
— ஆர். வி. ஆர்
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் முன்பாக உள்ள ஈ. வெ. ராமசாமியின் சிலை இருக்கக் கூடிய இடம் அதுவல்ல, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்தச் சிலை அகற்றி வேரிடத்தில் வைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் அண்ணாமலை பேசியது சரியா?
அண்ணாமலையின் பேச்சு சரி என்பது மட்டுமல்ல. அவருக்குப் பெருகிவரும் மக்கள் சக்தியின் விளைவாகவும் அது இருக்கிறது.
அண்ணாமலை ஏன் அப்படிப் பேசினார்?
ஸ்ரீரங்கத்தில் ஈ.வெ.ரா சிலையின் பீடத்தில் காணப்படும் அவரது சில வாசகங்கள் – “கடவுள் இல்லை. கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற சொற்கள் – மக்களின் தெய்வ நம்பிக்கையை அவமதிக்கின்றன. ஹிந்துக்களின் தெய்வ நம்பிக்கை ஆழ்ந்தது. வேண்டுமென்றே அவர்கள் அருகில் சென்று அவர்களின் நம்பிக்கையை அவமதிப்பது அநாகரிகம், அடாவடி.
கடவுள் இல்லை என்று நினைத்து வாழ்வது தவறில்லை. அது அந்த மனிதர்களின் ஜனநாயக உரிமை. நாத்திகர்களின் மனதை மாற்ற ஆத்திகர்கள் முயல்வதில்லை, அந்தச் செயலை ஆத்திகர்கள் நினைத்துப் பார்ப்பதுமில்லை. இன்னொரு பக்கத்தில், கடவுளை வழிபடுகிறவர்கள் தங்களின் நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள் –அதே ஜனநாயக உரிமையில். அதற்கு மற்றவர்கள் சங்கடமோ இடையூறோ தரக் கூடாது. இந்தப் பண்பைத் தமிழகத்தின் திமிர் பகுத்தறிவுவாதிகள் புரிந்து கொள்வதில்லை.
கடவுளை நம்புகிறவர்கள்தான் கோவிலுக்கு வருவார்கள். பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முன்பாக – அதுவும் ராஜகோபுரத்தின் எதிரே நூறு மீட்டர் தூரத்திற்குள், நடு ரோட்டில் – பெரியார் எனப்படும் ஈ.வெ.ரா-வின் சிலையை அமைத்து “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை” என்ற அவரது வார்த்தைகளைச் சிலையின் பீடத்தில் பொறித்து வைத்தால் என்ன அர்த்தம்? ஹிந்துக்களைப் புண்படுத்த வேண்டும் என்று வம்படியாகச் செய்தது அது.
அந்தச் சிலை அங்கு இருப்பதின் அராஜகத்தை, அண்ணாமலை எழுப்பிய ஒரு கேள்வி சுரீர் என்று மற்ற சில கட்சிகளுக்கு உறைக்க வைத்திருக்கும். அவர் கேட்டது: “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக குறித்து பெரியார் பேசிய வார்த்தைகளை அவர்கள் கட்சி வாசலில் வைப்பார்களா? அவர்களுக்கு ஒரு நியாயம், ஹிந்து மக்களுக்கு ஒரு நியாயமா?”
ஈ.வெ.ரா சிலையை ஸ்ரீரங்கம் கோவில் எதிரில் வைக்க 1973ம் வருடம் அப்போதைய கருணாநிதி அரசு ஒரு அரசாணை பிறப்பித்து உதவியது. அந்த அரசாணை இல்லாமல் அந்த இடத்தில் சிலை வந்திருக்க முடியாது.
ஸ்ரீரங்கம் தவிர்த்து வேறு இடங்களில் – பிற கோவில்கள் முன்பாகவும் கூட – வைக்கப் பட்டிருக்கும் சில ஈ.வெ.ரா சிலைகளின் கீழ், கடவுள் நம்பிக்கையை எட்டி உதைத்துத் திட்டித் தீர்க்கும் அவரது இன்னும் காட்டமான வார்த்தைகள் இடம் பெறுகின்றன. (“கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன். கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி”). அந்த மனிதரின் சிலையைக் கோவில் முன்பாக ஸ்ரீரங்கத்தில், பிற ஊர்களில், வைக்க அரசு அனுமதித்ததே ஹிந்துகளை இம்சிக்கும்.
ஈ.வெ.ரா-வின் கடவுள் எதிர்ப்பு வாசகங்களுக்குத் திமுக தலைமையின் அமோக ஆதரவு உண்டு. அதிமுக-வின் நிலை இது. அதாவது, தாங்களும் ஒரு திராவிடக் கட்சி, தாங்களும் பெரியார் வழிவந்த கட்சி என்று காண்பித்துக் கொள்ள, அதிமுக-வும் பெரியாரின் அந்த வாசகங்களை ஆட்சேபிக்காது.
