத்தில் நல்ல லாபத்துடன் சட்டென்று பின் வாங்கிவிடுவார்கள் அந்நியர்கள். உள்ளூர் ஆட்களுக்கு இந்த சாமர்த்தியம் இல்லை. இதே வேலையை அவர்கள் உள்ளூரிலேயே செய்யலாமே!
இங்கு கொள்ளையடித்து வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்கள், அந்தந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு இந்தியாவிடம் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு பற்றி பேசுங்கள் என்றார்கள். எல்லாரும் அனுமதி தந்தார்கள். இப்போது 20000 கோடியுடன் வெளியேறுகிறார்கள் என்று செய்தி. எவ்வளவு அடித்தார்கள், எவ்வளவு முதலீடு செய்தார்கள் என்று யாருக்கு தெரியும்?
இன்று வெளியான செய்தியைப் படியுங்கள். நாம் சொல்வது என்னவென்று புரியும்…
நடப்பு அக்டோபர் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளிலிருந்து 20,300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று, வெளியேறியுள்ளனர். எனினும், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இது குறித்து, சந்தை ஆய்வாளர்கள் கூறியதாவது: அன்னிய முதலீட்டாளர்கள் நடப்பு அக்டோபர் மாதத்தில், கடந்த 27ம் தேதி வரையிலான காலத்தில், 20,356 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இம்மாதம் முடிவடையும் போது இத்தொகை மேலும் அதிகரிக்கும்.
அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பும், இஸ்ரேல் போர் காரணமாக நிலவும் அசாதாரணமான சூழலும் தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
எனினும், இதே காலகட்டத்தில், இந்திய கடன் பத்திரங்களில் 6,080 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் நவம்பர் 1ம் தேதி, அமெரிக்க பெடரல் வங்கியின் பணக்கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகள் மற்றும் பிற உலக பொருளாதார முன்னேற்றங்களை பொறுத்தே, இனி வரும் காலங்களில், அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகள் அமையும்.
தற்போதைய சூழலில் தங்கம், அமெரிக்க டாலர் போன்ற பாதுகாப்பான முதலீடுகளிலேயே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகம் கவனம் செலுத்துவர். இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் ரூபாயின் மதிப்பு நிலையாக உள்ளதாலும், இந்திய கடன் பத்திரங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்திய கடன் பத்திரங்கள் நல்ல வருவாயை ஈட்டி தருவதால் அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதில் முதலீடு செய்து வருகின்றனர்.
— ஆனந்த் வெங்கட்