திமுக-வை அண்டி அரசியலில் ஜீவிக்கும் தமிழக காங்கிரசும், “இது பெரியார் மண்” என்ற உயிர் காக்கும் மந்திரத்தை அவ்வப்போது உச்சரிக்க வேண்டும். ஆகையால் ஈ.வெ.ரா-வின் ஸ்ரீரங்கச் சிலை வாசகங்களைக் காங்கிரஸ் எதிர்க்காது. மற்ற சிறு திராவிடக் கட்சிகளும் அந்த வார்த்தைகளைத் தூக்கித்தான் பிடிக்கும்.
ஈ.வெ.ரா சிலையைத் தாண்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், அந்தப் பகுதியில் வசிக்கும் ஆத்திகர்கள், தலைவிதியே என்று அவர் சிலையையும் அவர் சொற்களையும் கசந்து பார்த்து, வேறு வழி இல்லாமல் மனதில் அவதியைத் தாங்குகிறார்கள்.
நம் ஊர்களில் ஓயாமல் கழிவுநீர் ஓடும் சில தெருக்கள் வழியே செல்ல வேண்டியவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் ஆடைகளைச் சற்று உயர்த்திப் பிடித்து, முடிந்தால் தங்கள் மூக்கையும் பிடித்துக் கொண்டு, அந்தப் பகுதியைக் கடப்பார்கள். மற்றபடி ஊழலில் திளைத்து அலட்சியம் காட்டும் நகராட்சியுடனோ அரசுடனோ கழிவு நீர்க் குழாய்கள் அமைக்க அல்லது ரிப்பேர் செய்யக் கேட்டு மல்லுக்கு நிற்க மாட்டார்கள் நமது குடிமக்கள். அதற்கான திராணி அவர்களிடம் இல்லை.
இந்த ரீதியில்தான் ஸ்ரீரங்கம் ஈ.வெ.ரா சிலை வாசகங்கள் அவ்வழியே செல்லும் ஹிந்து மதத்தினரை, பக்தர்களை, சீண்டுகின்றன. இருந்தாலும் சாலையில் ஓடும் கழிவுநீருக்குப் பழக்கப்பட்டு அதைச் சகித்துச் செல்லும் பாதசாரிகளைப் போல் ஸ்ரீரங்கம் சிலைப் பகுதியில் ஹிந்துக்கள் போய் வருகிறார்கள். அவர்கள் ஒன்றுகூடி அந்த வாசகங்களை எதிர்த்துப் போராடாமல் இருப்பதால் அவர்கள் பெரியாரையும் போற்றிவிட்டு எதிரே கோவிலுக்குள் சென்று அரங்கனையும் வணங்குகிறார்கள் என்று அர்த்தம் ஆகாது. இந்த நாலாம் கிளாஸ் லாஜிக் திராவிட அரசியல்வாதிகளுக்குப் புரியுமா?
ஸ்ரீரங்கம் ஈ.வெ.ரா சிலையை அகற்றச் சொல்லும் தார்மீகக் குரல் உள்ளவரும், ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்யும் தைரியம் உள்ளவருமான தலைவர் என்று மக்கள் யாரை நினைக்கிறார்கள்? அண்ணாமலையைத் தான். இதை அண்ணாமலையும் உணர்கிறார்.
அப்படியான மக்கள் நம்பிக்கையும் மக்கள் சக்தியும் தனக்குப் பெருகி வரும்போது அதை இயற்கையாக வெளிப்படுத்துகிறார் அண்ணாமலை. அதனால்தான் அந்த ஈ.வெ.ரா சிலையையும், அதுபோன்ற மற்ற ஈ.வெ.ரா சிலைகளையும், அகற்றுவதற்கான நடவடிக்கையைப் பின்னாளில் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது எடுக்கும் என்று அவர் பேசினார். அதற்கான வல்லமையை, அவர் மீதான மக்கள் நம்பிக்கை அவருக்குத் தரும்.
2026 தேர்தலில் பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வராமல் போனாலும், அதனால் ஸ்ரீரங்கத்தில் – மற்ற கோவில்கள் முன்பாகவும் – ஈ.வெ.ரா சிலையும் அவர் வாசகங்களும் சிலகாலம் நீடித்தாலும் பரவாயில்லை. அண்ணாமலையின் இந்தப் பேச்சும் அவருக்குப் பெருகும் மக்கள் சக்தியும் நீண்டகாலப் பயன்கள் நமக்கு வருவதற்கான அறிகுறி: ஒரு சிறந்த மாநில அரசும் நல்ல எதிர்காலமும் கிடைக்க. நாம் காத்திருக்கலாம்.
நிரந்தரமாக அகற்றப்படும் என்று மக்களுக்கு நம்பிக்கை இருக்கிற போது, இதுநாள் வரை சாலையில் ஓடுகிற கழிவுநீர் கொஞ்சம் தொடர்ந்து ஓடினால் ஓடட்டுமே? அப்படி நினைத்துத்தானே நமது ஜனநாயகத்தில் மக்கள் சாந்தம் கொள்ள முடியும்?
Author: R. Veera Raghavan, Advocate, Chennai
Blog: https://rvr-india.blogspot.com